Wednesday, July 20, 2022

வாதி எனும் வாழ்வியல் வாதை

 

என்றேனும்  ஒருநாள் சமதர்மம் பூக்கும் எனும் நம்பிக்கையோடு ஒரு பிரதேச மக்களின் வாழ்வியல் வாதையை, அந்நிலத்தின் பூர்வ கதையை நமக்கு சொல்லிச் செல்கிறது நாராயணி கண்ணகியின் 'வாதி' நாவல்.


தன்னைவிட புத்திசாலியாக இருப்பவனைக் கண்டால் அதிகாரத்திற்கு பிடிக்காது. மந்தைத் தன்மையோடு என்றும் கேள்வி கேட்காது, தங்களை மட்டுமே நம்பி வாழும் தலைமுறைகளை உருவாக்கியபடியே இருக்கும். உயிர் மற்றும் வாழ்வியல் பயத்தால் நமக்கேன் வம்பு என வாழப் பழகிக் கொள்ளும் மக்களில் இருந்து ரோசத்தோடு அதிகாரத்திற்கு எதிராக ரோசப்பட வைப்பவர்கள் நக்சலைட், கம்யூனிஸ்ட், தீவிரவாதி என முத்திரையிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பதில் அதிகாரம் எப்பொழுதும் தீவிரத்தன்மையோடு இயங்கும். வாழ்வெனும் நீரோடையில் சருகு வீழ்ந்த அலைவுகளைக்கூட பொருத்துக்கொள்ளாத ஆண்டைகள், ஜமீன்கள், பண்ணையார்கள் எதையும் செய்பவர்கள் என்பதற்கு சாட்சியாக வாதி நிற்கும்.


'ஊறுகாய்க்காக மாங்காயை பத்து போடுவது போல் உதடுகளை பனி கீத்துபோடும். ஜனங்கள் ஆண்டைகளுக்கு நடுங்குவதைப்போல் பனிக்கு நடுங்கியாக வேண்டும்' என்பதிலிருந்து ஏலகிரி, ஜோலார்பேட்டை பகுதியின் சூழலையும், வாழ்ந்த மக்களின் நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது.


உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தாளத்துக்கோ இருபக்கமும் இடி எனும் சொல்லாடல் உண்டு. இங்கு காலமற்று திசையற்று பேதமற்று எங்கும் எப்பொழுதும் வாதைக்குட்படுபவர்கள் பெண்களே. நாம் சொல்லிக்கொள்ளும் வளர்ந்த சமூகத்தின் நிலையே தொடர் துயரமாக இருக்கையில், ஜமீன்தாரர் காலத்தில் சொல்லவா வேண்டும். அவரின் கண் பட்டோர் கலங்கப்பட்டே தீர்வர். ஊரில் யார் வீட்டிலாவது பெரிய மனுஷியான தகவல் வந்தால் ஜமீன் வீட்டிலிருந்து சீர் தட்டு வந்திடும். அப்பெண் பங்களாவிற்குள் சென்ற ஆகவேண்டிய கட்டாயம்  குறித்து நாவலில் வாசிக்கும்போது நம்மையும் மீறி கண்களில் நீர் துளிர்க்கும். 


ஊருக்குள் பாடம் நடத்த வரும் டீச்சரின் நிலையோ பெரும் துயர். பால் மறக்கடிக்க வேப்பிலை பூசிய மார்புக்கண்ணைக் கூட விட்டுவிட மனம் இல்லாது கழுவி வரச்செய்து  கட்டாயக் கலவிகொள்ளுதல் தொடர்கதை. ஒருநாளும் மனம் விரும்பி போகாதிருப்பதே எதிர்ப்பு உணர்வாக பார்க்க வேண்டியிருக்கிறது.


ஊராரின் கண்களில் தேவதையாக மிதக்கும் தனத்தை ஜமீன்தார் விட்டுவிடுவாரா என்ன? இயலாமையும், எதிர்கொள்ள இயலாத சூழலுமே தனத்தை அவரோடு இணங்கி இருக்கச் செய்திடுகிறது. ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் பிறந்தால் என் ஜாடையோடு குழந்தை இருக்குமென கலைத்திட கட்டாயப்படுத்த, தனத்தின் இழப்பு நம்மையும் கலங்கச் செய்திடுகிறது. 


"நாக்கு வறண்டு போயி தாகம் எடுத்தாலும், யார்கிட்டயும் தண்ணி கேக்கறதில்ல. புழக்கட தண்ணிய கொண்டாந்து கொட்டாங்கச்சில ஊத்தி தர்றாங்க" ஆதி தொட்டு வளர்ந்தபடியே இருந்துகொண்டுதான் இருக்கிறது சாதி வேர். அது எங்கும் இற்றுப்போய்விடவில்லை. காலமாற்றத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு நீண்டபடியேதான் இருக்கிறது. சாதி எனும் கீழ்மையோடு இருப்பவர்களுக்காகவும் சேர்த்தேதான் இயக்கம் கட்ட வேண்டியிருக்கிறது. அடிக்கடி கட்சி வகுப்புக்காக கூடுதல், பெண் தோழர்களின் பங்கெடுப்பில் உருக்கொள்ளும் சிக்கல்களை பேசுதல், பங்கெடுக்கும் தோழர்களிடையே இருக்கும் கருத்து முரண்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்துதல், ஜமீனை அழித்தொழிக்க பயிற்சி எடுத்தல், அவ்வப்போது நிகழும் போலிஸ், மக்களுக்கான பிரச்சினைகளை முன்னின்று தீர்த்துவைத்தல் என கதை நிகழ்ந்த காலத்தின் கம்யூனிஸ்டுகளின் நிலையை நாவலில் விரிவாகவே பதிவு செய்து உள்ளார். வகுப்பெடுக்கும் தோழரின் ஆளுமைக்கேற்ப அப்பகுதியின் செயல்பாடு இருக்கும் என்பதை உணர முடிகிறது.


"பயத்திலேயே ஒங்கள வெச்சினு இருக்கறான். பயம் போவணும், உங்க எல்லோருக்கும் என்னிக்கு பயம் போவுதோ, அன்னிக்கு ஜமீன் போயிரும்" என்று நாவலில் வரும் வக்கில் கிருஷ்ணனின் குரல் அன்றைக்கானது மட்டுமல்ல, இன்றைக்கானதாகவும் இருக்கத்தானே செய்கிறது. பயம் வெவ்வேறு வகைமையாக நம்மை வந்தடைகிறது. நம் பயமே பிறரின் மூலதனமாக மாறுகிறது. மருத்துவத்துறை, கல்வி, அரசு என எல்லா துறைகளும் மக்களின் பயத்தால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஜமீன்கள் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு மக்களை பயத்தில் வைத்திருந்தனர். அதற்காக ஜமீன்களால் போடப்பட்ட எலும்புத்துண்டு உயர்ரக மதுவும், நடிகைகளின் நிர்வாண நடனமும். இதற்காகத்தான் தவறெனத் தெரிந்தும் இயக்கத்தில் இருந்தவர்களை அழித்தொழப்பு செய்துள்ளதை வலியோடு வாதியில் பதிவு செய்துள்ளார்.


ஒருவன் ஒன்பது பேரை அடிப்பதையே நாயகன் என சித்தரித்த சினிமாவை நம்பியவர்கள் நம் தலைமுறையினர். ஆனால் தாங்கள் வாழும் ஊரின் மக்களின் நலம் பொருட்டு வாழ்ந்த, வாழும் நாயகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வாதி நாவலில் வரும் நடராஜண் அசாத்தியங்கள் நிறைந்த நாயகன்.  கரணம் தப்பினால் மரணம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடும் கூட்ஸ் ரயிலில் ஏறி உள்ளிருக்கும் மூட்டைகளை தள்ளிவிட்டு அதிலிருக்கும் தானியங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து பசியடங்குய  முகம் கண்டு மகிழக் கூடியவன். போலிஸ்காரர்கள் சிறைபிடித்து செல்லும்போது கூட இனி இந்த மக்கள் பசிக்கு என்ன செய்வார்கள் எனும் யோசனையில் சென்ற நடராஜண்ணனை மரணிக்கச் செய்தாலும் ஆவ்வூராரின் மனதில் பிறந்து மனதில் இறந்தவனை நம்முள் பிறக்கச் செய்திடுகிறது நாவல். 


"ஜமீன்தார் எங்கள சாட்டையில அடிச்சான். கன்னத்துல அடிச்சான்... வெறகுல குத்துனான், தாங்கிட்டோம். மதக தொறந்து ஒரே ராவுல ஏரித் தண்ணிய வடிச்சான்.  பொழுது வெடிஞ்சி ஏரிக்குப் போனா மீனுங்க மொத்தமும் செத்து கெடக்குது. மீனுங்கள தூண்டி முள்ளுல புடிச்சா தொண்ட வலிக்குமென வல போட்டுத்தான் புடிப்போம். வலிக்கு துடிக்கக் கூடாது. மீனுங்க எப்புடி துடிச்சியிருக்கும், அவனும் ஒரு நாளைக்குத் துடிதுடிக்கணும்" என அவ்வூர் மக்களுக்கு கோபம் இருந்துகொண்டுதான் இருந்தது.


இயக்கத்தில் இருந்தவர்களுக்கு வேறு வழியற்று ஜமீனை அழிக்க டீச்சர்வீட்டையே தேர்வு கொள்ள வேண்டியதாகிவிட்டது. ஜமீன்தார் அழிந்தாலும், அவர்களுக்குள் காலரணமாக தங்கிப்போனது டீச்சரும் குழந்தையும் அழிந்தது. கதை உண்மையாக இருந்தபோதும் நாவலில் நாராயணி கண்ணகி டீச்சரையும், குழந்தையையும் காப்பாத்தி இருக்கலாமெவென மனம் ஆசைகொண்டது. நடந்து முடிந்தவைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு.


நாம் பிறந்த அல்லது வாழும் ஊருக்கென்று எதாகினும் வாய்வழி வரலாறுஇருந்தால் நாம் அதை ஏதாகினும் கலை வடிவத்திற்கு கொண்டு வருவதே அறச் செயலாகும். திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஜோலார்பேட்டை நிகழ்ந்த சம்பவங்களை நாரயணி கண்ணகி வாதி நாவலில் வரலாறாக்கியுள்ளார்.

Wednesday, July 13, 2022

நன்றி: கனலி

 

அன்பின் ஒளிர்தல்கள்...

ந.பெரியசாமி

கவிதைகள் தேங்கிக் கிடக்கும் நீர் அல்ல. வழிந்து ஓடிக்கொண்டிருக்கும் நதி. தன்னை புதுப்பித்துக் கொண்டே ஓடும் நிலத்தையும், அதன் விளைவிப்பையும் செழிப்போடு வைத்திருக்கும் தன்மை கொண்டது. நிகழ்ந்து கொண்டிருக்கும் புதுப்புது முயற்சிகள் மொழியை மங்கவிடாது புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன.  அதற்கான சாட்சியங்களாக தொகுப்புகள் வந்தபடியே. அப்படியானதொரு தொகுப்பாக வந்துள்ளது  சால்ட் பதிப்பகத்தில் கண்டராதித்தனின் ' பாடி கூடாரம்'.

 சுய கர்வத்தை இழந்து பெறப்படும் சௌகர்யங்கள் அற்பத்தனமானதென வாழும் மனிதர்கள் 'மனம்' கவிதையில். 

........

அற்பனாக

இருந்தாலும்

அருவருப்பு

இல்லாமலா போகும். 

இப்படியாக முடிவுறும் 'சகிப்பு' கவிதை  உணர்வுமிக்க மனங்களின் வெளிப்பாடு.

 

மனித மனம் விசித்திரமானது. எதையும் ஆசைகொள்ளும். எப்படிப்பட்டதையும் தூக்கி எறியும். நம்மை நாமே நொந்துகொள்ளும் அளவிற்கு கிழானவர்கள் நம்மோடு இருக்கக் கூடும். மதுக்கூட சம்பாஷணையை காட்சிபடுத்தும் ' டோலாக்' கவிதை மாந்தர்கள் நம்முடனும் இருந்துகொண்டிருப்பதை காட்டிக் கொடுத்திடுகிறது.

 

" ஒரு சம்சாரி

அடுத்தவன் மனைவி மீது

ஆசைப்படலாமா

படக்கூடாதுதான்

பட்டால்

படாத இடத்தில் பட்டாலும்

பட்டும் படாமல்

போக வேண்டியதுதான்".

தனித்து உருவாவதில்லை, எல்லாவற்றிலும் இருந்தே உருவாகுகின்றன அழுக்குகள். கழுவியோ, துடைத்தோ புற அழுக்கைப் போக்கிடலாம், தூர் எடுக்க முடியாது மண்டிக் கிடக்கும் மன அழுக்கை மொழி காட்சிபடுத்திவிடுகிறது.

 

 

கூட்டமாகப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளை அரிதாகத்தான் பார்க்கமுடியும். திட்டமிடுவதாலேயே எல்லாமும் கைகூடிவிடுவதில்லை. கவிதைகள் எழுதப்படுவதற்கு முன்னதான மனச் சித்தரிப்புகள் ரசிக்கத்தக்கவை.

 

பொருத்தமற்ற வாழ்வுக்குப் பதிலாக பாடையில் படுத்துக் கொள்ள சொல்லும் அறிவுரை பரஞ்சோதிக்கு மட்டுமல்ல.

 

உடன் வாழும் மனிதர்களின் நாய் பிழைப்பைக் காணச் சகிக்காத வாழ்வின் காட்சி இப்படியாக...

 

“பிறப்பு நாய்பிறப்பு

நாலுபேரைப் பார்த்தால் 

வாலைக் குழைக்காத

கௌரவமென்றால்

நெடு வாழ்க்கையும்

நக்கு தண்ணீர்தான்.”

 

தாய்மைப் பண்பை முழுமையாக உணர்ந்துகொள்ளும் இடம் காடு என்பது மிகையில்லாதது.

“.............

யாருமே இல்லை என்ற நம்பிக்கையில்

மனம்விட்டு அழுதீர்கள்

உங்களைச் சுற்றிலும் இருந்த

மரம் செடி கொடிகள்

வாஞ்சையான தனது கரங்களால்

உங்கள் தலையை கோதிவிடுகிறது

அந்த அன்பினால் ஒளிரும்

காட்டுத்தொகுப்பைப் பார்த்து

பலகாலம் அதிசயத்துக்

கிடந்தன காட்டுவிலங்குகள்.”

 

புறக்கணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம் எனத் தவிப்பவர்களின் சரணாலயமாக இருக்கும் 'காப்புக்காடு' கவிதை.

 

எல்லோருக்கும் வாழ்வதற்கான நியதி இருக்கத்தான் செய்கிறது.

 

கண்டதை காட்சிபடுத்தலும், காட்சிபடுத்தப்பட்டதை கண்டதுக்குமான அனுபவச் சித்திரம் வேறானதாக இருக்கும். ' பேக்கரியில் அமர்ந்திருக்கும் பெண்' நம்முள் வேறான காட்சிப்படுத்தலை செய்திடுகிறது.

"...............

சுற்றிலும் கண்ணாடியிலான ஸ்டால்களுக்குள் அவள் அவ்வளவு

அழகோடு அமர்ந்திருக்கிறாள்.

நான் எழுதும்போதும் அப்படித்தானிருந்தாள்

நீங்கள் வாசிக்கும்போது காட்டில்

தவத்தில் இருக்கும் முனிவரின் பத்தினி கச்சையோடு

குடிசையை பராமரிப்பதாகவும்

வாசலைக் கோலமிட்டு அழகாக்குவது போலவும் வாசிக்கிறீர்கள்

மான்கள் பறவைகள்

புல்லினங்களென இக்கவிதையைவிட மேம்பட்டதாயிருக்கிறது

உங்கள் வாசிப்பு.

 

' எளிமையின் காலம்' என்பதற்கான சான்றுகளின் அடுக்குகளில் நாமும் ஒளிந்து கிடக்கின்றோம்.

 

வேதாந்தங்களை பேசிக் கொண்டிராமல் வேலையைப் பார் எனக் கூறிடும் ' பருவதவர்த்தனம்' நாம் யார் என்பதை காட்டிடுகிறது.

 

வள்ளலார் வீதிக்கு வந்தால் நிகழும் மாற்றங்கள் குறித்த சம்பவங்கள் கற்பனையானபோதும் அதிலிருக்கும் உண்மை உரு கொண்டு நிற்கிறது மீண்டும் வள்ளலாராகவே.

 

அரைகுறைகளின் நிறைகுடம் மீதான அபிப்ராயம் அரைகுறையாகவே இருப்பது காலத்தின் நியதி.

 

புறத்திலிருக்கும் வீதியின் காட்சிகள் அகம் நிறைந்த மனையாளின் தலையை வருடச் செய்திடுகிறது.

 

எழுத்தை மையமிட்டு சுழன்றாடிக் கொண்டிருக்கும் வாழ்வின் காட்சியிலிருந்து நாம் தப்பிவிட வேண்டும் என்பதை கற்றறியலாம்.

 

பிராது அறியாது வாழ்பவர்களைக் கண்டு பிராது ஏதுமற்ற அற்புத வாழ்வோடு இருப்பதாக கணிப்பதில் இருக்கும் சூது அற்பர்களுக்கானதை உணர்த்தல்.

 

பவிசு மதிக்கத்தக்கதல்ல. மண்ணுள் புதைக்கப்பட வேண்டியதுதானே.

 

மனித மனம் ஆசைகளை தொடர்ந்து துளிர்க்க வைத்துக்கொண்டிருக்கும் நிலம். குளமாக, குடமாக, நீர் குமிழியாக ஆசைகொண்டு, பின் மீன் கொத்தியாக மாறிவிடத் துடிப்பதில் இருக்கும் ரகசியத்தை காட்சிபடுத்துகிறது 'உடைந்த வாழ்வு' கவிதை.

 

மத்தியானத்தில்

நீர்த் தளும்புகிற

குளத்தின் எதிரில்

நின்று கொண்டிருப்பவனுக்கு

குடத்தில் குளத்தை சேகரிக்கும்

பெண்ணின் மீது ஆவல்

பைய உருண்டு திரண்ட

அந்த ஆவல்

வண்ணத்திரட்சியான

நீர்க்குமிழியின் மீது அமர்கிறது.

ஒரு மீன் கொத்தி அந்த

மத்தியானத்தின் குளத்தில்

தளும்பாத தண்ணீரை

தளும்பும் ஆவலை

ஒரே கொத்தில்

கொத்திச் சென்றது.

 

பெரியதுகள் ஏதும் தேவையில்லை. சின்னஞ்சிறியது போதும். காலம்காலமாக அப்பிக்கிடக்கும் இருளை அகற்ற கிழிசல் வெளிச்சம் போதும். வீதியை பிரகாசிக்கச் செய்து தினந்தோறும் திருவிழாவுக்கான மனதைத் தரும் ஆதிராவின் அம்மாவை நம் தெருவில் குடியமர்த்துதல்.

 

".....

அடி.... ஆதிரா....

 

அம்மாவை வீதிக்கு வரச்சொல்

இவ்வழகை அமுதை

பெருஞ்செல்வத்தை

எங்களுக்கு அளித்தவளை

சீராட்ட வேண்டும்

கொஞ்சம் பூக்களை

தன் பொற்கரங்களால்

எங்கள் மீது தூவட்டும்

நாங்கள் ஆதிராவின் அம்மாவை

காதலிக்கிறோமென்று

உற்சாகமாக ஒருமுறை கூவிக்கொள்கிறோம்."

 

'பாடி கூடாரம்' கவிதையிலோடும் இரத்தினக் கற்கள் பொதிந்த ஆடையணிந்த பெண்ணோடு  நாமும் ஓடிக்கொண்டிருப்பதை காணலாம்.

 

கொஞ்சம் கொஞ்சமாக சேகரமாகும் அவமானத் துளிகளே அனுபவ நதியாவதை வேடிக்கை பார்த்தல்.

 

மூன்று தலைமுறைகளுக்கிடையே இருந்த தனிமையின் தன்மை என்னவாக இருந்திருக்கும் என்பதை அறியத் தருதல்.

 

நோய்த்தொற்றால் உலகம் மயானமாகிக் கொண்டிருந்த காலத்தில், அரசின் கோமாளித் தனங்களையும்,  மக்களின் மீது அழுத்தம்தந்தபடி இருக்கும் துயரையும்  காலாகாலத்திற்குமான பாசுரமாக்கி உலகளந்தபெருமாளை  உள்ளேயே இருக்க வேண்டுவதின் துயரம் இதுகாறும் மக்கள் மட்டுமல்ல தெய்வமும் காணாததற்கு உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்'  போன்ற கவிதைகளே வேர்களாக இருக்கும்.

 

பசி

*

அப்பா இல்லாத

வீட்டில் அம்மாவுடன்

வேறொருவர் இருந்ததைக்

கண்ட அக்காளும், தங்கையும்

அதோ அந்த வேம்படியில்

பசியோடு காத்திருக்கிறார்கள்.

அம்மாவும் அவரும்

எப்போது வெளியே வருவார்களென.

 

அவரவர்கள் பசி அவரவர்களுக்கானதுதானே.

 

பகலே எட்டிப் பார்க்காத

பலி கொடுத்தாள் கிணற்றிலிருந்து

நீர் சேந்திக் கழுவுகிறேன்...

எனத் தொடங்கும் கவிதையுள் நல்லதங்காளை மீண்டும் உயிர்ப்பித்து கதை கூறச் செய்தல்.

 

நம்மின் ஆதி வாழ்வு ஆங்காங்கே தங்கி நகர்ந்துகொண்டே இருந்தது. காலப்போக்கில் ஓரிடத்தில் நிலையாக கூடாரமிட்டு சுயநலத்தோடு வாழத் தொடங்கி பெருக்கமடைந்த கூட்டத்தின் கீழ்மைகள், அது உருவாக்கிய சிதைவுகள், அதிலிருந்து மீண்டு வெளியேற ஒளிர்வுகளை கண்டடைதல்கள் என மனக்கூடாரங்களின் சேகரிப்புகளாக இருக்கிறது கண்டராதித்தனின் 'பாடி கூடாரம்'.

 


Sunday, July 10, 2022

ராமநாயக்கன் ஏரி உயிர்ப்பிக்கும் கருவறை

 ராமநாயக்கன் ஏரி உயிர்ப்பிக்கும் கருவறை


இந்த உலகத்தில் முதன்முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர்தான். அப்பொழுது தாவரங்கள் கிடையாது. பறவைகள் கிடையாது, விலங்குகள் கிடையாது, மனிதர்களும் கிடையாது. மனிதர்களே இல்லை என்கின்றபோது அவனது மொழிகள் மட்டும் எங்கிருந்திருக்கப்போகின்றன? பேசுவதற்கு ஆள் இல்லாமல் இருந்த நீர்தான் பேச்சுத்துணைக்கு முதலில் தாவரங்களை முளைக்க வைத்ததாம். அத்தாவரங்கள்  தாம் பேசுவதற்காக பூக்களை படைத்ததாம். பூக்கள் தாம் பேச கனிகளைச் சமைத்தது. கனிகள் தாம் பேச பறவைகளை அழைத்தது.  இப்படி வரிசையாக வந்து மனிதர்களில் முடிந்தது. இந்த மனிதர்களுக்கு அப்பொழுதெல்லாம் மற்ற மனிதர்களின் முகம் தான் தெரியும். தன் முகம் எப்படி இருக்குமெனத் தெரியாது. அம்மனிதர்கள்மீது ஓடைநீர் இரக்கப்பட்டு  இந்தா உன் முகத்தைப் பார்த்துக்கொள் என்று தன்னையே கண்ணாடியாக மாற்றி மனிதர்களுக்கு அவர்களை அடையாளம் காட்டியது. அது ஒரு ஓடும் கண்ணாடி. பேசும் கண்ணாடி. அக்கண்ணாடியோடு எல்லா உயிர்களும் இன்னமும் உரையாடிக்கொண்டுதான் இருக்கின்றன. உரையாடலை நிறுத்திய முதல் உயிரி மனிதர்கள்தான். மனிதர்கள் எப்போது தனக்கென்று ஒரு கண்ணாடியைத் தயாரித்துக்கொண்டு இனி எல்லோரும் இதில் முகம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சக மனிதர்களுக்குச் சொன்னார்களோ அப்போதே இந்தக் கண்ணாடியின் மீது கல்லைப்போட்டு உடைக்கவும் செய்துவிட்டார்கள். சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய காடோடி நாவலில் தொல்குடியின் கூற்றில் வரும் நீரே நம் ஆதாரம். இந்நீரை சேமிக்கத்தான்  குளங்கள் வெட்டப்பட்டன. குளங்கள் காலப்போக்கில் ஏரிகள் என்றும் அழைக்கப்பட்டன. நம்  முன்னோர்கள் நீரை சேமிக்க காட்டிய அக்கறையும் ஆர்வமும்தான் நம்மை இவ்வளவு காலம் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அப்போது வாழ்ந்த மனிதர்கள் தனக்கு மட்டும் என்றில்லாமல் தன் சந்ததியரின் மீதுள்ள காதலால் அவர்களின் நலன்பொருட்டும் வாழ்ந்ததன் விளைவுதான் நாம் இவ்வளவு காலம் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

1991 ல் நான் பிழைப்பிற்காக ஒசூர் வந்தபோது  எப்பொழுதும் மழை, பனி பொழிவு இருந்துகொண்டே இருக்கும். வெய்யில் சுள்ளென அடிப்பதெல்லாம் அரிதாக நிகழும். இச்சூழல் எனக்கு அந்நியமானதாக இருக்க எப்படா இந்த ஊரை விட்டு போவோம் என்ற மனநிலையே இருந்தது. ஆனால் இம்மனநிலை மாற்றம்கொள்ள துவங்கியது. எவரையும் வசீகரிக்கும் தன்மையோடிருந்த ராமநாயக்கன் ஏரியை பார்த்த நாளில். அது கர்ப்பப்பையாக மாறி என்னை தன்னுள் வைத்துக்கொண்டது. கடல்மாதிரி இருக்குடாவென நண்பர்களோடு வியந்த நாட்கள் இன்னமும் மனதுள். அதிகாலை, மதியம், மாலை, நள்ளிரவென எல்லா நேரங்களிலும் ஏரியில் அமர்ந்து ரசித்திருந்த நாட்கள் ஓவியங்களாக   நினைவிலிருக்கிறது. அதுவும் மழையின்போது ஏரியை பார்த்திருத்தல் பேரழகாக இருக்கும். விழும் மழைத்துளி  ஏரியில் நட்சத்திரங்களாக மிதப்பதை போன்றிருக்கும் காட்சி அலாதியானது. ஏரிக்கும் வானுக்குமான விளையாட்டாக இருந்துகொண்டிருக்கும். மனம் ஊர், உறவுகளின் நினைவில் துயர்கொள்ளும்போது துயர் துடைக்கும் தேவதையாக ஏரி உருமாறிக்கொண்டிருக்கும் அற்புதத்தை அனுபவித்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கன் என்பவரே ஏரியை உருவாக்கினார். இதன் அருகில் அகழியுடன் கூடிய கோட்டை ஒன்றும் இருந்தது. அகழிக்கு ஏரியில் இருந்துதான் தண்ணீர் போகும். 1980கள் வரை ஏரியிலிருந்து பாசன வசதிக்கும் நீர் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஏரிக்கு பூனப்பள்ளி, கர்னூர், அந்திவாடி என பல ஏரிகளிலிருந்து வரும் உபரி நீரே இந்த ஏரியின் ஆதாரமாக இருந்தது. ராமநாயக்கன் ஏரியிலிருந்து வெளியேறும் நீர் இராஜ கால்வாய் வழியாக செல்லும். பாகலூர் சாலை பகுதியில் இருக்கும் விளைநிலங்களுக்கு நீர் பாய்ந்து விளைச்சலை தந்தது. வருடத்திற்கு ஒன்பது மாதங்கள் இக்கால்வாயில் நீரோட்டம் இருந்திருக்கிறது என்ற செய்திகள் ஆச்சரியப்படுத்துகிறது.  படித்தவன் சூதும் வாதும் செய்ய ஐய்யோவென போவான் என்ற பாரதியின் கூற்று வெறும் ஆதங்கமாக மட்டுமே நிற்கிறது.  இன்று இராஜ கால்வாய் என்ற பெயர் மட்டுமே உள்ளது. கால்வாய் வரைபடத்தில் மட்டும் கோடுகளாக உள்ளது. ஏரி நிறைந்து வெளியேறுவதை பார்த்து பார்த்து பழகிய கண்கள் சூன்யத்தை காண்பதும், என்றுமே வற்றாதெனும் நம்பிக்கை உதிர்ந்த மலரானதும் கொடுமை. அதுவும் வாழும் காலத்திலே பார்த்தது பெரும் கொடுமை. வாழ்ந்து கெட்ட குடும்பம் எனும் அங்காலயப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏரிகளுக்கும் பொருந்தும் போலும். ஏரியை கடந்து செல்லும்போதெல்லாம் அதன் மொத்த நீரையும் சில துளிகளாக்கி கண்கள் கசியச் செய்திடுகிறது.

''இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' எனும் இளங்கோவடிகளின் பாடல் முறையாக பெய்யும் மழைநீரை தக்க முறையில் சேமித்து நாட்டை வளம் பெறச் செய்யும் மன்னன் என்றும்...

''நிலம் நெளிமருங்கின் நீர் நிலை பெருகத்
தட்டோரம்ம இவன் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' எனும் புலவர் புலவியனாரின் புறநானூற்றுப் பாடலில் நிலம் எங்கெல்லாம் பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும் படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் அழியாப் புகழ் பெற்று விளங்குவர் என்றும் நம் சங்க இலக்கியங்களில் நீர் மேலாண்மைக்காக இது போன்ற நிறைய்ய பாடல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியானதொரு வளம் மிக்க சிந்தனையாலும், செயல்பாட்டாலும் மேலோங்கிய வழித்தோன்றல்கள்தாம் நாம் என்பதை மறந்து அல்லது மறந்ததுபோல் நடித்து நம் அரசுகள் செய்துகொண்டிருக்கும் செயல்கள் நம்பிக்கையின்மையை அளித்துக்கொண்டிருப்பது நம் காலத்தின் பெரும் துயர். சாலை போடுதலும், மேம்பாலம் கட்டுவது மட்டுமே நம் நோக்கமாக சுருங்கிப்போனது. மாற்றங்கள் நிகழ்வது யாராலும் தவிர்க்க இயலாது. ஆனால் எதை அழித்து எதை உருவாக்குகிறோம் என்பதும் கவனிக்கத்தக்கது. நாம் செய்துகொண்டிருப்பதெல்லாம் அம்மாக்களை அழித்து பிள்ளைகளை மட்டும் செல்வாக்கோடு வளர்க்கும் செயலே. விளை நிலங்களையும் நீர் நிலைகளையும் அழிக்கும்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இப்போ சுங்கவரி உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம். எதையும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பதை செய்யத்தவறியதால் அதன் விளைச்சலை மட்டுமே அறுவடை செய்து அவதியுறுகிறோம்.

ராமநாயக்கன் ஏரியின் அழகும் கம்பீரமும் குமிழித் தூம்பு மதகும் அதன் மேல் அமைக்கப்பட்டிருந்த அழகிய கல் மண்டபமும்தான்.  ஏற்கனவே இருக்கும் சாலையையே மேம்படுத்தி இருந்தாலே போதுமானதாக இருக்கும். தேவையற்ற விரிவாக்கத்தால் காலம் முழுமையும் பாதுகாக்க வேண்டியதை இழந்து நிற்கின்றோம். பழமையை காக்கும் மனநிலை அற்று பழமைமீதான பெருமிதங்கள் அற்ற அரசும் அதிகார வர்க்கத்திடமிருந்து கல் மண்டபத்தைக்கூட காப்பாற்ற இயலாத நம் வாழ்வு நம்மீது எச்சிலைத் துப்பிக்கொண்டிருக்கிறது. துடைத்து துடைத்து முகப்பூச்சை தடவி மினுக்கிக்கொண்டு திரிகின்றோம். 

ராமநாயக்கன் ஏரிக்கானதாக சுருக்கிப்பார்க்கத் தேவையில்லை. பெரும்பாலான ஏரிகளின் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது. புதிதாக உருவாக்க முடியாவிட்டாலும் இருப்பதையாவது காணாமலாக்காமல் விழிப்போடிருப்போம்.

Wednesday, July 6, 2022

நன்றி: தமிழ் இந்து

 

தடைபடாத நீர் ஓட்ட அழகு.
*

க.மோகனரங்கன். இப்பெயர் ஓர் மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தை கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்து செல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும், தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதை தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல், ஒரு கதை தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்களென இவரின் பங்களிப்புகள் நீண்டுகொண்டிருக்கின்றன.

வரப்பிலிருக்கும் புல்லை அறுத்து சீர்செய்தபடியே இருக்கும் தாத்தாவிடம், தண்ணியோடத்தானே போகுது, எதுக்கு ஓயாம அதுகூட மல்லுகட்டுறீங்க என்றேன். தடைபடாத தண்ணியோட்டம் ஒருவித அழகுடா எனக்கூறி அவ்வேலையை தொடர்ந்து செய்தார். 'கல்லாப் பிழை' தொகுப்பை வாசிக்க இச்சம்பவம் நினைவிற்கு வந்தது. கச்சிதத்தன்மையே வாசிப்போட்டத்தின் பேரழகு. 

'வாசனை' கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி 'கிளிப்பெண்'ணோடு கூடடைந்தது நல் அனுபவம்.

மலையில்/ ஏறம்போது/ மருளவும்/மலரில்/ஊறும்போது/மயங்கவும்/தெரியாத/எறும்பிற்குத்/ திறந்திருக்கிறது/எல்லாத் திசைகளிலும்/ பாதைகள். 'திறப்பு' கவிதை எறும்பை சாவியாக்கி நம்முள் மூடுண்ட கதவுகளை திறக்கச் செய்திடுகிறது.

இரண்டு கால்களும்/இரண்டு கைகளும்/எவ்வளவு உழைத்தும் போதவில்லை/ஒரு வயிற்றுக்கு... என்று நீளும் 'நடைவழி' கவிதை கொரானா காலத் துயர்களின் சாட்சியாக நிற்கும்.

அன்பின் முடிச்சு சூட்சுமம் மிகு குகை போன்றது. கழுத்துக்கு மட்டுமல்ல, காலாகாலத்திற்கும் உடனிருந்து மர்மங்களை அவிழ்த்து புதிய உலகை தரிசிக்கச் செய்தபடியே இருக்கக் கூடியதும்.'முடிச்சு' கவிதை பயணிப்பு.

பிடித்த பாடலுக்கு மனம் தானாய் தாளமிடும். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளுக்கு மனம் தாளமிட்டவாறு இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

அசையாத உறுதியையும், அவசரமில்லாத நிதானத்தையும் புழுவாக ஊர்ந்து வாழ வழிகாட்டும் 'அடங்கல்' கவிதை ஞானத்தின் திறவுகோலாகிறது.

எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருந்துகொண்டிருக்கும். அக்குழந்தையை, மொழி எப்பொழுதாவது வெளிக்கொணர்ந்திடும். மதுவிடுதியில் வேலைபார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை எல்லோரையும் பொறுக்கித்தர செய்த யூமாவாசுகியின் கவிதையை நினைவூட்டிய 'நிறைதல்' கவிதை தரை தாழ விடாமல் வண்ண பலூனை ஏந்தச் செய்தது. இக்கவிதையின் நீட்சியாக 'ருசி' கவிதையும் நம்மை வாழச் செய்கிறது.

....இருப்பினுமிந்த/மனதை திருப்புவதுதான்/மலையைப் புரட்டுவதுமாதிரியிருக்கிறது. என்று முடிவுறும் வே.பாபுவின் நினைவுக்காக எழுதப்பட்ட 'நினைவூசல்' கவிதை இணக்கமான தோழமையோடிருந்த நாட்களை மீட்டுத் தந்தது. அப்பாவின் நினைவில் எழுதப்பட்ட 'வழி'கவிதை கண்களில் நீர் முடிச்சுகளை உருவாக்கியது.

கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி எனத் தொடங்கும் பாடலில் இறைவனைப்பற்றிய நூல்களைப் படித்து, அதன்படி வாழ்வை நடத்தாமல் இருப்பதை கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார். க.மோகனரங்கனின் 'கல்லாப் பிழை'யோ வாழ்வு எட்டி நிற்பதல்ல, நிழலாய் உடன் நிற்கும் வாழ்வின் மீதான பிடிப்பை இணக்கமாக சொல்லிச் செல்கின்றது.

வெளியீடு: தமிழினி
விலை: ரூ.90

Friday, July 1, 2022

நன்றி: வாசகசாலை

 யாதுமாகி நின்ற காளி 

இயல்பு நிலைக்கு திரும்புதலே மனிதர்களின் ஆகப் பெரும் எதிர்பார்ப்பு. இயல்பாக இருத்தலே வாசிப்பிற்கும் எழுதுவதற்குமான காலம். மழையை ரசிக்கும் மனம், தொடர்ந்து பெய்யும் மழையை ரசிப்பதில்லை. வெயிலை மனம் தேடத் தொடங்கிவிடும். சிலருக்குக் கவிதையே மழையாகவும் பனியாகவும் வெய்யிலாகவும் இருந்து கொண்டிருக்கிறது. ‘சித்து’ எனும் முதல் தொகுப்பில் இறகொன்றில் காதைக் குடையும் போது காற்றின் பெருங்குரலைக் கண்டடைந்து கொள்ளும் ஆசை,  இக்கவிதை மூலம் பறக்கத் தொடங்கி விடுகிறார். ‘ஒரு எளிய கோடு வளைந்து உருப்பெற்றது ஒரு முட்டை சட்டென்று கோட்டை அழித்துவிட்டு  அதிலிருந்து பறந்துசெல்கிறது முன்னெப்போதும் பறந்திராத ஒரு பறவை.’ காற்றை உணர்வதும், காற்றில் மிதக்கும் உயிரியாக உருமாற்றம் கொள்ளச் செய்தலும் கவிதைக்கான மொழியை அடையத் தொடங்கியதன் அடையாளமாகி விடுகின்றன. ஆசையின் முதல் தொகுப்பான ‘சித்து’வில்  அதற்கான தடங்களைக் காண முடிகிறது. பறவைகள் இவ்வுலகை அழகுபடுத்திக் கொண்டிருக்கின்றன. அதன் இறக்கைகள் அழகோவியம். அதன் குரல் ஸ்வரங்களுக்கு அப்பாற்பட்டவை. நம் வாழ்வில் நிறைய அத்தியாயங்கள் அவற்றுக்கானவை. வளர்ப்புப் பறவை தொடங்கி, வான் மிதக்கும் பறவைகள் வரை நம்மைக் கவர்ந்திழுத்தபடியே இருக்கும். வசீகரம் மிக்க பறவை கொண்டலாத்தி. அதற்கு நியாயம் செய்யும் வகையில் ஆசையின் ‘கொண்டலாத்தி’ தொகுப்பைக் கண்கவர வடிவமைத்துள்ளனர் க்ரியா பதிப்பகத்தினர். ஆசை, பறவைகளின் வாழ்வியலை நெருக்கமாகப் பார்த்துள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது இத்தொகுப்பு. வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க ஏதேனும் ஒரு பறவையோ, பறவைக் கூட்டமோ கடந்து சென்று நமை மகிழ்விக்கும். ஏதுமற்ற நாளில் மேகங்கள் பறவைக் கூட்டமாகி மிதந்து சென்று நமை ஏமாற்றம் கொள்ளாதிருக்கச் செய்யும். பறவைகள் நம்மை மகிழ்விக்கும் தேவதைகள். கொண்டலாத்தியில் எனை மிஞ்சிட முடியாது உங்களின் எழுத்து என கரிச்சான், தேன்சிட்டு, மைனா, தவிட்டுக்குருவி, தையல் சிட்டு போன்ற பறவைகள் நம்மைப் பார்ப்பதாகவே படுகிறது. கொக்கை ஓரேர் உழவனாக்கி இருப்பது, காற்றைத் தன்னொலியாக்குவதோடு நம் ஒலியாக்கிச் செல்வதைக் காட்சிபடுத்தியிருப்பதும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. ‘கொத்திக் கொத்தி எடுத்தாள் காற்றிலிருந்து/ ஒவ்வொரு ஒலியாய்’ எனும் ‘மழைக்கொத்தி’ கவிதை மனம் கொத்திச் செல்கிறது. வலியதின், பெரியதின் இடம் கீழே இருக்கிறது; மெலியதின், மிருதுவின் இடம் மேலே இருக்கிறது.  – தாவோ தே ஜிங் குறிப்போடு ஆரம்பிக்கும் ‘சிறியதின் இடம்’ கவிதையில் நமக்கான இடத்தையும் தேடச் செய்திடுகிறார் ஆசை. கிளி கொத்தும் பழத்தையும் கொடுக்குமென் கரத்தையும் சித்தம் மயங்கிச் சரியும்- முத்தமிடக் குனிகையில் எச்சமிடும் கையில் மகிழ்ந்து பனிபோல் குளிரும் மனது. கிளிகள் மீனாட்சியின் தோள் அமர்ந்து வணங்குவோரை ஆசிர்வதிப்பவை மட்டுமல்ல, பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் நம்மை பச்சையாக்கும் அற்புதம் மிக்கவை. கொண்டலாத்தி நம்மைப் பறவையாக்கும் வனம். ‘கொண்டலத்தி‘ தொகுப்பிற்குப் பின் நீண்ட காத்திருப்பில் தன்னுள் இருந்த காளியை கண்டடைந்து களமாடி இருக்கிறார் ‘அண்டங்காளி‘ தொகுப்பில்.   “இந்தக் கவிதைகளை எழுதிய குறுகிய காலத்தில் தான் கடந்த 20 ஆண்டுகளில் நான் மிகவும் பரவசமாக இருந்தேன். அதீத விழிப்பு நிலையை உணர முடிந்தது. எல்லா உணர்வுகளும் அவற்றின் உச்ச நிலையில் என்னிடமிருந்து வெளிப்பட்டன” என்று ஆசை முன்னுரையில் கூறியிருப்பதின் உண்மையைப் பிரதிபலிக்கின்றன கவிதைகள். தன்னைத் தானே உணர்ந்து கொள்ளச் செய்யும் தன்மை கவிதைகளுக்கு உண்டு.   ‘யாதுமாகி நின்றாய் காளி- எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை யெல்லாம் காளி! – தெய்வ லீலை யன்றோ’ என்று நம் முன்னோடி பாரதி கொண்டாடிய காளியை, ஆசை அண்டங்காளியாக்கியுள்ளார். நடனக்காளி, இருட்காளி, கொடுங்காளி, பேயிருட்காளி, பேய்க்காளி என காளிக்குப் பல்வேறு பிறப்புகளை கொடுத்துள்ளார். காளி, தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம் எனும் நிலையை தொகுப்பில் அடையச் செய்துள்ளார்.  மொத்த உலகையும் தன் திரட்சியான முலைக்குள் பாலாக்கிப் பாதுகாப்பதாகப் பரிணமிக்கச் செய்துள்ளார். “இருமுனை முடிவின்மையின் நடுவெளி நர்த்தனம் நீ தொடுஊழி தரையிறக்கும் தத்தளிப்பு நீ கடல்புரியும் தாண்டவத்தின் தெறிப்பும் நீ எரிஜோதி இடைபறக்கும் கொடும் பறவை நீ அனலுமிலும் கனல் மயக்கும் பேய்ச்சிரிப்பு நீ நாத்திகனின் கனவில் வரும் நடனக்காளி நீ.” மென்மேடுடைய யோனியுள் மீண்டும் உட்சென்று கருவறை இருட்டின் கதகதப்பில் உறங்கச் செய்யும் உன்னதம் கவிதைக்கு உண்டு. ‘யாதுமாகி நின்ற காளி’ போல் எதுவுமாகி நிற்கச் செய்கின்றன காளியைக் கவிதைகள். சுண்டக் காய்ச்சுதல், சொற்சிக்கனம் போன்ற தன்மையை இத்தொகுப்பில் காண முடியாது. கொஞ்சமாக தாராளப்படுத்தியுள்ளார். கவிதைகளின் ஓசை லயத்திற்கு அதன் தேவையைக் கவிதைகள் ஏற்கின்றன. இப்படியான மரபின் தொடர்ச்சியை நினைவூட்டும் தொகுப்பும் அவசியமே. நமக்குப் பிடித்தவர்களோடு நாம் ஆடும் ஆட்டத்தில் ஒருவித லயிப்பு உருக்கொள்ளும். கவிக்கும் காளிக்குமான ஆட்டத்தில் எழும் ஓசை ரசிக்கத்தக்கதாக உள்ளது. பேயவள், தாயவள், மாயவள், தூயவள், தீயவள் என காளிக்குப் பல அவதாரங்களைக் கொடுத்துக் களமாட வைக்கிறார் ஆசை. “உலகம் அழிப்பேன் நான் உன்மத்தம் திறப்பேன் நான் ஓங்கிய கதவடைத்து ஒழிவுநிலை கொள்வேன் நான் பாதிப் பிறப்பைச் சுமந்து மீதிப் பிறப்பைத் தேடுவேன் நான் உடலுக்குள்ளே நீச்சலடித்து ஒதுங்கியேறிச் செல்வேன் நான் புள்ளியதைத் தாண்டிச் சென்று புள்ளினமாய் வருவேன் நான்.” தொகுப்பில் காளியைத் தெய்வமாக மட்டும் பார்க்கவில்லை ஆசை. ஏமாற்றப்பட்ட, தன் வலியை வெளிச் சொல்ல இயலாத பெண்களின் மனக் குமுறலுக்கு உருவம் தந்தால் அது காளியாக இருக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார் ஆசை. “பத்ரகாளி படமெடுத்தாடும் தீலி மிதித்தாடி நீ சிதைத்தழித்துச் சென்றதில் மிச்சமுள்ள  சூனியம்தான் இது என்ற ஏளனமா உனக்கு மிஞ்சியது சூனியம்தான் ஆனால்  கருக்கொண்ட சூனியம் அதில் உருக்கொண்டு மீண்டும் முளைத்து உன்மீது குதித்தாடியுனை சிதைத்தழிக்கும் நீதந்த என் கவி.” காளியைச் சவாலுக்கு இழுக்கும் இக்கவிதையில் படைப்பாளி தன் கவிமீது வைத்துள்ள நம்பிக்கையை நமக்கான நம்பிக்கையாகவும் கொள்ளச் செய்கிறது அண்டங்காளி. * ‘இந்த வெப்பம் உடலின் குரல்… நீ என் வெப்பமாகும்போது/ நான் வெப்பத்தின்/ குரலாவேன்’ எனத் தொடங்கும் ‘குவாண்டம் செல்ஃபி’யின் கவிதைகள் உடலையும், அதில் உருவாகும் இசையையும் கொண்டாடச் செய்கின்றன. தன்னை ரசித்து, தன் உடலைக் கொண்டாடுபவர்கள், தனக்கானவர்களையும் கொண்டாடும் இயல்புடையவர்களாகி, காமத்தில் உருக்கொள்ளும் அதிருப்தியைக் கடந்து களிப்படைபவர்களாக இருப்பார்கள். தொகுப்பில் இருக்கும் கவிதைகளில் அதற்கான சன்னதங்களைக் காண முடிகிறது. உடலின் எல்லையை அறியத் துடிக்கும் மனம், மரணத்தை உடலுக்கு எதிரான கலகமாக பார்க்கப்படுவது வாழ்வு குறித்த புரிதலின் முதிர்வு. ‘உடலின் எல்லை எதுவரை’ எனத் தொடங்கும் கவிதையில்  இதனை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். அம்மா என்பவளைத்  தியாகத்தின் உருவாக்கி என்றைக்கும் உழைத்துக் கொண்டே இருக்கும் இயந்திரமாக வைத்திருப்பதில் இருக்கும் கயமையை  நம்மிடமிருந்து அகற்றி, அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டென்பதை உணர்ந்து, அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களையும் பொருட்படுத்த வேண்டிய அவசியத்தை, அம்மாவின் மீது நம்மிடம் இருக்கும் உண்மையான பிரியம் எது என்பதை, “நான் இருக்கிறேன் என்று பார்க்காதே அம்மா சரசமாடு உன் காதலனுடன் தயக்கமேதுமின்றி இடுப்பில் எனைச் சுமந்தபடி. …… …….. காதல் செய் காதல் செய் அப்பா தவிர்த்த காதல் செய் அப்போதுதான்  நீ அழகு.” எனும் நீண்ட கவிதையில் ஆசை உணர்த்துகிறார். காதல் எனும் உணர்வு எதையும் தனதாக்கிக்கொள்ளும். சாத்தியமில்லாதவற்றைச் சாத்தியப்படுத்தும். “… உன் முலைக்காம்புகளின்  வழியே இந்த உலகத்தைப் பார்ப்பதற்குப் பெயரும் காதல்தான்.”  என முடிவுறும் கவிதையில் காதலின் தகிப்பை உணர முடிகிறது. பெண்களை நேசித்தல் என்பது அவர்களை உணர்ந்து கொள்வதிலிருந்து தொடங்க வேண்டும். நிலம் விழும் மழை நீர் திரண்டோடி, வேர்களைக் கண்டடைந்து, மரங்களுடன் கலப்பதை ஒத்ததாக இருக்க வேண்டும் அவர்களை உணர்ந்து கொள்ளுதல். மகிழ்வில்  பங்கெடுக்கும் ஆண், வலியில் பங்கெடுக்காது, அது அவர்களின் பிரச்சினை, நாம் என்ன செய்வது எனத் தத்துவம் பேசிக் கடப்பதே அதிகம். மாதவிடாய் என்பது மாதச் சுழற்சி. உள்ளும், புறமும் எரிச்சல் மிக்க நாட்கள் அவை. ஆண் கூடுதல் நேசிப்பைச்  செலுத்த வேண்டிய நாட்கள் அவை. புரிந்தவர்கள் ஆசையின் இக் கவிதையை கொண்டாடச் செய்வார்கள்: ‘உன் மாதவிடாய் வலியைத் தன்மேல் பூசிக்கொள்ளத் தெரியவில்லை என்றால் இக்கவிதை உயிரற்றது என்று அர்த்தம்’ எனத் தொடங்கும் கவிதை நாம் எத்தகையானவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது. காதலின், காமத்தின் தீவிரத் தன்மைகளைக் காட்சிபடுத்தும் ‘குவாண்டம் செல்ஃபி’ தொகுப்பு நம்மை நாம் ஆராதித்து வாழ்ந்து பார்க்கச் செய்யும். 

* நூல்களின் விவரங்கள்: 

1.சித்து க்ரியா வெளியீடு ஆண்டு: 2006 பக்கங்கள்: 116 விலை: ரூ.75 (தற்போது அச்சில் இல்லை)

 2.கொண்டலாத்தி (முழுக்கவும் பறவைகளைப் பற்றிய, வண்ணப் படங்களுடன் கூடிய கவிதைத் தொகுப்பு) க்ரியா வெளியீடு ஆண்டு: 2010 பக்கங்கள்: 64 விலை: ரூ.180 தொடர்புக்கு: 7299905950 

3.அண்டங்காளி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு ஆண்டு: 2021 பக்கங்கள்: 88 

4.குவாண்டம் செல்ஃபி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீசு ஆண்டு: 2021 பக்கங்கள்: 152 மேற்கண்ட இரண்டு நூல்களுக்கும் தொடர்புக்கு: 8754507070  



உணவெனும் கலை

 உணவெனும் கலை

*

வாத்துகளாயிரம் அல்லிகளாய் மலர்ந்திருக்க
குருவியின் சிறுமனை
கிளைகளில் நிலவாய் தொங்கும்
ஆற்றின் அருகமர்ந்து
தீ பொசுக்கும் கறியிலிருந்து
சொட்டும் எண்ணை எச்சிலாகி
உடலை நனைத்த கதையைச் சொல்லியவாறு
குடல், ஈரல், தொடைக்கறியென
பந்தி விரித்து
பாங்காய் இது பங்கோடாவென
பொட்டலம் பிரித்த
ததும்பும் பிரியங்களால்
மாட்டுக்கறியின் ருசியை
அரூரில் சுவைக்கக் கற்றேன்.
ஆம்பூர், பேரணாம்பட்டென
பயணத்தில்  மனமும் மணக்க
சூப்பும் சுக்காவுமாக
அலைகள் அடித்தது புதுச்சேரியில்.

உண்பதும் உணர்தலும்
அவரவர்களுக்கனது
அவை அவைகளுக்கானதும்.