Thursday, January 31, 2013

அவ்வப்போது உதிரியாகப் படித்திருக்கிறென். ஆனால், தொகுப்பாக ந.பெரியசாமியின் கவிதைகளைப் படிக்கும்போது, உயரத்திலிருந்து தவறிவிழப்போகும் குழந்தையைப்போல நமது கவனத்தை ஈர்க்கிறது.
மனதோடு நேரடியாக எந்த இடைஞ்சலுமின்றி பேசுகின்றன இவருடைய கவிதைகள்.
உணர்வின் கொந்தளிப்பை தணித்து, அதை உருமாற்றி நிதானமாக மனதோடு பேசுகின்றன.
அது நம் மனதோடு பேசும் முறைகளினால்,
யாராலும் உதறிவிட்டுக் கடந்து செல்ல முடியாதென்ற ஒரு கட்டாயத்தை உருவாக்கி விடுகிறது.

அக்கறை, அன்பு, கருணை போன்ற வற்றுக்கு நிதானமான உணர்வுநிலையுடன்கூடிய இடம் வாழ்வில் அனைத்து தருணங்களுக்கும் அவசியமானது என்ற செய்தியை மிக அழகாக புனைந்து காட்டியிருக்கின்றன.
ந.பெரியசாமியின் ”மதுவாகினி”


nantri: Riyas Qurana

Saturday, January 26, 2013

வலியின் சித்திரங்கள்

கன்றின் காயம் உலர்த்த
நா வருடும் பசுவின்
நீர்கோர்த்த கண்களை நினைவூட்டி
கலைந்து கிடந்தாள் மதுவாகினி
தவிப்பில் முகம் ஏந்த
எடுத்து விரித்தாள் நோட்டை
எங்களின் அனகா
தேதிவாரியாக
திட்டிய ஆசிரியர்களை
கேலிச் சித்திரமாக்கத் துவங்கினாள்
காக்கை ஒன்றை அழைத்து
ஆசிரியையின் நாவை இழுத்து
எச்சமிடச் செய்தாள்
வாத்தியாரின் முகத்தில்
நாயை மூத்திரமிட வைத்தாள்
அடுத்து தீட்டினாள்
உடலை குச்சி குச்சியாக
அதட்டி அடிக்கடி குச்சியை ஓங்கும்
குற்றத்திற்காகவாம்
கிள்ளும் டீச்சரின் காதை
திருகி திருகி இழுத்தாள்
தரை தொட்டுத் தொங்கும் வரை
தலைமையாசிரியரின் தலையை மழித்து
கரும்பலகையாக்கி மார்க்கிட்டாள்
அவளின் நீதிமன்றத்தில்
அத்தனை ஆசிரியர்களையும்
குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி
வலிவடித்து வெளியேறியவளை
மடியிலிட்டு உறங்கச் செய்தேன்
அவளின் முன்னத்தி நாட்கள்
நினைவில் காட்சிகளாக
அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாய் சோப்பு வாங்க
பூனை மீது பழிபோடுவாள்
வந்திடும் விருந்தினர்களின்
செருப்புகளை ஒளியவைத்து
செல்லும்போது பரபரப்பாக்கி
நாயின்மீது சாட்டிடுவாள்
தேவைகளை வாங்கிக்கொள்ள
உறுதியளித்தபின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட், வண்டி சாவிகளை
பட்டியலிடும் அவளின் குறும்புகள்
கொஞ்சநாளை ஏதுமற்று
அடிக்கடி தனித்திடுகிறாள்
அவ்வப்போது மொட்டைமாடியில்
எதையோ சொல்லி திட்டிடுகிறாள்
யாரிடம் பேசினாய் எனக்கேட்க
எதையோ மறைத்து மழுப்புவதென
மாற்றம் நிறைந்த செய்கைகள்
நீர் முடிச்சாய் மண்ணில் உருள
பள்ளிக்கு நாளை அனுப்பவேண்டுமெனும்
பதட்டத்தில் உடல் நடுங்கினோம்...

நன்றி: வலசை

Thursday, January 24, 2013

ஆதித்தாய்

விதைகளைச் சுமந்து
வீதியிலே கூவி வந்த
கிழவியின் குரலை கேட்பார் யாருமில்லை
விலைபோகாவிட்டாலும்
வீண்போகக் கூடாதென
நிலம் தேடி பயணிக்க
சிமெண்ட் வெப்பம் தாளாது
சாணிப்பால் மணம் நுகர்ந்திட
சாமிகளை வேண்டலானாள்
புழுதி வாசனை அற்று
புழுங்கும் இந்த பூமியில்
வாழ முடியாதிருக்க
குன்றுகள் இருந்த இடம் தேட
குழி குழியாய் பள்ளம் மிகுந்திருக்க
அடைக்கலமற்று அலைகிறோமென
அசரீரி கேட்க
மயங்கிச் சரிந்தாள்
தெறித்த விதைகளை
விளையாடிய சிறுவர்கள்
வீட்டுக்கொன்றாய் எடுத்துச் சென்றனர்.

நன்றி: கல்குதிரை

Sunday, January 20, 2013

குறி அறிதல்

வெய்யல் பொசுக்கிய
புழுதி படிந்த வயோதிக நிலத்தில்
நிழல்விழ நின்ற வேலிமுள்ளின்
அருகமர்ந்து விடுகதை இட்டவாறு
வெளியேற்றிய கழிவுகளின்
வீச்சத்தால் நாசி தேய்த்து
நேற்றைய குழம்பு கூறி நகைத்து
திருட்டுத்தனமாகப் படித்த
அண்ணன்களின் காதல்வரி ஒப்பித்து
வாத்தியார்களை ஏமாற்றிய
வல்லமையைப் பாராட்டி
குழி தோண்டிப் பரித்த
திருட்டுக்கிழங்கின் சுவை பகிர்ந்து
கபட உறவுகளின்
களிப்பை ரசித்த காட்சி விளக்கி
ருசி அறிந்த புளியமரத்தின்
ரகசியம் பேசி
இரவுக் காட்சியின் கதை வியந்து
எழுந்து வரும்முன் மறவாது
நீண்டிருக்கும் நிழலைக் கணக்கிட்டு
சேக்காளிகளின் குறி நீளம் அறிவோம்...

நன்றி: கல்குதிரை

Thursday, January 10, 2013

மூழ்கும் அறம்

தொடர்ந்தாற்போல்
இரு வட்டங்களை வரைந்தேன்
பெயரிட்டேன்
ஒன்றிற்கு கண்ணகி
மற்றதற்கோ மாதவி
வட்டம் தன் நிலம் இழக்க
பீடித்த பாலை
மறுவட்டத்திற்கும் விரவியது
வேறு வேறு வட்டங்கள் வரைகிறேன்
கோவலன் ஒட்டகம் ஏறி
பாலை கடந்து பாலை வளர்த்தெடுத்து
எதிர்படும் சிறுமியிடம்
அறம் போதிக்கிறான்
நிலம் கொழிக்க அடங்கியிருவென
நகைத்துக் கடந்தவள்
பெய்த மூத்திரத்தில்
மூழ்கப்போவது ஒட்டகம் மட்டுமல்ல...

Thursday, January 3, 2013

நிறமாறும் தேவதை

1
சுவர் பல்லியாய் நாவு நீட்டி
சொட்டும் துளித்தேன் சுவைத்து
காடு கழனியில் நிழல்
மிதக்க தோகை விரித்திருந்தேன்
அண்மையில் பறந்தது
தன் அலகால் கிளறி
நான் மதுவாகினியென்றது...

2
மகன்
பென்சிலை சீவிக்கொண்டிருந்தான்
சுருளாக விழுந்த அலைகளை
கடந்து அமைதிக் கடலடைந்தேன்
உலாவினேன் உப்புநீர் குடித்து
பிடித்த இரையை வாயூட்டி
செவுளில் இசைத்தது இன்னொரு மீன்
நான் மதுவாகினியென...

3
சிறு சிறு ஊற்றாகி
உருக்கொண்டேன் ஆறாக
காடு மலை வயல் கடந்து
கடல் சேர்ந்தேன்
வேறு மலை வேறு காடு
வேறு வயல் அறிந்து
என்னுள் கலந்த வேறு ஆறு
உங்களுக்குத் தெரியும்
என்ன பெயர் கூறியிருக்குமென...

நன்றி: யாவரும்.காம்