Saturday, December 29, 2012

நன்றி: கலாப்ரியா

எனது முதல் தொகுப்பான நதிச்சிறைக்கு  கலாப்ரியா அவர்கள் எழுதிய கடிதம் நீண்ட நாள்களுக்குப்பின் கிடைத்த சந்தோசத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...

யார் சொன்னது உங்களுக்கு கொஞ்சம் வார்த்தைகளே தெரியும் என்று. முதிர்ச்சியான கவிதைகைளை நன்கு அனுபவம் முற்றிய மொழியில் கற்றுள்ளீர்கள். கவிதைகளும் பல தளங்களில் பயணம் செய்கின்றன.

இந்த நாய்க்குட்டி ஓசி- என சிறு குழந்தை வியாபார விளையாட்டு விளையாடுகிறது. தலைப்பு வேண்டுமானால் தேவையற்றதாகத் தோன்றினாலும் எளிமையான கவிதை. நிறைய்ய யோசிக்க வைக்கிறது.

குளத்தில் மீன்கள் பறக்கிறதென ஓடும் சிறுமிக்குப் பின் ஒரு பெரிய பரிணாம உண்மை இருக்கிறது தெரியுமா. உண்மையிலேயே பறவை மீனிலிருந்து உண்டானது தெரியுமா. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய மாதிரி பறவைகள் மீன்களிலிருந்து உருவானவையாம். அதனால்தானோ என்னவோ இரண்டும் - ஒன்று நீரிலும், இன்னொன்று வானிலும்- நீந்துகின்றன.

ஆம், நாம் சூன்யம் குறித்து விவாதிக்கிறோம் பயன்பாடு பற்றிய பகிர்தல் மனுஷர்களிடையே கிடையாது. நேயம் என்பதை மறந்தவன்தான் மனிதன்.

விட்டு விட்டு நனைந்து
வேடிக்கை கதைபேசி - ஏன் உங்களுக்கு கவிதை பாஷை வராது என்று தோன்றியது எனத் தெரியவில்லை. அழகாய்க் கைவருகிறது கவிமொழி.
புதிது புதிதாய்ப் பிறக்கும்
கோலப் பெண்டுகளின்
காலைமுகம்
இன்று என்ன கோலம் போட்டிருப்பாள் எதிர்வீட்டு மதினி என்பதுதான் ஒவ்வொரு நாளும் அந்த அழகான எதிர்வீட்டு மதினி பற்றிய என் முதல்ப் பதிவாயிருக்கும். வெளித் தின்ணையில் படுத்துறங்கும் அந்த பால்ய நாட்களில். வாசல் தெளித்து கோலம்போட்டு தன் வீட்டுக்குள் நுழையும் முன் மீதித் தண்ணீரில் ஒரு கை எடுத்து அன்பாய்த் தெளித்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கேலிப்புன்முறுவல் உதிர்த்துப் போவாள் அந்த மதினி. இல்லையென்றால் உள்ளங்காலில் ஒரு அன்பான அடி. அவள்தான் நினைவுக்கு வந்தாள் உங்கள் கவிதையை படிக்கிறபோது.

நேர்முகத் தேர்வுக்கோ, தேர்வுக்கோ போய்விட்டு வருகிறபோது அவள்தான் முதலில் ஆர்வமாய் விசாரித்துவிட்டு சாமி படத்தருகே போய் திருநீறு பூசிக்கொள்வாள். இந்த வேலை தம்பிக்கு கிடைக்கும் என்று. அவள் வீடு மாற்றிப்போன பின்னரே வேலை கிடைத்தது. இப்போது எங்கேயிருக்கிறாளோ "நானொரு குழந்தை நீயொரு குழந்தை" என்று கணவனுடன் பழைய சினிமாப் பாட்டுப்பாடிக் கொண்டு...

வானமும் புத்தகம் வாசிக்கும் மொட்டை மாடிக் காட்சி. காகம் எச்சமிட்டு மழை பெய்து கழுவுதல் என்பதுதான் சற்று நீளமான படிமமாக்கி விட்டது அனுபவம் வேறு மாதிரியும் - உண்மையிலேயும் - இருக்கலாம். ஆனால் நல்ல கவிதை.

'கற்க கசடற' - அருமையான செறிவான கவிதை. ஒண்ணாம் வகுப்பில் சேர தலையைச்சுற்றிக் - அல்லது தலைமேலாக வலது கையால் இடது - காதைத் தொடச்சொல்கிறதெல்லாம் இப்போ எங்கே நடக்கிறது? பிள்ளை பிடிப்பது போல் நர்சரி ஸ்கூலுக்கு குழந்தைகள் பிடித்துப்போகிற காலம் இது. எனினும் சுத்தியலடிமாதிரி ஒரு வீனீஜீuறீsமீ வுடன் கவிதை முடிந்திருக்கிறது தொகுப்பின் மிகச் சிறப்பான கவிதை.

'மண் தேசம்' கவிதையும் இயல்பான வாழ்வு வெளிப்பாடாக அமைந்த ஒன்று.

நிறைய நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். நிறைய படியுங்கள். நிறைய எழுதுங்கள். தமிழ் கவிதையுலகில் உங்கள் தடம் அழுத்தமாகவே பதியக் காத்திருக்கிறது காலம்.

வாழ்த்துக்களுடன்
என்றும் உங்கள்
கலாப்ரியா
18-09-2005.

Wednesday, December 26, 2012

நள்ளிரவில் பிதாவோடு

நுழைய மறுத்தார்
என் அன்பின் பொருட்டு
அடுத்த அடியை எட்டி வைத்தார்
சவப்பெட்டி ஆனியின் துயரோடு
வாடை நிறைந்த தரைகள்
பிசுபிசுப்பை சகித்தார்
Bejois பிராந்தியை கலயம் நிரப்பினேன்
மேய்த்தலின் மகிழ்வை பகிரத் துவங்கினார்
பாவிகள் இதை அறியாது
விளக்குகளையும் வேதங்களையும்
பிரகாசிக்கச் செய்தபடி...

Tuesday, December 4, 2012

பிழை முடிச்சுகள்

சுருக்கம் கொள்வதில்லை
ஊர் என்பது வெறும் பெயர்களோடு
நெடிய வரலாறுகளின்
முடிச்சுகளால் ஆன கூடுகள்

காட்சியாகும் சில முடிச்சுகள்
கனவுகளை பரிசளித்து
ஏக்கப் பெருமூச்சுகளை வெளியேற்றும்

போக்க இயலாத ரத்த வாடையால்
உழன்று பித்தாவதும்...

மனிதத்தின் மீது வீழ்ந்த
இழி நிலை எச்ச
முடிச்சொன்று அண்மையில்
அதியமானின் காதல் நெல்லி
ஔவையின் கைகளில் கனியாகி
கலப்புமணம் கொண்ட நீட்சியை பொசுக்கியது

தீ கங்குகளை அடைகாக்கும் மனங்கள்
பெருக்கம் கொண்டு இனி
விழாதிருக்கட்டும்
பிழை முடிச்சுகள்...

நன்றி: வல்லினம் இணைய இதழ்

Friday, November 9, 2012

நீ அறியாய்

வென்றெடுக்க இயலாத கணங்களில்
பெருக்கெடுக்கும் வன்மத்தால்
சிதைக்க முற்படுகிறேன்
பெரும் பாறையை
சிறு கற்களாக்கும் பதட்டங்களோடு
வெப்பத்தால் நீர்மமாக்கி உதிர்க்க
பெரும் மழையாகி
மிதக்கச் செய்திடுகிறாய்

நுணுக்கி சிறு விதையாக்க
அடர் காடாகி தொலைத்திடுகிறாய்
பலூன் ஒன்றில் ஊதி அடைக்க
வானில் தூக்கி பறந்திடுகிறாய்
சமாதானம் கொள்கிறேன்
எல்லா கனவுகளும் பலித்திடாதென...

நன்றி: வல்லினம் இணைய இதழ்

Thursday, November 8, 2012

வளர்ப்பு நிழல்

நெடுநாளைய ஆசையால்
பிரியமாக பிடித்து வந்தேன்
ஒரு பசுவின் நிழலை
வீட்டின் முன் மொட்டையடிக்கப்பட்டிருந்த
புங்கை மரத்தில் கட்டி வைத்தேன்
இலைகள் துளிர்க்கத் தொடங்கின
கொழுத்து வளர்ந்தது நிழல்
தன் காமத்தை குரலில் கசிவிக்க

ஓரிரு முறை இணையோடு சேர்ப்பித்தேன்
தெருவாசிகள்
மீந்ததை கொடுக்கத் துவங்கினர்
நீலம் புயல் கடந்த அந்தியில்
குட்டி நிழல் பிரசன்னமாகியது...

நன்றி: மாற்றுப்பிரதி

Wednesday, November 7, 2012

யாருடைய கைகள் அவை...

வீட்டின் மேல் தளத்திற்கும்
வான் கவிழ்த்த நட்சத்திரங்களுக்கும்
இடையேயான தூரம் குறித்த கணக்கீட்டில்
மௌனித்திருந்தேன் குளமாக
ஒரு கல் விழுந்தது
நாளை மறக்காம கேஸ் புக் செய்திடுங்கவென
இருள் மேயத் துவங்க
சலனமுற்றேன்

என் வீடு வரும் அல்பாயுசு சிலிண்டர்கள்
மரணம் குறித்து
சலிப்புற்ற கணத்தில் சிலிண்டர்
நிலமாக விரிந்தது
மையத்தில் கொத்துச் செடியென
குத்த வைத்திருந்தேன்
பிட்ட வறட்டியென ஒளிர்ந்து
கொண்டிருக்கிறது நிலா...

நன்றி: தீராநதி

Tuesday, November 6, 2012

அந்தரங்கம்

சீண்டலை
துவங்கியபடி இருந்தது புறா
பார்வையில் பாலினம் பகுக்கும்
படிப்பறிவு இல்லாதிருக்க
தொடங்கியது ஆணோ பெண்ணோ அறியேன்
தொடர்ந்த அவைகளின் காமத்தை
கண்களில் விழுங்க மனமின்றி
திசை மாறிய கணம்

என்னுள்ளும்
இசை ஊர்ந்தது.

நன்றி: தீராநதி

Monday, November 5, 2012

எஞ்சியவை

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததை பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை

கழுவத் துவங்கினேன்
கையிருந்த பிசுபிசுப்பை

நன்றி: தீராநதி

Thursday, October 25, 2012

பாம்புகள் பாம்புகளாயின...


நிலத்தை
உயிர்ப்பித்துக் கொண்டிருந்த தென்னையிடம்
வாங்கிய கீற்றுகளை கிழித்து
பாம்பு செய்தனர்
பலரிடம் பயம்காட்டிச் சிரித்து
நெளியச் செய்து
ஒன்றோடு ஒன்றை பிணைத்து

சுருட்டி எறிந்து
கொடிக்கம்பாக தூக்கி ஓடி
தொலைத்தும் கண்டெடுத்தும்
வேகமாய் சுற்றிச்சுற்றி
பெரும்பாடாய் படுத்தினர்
களைப்படைந்த கணத்தில்
தூக்கி வீசி வீடு திரும்பினார்கள்
பாம்புகள் பாம்புகளாகவே மாறின
ஒன்றை ஒன்று கவ்விப் பிணைந்து
பெரும்மூச்சில் சீறி
தரை கொத்தி நச்சு கக்கி
சோர்வுகொள்ள திரும்பின
தென்னையின் உச்சிக்கு...

நன்றி: யாவரும்.காம்

Monday, October 22, 2012

இருளும் ஒளியும்

மரம்
தன் நிழலைக் கிடத்தி
இல்லத்தை இரண்டாக கிழித்தது
ஒருபுறம் வெள்ளையும்
மறுபுறம் கருமையாகவும் மாறியது
தாவினேன் கருமையின் பகுதிக்கு
அம்மனச் சிறுவனாகி
மிதந்தலைந்தேன் குளத்தில்
அருகிலிருக்கும் நந்தவனத்தில்
எச்சிலாக்கினேன் புளியமரம் ஒன்றை
தோழிகளுக்கு பூக்களைக் கொய்தேன்
காம்புகளில் மீந்த தேன் சுவைத்தேன்
மயக்கத்தில் புரண்டேன் வெள்ளைப் பகுதிக்கு
வெய்யல் சுட உடல் பருத்தது
கூலிச் சீருடை அணிந்து
பிழைப்புக்கு தயாரானேன்
மரம் தன் நிழல் சுருக்கி
இல்லம் இணைத்தது...

நன்றி: மலைகள் இணைய இதழ்

Sunday, October 21, 2012

காகம் ஏதும் வரவில்லை
வருகையை சொல்லிச்செல்ல
வேண்டுதலில் விரும்பிய
வண்ணப்பூவும் விழவில்லை
நினைவில் துளிர்த்த விரலை
எக்குழந்தையும் தொட்டுணர்த்தவில்லை
பூவா தலையா பார்க்கவும் இல்லை
காசுகளை சுண்டி
காட்சிப் படுத்தவில்லை கனவும்
நினைவலைகளும் சீராகவே
குறி சொல்லிச் செல்லவில்லை கோடாங்கியும்
விக்கலும் தடுக்கலும் கூடயில்லை
திடுமென்ற உன் வருகையால்
நிலம் கரைந்து
துளிர்க்கத் துவங்கினேன்
பச்சயத்தையும் பூக்களையும்
எழுந்த நறுமணத்தால்
மயக்கம் கொண்டது பிரதேசமே
மதுவாகினி தேவதையாகிக் கொண்டிருந்தாள்... 

nantri:malaigel.com

Tuesday, October 16, 2012

விடை விரும்பா கேள்வி
-ந.பெரியசாமி

ஒளியை இருள் விழுங்கியது
உடலை கொசுக்கள் தின்னத் துவங்கிய கணத்தில்
வௌவ்வாள்களாக தொங்கத் துவங்கின
உள்ளிருந்து குதித்தேறிய கேள்விகள்
அருகிலிருக்கும் தோழிகளின் கேலிக்கும்
இது கூட தெரியாதாவெனும்
ஆசிரியர்களின் ஏளனப் பேச்சுக்கும
அச்சம் கொண்டதால் அல்ல
பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க
நாம் ஏன் முட்டையிடுவதில்ல
இக்கேள்வியால் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளுக்குப் பின்தான்
தேங்கிடத் துவங்கின
காலம்
பதில்களை சொல்லி வளர்த்தெடுக்க
அடைகாத்திருக்கேன்
அறிந்து கொள்ள முயற்சிக்காது
ஒன்றிரண்டு கேள்விகளை
துள்ளலும் மகிழ்வும் கனிவதால்

உங்களுக்காக
விடை விரும்பா கேள்வியொன்று
மின்மினிகள் மிளிர்வது எதனால்?

நன்றி: வல்லினம் இணைய இதழ்

Tuesday, October 9, 2012

கனவில் கடவுளிடம்
குழந்தை கேட்டாள்
மழை வேண்டுமென
நேரில் குழந்தையிடம்
கடவுள் வேண்டினார்
நிறைய்ய செடிவளர்க்க வேண்டுமென…
0

அடப்பாவி
கொலைபாதகாவென
திட்டக்கூடும் நண்பர்களே
எறும்பிடமிருந்து பிடுங்கிய அரிசியால்
நாவை எச்சால் நனைத்த
நாட்களை நினைவுகூற

வேறு பருக்கைகள் அவைகளுக்கு
எளிதில் கிட்டிவிடும்…
0

நிரம்பாத போதையால்
தவிப்படைந்தவன்
அழைத்துக்கொண்டிருந்தான்
வாருங்களேன் தற்கொலை செய்துகொள்வோமென
நீங்கள் எல்லோரும் கொலைகாரர்கள்தானே
மறந்துவிட்டீர்களா
ஆத்மநாமை…

0000
nantri:eathuvarai

Wednesday, October 3, 2012

நேற்று காலை சிற்றுண்டி முடித்து
வாசலில் அமர்ந்திருந்தேன்
கொஞ்சம் ஆட்டுப் பால் வேண்டுமென
காந்தி வந்தார்
பட்டியே இல்லை
ஆட்டிற்கு எங்க போகவென்றேன்
பரிதாபமாக எனை பார்த்தார்
இருவரும் பயணித்தோம்
பட்டிகளைத் தேடி
பெரும் யாத்திரையாகிட
களைத்து திரும்பினோம்
கசாப்புக் கடையொன்றில்
தொங்கும் ஆடு பார்க்க
அழுது புரண்டார்
பெரும்பாடாகிவிட்டது தேற்றி
இடம் கடந்து வர
சிறு தொலைவுக்குப் பின்
தோட்டம் ஒன்றில்
வட்டமாக இளைஞர்கள்
என்ன செய்கிறார்கள்
வேண்டாம் போகலாம் என்றேன்
அவரின் பார்வைக்கு
பொய்யுரைக்க மறந்து
மது அருந்துகிறார்கள் என்றேன்
ஹேராம் என தலையிலடித்து
அரசு என்ன செய்கிறது
பார்வையை கேள்வியாக்கினார்
சிரிப்பை கட்டுப்படுத்த இயலாது
கடை நடத்துவதே அரசுதான்
ஐயோ...வென மயங்கி சரிந்தார்
இதுதான் சமயமென
பாக்கெட்பாலில் நீர்கலந்து
முகம் தெளித்தேன்
அரைமயக்கத்தில் ஆட்டுப்பாலாவென்றார்
ஆமென பொய்யுரைக்க
அருந்திய வேகம் தனிய
சுவை இல்லை என்றார்
எல்லாவற்றிலும் கலப்படம் என்றேன்
எங்கு எப்படி கிடைத்ததென
கேட்கத் துவங்கும் முன்
இனி உங்க ஜனன நாளில் மட்டும்
வாருங்கள் என்றேன்
போதுமடா சாமி
என்றும் வரமாட்டேனென
கரைந்து போனார்...

Thursday, September 13, 2012


அணுஉலையெனும் மாய சுடுகாடு


நம்ப மறுத்தோம்
அறிவியலாளர்களின் சுலோகங்களை ஒளிபரப்பினீர்கள்
பொய்யின் ஆழம் அறிய
மேலும் அச்சம் கொண்டோம்
விசுவாச நாய்களை அழைத்தீர்கள்
மோந்து பார்த்து
மணமும் அற்புதமும் நிறைந்ததென
எஜமானர்களை திருப்திபடுத்தினீர்கள்
நாங்கள் நம்ப மறுத்தோம்
எச்சரிக்கை செய்தீர்கள்
அடித்து துன்புறுத்தினீர்கள்
சிறையில் அடைத்தீர்கள்
அயலக சதியென கொச்சைபடுத்தினீர்கள்
துப்பாக்கியால் சுட்டும் கொல்கிறீர்கள்
இப்பவும் நாங்கள் நம்ப மறுக்கிறோம்
எங்களுக்கு உண்மை தெரியும்
ஒரு சுடுகாடு
வெண்மை பரப்பி ஒளியூட்டும் பறவையை
ஒருபோதும் பிறப்பிக்காது...

Tuesday, September 11, 2012

காட்சிகள்

காட்சி 1

அசைபோட்டபடி நிற்கும் மாட்டின்
உடல் ஊறும் உனி பிடுங்கி
நசுக்கி முடித்த தாத்தாவின்
தலை கிளரி பேன் குத்தும்
பாட்டியிடும் விடுகதைக்கு
விடை தேடும் என் பயணம்
உலகை உருண்டையாக்கி
பாட்டியிடமே மையமிடும்...

காட்சி 2

பாட்டியோடு பட்டியையும்
தொலைத்த தாத்தாவின்
வலி நீக்கியானது பாக்கெட் சாராயம்
பாட்டி நட்சத்திரமான நாளொன்றில்
மதுவிலக்கும் காவலாளியின்
கை சிக்கினார் கடத்தல்காரனாய்
தெண்டமிட்ட மீட்புப் பணம்
டாஸ்மாக்கில் மது உறிஞ்சும்
ஸ்ட்ராவாக...

நன்றி: வல்லினம் இணைய இதழ்

Wednesday, September 5, 2012

வெளியே மழை பெய்தது


கொசகொசவென கட்டங்கள் வரைந்து
சிறு சிறு புள்ளிகளை அடைத்து
அப்பா இது பூச்சிகளின் வீடென்றாள்

சமையலறையில்
காற்றோடு
வாசிப்பை பகிர்ந்தாள் மதுவாகினி

கோடுகளை அடுக்கி
குட்டியாய் பொந்து வைத்து
அப்பா இது எலி வீடென்றாள்

கிழித்த நாட்காட்டித் தாளில்
தான் எழுதியதை காற்றிற்கு
வாசிக்கத் தந்தாள்

பெரிது பெரிதாய் சதுரமிட்டு
தடுப்புகள் நிறைய்ய வைத்து
அடுக்கத் துவங்கியபடி
அப்பா இது பொம்மைகள் வீடென்றாள்

கதையின் மாந்தர்களோடு
நிகழ்ந்த உரையாடலால்
புறம் நீண்ட குரலை
கேட்கத் தவறின செவிகள்

உயர்ந்த மரம் வைத்து
கூடு ஒன்றை நெய்து
அப்பா இது காக்கா வீடென்றாள்

தடித்த குரலின் அதிர்வில்
கதைமாந்தர்கள் கரைந்து போக
மௌனித்துக் கிடந்தாள் மதுவாகினி

தாளிலிருந்த தத்தமது வீடுகளிலிருந்து
பூச்சிகளும் பொம்மைகளும்
நகரத் துவங்கின சமயலறைக்கு

வெளியில் மழை பெய்தது...

நன்றி: கல்கி

Sunday, September 2, 2012


அம்மு நிரப்பிய மதுக்குவளை...



எழுதப்பட்ட காலத்தில் ஒரு பொருளில் அர்த்தப்படுத்தப்பட்ட ஒரு கவிதை, பலநூறு வருடங்களுக்குப் பிறகு வேறு விதமாகவும் விளக்கப்படக் கூடும். கவிதையின் சொற்கள் திரி பற்றி எரியும் சுடர் போன்றன. தமது பிரகாசத்தின் மூலம் சிலவற்றை வெளிச்சப்படுத்தும், அதே சமயத்தில் அச்சொற்கள் தமது நிழலின் மூலம் சிலவற்றை திரையிட்டு மறைக்கவும் செய்கின்றன. அதனாலேயே ஒரு கவிதைக்கு பல்வேறு காலங்களில் பல்வேறு வியாக்கியானங்கள் சாத்தியமாகிறது.
-க.மோகனரங்கன்

1989 ஜீன் மாதம் சேலம் பஸ் சேலம் பஸ் என வேடிக்கைப்பார்த்த பேருந்து ஒன்றில் பயணித்து முதன் முதலாக சேலம் கண்டேன். அரசு தொழிற்பயிற்சியில் சேர்வதற்காக...

சில நாட்களுக்குப்பிறகு பகுதிநேர வேலை செய்யலாம் என அலைந்து திரிந்து பிறகு ஒரு அச்சகத்தில் வேலை கற்றுக்கொள்ளும் வரை எதுவும் தரமாட்டோம் என்ற ஒப்பந்தத்தோடு சேர்த்துக்கொண்டார்கள். வெகு ஆர்வத்தின்பொருட்டு ஓரிரு நாட்களில் அச்சுக்கோர்க்கத் துவங்கியதை பார்த்த ஓனர் பஸ் செலவிற்கு தினசரி மூன்று ரூபாய் கொடுக்க ஆரம்பித்து பின் தினம் 5ரூபாய் என வாங்கத் துவங்கினேன். ஓராண்டு அப்படியே கழிந்தது.

அடுத்த ஆண்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் நம்பிக்கையான  ஒருவரை தேடிக்கொண்டிருக்க நான் பகுதிநேர வேலைக்குப் போவதை அறிந்து எனை அனுகினார். யார் யாருக்கு பணம் கொடுத்துள்ளேன்  பார்த்துக்கொள்ளென  உடன் அழைத்துச் சென்றார். பூ கட்டுபவர்கள், டீக்கடை,   மீன்கடை, தள்ளுவண்டி பழக்கடை, வெல்டீங் கடை என அவரிடம் பணம் வாங்குபவரை பார்த்ததும் அவர்களின் வாழ்வியல் சூழல் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. இந்த புது தம்பிதான் இனிமே வருவாராவென  மகிழ்வோடு எல்லோருமே சந்தோசித்தார்கள். அவர்களோடு நெருக்கம்கொள்ள மனம் துடிக்க வேலைக்குச் சேர சம்மதித்துவிட்டேன்.  தினசரி ஐந்து ரூபாயும், வசூலித்து வர சைக்கிள் ஒன்றும் கொடுத்தார். மீதி நேரங்களிலும் அச்சைக்கிளின் ஓனராகவே நான் இருக்க வசதியாக இருந்தது. அம் மக்களின் மிகையான அன்பில் நனைந்து கிடந்த நாட்களை என்றென்றும் மறப்பதற்கில்லை.

படிப்பு முடிந்ததும் ஓசூர் வந்துவிட்டேன். சேலம், பயணத்தில் கடக்கும் ஊராகி விட்டது. எல்லாம் கொஞ்ச நாட்கள்தான். அவ்வூர் எனை புதுப்பித்து புதுப்பித்து அனுப்பிவைக்கும் ஊராக மாற்றம் கொள்ளத் துவங்கியது.  நட்பாகினேன் வே.பாவு, அ.கார்த்திகேயன் மற்றும் சாகிப்கீரானுடன். பின் நிறைய்ய நண்பர்கள்... இலக்கியப் பித்தனாக திரிந்த காலம்.  ஓசூரிலிருந்து அடிக்கடி சேலம் சென்றுவர இவர்களின் நட்பு கிடைத்தது. பல்சுவை நாவலில் எனது கவிதை வந்தது. (அச் சமயத்தில்தான் பாபு மற்றும் தூரன்குணாவின் கவிதைகளும் அவ்விதழில் வந்தது)சேலத்திலிருந்து பாபு, கார்த்தியிடமிருந்து பாராட்டி கடிதமும்... எனது ஆர்வத்தை வளர்த்தெடுக்க இருவரிடமும் இருந்து கடிதங்கள் நிறைய்ய வரத் துவங்கின... ஊர் செல்லும்போதெல்லாம் ஐந்துரோடில் இறங்கி சாகிப்கீரானிடம் காட்டுவதற்காக எதையாவது அவசரஅவசரமாக எழுதிக்கொண்டு போவேன்... சமயங்களில் நிறைய்ய பேசுவார். சன்னமான அவரின் குரல் காதுகளில் ஒலித்தபடி இருக்க ஊருக்குச் (நமச்சிவாயபுரம்)சென்றுவிடுவேன். வரும்போது அம்மாப்பேட்டையில் இறங்கி  பாபு மற்றும் கார்த்தியை பார்த்து சமீபத்தில் வாசித்த கவிதை பிடித்த கவிதை கதையென பெரும் உரையாடலுக்குப் பின் ஓசூர் பஸ் ஏறுவேன். இப்போ அம்மாப்பேட்டையில் அகச்சேரன்  ராஜா, சமீபமாய் சிபிச்செல்வன் அண்ணாச்சியும்... அதே பழக்கம் இப்பவும் தொடர்ந்தபடித்தான் இருக்கு...

சாகிப்கீரான் பாபு இணைந்து நடத்திய தக்கை இதழ் வாசிக்க எல்லாம் எனக்கு புதிதாக இருக்க இவர்கள் மீதான மதிப்பீடு வேறாய் மாற்றம் கொள்ளத் துவங்கியது.  தக்கை சுற்றுச் சூழல் அமைப்பு, அதன் பின் தக்கை திரை இயக்கம்,  தக்கை குழந்தைகளுக்காக கண்ணாமூச்சி என்ற அமைப்பு உருவாக்கினார்கள். நிறைய்ய இலக்கியக்கூட்டங்கள் தொடர்ந்து நடத்தினர். இலக்கிய  நண்பர்களை அறிமுகப்படுத்திவைக்கும் ஜங்சனாக பாபு இருந்தார். தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் நண்பர்கள் அனைவரும் பாபு மூலமாகத்தான்  நட்பானார்கள்.

தொடர்ந்து இலக்கியக் கூட்டங்களையும், நண்பர்களின் தொகுப்புகளுக்கு விமர்சன, அறிமுக கூட்டங்கள் மிகுந்த பொருட்செலவில் நடத்தி ஆட்டமிட்டு  நெகிழ்ந்து கண்ணீர் சொரிந்து தாயின் பூரிப்போடு மகிழ்ந்து இழப்புகளின் வலியை வென்றெடுக்கும் பாபுவிற்கு மூத்த இளைய படைப்பாளிகளின் நட்புக் கூட்டம் குவிந்து கிடந்தும் தன் கவிதை தொகுப்பை தானே பதிப்பகம் தொடங்கி வெளியிட்டிருப்பது வேதனையாகத்தான் இருக்கிறது. பதிப்பகத்திற்கும் கவிதை தொகுப்புக்குமான  அறுந்து தொங்கும் உறவு குறித்து வெறுமனே வருத்தப்படத்தான் முடிகிறது.
ஐ டிஐ படிப்பவனாக, அச்சகத்தில் வேலை பார்ப்பவனாக, கந்துவட்டிக்காரனாக அரியப்பட்ட சேலத்தில் இப்போ இலக்கியவாதியாகவும் அறியப்படவும் எனை சேலத்துக்காரனாகவே நினைத்துக் கிடக்கவும்  அச்சாணியாக இருந்தவர் வே.பாவு... அவரின் முதல்தொகுப்பு மதுக்குவளை மலர் ஜீலை 29ம் தேதி ஆதவன் வெளியிட நானும் விஷ்னுபுரம் சரவணனும் பெற்றுக் கொண்டோம். அக்கணம் பத்தாண்டுகால நாட்களை நினைவில் நெருக்க பிதுக்கம்கொண்டது மகிழ்வின் அன்புச்சொட்டு நீர்...

வாசிப்பில் வெகு எளிதில் நம்மோடு கரைந்து நாமும் நமக்கானவைகளோடு வாழ்ந்து பார்க்கச் செய்கிறது வே.பாபுவின் மதுக்குவளை மலர்.

நேசிப்பதும் நல்லதுதான். காரணம் நேசிப்பதும் கடினமானதல்லவா... ஒரு மனிதர் இன்னொரு மனிதரை நேசியுங்கள் என்பதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகவும் கஷ்டமான வேலை மிகவும் முக்கியமான செயல் என்பார் ரில்கே... ஆனால் பாபுவோ வெகு எளிதாக எல்லோரையும் நேசிக்கக் கற்றவர். நேசிப்பின் ஆனிவேராக அம்மு. தொகுப்பெங்கும் கிளை விரித்த பெரும் மரமாய் அம்மு. வந்தமரும் பறவையாக பவிக்குட்டி...
இதே
இந்த மதுவிடுதியின்
மரத்திலிருந்து
ஒரு சின்னஞ்சிறு பூ
என் மதுக்கோப்பையினுள்
வந்து விழுகிறது
அது அம்முதான்... என முடிவடையும் முதல் கவிதை வாசிப்போரை கரைத்துவிடுகிறது. அதே மதுவிடுதி இப்போ விழுவது இலை. அதன் தொடர்ச்சியாய் வனத்தையே குடித்து வெளியேறுகிறார். ஒரு இலை வனத்தையே கரைத்துவிடுவதுபோல இவர் வாழ்வையும் கரைத்திடுகிறது அம்மு என்ற இலை...

இறந்தவனின் கண்களை திறந்து மூடச்செய்யும் அம்மு மதுபாட்டிலாக, ஏவாளாக, பட்டத்து ராணியாக, இணை இயந்திரமாக, தொடர்பு எல்லைக்கு வெளியேறியவளாக, வண்ணத்துப்பூச்சியின் இறந்த உடலை இழுத்துச் செல்லும் எறும்பாக, சிலுவையில் அறையப்பட்ட தேவதையாக, அறைவாசியாக, சந்தேகங்களை நிவர்த்தி செய்பவளாக, கனவாக, பிறரின் துயருக்கு மனம் உருகுபவளாக, தார்ச்சாலையில் கால்களில் மிதிபடும் ஒற்றை ரோஜாவாக, ஒப்பாரிகளின் மத்தியில் உறங்குபவளென அனைத்தும் அம்முவாகவும் அம்முவின் நிழலாக மரணமும் பயணிக்கிறது கவிதைகளில்... வாசிப்பின் நிறைவில் சக்காரியாவின் அல்போல்சாவின் மரணமும் இறுதிச்சடங்கும் (மொழிபெயர்ப்பு: ஜெயஸ்ரீ) தொகுப்பின் கதைகள் நினைவில் வந்ததை தவிர்க்க முடியவில்லை. அத்தொகுப்பிலும் ததும்பிக் கிடந்தது மரணம்...

பகட்டோ சினிமாத்தனமோ சிறிதுமற்று அப்பழுக்கில்லாது தன்னை உரித்து உரித்து வாழ்ந்துகொண்டிருப்பவனின் சாட்சியம் இக் கவிதைகள்... அம்முவின் கவிதைகளை தொகுத்து வாசிக்க ஒரு கணம் ஆண்டாள் கண்தோன்றி மறைந்தாள். பாசாங்கற்று வாழ்ந்திருப்பவனுக்கு வாய்த்திருப்பது சாத்தியம்தான். எக் காலத்திலும் எல்லா சூழலிலும் தன்னை காய்ச்சிய பாகுவாக வைத்திருந்து அம்மு அள்ளி ஊற்ற எவ்வுருவத்தையும் அடையக்கூடியவனாக, தன்னை தீய்த்து தீய்த்து அம்மு மணம் வீசும் பெரும் காதலை எதனோடு ஒப்பிட? கால மாற்றங்களில் கடந்து போய்விடாது அம்முவிற்காக தன்னை ஒப்புக்கொடுத்தவனின் வாக்குமூலங்கள்தான் இக்கவிதைகள்...

ஓரிரு கவிதைகள்தான் என்றாலும் பவிக்குட்டியின் உலகம் அலாதியானது. நாமும் ஏதோ ஒரு பவிக்குட்டியின் உலகத்துள் நுழைந்து தாகமடைந்தவர்கள் என்பதை மறக்காமல் நினைவூட்டிச் செல்கிறார். ஒரு குழந்தையிடத்தில் அவர்கள் புழங்கும் பொம்மைகளுள் ஒன்றாக நாமும் மாறினால்தான் சில அற்புதங்களை தரிசிக்க முடியும் என்கிறார்.

நண்பர்கள் யாராவது தனக்கான அழுத்தங்களை பகிர்வு கொள்ள அழைத்து தொடர்புகொள்ள முடியாதுபோக இன்னும் கூடுதலான மனப்பாரத்தோடு இருக்கிறார்களோ என்னவோ எல்லா நேரமும் அதை பகிர்ந்துகொள்ள முடியாது அதற்கான மனநிலை வாய்க்கும் நேரத்தில் மட்டுமே பேச முடியும். நம் சூழல் பொருட்டு அலைபேசியை அணைத்து வைக்கும் பழக்கம் எத்தனை மோசமானது என்பதை உணர முடிந்தது நள்ளிரவு 1.40 என தொடங்கும் கவிதை வாசிக்க...

ஒருவனிடம் இருக்கும் தவறான பழக்கங்கள் குறித்தும்  அவரவர்களுக்கான வியாக்கியானமும் கருத்தும் வேறுவேறானவை. அது அவர்களின் கண்ணோட்டத்தில் மிக நியாயமானதும் கூட.  ஆனால் அப்பழக்கத்தில் இருப்பவனுக்கு அது தன்னை சிறுகச் சிறுகத் தின்னும் எனத் தெரிந்தும் அதனோடு ஸ்பரிசத்தை வைத்திருப்பது நிகழ்வின் நாட்களை உயிர்ப்போடு நகர்த்த வேண்டி இருப்பதன் பொருட்டும் தவிர்க்க இயலாது போய்விடுகிறது. அதற்கான நியாயத்தை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது மதுபாட்டில் அம்முவாகி உரையாடியதை வாசிக்க...

என்றாவது பயணங்களில் பார்த்திட முடிகிறது ஜன்னலோர இருக்கையில் அழுதபடி பயணிக்கும் யாராவது ஒருவனை. இப்போ அடிக்கடி டாஸ்மாக் கடைகளிலும் இது நிகழ்கிறது. சமயங்களில் அவனுக்கான துயரம் நமக்கான துயராகவும் ஒட்டிக்கொள்வதுண்டு. நமக்கான துயர்கள் அவர்களின் கண்ணீரில் வடிந்துகொண்டிருப்பதை நினைவுக்கு வரச்செய்தது நள்ளிரவு பேருந்தில் எனத் தொடங்கும் கவிதை.

மிகச் சிக்கலான சங்கடான விசயம்தான் சாவு செய்தியோடு ஒருவரை சந்திக்கச் செல்வது. அவ் வீடு இருக்கும் மனநிலை கொண்டாட்டம் எல்லாவற்றையும் ஒரு செய்தி நொடிப்பொழுதில் மாற்றிவிடுவதை 09-12-2003 அதிகாலை 3-50மணி தலைப்பிட்ட கவிதை சாவுச்செய்தியோடு சென்று வலியோடு திரிந்த நாட்களை நினைவூட்டியது.  சாவு செய்தி சொல்ல ஏற்படும் சங்கடங்களை அலைபேசி வந்தபின் தவிர்க்க முடிந்தது. எதிரிலிருப்பவரின் காட்சியை கண் அறியாதுதானே...

எதிர்வினை எனும் கவிதை ஒரு செவ்விந்திய நாட்டுப்புற பாடலை நினைவூட்டியது.
கடைசி மரமும் வெட்டுண்டு
கடைசி நதியும் விஷமேறி
கடைசி மீனும் பிடிபட
அப்பொழுதுதான் உறைக்கும்
பணத்தை சாப்பிட முடியாதென...
எதிர்வினை  கவிதையில் பட்டாம்பூச்சியை சிறைபடுத்தி, பறவையை வேட்டையாடி, மரத்தை வெட்டி, காட்டை நிர்மூலமாக்கி கடைசியாய் தற்கொலை செய்துகொள்வதென முடிகிறது.

தொகுப்பிலிருக்கும் சின்னஞ்சிறு கவிதைகளும் நெறிஞ்சி முள் குத்த உடல் ஊறும் வலியை ஏற்படுத்துகிறது
கூண்டுகள் அழகானவை
பறவைகளில்லா
கூண்டகள்
மிக அழகானவை...

கீறல் விழுந்த ரெக்காடாக வெறுமனே தமிழன் தமிழன் என்ற கூப்பாடு ஏதுமில்லாது உண்மையோடு ஈழம் குறித்த தனது வலியை வெளிப்படுத்தியுள்ளார். எப்பவும் எவ்வித உதவியும் செய்திடாத ராஜாக்களை கவிதையில் அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறச் செய்து அம்மணப்படுத்தியுள்ளார்... பதினேழு பேர் உயிர் குடித்த ஆற்றின் கதையையும் பெரும் துயர்கொள்ள கவிதையாக்கியுள்ளார்.

மேலும் இவரிடம் நிறைய்ய வசன கவிதைகளை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது தொகுப்பில் இருக்கும் ஒரே ஒரு வசனகவிதையும். பேசுபவன் நிறுத்தியபிறகும் அவனுக்கான துயரத்தை கேட்பவன்  நிறுத்தமில்லாது தொடர்ந்தபடி இருக்கச் செய்துள்ளது நாமும் அனுபவித்த உணர்வுதான்.

தொகுப்பை வாசித்து முடிக்க அம்மு வாராததை பேருந்து நிறுத்தத்தில் இசையால் எல்லோரிடமும் சொல்லிச் செல்லும் பார்வையற்ற குழல் விற்பவனாக எனை உணர்ந்தேன்..

விலை:ரூ.50, வெளியீடு: தக்கை பதிப்பகம், 15, திரு.வி.க.சாலை, அம்மாப்பேட்டை, சேலம்-3.

நன்றி: மலைகள் இணைய இதழ்.

Thursday, August 23, 2012


தறுதலை


சரியான திருட்டுப்பயல்
தொங்கும் அப்பாவின் சட்டையில்
அடிக்கடி கை வைப்பதுண்டு
கால் சட்டையில் திணித்து வரும் பருத்தி
கல்கோணா தேன்மிட்டாயாக இனிக்கும்
சரியான தறுதலப்பயல்
அர்த்தங்கள் ஏதுமறியாது சுமந்தேன்

ஏவப்படும் வேலைகளை செய்ய மறுக்க
திமிர்பிடித்த கழுதையாகவும்...
கேள்விகள் நிறைய்ய கேட்டேன்
மொடமசுறு பிடித்தவனென்றார்கள்
கொஞ்ச நாட்கள்
கொழுப்பெடுத்தவனாகவும்
ஊதாரி உதவாக்கரையெனும்
பட்டங்களுக்கும் பஞ்சமில்லை
என் படிப்பு கூடுதலாகிக் கொண்டிருக்க
பேசிக்கொள்ள துவங்கினார்கள்
நல்ல பிள்ளையெனவும்
மாற்றங்கள் குறித்த சலனம் ஏதுமின்றி
மௌனித்து காலம் நகர்ந்தபடியிருக்க
பிழைக்க புகுந்த கூட்டில்
அடைந்து கிடக்கின்றேன்
வம்புதும்பற்ற
அற்பக் கூலியாக...

நன்றி: தீராநதி

Wednesday, August 22, 2012

எனது ஹீரோக்கள்
                                                                                                                 1

சித்திரம் பேசுதடி
என் சிந்தை கலங்குதடி...
அடிக்கடி பாடிக்கொண்டு திரிவேன். யார் எழுதியது யார் பாடியது என்பதுகுறித்தெல்லாம் எந்த புரிதலும் இல்லாத வயது.  அடிக்கடி இதையே முணுமுணுப்பேன். தோழிகள்கூட எப்பவாவது கிண்டலடிப்பார்கள். சித்திரம் பேசுதடி வராண்டியென... அதுகுறித்தெல்லாம் எவ்வித வருத்தமோ கோபமோ ஏற்படுவதில்லை. ஏன்னா எனது ஹீரோ அதைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். அவரிடமிருந்துதான் எனக்கு ஒட்டிக்கொண்டது அப்பாடல். அதை நான் பெருமிதமாகவே நினைத்திருந்தேன். எல்லோரும் கமலையும் ரஜினியையும் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் நீ என்னடான்னா போஸ்டர் ஒட்டுறவன்மேல் இப்படி பைத்தியமாத் திரியறே என கிண்டலடிப்பார்கள். இவர் ஒட்டும் போஸ்டரால்தான் அவர்களே அழகாக காட்சியளிக்கிறார்கள் அவர்களை விட இவர்தான் பெருசு என வாதிடுவேன். ரொம்ப பேசிக்கொண்டே இருந்தால் உங்க ஹீரோவை நீங்க தொடுங்கடா பாப்பம். என் ஹீரோ எனை தொடுவார்டா என வாயடைத்துவிடுவேன்.

யாருக்கும் தெரியாது இருட்டிலே  வந்து இருட்டிலோ போய் இருக்கக்கூடும். யாரைக்கேட்டாலும் தெரியாது என்பார்கள். திடுமென முளைத்திருக்கும் இன்றே இப்படம் கடைசியெனும் துக்கடா போஸ்டர். அதை பார்த்ததிலிருந்தே கால்கள் தரைதேயாது மிதந்து திரிவேன். பள்ளியில் வேறு எல்லோருக்கும் பாடம் நடந்து கொண்டிருக்கும். எனது மனதில் வேறு சித்திரம் ஓடிக்கொண்டிருக்கும். என்ன பாடமாக இருக்கம். யார் நடித்திருப்பார்கள். யார் ஜோடி, யார் வில்லன் இப்படியாகவே இருக்கும். தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்திருப்பேன். விடிந்தும் விடியாததுமாய் ஓடிப்போய் சாவடிப்பக்கம் நின்று கொள்வேன். அங்குதான் பெரிய சுவர் இருக்கும். துண்டு துண்டாக நான்கு போஸ்டரை ஒட்டி பெரிய சைஸ்சில் இருக்கும் திரையில் இருக்கும் காட்சிபோலவே இருக்கும். எப்படியும் ஆறிலிருந்து ஆறறைக்குள் வந்துவிடுவார். அவர் சர்ரென வேகமாக வர அவரது பீடிப்புகை பின்னோக்கி ரயிலாய் ஓடும். இறங்கும் வேகத்தில் ஸ்டைலாக ஸ்டேண்டை போடுவார். அக்காட்சி விவரிக்க முடியாத சித்திரமாகத்தான் இன்னமும் என் மனதில் ஓடுகிறது. வந்துட்டியா கண்ணாவென கண்ணம் தட்ட உடலெங்கும் பசை மணக்கும். மடித்து வைக்கப்பட்ட போஸ்டர்களை விரித்து ஒட்டும் வேகம் வேறு யாருக்கும் சாத்தியமற்றதுதான். நானும் சமயங்களில் முயற்சித்து பார்த்திருக்கிறேன். ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தில் ஏற்பாடு  செய்யும் நிகழ்ச்சிக்காக போஸ்டர் ஒட்டப் போகும்போது, ஒரு நாளும் கைவந்ததே இல்லை. உடன் வரும் தோழர்களோடு வேறு எதையோ பேசிக்கொண்டிருந்தாலும் நினைவு முழுக்க அவரே நிற்பார். அவர் போஸ்டரை ஒட்டி முடிக்கும் தருவாயில் ஓடிப்போய் டீ வாங்கி வருவேன். அதற்குள் அடுத்த பீடியோடு நின்று பார்த்துக்கொண்டிருப்பார் போஸ்டரை சரியாக இருக்காவென. சிறிதாக பிசிறு தட்டியிருந்தாலும்  மீண்டும் பிரித்து ஒட்டுவார். சுவற்றிலிருந்து எத்தனைமுறை பிரித்தாலும் அவருக்கு மட்டும் அந்த போஸ்டர் கிழியவே கிழியாது. மீண்டும் கன்னம்தட்டி சிரிப்பை கையில் அசைத்து பறப்பார். பசைமண மகிழ்வில் வீடு திரும்புவேன். ஒரு நாளும் பெயரைக் கேட்டதே இல்லை. அவரும்தான். கண்ணாவென கூப்பிடுவார். நானும் போஸ்டரண்ணே என்பேன். மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்வோம் தியோட்டருக்கு. வரும்போதும் நடந்தேதான். பஸ்சிற்கு காசு தரமாட்டார்கள். சினிமாவிற்கு மட்டும்தான் காசுகொடுப்பார்கள். மழைக்காலத்தில் மட்டும் பஸ்சிற்கும் கொடுப்பார்கள். போஸ்டர் அண்ணாதான் டிக்கெட் கிழிப்பவராக இருப்பார். நான் விரும்பும் இடத்தில் எனை ஒக்கார வைப்பார். ஆப்ரேட்டர் ரூமுக்கு அழைத்துச் செல்வார். இடைவேளையின்போது அங்கு போய் பிலிம் ரோலை சுற்றிக்கொண்டிருப்பேன். கல்கோணாவோ, முறுக்கோ தவறாமல் கிடைத்துவிடும்.
தியேட்டரில் ஒரு மூலையில் சிறியதாக இருந்த கடை கை கால் முளைத்து பெரும் உருவமாய் மாறிக்கொண்டிருக்க அதன் பசிக்கு தியேட்டரே பலியாகிட அவ்விடங்களில் பெரிய கடை மட்டுமே இப்போது... எனது ஹீரோ எங்கு இருப்பாரோ... எப்படி இருக்காரோ...

                                                                                                                   2


துள்ளலோடு பள்ளிக்கு கிளம்புவேன் புதன்கிழமையென்றால். ஒவ்வொரு புதனுக்குள் எப்படியாவது நாலணாவோ எட்டணாவோ தேத்திவிடுவேன். அதற்காகவே யார் கடைக்குப் போகச் சொன்னாலும் சலிக்காமல் ஓடுவேன். ஐந்து பைசாவோ பத்து பைசாவோ மீதியானால் கொடுப்பார்கள். ஒண்ணுக்கு பெல் அடித்ததும் சிட்டாக பறப்பேன். நான்தான் முதல் ஆளாக இருக்க வேண்டுமென... அவர் உலக்கை போன்று இருக்கும் அதை கையில் பிடித்திருப்பதை பார்க்க தெருக்கூத்தில் வரும் ராஜாபோலிருப்பார். அந்த குச்சி நல்ல வழவழப்பாக இருக்கும். அதன் நடுவில் கலர் துணி தொங்கும் தேர்சிலையாக கைதுடைத்துக் கொள்ள. அருகில் அவரின் வருகையை சொல்லும் மணி இருக்கும். ரோஸ் வெள்ளை பச்சையென வண்ணக்கலவைகளால் விருப்பங்களை நிறைவேற்றும் இனிப்பு கலயத்தை சுற்றி வைத்திருப்பார். சிறிய டப்பாவிலிருக்கும் எண்ணையை தொட்டுத்தொட்டு உருவி உருவி ஓவியமாக்கி ஒட்டுவார். ஓசுக்காக தாவாயில் ஒட்டும் மீசை மிட்டாய் உடனடியாக கரைந்திடும் ஊறியிருக்கும் எச்சில் குளத்தில். கடிகாரம் பூ பூச்சியென பசங்க கேட்க கேட்க இறங்கும் மழையென சரசரவென ஒட்டியபடி இருப்பார். முட்டாம ஒவ்வொருத்தரா நீட்டுங்கவென முனுமுனுத்தபடி இருப்பார். எல்லோருக்கும் ஒட்டி முடிக்கும் வரை அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பேன். எனக்கு மட்டும் பெரிதாக தேள் செய்து ஒட்டுவார் உடம்பு கொடுக்கு வால் வேவ்வேறு கலரில் மிக அழகாக இருக்கும் கொடுக்கு அசைந்தபடியே இருப்பதாக தோன்றும். பெருமிதத்தில் நீச்சலடிப்பேன் துள்ளும் மீன்களோடு.

எப்பொழுதாவது குலசாமி கோயிலுக்கு போனால்கூட சாமியின் முகத்தில்
முட்டாய்க்காரரின் முகம்மிளிரும் உடல் இனிக்க கடந்த நாட்களை
கைபிடித்தபடியே அலைகிறேன்.

இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன வெறும் புதன்கிழமைகள்...

                                                                                                         3


நமச்சிவாயபுரம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது. அம்மாவின் ஊர். வருடம்தோறும் திருவிழா நடக்கும். திருவிழாவென்றால் தெருக்கூத்து இல்லாதிருக்காது. இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும். பெரும்பாலும் அரியலூர் மணி செட்டுதான் வருவார்கள். வேறு எந்த செட்டும் ஊர் மக்களை திருப்திபடுத்துவதில்லை. மணி பாண்டியன் கெட்டியக்காரன் அண்ணாமலை மூவரும் எல்லோருக்கும் பரிச்சயமானவர்கள். அந்த செட்டின் தேதிக்கேற்ப திருவிழா தேதியும் முடிவு செய்யப்படும். யாராவது நாளைக்கு சுத்திப் போடணும் ஊர் கண்ணே விழுந்திருக்கும் பாவி மவன் இம்புட்டு அயவா புடவ கட்டி ஆடுறானே வயசு புள்ள தோத்தா போவென கிழடுகள் அங்காலாய்ப்பார்கள். மணி பெண்வேசமிட்டு வர ஊரே வாய் பிளந்து ரசிக்கும் அவர் தனக்கான பாடலோடு வெளிவந்து நடனமிட்டு முடித்து அடேய் அண்ணாமல...ல என ராகமிட்டு அழைக்க ஓடிவரும் கட்டியக்காரன் ஆமாம் ஆமாம் நான் தொடாத மொலதானென பிடிக்கப் போக அவர் துரத்த பார்வையாளர் பக்கமெல்லாம் புகுந்து வர மழைக்குப்பின் தெருவில் கூடும் குழந்தைகளின் கொண்டாட்டம் ரத்தத்தில் வெப்பமேற்ற சுறுசுறுப்பாகிவிடுவோம். ஒரே பாடலில் பத்து சேலைகள் மாற்றிவர அதிசயத்து வாய் பிளந்து பார்ப்பேன். கூத்து முடிந்து பஸ் ஏறி செல்லும் வரை பார்த்து பார்த்து வியந்தபடி இருப்பேன். இப்பவும் எங்காவது கூத்து பார்க்க சென்றால் வரும் பெண் வேசங்களோடு அரியலூர் மணியை பொருத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது நினைவு...

ன்றி...தமுஎகச  தமிழக பண்பாட்டு மலர்
 

Wednesday, August 8, 2012

நிறமாற்றம்

வாகான குச்சி ஒன்றை ஒடிப்பேன்
ஒரு முனையை நன்றாக மென்று
கசப்பை விழுங்கி குச்சியை
கற்றறிந்தவாறு பற்களில்
பயணிக்கச் செய்வேன்
குச்சியை இரண்டாக பிளந்து
நாக்கில்
சரஸ்வதி எழுதியதை
சுத்தமாக வழித்தெடுப்பேன்
பொழுதுகள் ஆரோக்கியமாகவும்
உற்சாகத்தோடும் உருண்டன
எழுத்துக்களால் நாக்கு தடித்தவர்கள்
நிறைய்ய சிந்திக்கலாயினர்
மரங்கள் சரிந்தன
இடப்பெயர்வில் மண் நிறமாறியது
உடல் நாணல் தன்மைகொள்ள
அவரவர் கூறுவதற்கேற்ப
தட்டை வளைவு குழி குவியென
மாற்றி மாற்றி துலக்கி
சோம்பியபடி வாழப்பழகினோம்
வேறு வக்கற்று...

nantri:vallinam.com

Tuesday, July 24, 2012

அன்பெனும் வசியக் கூடு


மழைக்காக நீண்டநாள் காத்துக்கிடக்கிறான் ஒருவன். ஒரு நாள் இரவில் அவனுக்குத் தெரியாமல் வந்துபோய்விடுகிறது மழை. காலையில் எழுந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி. நம்மை எழுப்பாமல் ஏமாற்றிவிட்டதே என்ற கோபத்தில் வீட்டின் முன் இருக்கும் எலுமிச்சை மரத்தை வன்மத்தோடு உலுக்குகிறான். ஓசூரில் தமுஎச நிகழ்வொன்றில் மனுஷ்யபுத்திரன் கவிதையை வாசித்து பவா.செல்லதுரை சொல்லிக்காட்டிய சித்திரம் இன்னும் என் மனதில்.... கூடவே நானும் ஒரு எலுமிச்சை மரத்தை உலுக்கி விழும் துளிகளில் நனைந்து கிடந்தேன். எனக்கு பவா என்றால் எலுமிச்சை மரத்தை உலுக்கும் சித்திரம்தான் மனதில் எழும். இப்படி அவர் பழகிய ஆளுமைகளின் சித்திரங்களை நிழலாய் ஒட்டவைத்துள்ளார் ‘எல்லா நாளும் கார்த்திகையில்’

ஒசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டியில் சிறந்த ஆவணப்பட குறும்பட விருது வழங்கும் விழா ஒன்றில் எனக்கு மிகவும் நம்பிக்கை வந்துவிட்டது. இவ்வளவு காலம் ஏதோ ஒன்றை உருப்படியாக செய்துகொண்டுதான் இருந்திருக்கிறேன். இனியும் செய்வேன். தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இச்சிறு ஊரில் இறுநூறு முன்னூருபேர் நாள் முழுக்க அமர்ந்து இப்படங்களை பார்த்து உரையாடல் நடத்துவதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது என்றார் பாலுமகேந்திரா. என்றாவது பார்ப்போம என நினைத்திருந்த என்முன் அவர் பேசியது இன்னும் நினைவில்... அந்த ஆளுமையின் மகளாக சைலஷாவும் மருமகனாக பவாவும் மாறியிருப்பதை வாசிக்க பெரும் மகிழ்வடைந்தேன்.

தன் தோழியோடு ஓட்டலுக்குச் சென்றவன் தன் விருப்பத்திற்கு ஆர்டர் செய்ய, தோழி எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதை நீ எப்படி தீர்மானிக்கலாம். என் விருப்பம் என்னவென கேட்கக்கூட தோனாது உன் விருப்பத்திற்கு ஆர்டர் செய்கிறாயே என்பதை வாசிக்க பொட்டில் அறைந்ததுபோல் இருந்தது. இத்தவறை தொடர்ந்து செய்துகொண்டிருப்பவன்தான். சக மனிதர்களின் விருப்பங்களை உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொடுத்தது பிரபஞ்சனின் எழுத்து. பிரபஞ்சனுக்கும் பவாவுக்குமான நெருக்கம் நமக்கு கிடைக்காத என்ற ஏக்கத்தை உண்டுபண்ணிவிடுகிறார் சிறு பத்தியில் பவா...

நான் ஒரு வட்டமிட்டேன். நிலாவாக்கினான், மீண்டும் வட்டமிட சூரியனாக்கினான். அருகில் அவன் பெற்றோர்கள் கலையில சாப்பிட்டியே, நேற்று சாப்பிட்டியே என இட்லி தோசைகளை நினைவூட்டியபடி இருக்க, அவனோ அதை தவிர்த்து வேறு வேறாக நான் இடும் வட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தான். அற்புதமான குழந்தை அவன் என ச.தமிழ்ச்செல்வன் வியந்து வியந்து காலை நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த சிபியைத்தான்  அன்று நிகழ்வு முடிவதற்குள் சாலை விபத்திற்கு பலிகொடுத்தோம். அய்யோ பாவ... என்ற அலறல்கள் எக் குழந்தை இறப்பிலும் நினைவில் வந்துவிடுகிறது... தமிழ்செல்வன் குறித்த பவாவின் பதிவை வாசிக்க அன்றைய நாள் நினைவில் வர நீர்கோர்த்த கண்களோடு வாசிப்பை தொடர முடியாது போனது.

செல்லும் ஊரின் மண்வாசனையை உடலேற்றி அவ்வூர் பூக்களின் மணம் குடித்து பறவைகளின் பாசைபேசி லயித்துக்கிடக்கும் நாடோடியான கோணங்கி ஒரு முறை ஓசூரில் சின்னண்ணன் என்ற நண்பரின் மொட்டை மாடியில் நண்பர்கள் சூழ்ந்திருக்க தன் இழந்த காதல் குறித்து பேசியபடி இருக்க தொடர்ந்து கேட்க முடியாது கோ... வென அழுத நண்பர்களும்... எல்லோருக்குள்ளும் இருந்த இழந்த காதலிகள் இருளில் மறைந்து அழுத விசும்பல்களும் இன்னும் நினைக்க உடல் நடுங்குகிறது..  தன் குறைச்சலான பக்கங்களில் அவரின் நெடிய பயணங்களின் நிழலாய் நமை பின்தொடரச் செய்திடுகிறார் பவா.

காலம் மிகப் பலம் வாய்ந்த மந்திரவாதிதான். சினிமாக்காரன் அரங்கத்துள் நுழைந்துவிட எரிச்சலான எழுத்தாளனின் ஆளுமையை வேறு ஒரு சினிமாக்காரனைப் பற்றி எழுதச்செய்து நொறுங்கச்செய்துவிட்டதோடு அத்துறையிலேயும் உலாவச்செய்துவிட்டதே காலம்...
அன்று நானும் இருந்தேன். மம்முட்டியின் வரவை சகித்துக்கொள்ளாத எஸ்.ரா. என் மனதில் பெரும் நாயகனாக உயர்ந்துகொண்டிருந்தார் ரஜினிகாந்த் குறித்த அவரின் கட்டுரையை வாசிக்கும் வரை. ஆயினும் அவரின் எழுத்து அவ்வப்போது எனை உயிர்ப்பித்துக்கொண்டிருக்க பவா கொண்டாடும் நாடோடி எஸ்.ரா. என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவர்தான்.

வாசிப்பின் முடிவில் ராஜவேலு நீர்த்துளியாகி கண்ணிலிருந்து கசிந்து முடிவதற்குள் எங்களுடன் ஓசூர் தமுஎசவில் இருந்த தோழர் விநாயகம்  மீண்டும் நீர்த்துளிகளாய் கோர்த்துக்கொண்டார். எட்டுமணிநேரம் கம்பெனியில் இருந்த சோர்வை அகற்றிவிடும் அவரின் ஆர்வம். நன்கொடை வசூலிக்க, போஸ்டர் ஒட்ட, தட்டிக் கட்டவென வேலைகளில் உற்சாகமாக பங்கேற்போம். அவர் கீழே அமர அவரின் தோளில் நான் ஏறி நிற்க அவர் எழுந்துநிற்பார் தட்டியின் மேல்பாகத்தை கட்டி முடிப்பேன். ஒரு முறை அப்படி கட்டி முடித்திறங்க ஆதவன் தனியாக அழைத்து அவர் இரண்டுமுறை இதய அறுவை சிகிச்சை செய்தவர் என சொல்ல உடல் நடுங்க நீர்கோர்த்த நாட்கள் உண்டு.  தான் நம்பும் அமைப்புக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் இப்படியானவர்கள்தான் அமைப்புகள் மீதான நம்பிக்கையை வற்றிவிடாது பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு முறை புதிய பார்வையில் ஆதவன் கதை பிரசுரமாகியிருக்க அக்கதை குறித்து எல்லோரும் பேசிக்கொண்டிருக்க விநாயகம் கேட்டார் ஏம்பா, நீங்க எழுதறத்துக்கு இப்படி அமைப்பில் யூனியனில் இருப்பது இங்கு கிடைக்கும் அனுபவங்களும் ஒரு காரணம்தானேப்பா? ஆதவன் ஆமாப்பாவென சொல்லி முடிப்பதற்குள் அவரின் உடலில் அப்படியொரு மலர்ச்சி ஏற்படும். கை நிறைய்ய சாக்லேட் கிடைத்த குழந்தையாய் பூரித்திருப்பார். அப்போது நினைத்ததுண்டு இவரின் சந்தோசத்திற்காகவாவது நிறைய்ய எழுதவேண்டுமென. நான் இப்போ நிறைய்ய எழுதுகிறேன் வாசித்துக் கொண்டாட அவர் இல்லை. மீண்டும் இதய வால்வு சிக்கல் ஏற்பட இல்லாதுபோனார். ஒவ்வொரு நிகழ்ச்சி திட்டமிடலின்போது மறவாது குறிப்பிடுவார்  பவா, கருணா மாதிரி சிறப்பா செய்யனும்பாவென... பவாவின் ராஜவேலு குறித்த பத்தியில் விநாயகமும் நிழலாய் உடன் வந்தார்.

காணக்கிடைத்தவர்கள் பாக்கியவான்கயே... ஒழுங்கில்லா வட்டத்தில் ஜெயகாந்தனிலிருந்து கை மாறும் போதைபுகையை பார்த்து வியக்க வாய்த்தது இரண்டு முறை. அவ்வட்டத்தின் ஆளுமையை சிதையாது காட்சியாக்கியுள்ளார் பவா. அன்றைய முற்றம் நிகழ்வில் நான் எழுதினேன் கை ரிக்ஷா ஆட்டோவானது அதுபோதும் இன்னும் ஏண்டா எனை எழுதச்சொல்கிறீர்கள் என்ற ஜெயகாந்தனின் குரல் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கு.  எப்படியானவர்களுடனும் இணக்கமாகிவிடும் பவாவின் வசியம் குறித்து வியப்பாகத்தான் இருக்கு.

மிதமான போதையில் சிறு தூறலில் நடந்து சென்றேன் என வாசிக்க ஆச்சரியமாகிப்போனேன். ஊரே கொண்டாடிய இயக்குநர் பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் ஒன்றின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது. குடியை அறமாகப்பார்க்கும் சமூகத்தில் தன் இமேஜ் குறித்து எக் கவலையும் இல்லாது எப்படி எழுதுகிறார் என... பின் தன் படங்களால் நிறைய்ய ஆச்சரியங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். பவா பால உடையாடல்களிலும் அவ் ஆச்சரியங்கள் குறையாது நீடித்துக்கொண்டேதான் இருந்தது...

மடித்துக்கட்டிய வேஷ்டியும் கசியும் பீடி புகையுமாய் மனம் படிந்த மம்முட்டி...
தன் வாழ்வனுபவங்களை எவ்வித கூச்சமும் ரகசியமும் இல்லாது உண்மையாக வெளிக்காட்டிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு...
தன் மாநில நலன் தன் நலன் என்று எதைபற்றியும் சிறிதும் கவலைகொள்ளாது அரசியல் நிகழ்வுகளில் சரியெனப்படுவதை வெளிப்படையாக பேசும் சக்காரியா...
அமைப்பு சார்ந்தவர்கள் சாராதவர்களென பேதமற்று எல்லோருக்குள்ளும் பேரொளியாக இருக்கும் கந்தர்வன்...
பொய்யர்களோடும் வஞ்சகர்களோடும் இருந்ததுபோதுமென போகுமிடமெங்கும் குழந்தைகள் சூழ அவர்களோடு பாட்டுப்பாடி கதை சொல்லி குழந்தையாகி உரையாடிக்கொண்டிருக்கும் லெனின்...
பாலியல் சிதைவுக்கு உள்ளான ஒரு பெண்ணிற்கான நியாயத்திற்கான போராட்டங்களோடு அப்பெண்ணிற்கு சுடிதாரை வாங்கிச் சுமந்து திரிந்த திலவதி...
தன் நடிப்பாலும் செயற்பாட்டாலும் உயர்ந்துகொண்டே இருக்கும் நாசர்...
தேடல்களோடு திரியும் எதோவொரு இளைஞனுக்கு இது பயன்படட்டுமென தன் அலைவுகளையும் தாகங்களையும் எல்.சி.டி புரஜெக்டராக்கி அனுப்பி வைத்த மிஷ்கின்...
குழந்தைகளுக்கு புகைப்படம் எடுக்க கற்றுத்தர பவா கூப்பிட அதைத்தவிர எனக்கு என்ன புடுங்குற வேலையென வந்திறங்கிய பி.சி.ஸ்ரீராம்...
ஒரு எழுத்தாளரின் வேண்டுகோளை மதித்து தன் ஒளிசுருட்டும் கண்களை பிடுங்கி அறையில் பூட்டிவைத்து வெறும் ஆளாய் நின்ற வைட் ஆங்கிள் ரவிஷங்கர்  என இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது...

தான் பழகிய ஆளுமைகளின் ஏதோவொரு தருணத்தில் வெளிப்படும் குழந்தைமையை எளிதில் கண்டடைந்து அக் குழந்தைக்கு பாலும் சோறும் ஊட்டி, கிச்சுக்கிச்சு மூட்டி நன்றாக வளர்த்தெடுத்து தாய்மையின் பூரிப்போடு தான் பார்த்த அழகை வாசிப்பவனுக்கும் தன் மொழியால் கனியக் கனிய கொடுத்திருக்கிறார் ‘எல்லா நாளும் கார்த்திகையில்’

பவாவிற்கு ஆளுமைகளின் நீண்ட பட்டியல்போல் ராஜவேலுபோன்று பொக்கிசங்கள் புதைந்து கிடக்கும் சாமானியர்களின் நீண்ட பட்டியலும் இருக்கும் அதையும் எழுதுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது வாசித்து முடிக்க...

நன்றி : புத்தகம் பேசுது

Monday, July 23, 2012

அரவமற்ற ஊரில்
விஷமுறிவோடு வந்தவனின் முயற்சி
எல்லா வீடுகளிலும் முளைவிட
கலயம் கலயமாக விநியோகித்தான்
கடை விரித்து,..
O
சூரியனை
தின்னக் காத்திருக்கின்றன
புல்லின் நுனி அமர்ந்த
பனித்துளிகள்...
O
மது வண்ணக் கலவையின்
குணம் கழற்றும் சொற்கள
நினைவுகளில் தள்ளாடி தவிப்படக்குகிறது
கத்திப் பேசி கண்ணீர் வழித்து
அதிர சிரித்தும்...

நன்றி: வடக்கு வாசல்

Sunday, July 8, 2012

கூச்சம்கொள்ளச் செய்யும் கவிதைகள்

ஒரு கவிஞன் வாழும் சமகாலத்தின் முகத்திற்கும் முதுகுக்குமான தொடர்பை மொழிவழியில் கண்டடைகிறான். அதில் தன் விடுதலைக்காக மட்டுமின்றி தேச விடுதலைக்கான தேடலையும் மேற்கொள்ள வேண்டியிருக்கு. பெருத்த மனக்குழப்பங்களோடு ததும்பும் கண்ணீரில் வா.மணிகண்டனின் ‘கண்ணாடியில் நகரும் வெளிச்சம்’ தொகுப்பு பயணிக்கிறது. இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் குழந்தைகள் உலகம், மரணம், காதலென பரவியுள்ளது.
கணக்கற்ற கவிதைகளையும் கதையாடல்களையும் உலகெங்கும் தன் வெளிச்சத்தில் பிதுக்கியபடி இருக்கும் நிலாவை ‘நிலவு மிதந்த சாக்கடை’ கவிதையில், நிலாப் பாட்டியை ‘வீதி நுனிச்/சாக்கடையிலிருந்து கூட்டி வருகிறேன்’ எனும் வரிகளின் மூலமாக வித்தியாசமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. 
குழந்தைகளின் கேள்விகளுக்கு நம்மால் விடையளிக்க முடியாமல் மழுப்பலான பதிலாலோ, அதிகாரத்தை கையாண்டோ சமாளித்து விடுவதை ‘கடலுக்குள் புதைந்த கேள்விகள்’ கவிதையில் கடலுக்குள்/மிதக்கின்றன/ஆயிரம் கேள்விகள் கேட்பாரற்று என முடித்திருப்பார். குழந்தைகள் வியத்தகு கற்பனைகள் நிரம்பியவர்கள் என்பதை கடவுளும் ஸ்ரீநிதியும்’ கவிதையில் அழகிய கதையாடலை வாசிப்பவர்களின் நினைவில் ஊன்றிவிடுகிறார். கடவுள் ஒரு வெள்ளைத்தாளில் புது உலகை படைக்க நினைத்து வரைய முற்பட்டு முடியாது போக ஸ்ரீநிதியிடம் கொடுத்துவிடுவார், அவளோ வெற்றுத்தாளில் அம்மா, ஆடு, இலை வரைந்து அம்மா வேடிக்கை பார்க்க ஆடு இலையை தின்றது என முடிந்திருப்பதை கடவுள் பார்க்க ஆடு தின்ற மீதி இலை தாள் முழுவதும் விரவிக்கிடக்க இனி புது உலகம் இல்லை எனும் செய்தி பரவியது என முடியும் கவிதை. நாம் அம்மா, ஆடு, இலையை வாசித்தும் கேட்டும், கற்றும் கொடுத்திருக்கிறோம் இனி இம் மூன்று வார்த்தைகளும் இக்கதையாடலை நினைவூட்டும். ‘எந்தப் புகாரும் இல்லை’ கவிதை குழந்தைகள் எல்லாவற்றையும் அவர்களின் மனவோட்டத்தில்தான் அணுகுவார்கள் என்பதை காட்டுகிறது.
காதல் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதான். ஒவ்வொருவருக்குமான தனித்த அனுபவம் அலாதியானது. வாழ்வின் எல்லா கணங்களிலும் காதலியின் நினைவோடு இருப்பவனுக்கு அதை சொல்வது எவ்வளவு கடினம் என்பதை ‘பிரியம் படிந்த வாக்குமூலம்’ கவிதையில் உனை நினைக்காத நேரத்தை மட்டும் சொல்வது எனக்கு எளிது என்கிறார். இப்படியான வாழ்முறையில் இருப்பவனுக்கு பிரிவு எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கு.
ஒரு அழுகை, துயரம், வெறுமையென ஒற்றை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாதென்பதை ‘போன்றில்லாத பிரிவு’ கவிதையிலும், அவளற்ற வெறுமையை என்ன செய்வதென்ற பித்த நிலையை ‘நீ இல்லையென்றும் வெறுமை’ கவிதையிலும், எழுதி முடிக்கப்பட்ட கடிதத்தின் தனிமையின் எச்சம் நினைவின் சாலையெங்கும் பறவையின் எச்சமாக உதிர்ந்து கிடக்கும் அவஸ்தையை ‘யாரும் பாதிக்காத கால்தடங்கள்’ கவிதையிலும், பிரிவை விடவும் காதல் புறக்கணிப்பு அவஸ்தைமிக்கது. கண்ணீர், விசும்பல், நெஞ்சுக்குழியெங்கும் வியாபித்திருக்கும் கசப்புச்சுவையை ஒத்ததென்கிறார், ‘‘புறக்கணிப்பின் கசப்புச் சுவை’’ கவிதையில் கருணையின் நஞ்சை/கொஞ்சம் பருக விடுவென கேட்கும் ‘அன்பின் சாட்சியோடு’ கவிதை ‘முத்தத்தின் பழைய ஈரம்‘ கவிதையில் வெட்டப்பட்ட மரத்தின் கசிவென/கசக்கிறது/நம் முத்தத்தின்/பழைய ஈரம் என முடிவுறுகிறது.
காதல் இன்பத்திலும் கொல்லும் அவஸ்தையிலும் கொல்லும் என்ற உண்மையின் உயிர் கவிதைகளில் பரவிக்கிடக்கிறது.
ஆசை, பயம் இன்றி வாழ்வு உண்டா? மரண பயமின்றி யார் இருக்கிறோம். மரணம் பெருத்த மௌனத்தையும், வரலாற்றையும் கொண்டது. பிற சொற்களை சொல்லி எளிதில் கடந்து விடுவதைப்போல ‘மரணம்’ என்ற சொல்லை வெறுமனே சொல்லி கடந்துவிட முடியாதென்பதை ‘‘மரணத்தை எப்படி சொல்வீர்கள்’, கவிதையிலும், நமக்கேன் வம்பு என பார்த்தும் பார்க்காதவாறு புறக்கணித்த அணாதை பிணங்களை கண்முன் ஊசலாட விடுகிறார் ‘அநாதமையின் நிகழ் வரலாறு’ கவிதையில்.
மயானத்தின் சூழல் எந்த பிண வரவையும் எவ்வித சலனமின்றி இயல்போடு ஏற்றுக்கொள்வதை ‘ஸ்தம்பிதமில்லாத மயானம்’ கவிதையிலும், பேருந்து அல்லது ரயிலில் அடிப்பட்டு செத்துக் கிடப்பவர்கள் குறித்து பயணிப்பவர்கள் தங்களின் எல்லையற்ற யூகங்களை அவர்களை எட்டிப் பார்த்துவிட்டு கூறிக்கொண்டிருப்பதை கேலி செய்கிறது ‘விடைகளற்ற புதிர்கள்’ கவிதை. மலர்தனின் கணிதம்/சிகரெட் புகையின் ஓவியம்/உறங்கும் குழந்தையின் புன்னகையென எளிய சூத்திரம்தான் மரணம் என்கிறார் ‘மரணச் சூத்திரம்’ கவிதையில். இக்கவிதையின் நீட்சியை ‘எளியதொரு மரணத்திற்கான காத்திருப்பு’’, உயிர் பிரிதலின் ஓசை’ கவிதைகளில் காணமுடிகிறது. அச்சம் சூழ எட்டிப்பார்க்கும் பிணவறையை ‘பிசாசுகளின் விடுதி’ கவிதையிலும் உள்ள மோனநிலை அவஸ்தையை நமக்கும் தொற்றிக்கொள்ள செய்கிறார்.
மரணம் தன் சார்ந்து நிகழ்கையில் பெரும்வலி நிரம்பியும், வேறானவர்களுக்கு நிகழ்கையில் செய்தியாக மாற்றம்கொள்வதன் யதார்த்தம் மரணம் சார்ந்த கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
மழை ஓய்ந்த பின் இரவின் அமைதியை கொண்டாடப்பட வேண்டிய மரணம் என்கிறார் ‘மழை ஓய்ந்த இரவு’ கவிதையில்.
நகரங்களின் தெருவோரம் பஸ், ரயில் என தான் விற்கும் பொருளை தன் வார்த்தைகளில் சொற்களை நதியென அலைவுறச் செய்து விற்பனை செய்யும் லாவகம் மிக்க சாதூரியத்தை ‘வண்ணக் கைக்குட்டை விற்பவன்’ கவிதையில் ஓவியமாக்கியுள்ளார்.
நம்மில் இருந்து பிரியும் நிழல், நாம் ஆச்சரியம் கொள்ள பெருத்தும் சிறுத்தும் அலைவுறுவது குறித்த ஆய்வில் நிழலோடு வி¬ளாயடி சலித்து தோற்ற குழந்தையாகத்தான் நிற்கிறோம் என்கிறார் ‘நிழல் குறிப்பு’ கவிதையில்.
கவிதையின் பாடுபொருள்கள் பஞ்சமற்று கிடக்கிறது நம் கண்முன். தினசரி தோற்றம் கொள்ளும் விசயம்தான் யாராவது கவிதையில் சுட்டிக்காட்ட சுரணை வருகிறது. சுண்ணாம்பை உதிர்த்து ஓவியங்களை வரைந்து நிற்கும் சுவர்கள் குறித்த ‘சுவரில் ஊறும் கதைகள்’ கவிதை நாம் பார்த்த சுவருக்கும் நமக்குமான வாழ்பனுவங்களை நினைவில் தெறிக்கச் செய்கிறது.
நல்ல நேர்த்தியான வெளிப்பாடு, விளம்பர பலகையில் படுத்துக்கிடக்கும் பெண்ணிற்கும் பார்வையாளனுக்குமான ஈர்ப்பு குறித்து ‘விணைல் காதல்’ கவிதை.
காலமாற்றத்தில் நாம் இழந்து நிற்கும் பல அனுபவங்களை நிழலென தொடரச் செய்து விடுகிறது. ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ கவிதை.
கண்களில் சாந்தம் பொங்க கனவற்று வேட்கையற்று நிதானமாக நகர்வலம் வரும் பைத்தியக்காரன்களையும் ‘மேலும் ஒரு பைத்தியக்காரன்’ கவிதையில் ‘ஆயிரம் காரணங்கள்/அவனுக்கு என தன் கவனிப்பை பதிந்துள்ளார்.
வெகு நாட்களாய் கூட்டிலிருந்த குருவி தன் நிழலை காதலிக்கத் தொடங்கிவிடுகிறது. கூடு திறக்க பறந்தலின் சுகத்திற்காக உயரம் செல்ல நிழல் சிறிதாகிறது. தன் காதலை இழந்துவிடுவோமோ என பயத்தால் தன்னை கல்லாக்கிக்கொண்டது எனும் ‘அமத்தா சொன்ன கதை’ கவிதை நினைவில் அசைபோட்டு லயிக்கச் செய்கிறது.
தட்டான் வாலில் புல் செருகி ராக்கெட்டாக பறக்க விடுதல், பொன்வண்டை நூலில் கட்டிவைத்து வண்ண முட்டை காணுதல், நாயின் மீது கல்லெறிதல், குளிக்கும் பெண்ணை எட்டிப்பார்த்து அவள் திட்டுவதை ரசித்தல், கோழியின் கழுத்தை திருகி கொல்லுதல் என எளிதில் கிட்டும் ஆத்ம திருப்திக்காக நீளும் அவரின் பட்டியல்களையும் மீறி அவரவர்களுக்கான பட்டியல் இன்னும் நீண்டு பால்யத்தில் வாழவைக்கிறது ‘ஆத்மதிருப்தி’ கவிதை.
பிரக்ஞையற்ற மரக்கிளை/சாவாதனமாக/சன்னலை உரசுகிறது, 

ஒருத்தியின் சிரிப்பொலியோடு/மெல்ல நகர்கிறது ரயில்,

கடைசி பேருந்துக்காக /காத்திருக்கும் இளம் தம்பதி,

மழைக்காற்று உதிர்த்த/செடிக் கிளைச்/சூரியன்கள்
என நீளும் நிறைய தெறிப்புகள் தொகுப்பெங்கும் காணக்கிடக்கிறது. நாம் காணத் தவறிய சொல்ல நினைத்த விசயங்களை அக்கறையோடு எளிமையோடு சொல்லிச் செல்லும் இவரின் கவிதைகள் கூச்சம் கொள்ள செய்துகிறது.

Monday, July 2, 2012

நித்திரையை உருட்டும் பூனை
 

தோட்டங்களில் தப்பி முளைத்த
புல்லின் வளர்ச்சியோடிருந்தது
என்னுள்ளும் ஒரு பூனை
திடுமென வெளியேறுகிறது
பிடிக்காதவனை அறிந்து
இல்லம் புகுந்து அழிச்சாட்டியம் செய்கிறது
அவர்களின் நித்திரையை உருட்டிவிடுகிறது
மறந்தோ தவறியோ
ஒரு நாளும் பிடிப்பதில்லை
அவ் வீட்டில் எலியை
அவ்வப்போது நண்பர்களையும்
காயம் ஏற்பட பிறாண்டி விடுகிறது
தன் கள்ளத்தனங்களால் எனை
கிச்சுக்கிச்சு மூட்டி
மகிழ்வில் திக்குமுக்காடச் செய்கிறது
பாலின் அளவை அதிகரித்தேன்
வருடிக்கொடுக்கவும் செய்கிறேன்
தற்சமயம் என் விருப்பத்திற்கேற்பவும்
வெளியே சென்றுவர
பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன்...

நன்றி: வல்லினம்.காம்

Sunday, June 24, 2012

தவிப்பின் நிழல்கள்




உயிர் அறுந்து அறுந்து
உருமாறிக்கொண்டிருந்தது மதுவாகினி
தன் பச்சையத்தை உதிர்த்தன தாவரங்கள்
பெரும் நதியால் கைவிடப்பட்ட மணல்திட்டு
இரயில்கள் தொலைந்துபோக
வெறித்துக் கிடக்கும் தண்டவாளங்கள்
தொடுப்பார் இன்றிக் கிடந்த செருப்புகள்
பிடித்தவைகளை களவுகொடுத்த ஏமாற்றம்
ஈயம் பூசப்படாத பாத்திரமாய் வெறித்த சாலை
பிறரின் சுவாசம்படாது தொலைத்த எழுத்துக்கள்
வானம் பிதுக்கித் தள்ளிய நட்சத்திரங்கள்
ஈரம் துளிர்க்கும் துளைகள் தூர்ந்த பாறை
நாவின் ஈரம் தீண்டாத வைக்கோல் கன்று
கீறல்களின் ரணம் வடிக்கும் கள்ளிச்செடி
கண்ணடிகளால் வர்ணம் ஒடிந்த திருஷ்டிபொம்மை
உருவம் தீய்த்துக் கரையும் கற்பூரம்
எச்சங்கள் வறண்டு பொடுகாய் படிந்த
என் குலசாமியென
தவிப்பின் நடுக்கத்தோடு
நம் விரல்களின் ஸ்பரிசம்
வெட்டுண்ட கணத்தில்...

நன்றி: தீராநதி

Monday, June 18, 2012

அந்தி சிரித்தது
நீண்ட நாளைக்குப் பின்
என்னுடன் மதிய உணவை முடித்து
உறங்கியபடி இருந்த அந்தியை
சிறிது டீயோடு எழுப்பி
போகலையா நேரமாச்சென்றேன்
அலுப்பாகத்தான் இருக்கு
ஓய்வு கொள்ளட்டுமா
கற்றலின் பளு கூடிட
களைப்புறும் குழந்தைகள்
வேலையின் தாகமடங்காது
தவித்திடுவர் மக்கள்
சுகிக்கும் சிலரின் ரசணை
பொசுங்கிப்போகும்
சில ஜீவராசிகள் செத்துத் தொலைக்கும்
பாவம் மதியமும்
நீடித்திருக்க தவிப்புறும்
ஏற்படவிருக்கும் குழப்பங்களைத் தவிர்க்க
செல்லத்தான் வேண்டுமென
புறப்பட்ட தருணத்தில் அந்தி
கேட்டுச் சிரித்தது
எனை இன்னும் சேர்க்கவில்லைதானே
எச்சாதி சங்கத்திலுமென…
*
மது ஊறிய உதடுகள்
இரு பொழுதுகளுக்கிடையேயென
மங்கிய நேரத்தில் தனித்திருந்து
மொழியை அறிந்து கொண்டிருக்கையில்
திடுமென முகம் புதைத்து
இதழ் வலிக்கத் திணிக்கும்
அவளின் முத்தத்திற்கு இணையானதுதான்
முடிவின்மையோடு தொடரும்
நண்பர்களிடையேயான உரையாடலின்போது
மனம் குளிர விழும் சொற்களுக்காக
அவன் கொடுக்கும் முத்தமும்…
-இசைக்கு…
*
0
மல்லாந்து கிடக்கும்
பட்டாம்பூச்சியை நினைவூட்டி
அழகும் மணமும் ததும்பும்
பிளவுகளுக்கு
தன்னுள் விழும் விதைகளை
வைத்துக் கொள்ள தெரிவதில்லை
விதையாகவே…
*
0
பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ…
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக் கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக…

nantri:malaigal.com

Friday, June 15, 2012

நினைவின் புழுதி

நிறைந்த கிணற்றிற்கு
ஒற்றை பூச்சூடி
அழகு ததும்பச் செய்து
துளித்தேன் நா பரிமாறி
உடல் தித்தித்து
மனம்படிந்த புழுதியோடு
இணைந்தலைந்த பொழுதுகளை
நினைவுள் பூட்டி
தவித்தலைவாய்
வார்த்தை சாவிகளோடு அலைவுறும்
என்னைப்போலவே...
*

எறும்பு வீடு

கேட்டு சலித்தவள் அதிசயித்தாள்.
ஈ எறும்புகளை கொன்றொழித்திட
விஷம் வாங்கிய நாளின் அந்தியில்
வேடிக்கை பார்த்திருந்தோம் மழையை
பதட்டங்களை செவிகொள்ளாது
நனைந்து ஓடியவன்
திரும்பினான் கவலையோடு
மரத்தடியிருந்த எறும்பு வீட்டை
காணும்பாவென.
*

மயில்

காடலைந்து திரும்பியவன்
அழைத்து வந்தான்
கண்களின் பார்வைக்குத் தப்ப
புத்தகத்தினிடையே ஒளித்தான்
உறக்கம்கொள்கையில் பதுக்கினான்
தலையணையின் அடியில்
கானகத்தின் நினைவில் நடனமிட்டு
உறக்கமற்றிருந்த மயில்
பக்கங்களில் மிதந்த உயிரிகளை
தின்று முடித்தது.

நன்றி: குறி

Sunday, June 10, 2012


சுமைதாங்கி கற்களல்ல...


பொங்கும் கருணையை
கொப்புளங்களாக்கிக் கொள்ளுங்கள்
வசதியாக இருக்கும் சொரிந்துகொள்ள

வழியும் பவ்யங்களை
வழித்துக் குடித்துக்கொள்ளுங்கள்
உங்கள் எஜமானரிடம்
சிறந்த அடிமையென பெயரெடுக்க உதவும்

பாவப்பட வேண்டிய கட்டாயமெனில்
எங்களுக்கேதுமில்லை
உங்கள் இல்லத்தாளிடம் காட்டுங்கள்

நகைச்சுவை ஊறுகாயாக்கி
நக்கி நக்கி ருசித்ததுபோதும்
நாத்தம் மிகுமுன்
கழுவி கமுத்திடுங்கள்

புளித்த பாலின மொந்தையை
நீங்களே சுமந்து திரியுங்கள்
முதல் பாலின பெருமைக்காக
எங்கள் முதுகிலும்
தொங்கவிட துடிக்காதீர்கள்

இறக்கி வைத்தபடியே இருக்கவேண்டாம்
தன்னிரக்கங்களை
சுமைதாங்கி கற்களல்ல

கொழுத்துத் திரியும் உங்களின்
வக்கிர எலிகளை வலையவிடும்
பொந்துகளுமல்ல நாங்கள்

எங்களுக்கும் தெரியும்
மண்ணை மிதித்து
நடப்பது எப்படியென...
                      -லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு

nantri:vallinam.com

Wednesday, June 6, 2012

ஓணான் உருவாக்கிய பகை
 

ஓணான் ஒன்றை சாகடித்தேன்
நிலத்தில் புதைத்து அடையாளமிட்டு வந்தேன்
கிடைக்கும் காசை கொண்டு
வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலோடு
இடம் அடைந்து தோண்டினேன்
காசை பிறப்பிக்கும் முன்னே
நிலம் ஓணானை தின்றுவிட்டிருந்தது
அன்றுதான் துவங்கியது
நிலத்தின் மீதான பகை
யார் மீதாவது கோபம் வந்தால்
ஓங்கி மிதிப்பேன் நிலத்தை
அடிக்கடி காறித் துப்புவதுமுண்டு
சொந்த நிலங்களை அப்பா விற்றபோது
வீடு துக்கத்திலிருக்க நான் மகிழ்வேன்
மனையாளின் தொந்தரவால்
வேறு வழியற்று சொந்தமாக்கினேன்
வீட்டுமனை மட்டும்
இப்பவும் ஓணான் பார்க்க
ஆசை எழுவதுண்டு
நிலத்தின் மீதான பகையை முடித்துக்கொள்ள
சனியன் வயது தடையாய்...

நன்றி: மாற்றுப்பிரதி

Friday, June 1, 2012

காலத்தின் நிழல்கள்

முன்னொரு காலத்தில்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தினடியில்
நைந்து கிடந்த மார்புக் கச்சையென
அறிமுகமாகிய புறா பருத்திக்காடானது
தன்னை நூலாக உருமாற்றி
இணங்கி இணங்கி ஆடையானது
விரிவு கொள்ளும் வானமாக
நீண்டு கொண்டிருந்தது ஆடை
என் சமூகத்தாரின் உடலேற்ற மறுக்கப்பட
எட்டுத்திக்கும் உலகை போர்த்தியது
பீச்சி வெளியேற்றப்பட்ட இழப்புகளின்
ரத்தங்களை உறிஞ்சக் கொடுத்து வெற்றிகொள்ள
உடலேறிய ஆடை
கம்பீரங்களின் கணம் மினுங்கியது
முப்பத்தியேழு ஆண்டுகால சிலுவையின்
துயர்தோய்ந்த கதை கூறி
முலை மறைத்து
மிதந்து சென்றது புறா
காலத்தின் நிழல்களை விதைத்தவாறு...
0

இருளென்பது குறைந்த ஒளி

எனை நினைவில் வைத்திருக்கிறாயா
என் வீதியில் குடியேறிய நாளில்தான் பூத்திட்டேன்
மாதாமாதம் தவறாது நிகழ்ந்திடுவதால்
கொண்டாட்டத்தின் நாளாகவே இன்றளவும்
நீ எதிர்படும் கணங்களில்
கரைந்து கரைந்து கூடியிருக்கேன்
எனக்கு தெரிந்திருக்கவில்லை
உன் மீதான காதலை எப்படி வெளிப்படுத்துவதென
விட்டுவிடலாம் முடிந்துபோன கதை
எதையோ எதிர்பார்த்தும் எழுதவில்லை
உன் பொருட்டும் ஒருத்தி
நீ அறிந்து கொள்ளத்தான்...
மேலும் தொடர முடியாதுபோக மன்னிப்புக்கோரி
வாசித்த நாவலின் பக்கங்களில்
அப்பெண்ணை உறங்கச் செய்தேன்
எங்களிடையே ஒளியூட்டிக் கொண்டிருந்த
கடைசி மெழுகுவர்த்தியும் உருவற்றுப் போக
அவளின் தவிப்பு என்னுள் ஊறி அடங்க
ஆசுவாசமடைந்தேன்
பாரதி வந்தான்
இருளென்பது குறைந்த ஒளியென
மீண்டும் நாவலை விரித்து
அப்பெண்ணை எழுப்பினேன்
என் வாழ்வைப் போலிருக்கு
உன் சூழலுமென மறுத்தாள்
வேறு வழியின்றி பராசக்தியிடம் முறையிட்டேன்
இருளிலும் வாசிக்கும் வல்லமை வேண்டி.
0

கனவு வேட்டை

காலியான ஊறுகாய் பாட்டிலில்
கையளவு கடலை நிரப்பி
அடம்கொண்டு வாங்கிவந்த
தங்கநிற மீன்களை மிதக்கவிட்டான்
நட்புகளுக்கு வேடிக்கை காட்டிவிட்டு
மீனாக மாறி உடன் நீந்தியபடியிருந்தான்
என்ன சாப்பிடும் எத்தனைதடவை சாப்பிடும்
பாத்ரூம் இல்லையே பாட்டிலில்
உச்சா ஆயி எங்கே போவுமென
கேள்விகளால் எரிச்சலூட்டியபடி இருந்தான்
அது குட்டி போட்டதும்
பெரிய்ய தொட்டி வாங்கிக் கொடுக்கனும்
லைட்டு கல்லு கடலு வேணுமென
தேவைகளை பட்டியலிட்டான்
இரவு தூங்கப் போகும் முன்
பொம்மை நாய் ஒன்றை காவலிட்டான்
அன்றைய நடுநிசியில்
கோவென அழுதபடி எழுந்தான்
கேட்க கேட்க அழுகையை உயர்த்தியபடி இருந்தான்
வயிறு தலை கால் வலிக்கிறதாவெனும்
எங்களின் கேள்விகளை சகிக்காது
நாய் என் மீனை தின்னுடுச்சி என்றான்
உயிரூட்டிய மெழுகுவர்த்தியின் ஒளியில்
சுற்றிக் கொண்டிருந்த மீனைக் காட்ட
நீ காப்பாத்தியதை பாக்கலப்பாவென
இறுக்கி அணைத்தபடி உறங்கிப்போனான்
வேட்டையாடத் துவங்கியது
பொம்மை நாய்
என் கனவை...

nantri: uyir ezluthu

Wednesday, May 30, 2012

நீ மட்டுமல்ல...

உன் வாசத்தின் தேசம் நெருங்க
பசுவின் மடியென புடைத்திருந்தன மரங்கள்
ஹுசேனின் ஓவியமாய்
ஊரின் முகப்பில்
உரித்து தொங்கவிடப்பட்ட மாடு
வரையத் தொடங்கியவனின் கோடுகளாய்
ஒழுங்கின்மையின் அழகில் தெருக்கள்
சுவரில் வழியவிடப்பட்டிருந்தன வீடுகள்
குழந்தைகளுக்கான நிறங்களை
ஒன்றிரண்டு பாழடைந்த வீடுகளும்
புராதனச் சின்னங்களாக
கதாமாந்தர்களின் ஒத்திகையை நினைவூட்டும்
வசிப்போரின் உடல்மொழி
வேறெதுவும் தெரியாதுபோலும்
தாய்மை கனிந்த வார்த்தைகளைத் தவிர
ஐயம் வேண்டாம்
கினற்று தவளையல்ல நான்
ஏன் மதுவாகினி
உன் வாழ்விடமும்
இவ்வளவு பேரழகாய் இருக்கிறதே...
0

நிறுத்தங்களற்ற பெருமைகள்

பார்வையின் ஈரம் மலர்த்தும்
வறண்ட பூக்களையுமென்றான்

தொட்டுச் செல்ல நாணத்தால்
உடல் சுருங்கும் செடிகளென்றான்
மற்றவன்

துப்பும் எச்சில் துளிர்க்கச் செய்யும்
மலட்டு விதைகளையுமென்றான்

உதிரும் ரோமங்கள்
உருவாக்கும் வலிமையான கயிற்றை
இது மற்றவன்

என்னில் பிறக்கும் வார்த்தைகள்
பாடமாகும் பள்ளியிலென்றான்

மற்றவனோ
தன் கனவு பிதற்றல்கள்
காவியமாகும் காலத்தாலென்றான்

இப்படியாக தொடர்ந்த
இருவரின் உரையாடல்களின்
வீச்சம் தாளாது இடை புகுந்தவன்
வாயடைக்கச் செய்தான்

நான் பெய்யும் மூத்திரத்தில்
மீன்கள் பறந்து வருமென...
0

காத்திருப்பு

விரிந்து கிடக்கும் பாலை நிலத்தில்
கையளவு நீரை கண்டடையும்
தவிப்புக்கு ஒப்பானது
வாழ்வின் துணையை அடைவதும்
தாகமற்றிருக்கலாமெனும்
நிம்மதி மூச்சுவிட
காத்திருந்தது போல்
ஏதோவொரு ரத்தபந்தம்
தன் மரணத்தால் நிகழ்த்தும் தள்ளிவைப்பு
பொதிந்து கிடக்கும் பழமையின் நாளை
மீண்டும் கண்டடைய
மண்டபங்கள்
மாய பூதங்களாக மறைந்து போக
கணக்கத் துவங்குகிறது உடல்
நுரைத்து நுரைத்து பொங்கும்
காதலாலும்...
காமத்தாலும்...
0

சிலை படிந்த பிசுக்கென...

சிரட்டையுள் தேங்கிய மழைநீர்
தாழம்பூவை சுகித்துக்கிடக்கும் நாகம்
பெரும் வனம் நுணுக்கி விதைகளாக அடைக்கும் பழம்
பூக்களை தன் உருவமாக்கும் வாசனை
கவிதைகளின் கூடு அடைந்த வார்த்தைகள்
முகவரியால் உயிர்துளிர்க்கும் கடிதங்கள்
தன் திறப்பால் உலகை விரிக்கும் கடவுச் சொல்
சிலைகளில் படிந்த எண்ணை பிசுக்கு
பாறைகளில் உறங்கிக் கிடக்கும் சிற்பம்
கண்ணீரில் நொறுங்கிக் கிடக்கும் உப்பு
தூக்கம் பிறப்பிக்கும் கனவு
நீரின் உயிராய் படிந்த பாசி...

இப்படித்தானே மதுவாகினி
அகம் பிணைந்து கிடந்தோம்
புறம் அறியா காலத்திலும்...

நன்றி: உயிர் எழுத்து

Tuesday, May 29, 2012

காத்திருந்த துளி
 
 துளி நீராக்கினேன் உயிரை
பசிய இலையொன்றில் மிதக்கச் செய்தேன்
பெரும் மழை பொழிய கரையவில்லை
சூரியன் வெப்பத்தை அதிகரிக்க
உயிர்ப்போடே இருந்தது
காற்று சுழன்று சுழன்று வீசிட
உதிர்ந்து போகாது
இலை நரம்புகளில் உருண்டோடி விளையாடியது
தாகம் மிகுந்த பறவையிடம்
இலை முடிச்சாக தோன்றி தப்பியது
விளையாடும் சிறுவர்களிடம்
இலையையும் மறைத்து
தனை காத்த துளி
மரம் வெட்டப்படுவதற்கு முந்தைய நாளின்
மதிய பொழுதொன்றில்
நிழலடைந்த மதுவாகினியின்
கண்ணம் வழிந்து அவலுள்
கரைந்துபோனது...
nantri: vallinam.com





Monday, May 14, 2012

நகைப்புக் காலம்












ஆழமிகு கிணற்றிலிருந்து
ராட்டிணங்களின் துணையின்றி
மேலேறி வந்தன முக்காலமும்
பெருமைபேசி பயணிக்கத் தூண்டின
வாழ்ந்த காலமும்
இருக்கும் காலமும்
ஏற்கனவே அறியப்பட்டிருக்க
எதிர்காலத்தின் புதிர் மினுங்க
பயணித்திட ஆவல் மிகுந்தது
எப்படியும் போகத்தானே போகிறாய்
புத்தி கூற
தயங்கிய கால்கள்
நோக்கின கடந்த காலத்தை
சிற்சில இன்பங்கள் இருந்தபோதும்
துன்பமிகு நாளே நிறைந்திருக்க
நிதானிக்கத் துவங்கினேன்
உன் நிழல்தரும் மண்
பறிக்கப்படுவதை பார்க்கத் தவறாதெவென
நடப்புக் காலம் நகைத்து மறைந்தது…

nantri:malaikal.com

Tuesday, May 8, 2012

தயக்க இலைகள்

குறுக்கும் நெடுக்குமாக
பின்னலிடப்படும் விவாதங்களின்போது
தெருப்பிள்ளையாராக தேமேவென இருப்பேன்
மௌனங்களின் அழுத்தங்களை
நகைப்பின் வழியே கசியவிட்டு
கைகுலுக்கி தனிமைகொள்ள
இருளோடு பேசிப்பேசி
துளிர்க்கும் தயக்க இலைகளை
கிள்ளி வீசிக்கொண்டிருப்பேன்
கூடுதலாகிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்களின் எண்ணிக்கை...

நன்றி: உயிரோசை.காம்

Friday, May 4, 2012

சென்ன கேசவர்


பருவத்தில் பன்றியும் அழகுதான்

உரையாடலில் நகைப்பை சேர்த்தது
பவித்திரமான ஆடவனும்
பன்றி தலை பதிந்த யுவதியும் இருந்த
சிற்பம் பார்த்த கணம்
தகிக்கும் வெய்யலை விழுங்கி
மிளிர்ந்த சிற்பங்கள்
சூடு தாங்காத பாதங்களில் உருபெயர்ந்து
தத்தித் தத்தி நடைபயின்றன வளாகமெங்கும்
காட்டி பெருமைகொள்ள
அவசர அவசரமாக நிழல்படமாயினர்
கொக்கு நிறத்தவளோ
எதையும் விட்டுவிடாதிருக்க
கண்களை குளமாக்கி
அடுக்கியபடியிருந்தாள் சிற்பங்களை
தனியாத தாகத்தோடு
விழுங்கிய ரெக்கார்டர்களை
குரல் கம்ம துப்பியபடி கைடுகள்
மிடறு விழுங்கிய எச்சில்கள்
ஸ்கலிதமாய் பிசுபிசுத்து
ஏக்கத்தோடு திரிந்தனர் யுவன்கள்
யாரும் தீண்டாத மூலையில்
கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள்
முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்
சென்னகேசவன் படியமர்ந்து பார்த்தபடியிருந்தார்.

Sunday, April 29, 2012

மனிதர்கள் புத்தகங்கள் ஞாபகங்கள்

கடலின் கரையிலிருந்து பார்க்க தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கென வானத்தை எளிதில் நெருங்கிவிட முடியுமா என்ன? அப்படித்தான் சில மனிதர்களையும் சந்திக்க நேரிடுவது தவிர்க்க இயலாது. நெருங்க நெருங்க விலகியபடியே இருப்பார்கள். அப்படியானவர்கள் குறித்து அக்கறைகொள்ள தேவையில்லைதான். ஆனால் உடனிருந்த நாட்களை உயிர்ப்பாக்கி சொல்லிமாளாத அளவிற்கு அர்த்தங்களோடு வாழ்ந்து முடித்தவர்களோடும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களையும் நினைத்து நினைத்து அணைத்துக்கொள்வது இன்பம் செறிந்தது. உதயசங்கரின் உலராத ஈர முத்தமாய் பக்கங்கள்தோறும் நனைந்து கிடக்கிறது ‘முன்னொரு காலத்திலே...’

கவிதைதான். ஒரு மனிதரைப்பற்றி நினைக்க அவரின் உடலெங்கும் இறக்கைகளாக அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்கள் முளைத்து இசைத்துக்கொண்டிருப்பது. ஒரு மனிதரிடம் எதைப் பார்க்க வேண்டும் எதை கற்றுக்கொள்ள வேண்டும் எதை ஒதுக்க வேண்டுமென எவ்வித அறிவுறுத்தலுமின்றி தனக்கான அசலான மொழியில் காட்சியாக்கியுள்ளார். வாசிப்பற்ற பெரும் சனத்திரள் நிறைந்த சமூகத்தில் ஒரே ஊரில் இத்தனை இலக்கியவாதிகளாவென வியப்பில் கிடத்தி இலக்கிய மணத்தோடு கோவில்பட்டியின் புரோட்டா சால்னா மணமும் புத்தகமெங்கும் வீசிக்கொண்டே இருக்கிறது.


அவரின் பெருத்த நட்புவட்டத்தில் ஒரு சிலரோடு நானும் உட்கார்ந்துபேசிய ஒரு சில நாட்கள் குறித்த அனுபவங்களை அசைபோடச்செய்தது. ஒருமுறை நம்மாழ்வார் ஏற்பாடுசெய்த சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கு ஒன்றிற்காக கற்பகசோலை செல்கையில் புதுவிசையை கந்தர்வனிடம் கொடுக்க புதுக்கோட்டையில் இறங்கினேன். அதிகாலை நான்கு மணி. அவரை எதற்கு அந்த நேரத்தில் தொந்தரவு செய்யவேண்டுமென நினைத்து இரண்டுமணி நேரம் பஸ் நிலையத்திலேயே சுற்றி கொண்டிருந்துவிட்டு சென்றேன். வாப்பா உன்னைத்தான் எதிர்பார்த்திருந்தேனென ஒரு குழந்தையை கையில் வாங்கும் லாவகத்தோடு புதுவிசையை கையில் அள்ளி திருப்பி திருப்பி கையால் தடவி தடவி பார்த்தவாறே தொலைபேசியில் யாரையோ தொடர்புகொண்டு பிரமாதமா வந்துருக்குடா ரொம்ப சந்தோசமா இருக்குடாவென பேசிக்கொண்டிருக்கையில் அவரது துணைவியார் தேநீர் கொடுத்து 4மணியிலிருந்து குட்டிப்போட்ட பூனையாட்டாம் கேட்டிற்கும் வீட்டிற்குமாய் அலைந்துகொண்டே இருந்தாரு எனச்சொல்ல நெகிழ்வில் நீர்கோத்த கண்களோடு அவரோடு உரையாடி வந்தது நேற்று நிகழ்ந்ததுபோல இருக்கிறது...


சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதேவென ஆட்டோ வாசகங்களின் பிரதியாய் ஆண் எனும் தடித்தனங்களோடு அலைந்துகொண்டிருந்த நாட்களை சுட்டெரிக்கச்செய்து பெண் மீதான புரிதலை என்னுள் உயிர்ப்பாக்கியவர் அண்ணன் தமிழ்செல்வன். இன்றும் எப்பொழுதாவது வீட்டின் ஒரு ஓரத்தில் கையில் பிரம்போடு அமர்ந்துகொண்டே புத்தகத்தை விரித்துவைத்துக்கொண்டு பாவ்லா பண்ணாத போய் வெங்காயம் பூண்டு உரித்துக்கொடு, டீ போட்டுக்கொடு சமைக்க கத்துக்கோ, பாத்திரம் துலக்குவென விரட்டுவதுபோலவே இருக்கும். அப்படியான நாட்களில் பாத்திரத்தையாவது துலக்கிவிடுவதுண்டு. சக மனுசியாய் சக உயிராய் மேலும் மேலும் பெண்கள் மீதான காதலை வளர்க்க செய்துகொண்டிருக்கிறார்.


இன்றும் கோணங்கியை பார்க்க என்னுள் ஒரு குழந்தை பிறந்துவிடும். எல்லாவற்றையும் புதிது புதிதாய் பார்த்து மலங்க மலங்க விழித்து அதிசயித்து அதிசயித்து மேலும் கீழுமாய் ஓடிக்கொண்டே இருக்கும் அக்குழந்தை.


உத்திப்பிரித்து நொண்டி விளையாடிய பால்யத்தை கடந்த வயதிலும் நினைவுகொள்ள பொக்கிசங்கள் கொட்டிக்கிடக்கென காட்சியாக்கியுள்ளார்.


உடன் புகைத்து தேநீர் அருந்தி தினசரி எதையாவது விவாதித்துக்கொண்டிருந்த தோழன் நோயின் பிடியில் சிக்கி மீளாது போன துயர்கூறும் இடங்களை கடக்கையில் கலங்கிய இமைகளை கட்டுப்படுத்த முடியாதுபோகிறது.


தனக்குப் பிடித்த கதை, தனக்குப்பிடித்த புத்தகம் தனக்குப்பிடித்த வைத்தியம் என உதயசங்கர் நம்பிய பிடித்த விசயங்களை திரும்பத் திரும்ப தன் அனுபவங்களோடு பயணப்படுத்திக்கொண்டே இருக்கிறார். கையெழுத்து பிரதியில் மின்னிடும் மாரீஸ், தட்டி ஓவியம், புரோட்டா சால்னா, தேநீர், ஹோமியோபதி வைத்திய முறை, திருப்பிக் கொடுக்காது வாங்கப்பட்டுக்கொண்டிருக்கும் கடன் என அவரின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது...


ஆனால் இவ்வளவு பெரிய வட்டத்தில் ஒருவரோடும் மது அருந்திய அனுபவ பகிர்வு இல்லாதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒழுக்கம் சார்ந்த விசயம் என்பதால் பதிவிட தயங்கி விட்டுவிட்டாரா எனத் தெரியவில்லை. அப்படியான அனுபவங்களும் இருந்திருப்பின் மகுடம் சேர்த்திருக்கும்.


பகைமையான கசந்த அனுபவங்கள் இல்லாதிருப்பது மகிழ்வைத் தருகிறது. அப்படியே இருந்தாலும் எதற்குச் சொல்ல வேண்டும். யாரோடுதான் முழுமையாக ஒத்துப்போகிறோம். பிடித்த விசயங்களோடு மட்டும்தான் வாழ நினைத்தால் சாத்தியமா? வேலை பார்க்கும் நிறுவனத்தின் கொள்கையோடு பிடித்துப்போயா வேலைக்குப்போகிறோம். நமக்கு பிடிக்காதவர்கள் ஆட்சிசெய்கிறார்கள் என்பதற்காக வேறு மாநிலமோ நாடோ போய்விடுகிறோமா.. வருமானத்திற்கும் வசதிக்கும் பார்க்காத கொள்கைகளை சகமனிதர்களிடம் மட்டும் என் துழாவி துழாவி கண்டடைந்து கசந்துபோக வேண்டும். அவரவருக்கான பலமும் பலகீனங்களோடும் ஏற்றுக்கொண்டு உடன் பயணிக்க ஏன் தவறிடுகிறோம். நம்மிலும் நம்மோடு இருப்பவர்களிடமும் ரசிக்கத்தக்க எத்தனையோ விசயங்களை கவனிக்கத்தவறி வெறுமனே கடந்துபோய்கொண்டிருப்பதை சுட்டிக்கொண்டே இருக்கிறார் உதயசங்கர்.


தமிழக வரைபடத்தில் கோவில்பட்டி எனும் ஊரை வேறொன்றாய் பார்க்க செய்துள்ள புத்தகம். எஸ்.டி கூரியர் விளம்பரத்தில் வந்த தபால் போக முடியாத ஊரல்ல... உலக இலக்கியமும் உள்ளூர் கதைகளும் பேசித்திரிந்த கதையாளர்கள் போராளிகள் வாசங்களை ஊரோடு பொத்திக் காத்திருக்கும் மண்ணை தொட்டு திரும்பிய நாட்களை என்று நினைத்துப்பார்த்தாலும் கொஞ்சகாலம் வாழ்ந்துகொள்ளலாம். நமக்கானவர்களை நினைத்துப் பார்க்கவும். நம்மிடமும் சொல்லிக்கொள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையூட்டவும் செய்கிறது. உதயசங்கரின் முன்னொரு காலத்தி


nantri:puththagam pesuthu

Monday, April 23, 2012

பொய்த்த ஊற்றுக்கண்கள்



ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா? என்ற பழமொழியை நினைவூட்டி எங்கும்

செழிப்புடன் பூத்துக் குலுங்கியது ஆவாரம் பூச்செடி. பொசுக்கும் வெப்பம் ஓடும் ஆறு தற்சமயம்

நீரோட்டமாய் இருக்கிறது பருவம் தப்பிய மழையால். பள்ளி செல்லும் காலங்களில் தினசரி ஆற்றில்தான்

கூட்டாளிகளோடு குளிக்கச் செல்வேன். ஆத்தை ஒட்டி பெரிய பாறையும் பாறையை ஒட்டி பெரிய

வேப்பமரமும் இருந்தது. பாறையில் இருந்தபடியே எக்கி குச்சிகளை ஒடித்து பல் வௌக்கிக்கொண்டு

சறுக்கல் விட்டபடி குளிப்பதுண்டு. ஆற்றில் தண்ணீர் குறைச்சலாக இருக்கும் நாட்களில்

அருகிலிருக்கும் கலிகிண்டி மாமா தோட்டத்திற்கு குளிக்கப் போய்விடுவோம். மோட்டர் ரூம் மேல்

ஏறி ஒருவர் பின் ஒருவராக குதித்துக்கொண்டே இருப்போம். சோப்பு போடும் பழக்கமெல்லாம்

அப்போது கிடையாது. ஆவராம் இலையை அரைச்சு தலைக்கு தேய்ச்சுக்குவோம். தேய்க்கத் தேய்க்க

நொரை பொங்கி வரும் எங்க சந்தோசத்தைப்போல. உடம்புக்கு சீயக்காய் தேய்ச்சுக்குவோம்.

கொஞ்சநாளைக்கப்புறம் சிகப்பா கட்டியா கெடக்கும் லைப்பாய் சோப்பை உடம்புக்கு மட்டம்

போட்டுக்குவோம். முடி கொட்டிவிடும்னு தலைக்குப் போட பயம்.

கலிகிண்டிமாமா கிணத்துல குளிக்கிறப்ப சோப்புபோட்டுக்க விடமாட்டார். ஒக்காளஓலிங்களா

குடிக்கரத்தண்ணியில சோப்புக்கீப்பு போட்டிங்க உதைச்சுப்புடுவேன் உதைச்சு என்பார்.

யேய் பசும்பலுரான் நீ வந்தாத்தாண்ட கிணத்துப் பக்கம் கூச்சலும் கும்மாளமும் இருக்கு என்பார்.

இது எனது தாத்தா ஊர் அம்மா பிறந்த இடம். அப்பா பிறந்த ஊரைத்தான் சொந்த ஊர் என்கிறார்கள்.

(ஆதிக்கச் சிந்தனையின் வம்சாவளிகள்) எட்டாவது படிக்கும்வரை எனது ஊர் பெரம்பலூர் பக்கம் உள்ள

பசும்பலூர்தான். மழைபெய்தால்தான் விவசாயம். மாணாவாரி பயிர்கள்தான் அதிகம் பயிரிடமுடியும்.

அப்பா விவசாயத்தைவிட்டு வியபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். நெல், பருத்தி என ஊரில் மொத்தமாக

வாங்கி திட்டக்குடி போய் விற்றுவருவார். இரண்டு பக்கமும் திறந்தபடி பைபோல இருக்கும் ஒரு

காடத்துணியின் உள் பணத்தை வைத்து இடுப்பில் கட்டியிருப்பார். வியாபாரத்திற்கு போய் வந்த மறுநாள்

பணம் நிறைய்ய கெடக்கும் பத்து இருபது என எடுத்து வைத்துக்கொள்வேன். நொறுக்குத் தீணிக்காக.

பணம் இல்லாத நாட்களில் பருத்திக் காட்டிற்குப் போய் பருத்தியை எடுத்து டவுசர் பாக்கெட்டில்

திணித்துக்கொண்டு வந்து செட்டியார் கடையில் போட்டு வேண்டுமென்பதை வாங்கித்திண்பேன்.

அவரிடம் உதை வாங்கும் வரை இப்பழக்கம் தொடரத்தான் செய்தது. முரட்டுத்தனமானவர். லாபமோ

நட்டமோ வீம்புக்காக எதையும் செய்துவிடுபவர். போட்டிக்காக யாராவது கேட்டுவிட்டால்

நிறைய விலை வைத்து நெல்மூட்டைகளை வாங்கிவிடுவார். பின் நிறைய்ய நட்டத்தில் விற்ப்பார்.

இதனாலேயே இருந்த கொஞ்சநஞ்ச சொத்துக்கள், அம்மாவின் நகை அனைத்தும் விலைபோயின.

சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போய்விட்டார். எங்கு போனார் என்பது யாருக்கும் அப்போது

தெரியவில்லை.

அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். சித்தப்பா சென்னையில் இருந்தார். அவருக்கு கடிதம்போட்டு

கேட்டோம் அங்கும் இல்லை. பெரியப்பா துவாரகாபுரியில் இருந்தார். அவர் எங்கப்பாவைப்போல

வியாபாரம் செய்து ஓடிவிடவில்லை. பொழப்புக்காகத்தான் போனார். குடி கூத்தியாளென உல்லாச

வாழ்வில் ஓட்டாண்டியானவர். ஊரில் வருடம்தோறும் சித்திரைமாதத்தில் சிறுதொண்டர் நாடகம்

நடைபெறும். அதற்கு மறக்காமல் கட்டாயம் வந்துவிடுவார். சிறுதொண்டரின் மனைவி வேஷம்

போடுவார். அவர் சொல்லும் வீடுகளுக்கு சென்று நான்தான் அவருக்கு சேலை வாங்கிவருவேன்.

சேலையோடு நிறைய்ய நொறுக்குத் தீணியும் வரும். கொரித்துக்கொண்டு ஆர்மோனியப்பெட்டியை

ஆட்டியபடி இருப்பேன். அவருக்கும் கடிதம் போட்டோம். அங்கும் இல்லை. அத்தை ஊரிலேயே

இருக்கிறார். வேறு யாரிடம் கேட்பதென தெரியாது விட்டுவிட்டோம். ஊரிலிருக்கும் பெரிய

மனிதர்களோடு வந்து வீட்டை எனக்கு கொடுக்கவேண்டிய கடனுக்கு எழுதி கொடுத்துள்ளான்.

சீக்கிரம் வீட்டை காலிபண்ணிகொடுங்க என்றாதும் ரோசத்தில் அம்மா பாதி மொழுகிக்கொண்டிருந்த

வீட்டை அப்படியே விட்டுவிட்டு அவரின் தாயகமான நமச்சிவாயபுரம் வந்தாயிற்று. விழுப்புரம்

மாவட்டத்தில் சின்னசேலம் பக்கத்தில் உள்ளது. நானோ பசும்பலூரில்தானிருப்பேனென அடம்பிடித்து

தாத்தா வீட்டிலேயே தங்கிப் படித்தேன்.

என் தாத்தா ராமாயணம், மகாபாரத பாடல்களை தினமும் ராத்திரி சாப்பிட்டுவிட்டு தூங்கப்போ-

கும்போது கட்டிலில் படுத்தபடி ராகமாக பாடிக்கொண்டேயிருப்பார். இந்தக் கிழவனுக்கு

வேறவேலையில்லையென முனுமுனத்தபடி பக்கத்துவீட்டுக்கு போயிடுவாங்க பாட்டி. எனக்கு

அந்தப் பாடல்களில் எப்பொழுதுமே ஈர்ப்பு உண்டு. கட்டிலுக்கு அடியில் படுத்துக்கொண்டே

கேட்டுக்கொண்டிருப்பேன். பாடி முடித்ததும் தூங்கினேனா? அல்லது பாதியிலேயே தூங்கிவிட்டேனா

என்ற குழப்பத்தோடே தினமும் எழுந்திரிப்பேன். பாட்டி சமைச்சி வச்சிட்டு வேலைக்குப்

போய்விடுவாங்க. நானேதான் போட்டு சாப்பிட்டுவிட்டு எல்லாத்தையும் கழுவி வச்சிட்டு

பள்ளிக்கூடத்துக்கு போய்விடுவேன். சனி, ஞாயிறுகளில் நானும் கலைவெட்ட கொத்தமல்லி புடுங்க,

கல்லைபுடுங்கவென ஏதாவது வேலைக்கு பாட்டிக்கூடவே போய்விடுவேன். ஊர்கதைப்பேசியும்,

ஒருத்தருக்கொருத்தர் கிண்டலடித்துக்கொண்டும், போட்டி போட்டுக்கொண்டும் நேரம்

போவதே தெரியாது. எப்ப லீவ் கிடைக்குமென ஏங்கவைத்துவிடுவார்கள். மாசம் ஐம்பதோ,

நூறோ சம்பாதிப்பதுண்டு. காலாண்டு, அரையாண்டு முழுஆண்டு லீவில்தான் தாத்தா

ஊருக்குப்போவதுண்டு அப்போதுதான் இந்த கூத்தெல்லாம் நடக்கும்.

கலிகிண்டி மாமாவின் உண்மையான பெயர் எங்களுக்குத் தெரியாது. கிராமங்களில் சிலரின்

பட்டப்பெயர்தான் எப்பொழுதும் நீடித்திருக்கும். ஒருமுறை ஊரில் திருவிழாவிற்கான ஏற்பாட்டு

கூட்டம் நடந்தது. இவரைக் கூப்பிடச் சென்ற ஆள் வந்து கலிகிண்டி முடிச்சதும் வரேன்னார் எனச்

சொல்ல... இவர் வந்தபோது வாய்யா கலிகிண்டி என ஊர் பெரியவர்கள் அழைக்க எல்லோரும்

கோவென சிரித்துவிட அன்றுமுதல் அவரின் பெயர் மாற்றம் நிகழ்ந்தது. கொஞ்சநாள் கூப்பிட்டவர்களை

திட்டிப்பார்த்தார் யாரும் மாறுவதாகத் தெரியவில்லை. வேறுவழி அவரும் அப்பெயரை ஏற்றுக்கொள்ள

ஆரம்பித்துவிட்டார்.

பள்ளிக்கூடம் போற நாள்களில் அவர் கிணத்துக்கு போகமாட்டோம். சோப்பு போட்டு குளிக்க

முடியாதென்பதற்காக. ஆத்துலத்தான் குளியல். ஆத்தை ஒட்டி இருக்கும் பெரிய வேப்பமரத்தின் பின்புறம்

நின்று கொண்டால் யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம். அங்குதான் உடைமாற்றிக்கொள்வோம்.

அந்த இடம் ஊரில் இருக்கும் காதலர்களுக்கெல்லாம் அடைக்கலம் தரும். கள்ளக்காதலுக்கும் கூட.

யார் யார் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பாறையின் அடிப்பாகத்திலிருந்து ஒட்டு

கேட்போம். எங்களுக்கு அதுதான் பொழுதுபோக்கு. காதல் என்பது கல்யாணமாகாதவர்களுக்கு

மட்டும் அல்ல. கல்யாணம் ஆனவர்களுக்கும் வரும் என்பதை அங்குதான் தெரிந்துகொண்டேன். பின்

கூட்டாளிகளுடன் அவர்கள் பேசியபடி நடித்து கூம்மாளமடிப்போம். தனராசு மாமா பொண்டாட்டியும்

மேலத்தெரு முத்துமாமாவும் அடிக்கடி சந்திப்பாங்க. இது எப்படியோ தனராசு மாமாவிற்கு தெரிந்துவிட

வேப்பமரத்து வேர்ல ஆசிட்ட ஊத்தி அந்த மரத்தையே பட்டுப்போக செய்துவிட்டார். எப்பொழுதும்

குளிர்ச்சியாக இருக்கும் அந்தப் பாறை பொசுங்க ஆரம்பித்துவிட்டது. தங்கராசு மாமாவின்

மனசைப்போல. காலப்போக்கில் நீர்வரத்து குறைந்து ஆறு குறுகிப்போனது. ஆற்றில் தண்ணீரைப்

பார்ப்பதே அபூர்வமாயிற்று. எத்தனையோ வருடங்களுக்கு பிறகு பாசிபடர்ந்த நீரோட்டத்தை

காணமுடிந்தது. ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் உடனடியாகபோய் ஆற்றைத்தான் பார்ப்பேன்

தண்ணீர் வருகிறதா என. ஊரில் எனக்கு ஏற்படும் பெரிய பிரச்சினை கால் அலம்பிக்கொள்வதுதான்.

போன மாதத்தில் நிறைய நாட்கள் ஊரிலேயே தங்கவேண்டியதாகிவிட்டது. அப்பாவின் உடல்

நலக்கோளாறு. பின் அவரது திடீர் மரணம், காரியம், முப்பது கும்பிடுதல், இறப்புச் சான்றிதழ்

வாங்குவதென. (பிறப்பு, இறப்பு பதிவு அவசியம் என சொல்லும் அரசாங்கம். சான்றிதழ் வாங்க

பணமும் அவசியம் என சொல்ல மறந்துவிடுகிறது.) அடிக்கடி ஊருக்கு செல்லவேண்டியதாகிவிட்டது.

ஆற்றின் நீர் வரவால் நிம்மதியாய் போய் வந்துவிட்டேன். அப்பாவின் சாவில் எனக்கேயான சுபாவத்திற்கு

நேர்மாறான நிகழ்வு நடந்தது ஆச்சரியமாக இருந்தது. மரணத்தை உள்வாங்கி அமைதியாய் கிடக்கும்

அப்பாவை பார்த்திருக்க அம்மா தங்கை, சித்தி, அத்தையென உறவினர்களெல்லாம் எனை கட்டிப்பிடித்து

அழ... எனக்கு அழுகையே வரவில்லை. சொல்லப்போனால் கண்கூட கலங்கவில்லை. ரொம்ப

பக்குவப்பட்டுப்போய்விட்டோமா என யோசித்தப்படி அமைதியாகவே இருந்தேன்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முன்மாதிரி என்பார்கள். எனக்கு அப்படி ஏதும் அனுபவம்

ஏற்பட்டதில்லை. அப்படியான எந்த விஷேச குணமும் அப்பாவிடம் இருந்ததில்லை. முரட்டுத்தனமானவர்.

அவர் நினைத்ததை மட்டுமே செய்வார். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். இவன் பெரிய மயிராண்டி

எனக்கு புத்தி சொல்ல வந்துட்டான் என்பார். ஒருமுறை என் சித்தப்பா வீட்டின் சுவற்றில் ‘நேருவின்

மகளே வருக, நிலையான ஆட்சித்தருக’ என கொட்டையாக எழுதி கருணாநிதி, இந்திராகாந்தி படம்

போட்டு கை சின்னத்திற்கும், சூரியன் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு எழுதிவைத்தார். அன்று

இரவு ஊரில் இருந்த வந்த அப்பா எவன்டா எழுதியதென பெரிய சண்டையிட்டு சொந்தக்காரங்க

எல்லாம் சொல்லியும் கேட்காமல் தண்ணியை ஊற்றிக் கழுவி சுண்ணாம்பு அடித்து விடிய விடிய

எம்ஜிஆர் படமும் இரட்டைஇலை சின்னத்தையும் வரைய வைக்க வீதியே திரண்டு வேடிக்கை

பார்த்தது. எல்லா படத்தையும் எப்படி இவர் அழகா போடுறார் என படம்போட்டவரையே வேடிக்கை

பார்த்துக்கொண்டிருந்தேன். வீம்புக்காரர். அம்மா எதுவும் எதுத்து பேச முடியாது. ஒரே அடி

உதைதான். ஒருமுறை அப்படித்தான் எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துகொடுக்கும்போது சரியாக

ஓட்டவில்லையென எங்கள் ஊருக்கு ரோடுபோட வந்த ரோடு ரோலரில் சைக்கிளோடு தள்ளிவிட்டார்

இரண்டு கைகளிலும் நல்ல காயம். அவருக்கு பயந்தே சீக்கிரம் சைக்கிள் ஓட்ட கத்துக்கொண்டேன்.

ஒருமுறை வியாபாரத்திற்கு சென்றபோது லட்சக்கணக்கில் பணம் கலவாடப்பட்டுவிட்டது. நெல்

வாங்கியவர்களுக்கு கடன்கொடுக்க இருந்த நிலத்தையெல்லாம் விற்றுவிட்டார். வீடையும் அடகு

வைத்துவிட்டு எங்கோ ஓடிவிட்டார். பின் அம்மா அவர் பிறந்தகமே வந்துவிட்டார். நான் பாட்டிவிட்டில்

கொஞ்சநாள் தங்கி படித்தேன். பின் ஊருக்கு புதிதாக விடுதி வந்தது. உள்ளூர் பசங்களே விடுதியில்

தங்கி படிக்க நேர்ந்தது.

விடுப்பில் ஊருக்கு போகும்போதெல்லாம் அம்மா என் தாலி அர்த்தத்தோடுதான் கிடக்கிறதா? மனுசன்

இருக்கானா செத்தானா தெரியலையேவென அடிக்கடி அழுவார்கள். ஆறு ஆண்டுக்கு பிறகு வந்தார்.

கேரளத்தில் இருந்ததாக. பின் கொஞ்ச நாள் வேலைக்கு போக வர இருப்பார். பின் அம்மாவோடு

சண்டைபோட்டு ஓடிவிடுவார். அப்பா மகன் என்ற உறவோடு பெரிதாய் ஏதும் வாழ்ந்திடவில்லை.

இப்படி உதிரியாய் சில நினைவுகள் வந்து வந்து போயின.

புத்தகம் வாசிக்கையில், திரைப்படம் பார்க்கையில் நெகிழ்வூட்டும் இடங்களில் பொசுக் பொசுக்கென

கண்ணீர் வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் விஜய் தொலைக்காட்சியில் இப்படிக்கு ரோஸ் என்ற

நிகழ்வில் அரவாணிகள் (திருநங்கைகள்) நேர்காணல் நிகழ்ந்தது. பச்சையற்று வறண்ட மனதோடு

வக்கிரம்மிக்க சமூகம் குறித்த அவர்களின் அனுபவங்களை கேட்க கேட்க எவ்வளவோ முயன்றும்

கட்டுப்படுத்த முடியாமல் வழியும் நீரால் உடல் சில்லிட அவசரமாக பாத்ரூம் சென்று நீர் அடங்க பின்

உறங்கச் சென்றேன்.ஒருமுறை சேலத்திலிருந்து ஓசூர் வருகையில் எனதருகில் ஒரு திருநங்கை அமர்ந்து

வர பேருந்தில் ஏறி இறங்கியவர்கள், பயணித்தவர்கள் கண்டக்டர் உட்பட பார்த்த பார்வை இருக்கிறதோ...

உடல் கூசுகிறது. எப்படித்தான் இவர்களால் வெளிப்படையாக ஏளனப்படுத்த முடிகிறதோ

தெரியவில்லை. தனக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் உலகமே தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டும்

என எதிர்பார்ப்பார்கள். தான் நன்றாக வாழ்ந்தால் யார் குறித்தும் எந்த அவதூறுகளையும் பரப்ப தயங்க

மாட்டார்கள். அவர்களும் சக மனிதர்கள்தானே என்ற குறைந்தபட்ச நேயம் கூட இல்லாதிருக்கிறார்கள்.

முன்பின் அறிமுகமற்ற எந்த ரத்தபந்தமும் அல்லாத அவர்களின் உரையாடலைக்கூட தாங்கமுடியாத

என்னால் என் அப்பாவின் சாவை அமைதியாக ஏற்றுக்கொண்டது ஆச்சரியம்தான். வாழ்வில்

ஏற்படும் தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளுக்காக வருத்தப்படுதலோ, சந்தோசப்படுதலோ எந்த

மாற்றத்தையும் உண்டுபண்ணப்போவதில்லை. சாவதற்கு முதல்நாள் ஊர் சென்று அவரை சந்தித்து அவர்

ஆசைப்பட்டதையெல்லாம் செய்து அவர் கேட்ட பணத்தை எந்த மறுப்பின்றி குறைக்காது கொடுத்து

அவரை சந்தோசப்பட வைத்துவிட்டு ஊர் திரும்பியதும்கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

இந்த முறை அப்பாவின் முப்பது படைக்கச் சென்றபோது கலிகிண்டி மாமாவின் தோட்டத்திற்கு

குளிக்கச் சென்றேன். எப்பொழுதும் சிரித்துப்பேசி உற்சாகமாக இருப்பவர் அன்று மிகுந்த அயர்வோடு

காணப்பட்டார். வா மாப்ள என சுரத்தே இல்லாது கூப்பிட்டு ஒங்கப்பனுக்கு நல்ல சாவுடா,

மவராசன் போய் சேர்ந்துட்டான். கெடந்துகிட்டு ஆசுபத்திரி ஆசுபத்திரியா அல்லாடிக்கிட்டு

அவுத்துக்கொடுத்துகிட்டு இல்லாமா நிம்மதியா போய் சேர்ந்துட்டான். நாமதான் கெடந்துகிட்டு

அல்லாட வேண்டியிருக்கு. என்ன குளிக்கிறியா, மோட்டர் போட்டுக்க என்றார். இல்ல கிணத்துலேயே

குளித்துக்கொள்கிறேனே என கிணற்றை எட்டிப்பார்க்க பக்கென்றிருந்தது, கொட்டும் அருவி,

தொங்கும் கண்ணீராக வழிவது போன்று மூலையில் கொஞ்சமாக கிடந்தது. ஆற்றில் தண்ணீர்

குறைந்து போய்விட கிணற்றின் ஊற்றுக்கண்கள் பொய்த்துப்போய் கிடந்தது. கண்களில் நீர்

திரண்டிருக்க தொட்டியிலிருந்து டப்பாதண்ணியை மொண்டுஊற்றிக்கொண்டு வந்தேன்.

காலமாற்றத்தின் பயம் கவ்வ கண்ணீரோடு நகர்ந்தேன்.

என் அப்பாவின் சாவிற்கு நான் கொல்லி வைக்க அனுமதிக்கப்படவில்லை. என் மனைவி கர்ப்பிணியாக

இருந்ததால். இதில் எனக்கு சின்ன சந்தோசம். அதனால்தான் என் தங்கை சுடுகாடுவரை சென்று

கொல்லி வைத்து வந்தது. உடன் பணிபுரிபவர்களிடம் இவ்விசயம் சொன்னால் எல்லோரும் ஆச்சரியமாக

பொட்டப்புள்ளய எப்படி கொல்லி வைக்க விட்டார்கள். என விழி உயர்த்தினார்கள். பெண்கள்

அதிகமாக படிக்க வந்தபோது... வேலைக்கு போனபோது... இரு சக்கர நான்கு சக்கர வானூர்திக்கு

ஓட்டுனரானபோது, எழுத வந்தபோது... ஆணுக்கு நிகரான எல்லா வேலைகளிலும் அவர்கள்

வந்தபோதெல்லாம் கேலியாய் விழிஉயர்த்திக்கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் குறித்து என்ன

கவலைப்படவேண்டியிருக்கிறது. நாமும் அவர்களோடு வாழ்ந்து தொலைக்க வேண்டியிருக்கிறதே

என்பதைத் தவிர. காலம் வெகுமாற்றங்களோடு கடக்க சிந்தனையின் பிடி மாற்றிக்கொள்ளாதிருப்பதை

நினைத்து சிரித்து நகர்ந்தேன்.

-----------------------------------------------------------------------------------------

Monday, April 16, 2012

மழையின் பசியாற்றினோம்

மழையின் பசியாற்றினோம்
விழி அகன்று உடல் மலர்த்தி
ஆவல்பொங்க கூறியதை கேட்டு
அதிசயித்து சிரித்தவனை
நட்சத்திரங்களாக கூரையில் மின்னும்
துளிகளின் நினைவிலிருந்து மீண்டு
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு…

உத்தி பிரித்து விளையாடிய அதிகாலையில்
சிறு சிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்காதா
மதுவாகினி கேட்டாள்
ஆளாளுக்கு கொட்டாங்குச்சியில்
தட்டித்தட்டி மண் இட்லி வைத்தோம்
கரைத்து விழுங்கித் தெம்பாய்
தெருவெங்கும் சுத்தம் செய்தோடிய மழையில்
அவனும் நனைந்து கொண்டிருந்தான்…


nantri: elakkiya sutram


Saturday, April 14, 2012

மை டியர் மதுவாகினி


கொல்லப்புற கொடிகள் வதங்கிக் கிடக்கும்

மதிய பொழுதொன்றில் வந்தாய்
ஊரே திருவிழாவின் கொண்டாட்டமாய்
என்பொருட்டொன் அன்பை பகிர்ந்தளித்தாய்
எல்லோருக்கும் அப்பமாய்...
சிறு துளையொன்றில்
நதியின் பாய்ச்சலாய்
வாய்த்த நொடிப் பொழுதில்
கிள்ளி வலியூட்டினாய்
அன்றறிந்தேன்
மை டியர் மதுவாகினி
வலியும்
பெரும் ஊற்றெடுக்கும் இன்பமென...

நன்றி : கல்கி

Wednesday, April 11, 2012

விளையாட்டு

 பார்வையாளர்கள் குறித்த
பதட்டங்கள் ஏதுமின்றி
ஒரு விளையாட்டு துவங்கியது
கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க
எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ
வரைபடங்களில் மிளிரும்
நாடுகள் மீதும் நகரத் துவங்கியது
தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென
கமிட்டிகளை நியமித்தது அரசு
புத்தி ஜீவிகள்
கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர்
குறிசொல்லி சாமியாடிகளும்
அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை
சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர்
வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென
அசட்டையாக இருந்த என்னுள்ளும்
ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன்
துளி அடையாளமற்று போக்கிடச் செய்யும்
அனுபவம் தேறிய வேட்டையர்கள்
வேறு வேறு உபகரணங்களால்
வெற்றிகொள்ள துடித்தபடியிருக்க
தகர்க்க இயலாதவாறு தப்பிக்கொண்டிருந்தது பாறை
பறவையாகி...
 
nantri : Thinnai