Friday, March 21, 2014

நேசிப்பிற்காக நிரம்பும் மொழி...


மீச்சிறு அதிர்வாகத்தான் இருக்கும். ஆனால் அன்றைய பொழுதையே தனக்கானதாக மாற்றிக்கொள்ளும் கவிதைகள். நிறைய்ய கவிதைகள் நிறைய்ய பொழுதுகளை தனக்கானதாக மாற்றிக்கொள்கின்றன. அப்படியான கவிதைகளும், கவி சொல்லிகளும் என் பட்டியலில் நீண்டுகொண்டேதான் இருக்கிறார்கள். இப்பொழுது வேல்கண்ணனும் இசைக்காத இசை குறிப்போடு.

முதல் தொகுப்பைப்போலவே இல்லை அத்தனை கவிதைகளும் அற்புதம் என்றெல்லாம் பொய்யுரைக்க மனமில்லை. இது முதல் தொகுப்பாகவே இருக்கிறது என்பதுதான் சந்தோசம். மாடிக்குச் செல்ல ஒவ்வொரு முறையும் தாவிக்கொண்டே இருக்க முடியாது. படிகட்டுகள் அவசியம்தானே. முதல் படிக்கட்டு என்பதால் வசதியாக இருக்கிறது ஒட்கார்ந்து பேச...

தொகுப்பை சமர்ப்பனம் செய்திருப்பவரின் பெயரை படித்ததுமே பவா.செல்லதுரையின் ‘எல்லா நாளும் கார்த்திகை’ தொகுப்பிலிருக்கும் கட்டுரை நினைவில் வந்தது தவிர்க்க இயலவில்லை.

அவன் ஒரு காட்டாறு. அவனுக்கு அடங்கத் தெரியாது. அவன் துள்ளிக்கொண்டே இருந்த ஓர் இளங்கன்று. அவன் சொடுக்கில் கூட்டம் மொய்க்கும். தன் வெடிச்சிரிப்பால் ஒளியூட்டுவான் என ராஜவேலு குறித்து எழுதியிருப்பார். தன்னை விட்டு பிரியக்கூடாதென நேசிப்பவர்களை நாம் நமக்கருகிலேயே வைத்துக்கொள்ளத் தோன்றும். தன் அண்ணன் ராஜவேலுவின் நினைவுகளை தொடர்ந்து மீட்டெடுக்க இத்தொகுப்பை அவருக்கு சமர்ப்பித்துள்ளார்.

இடது கையால் நோயை துடைத்தெறிந்துவிட்டேன் என ராஜவேலு கூறியதை நினைவூட்டியது ‘பச்சையம்’ கவிதையில் மருத்துவமனையுள் இருந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பார சாய்ந்திருக்க அம்மரம் மொத்த நோயையும் உறிஞ்சிக் கொள்ளாதோவெனும் வரிகள் சத்தியமானவை. மரத்திற்கு நோயை உறிஞ்சும் தன்மை இருந்தால் மருத்துவம் ஒரு தொழிலாக மாறியிருக்காது. அச்சகம் ஒன்றில் வேலை பார்க்கையில் உடன் வேலை பார்க்கும் சிறுவன் நோய் பீடித்து இறந்துவிட்டான். அவனை புதைத்து எல்லோரும் வெளியேறிய பின் அருகிலிருந்த தோப்பில் இருந்த வேப்பமரத்தில் சாய்ந்து அவன் குறித்த நினைவோடிருந்தேன். சற்றைக்குப்பின் என் துயர் முழுதையும் உறிஞ்சிக்கொண்டு எனை வெளியேற்றியது மரம். மரம் ஒரு அற்புத சிநேகிதம்.

 ‘சுமக்கும் சாலை’ கவிதையும் துயர்பனியை போர்த்தியது.

போதாமை மிகுந்து வாழும் வாழ்வு நமது.  எண்ணுவதையெல்லாம் செயலாக்கம் செய்ய முற்படும்போது ஏதோவொன்றால் தடை பட்டுக்கொண்டே இருக்கும். ஒரு வாரத்தில் முடிக்கவேண்டும் என படிக்கத் துவங்கினால் மாதக்கணக்கிலும் முடியாது நீள்வதுண்டு. நம் இயலாமையை எது ஒன்றையாவது வைத்து நிரப்பி சமாதானமோ மகிழ்வோ கொள்கிறோம். நட்சத்திரங்களை எண்ணுவதற்கு ஆசைபடும் வேல்கண்ணன் நிலவில் ஆறுதல் கொள்வதைப்போல.

விழிகளில் சொல்லைக் கண்டடைந்து,  முத்தங்கள் சேமிப்பிற்கானவை  அல்ல எனக்கூறி, வாழ்வும் மரணமுமாய் கலந்திருந்து,  பொழுதை நிந்தித்து, மிச்ச உயிரை கன்னக்குழியில் மச்சமாக்கி, தொடர்ந்து தவம் செய்து, மீள இயலாத பாதரசமாக உருண்டோடி, கலவியின் மிச்சங்களைத் தேடி ரகசிய அழைப்பிற்காக காத்திருந்து, மதுவின் இறுதி மிடராகி சிதறி, ஒற்றைச் சுடராய் உருமாறி நின்று, தனக்கான சில துளிகளில் உயிர்த்திருந்து, கவிதையாகி நெருங்கிக் கிடந்து, புதிரை விடுவிக்கும் ஒளியாகி, பாலையிலும் பூக்களை கொய்துகொண்டிருப்பவனாகி, அரங்கேற்றாத துரோக நாடகத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோருபவனாகி தொகுப்பு முழுமையும் நேசிப்பவளுக்கான மொழியால் நிரம்பிக் கிடக்கிறது.

தொகுப்பில் காதல் கவிதைகளைப்போல அடர்ந்திருக்கிறது மௌனமும்...

மௌனத்திற்கு முகங்கள் பல உண்டு. சிலரது மௌனம் கலவரப்படுத்தும், சிலரது மௌனம் அர்த்தமிக்கதாய் இருக்கும். சிலரது மௌனம் சந்தோசப்படுத்தவும் செய்யும். மௌனத்தின்போதுதான் வார்த்தைகள் நிறைய்ய சேகரமாகின்றன. நிரம்பும் தறுவாயில் சிறு கீரல் போதும் உடைபட்டு வெளியெங்கும் வீச்சோடு தெறிக்கும். அது நமை வீழ்த்தவும் செய்யும். மௌனம் குறித்த வேறு வேறு விதமான யோசிப்புகளைத் தூண்டியது ‘மௌனம் புரிதல்’ கவிதை. மேலும் மௌன வெளியில் தீராத இசையை மீட்டிப் பார்க்கிறார். ‘ஆதியும் அந்தமும்’ கவிதையில். மௌனத்தின் சொற்களுடன் ஒரு பறவை ஒரு மிருகத்தையும் எழச் செய்கிறார். ‘வேள்வி’ கவிதையில் மலையை நீளும் மௌனத்தோடு தவம் இருக்கச் செய்கிறார். நேசித்தவள் சொல்லிக்கொடுத்தவைகளிலிருந்து புழங்கத் தொடங்கியும் கற்றறியா அவளின் மெனனம் குறித்த ‘மௌன தவம்’ கவிதை. ‘ரகசிய அழைப்பு’ கவிதையில் இருக்கும் கள்ள மௌனம்,  கவிழ்ந்த இருளில், சிணுங்கிய கொலுசொலியில், வீணையில், கடலில், பிரிவின் வலியில், கருவறையற்றவளின் விசும்பலோசை என ஓசைகளின் நிழலாக கிடக்கும் மௌனம் குறித்த ‘ஓசை’ கவிதை, மரங்களுக்கு வாய்த்திருக்கும் சிலைத்த மௌனம் குறித்த கவிதை ‘மின்மினி’களிலும்... தொகுப்பில் மௌனம் பெரும் குறியீடாக இருக்கிறது.

தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும்  அதன் துவக்கத்தால் தன்னை வாசிக்கச் செய்திடுகிறது. கவிதை தனக்கான வாசகனை அடையாளம் கண்டுகொள்ளும்.

அரிதினும் அரிதான சிலரின் நட்பு கிடைத்துவிடும். அவர்களுடனான சந்திப்பு உடையாடல் என பொக்கிசமாக பொழுதுகள் கழியும். அப்படியானவர்களின் திடிர் இழப்பு ஈடுசெய்ய இயலாதது. அப்படியான துயரோடு ஒருநாள் அலைந்துகொண்டிருக்கையில் பெயர் மறந்து உருவம் மட்டுமே நினைவில் இருக்கும் பால்ய சிநேகிதனின் கரம் பற்ற இழந்தவரை மீட்டெடுத்து நீராடி வெளியேறும் புதியவனானேன்.  இப்படியான தருணங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதுண்டு. வேல்கண்ணனுக்கு வேல்விழி கிடைத்ததுபோல.

நெய்தலில் நடைபோட்டு முல்லையில் விளையாட நினைத்து சென்றவனுக்கு விரும்பாமலே பாலை வாய்த்துவிடுவதுண்டு. நேசிப்பவள் உடன் அற்ற பொழுது பாலைதானே.’ நீ வராத மாலை’ கவிதையில் நமக்கான பாலையையும் காட்சியாக்கியுள்ளார்.

நட்சத்திரங்களின் ஆவிகளை தன் போர்வைக்குள் ஒளிந்துகொள்ள இடம் கொடுத்த ‘மிச்ச உயிர்’ கவிதை மீண்டும் வாசிக்கத் தூண்டியது.

பொய்யும் புனைவுமற்ற நிர்வாணம் பேரழகு. அதனால்தானோ என்னவோ நிர்வாணத்தை ரசித்தபடியே இருக்கிறோம். நிஜ உருவம் என்றுமட்டுமல்ல நிழல் உருவத்திலும் கூட. இத்தொகுப்பிலும் நிர்வாணத்தை உற்று நோக்கும் ஒரு கவிதை உண்டு. அதில் அருவெருப்பான...அழுகும் என்ற வரியை தவிர்த்திருக்கலாமோவெனத் எனக்குத் தோன்றியது. பேரழகில் எதற்கு அருவெருப்பும் ஆழுகும்...

அந்தரத்தில் நடனமிட்டு நகரும் சிறுமியை அதிசயித்தும், இரத்தம் தெறிக்க தன்னை சாட்டையால் அடித்துக்கொள்பவனிடம் தன் பரிதாபத்தையும் காட்டியபடி நிற்பவர்கள் காசிற்காக தட்டேந்தி வரும் சிறுமியை பார்த்ததும் செல்லை காதில் வைத்தபடி நகருபவர்களை ஏளனப்படுத்துகிறது ‘நிறுத்தம்’ கவிதை.


நம் காலத்தின் கொடுந்துயரம் ஈழத்தில் நிகழ்ந்த  கொலைகள். அந்த வதை குறித்த பாதிப்பு யாரையும் விட்டுவைக்கவில்லை.  அவரவர் அளவில் அது குறித்த பதிவுகளை வலியோடு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேல்கண்ணனும் தனக்கான வலிகளை ‘இறுதிச்செய்தி’, ‘நிழற்படம்’, ‘முள்வேலிகளுக்கு அப்பால்’ கவிதைகளில் பகிர்ந்துள்ளார்.

விரும்பியோ விரும்பாமலோ பிழைக்க நேசித்த மண்ணை பிரிந்து வேறு எங்காவது போகவேண்டியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலை என்பதால் அதில் படைப்பாளிகளும் தப்பவில்லை. ஆனால் எத்தனை வருடம் ஆனாலும் பிறந்த மண் வாசனையை மட்டுமே சுமந்து திரிகிறோம். போன ஊரின் மண்ணை தொட்டுப் பார்ப்பது கூட இல்லை. அதனோடு ஒட்டாமல் இருப்பதாலோ என்னவோ அம்மண் குறித்த எந்த பதிவையும் நம் படைப்புகளில் கொண்டுவராமல் இருக்கிறோம். ஆனால் இது தவிர்க்கக் கூடியது. நம்மை ஒரு விசயம் கூடவா இடையூறு செய்திருக்காது. இத்தொகுப்பிலும் காண கிடைக்கவில்லை.

அள்ளும் கை மணலில் ஓடும் நதியை தரிசிக்கும் கவி மனதை என்றென்றும் வேல்கண்ணன் தக்கவைத்துக் கொள்வார் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இசைக்காத இசைக் குறிப்பு.


வெளியீடு: வம்சி புக்ஸ்
19,டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை-606 601.

nantri:yaavarum.com

Tuesday, March 18, 2014

பூக்குட்டியின் சொந்த ரயில்

பூக்குட்டியின் சொந்த ரயில்


காத்திருக்கிறேன் பயணத்திற்காக. ரயில் வருகிறது. பஸ் டிரைவர், லாரி டிரைவர் என்பதபோல் ரயில் டிரைவர் என்ற யாரும் அழைப்பதாக தெரியவில்லை. முகப்பில் அவர் தெரியாது இருப்பதால் ரயில் என்பதே எல்லாவற்றிற்குமான பொதுப்பெயரானது போலும். ரயில் டிரைவரை மறந்து ரயிலை உற்று நோக்கினேன். அதன் முகப்பில் இரட்டைச் சடையோடு ஒரு சிறுமியின் படம் இருப்பதை பார்த்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. ரயில் அருகில் வர ஏறி அமர்ந்தேன். தனது புறப்பாடை ஊராருக்குத் தெரிவித்து நகரத் தொடங்கியது.
யாரோ உற்று நோக்குவதுபோல் இருக்க சட்டென திரும்பிப் பார்க்கிறேன். எதிரில் ஜன்னலோரத்திலிருந்த குழந்தை எனைப் பார்த்துக்கொண்டிருந்தது. கண் சிமிட்ட காத்திருந்தாற்போல் அவளது கண்களும் சிரித்தன. உடல்மொழியால் விளையாடத் துவங்கினோம். சிநேகிதம் நெருங்க அருகில் அழைத்தேன். தயங்கித் தயங்கி அம்மாவின் அனுமதியோடு வந்தவளிடம் பெயர் கேட்டேன். ரோஜா என்றாள். அம்மா அப்பா பெயர் கேட்க ரோஜாப்பா, ரோஜாம்மா, ரோஜாஅண்ணன், ரோஜா தம்பி ரோஜா வீடென விடாது கூறியவாறு பெரும் ரோஜாவனத்தையே தன் கைகளால் காட்சியாக்கினாள். எனக்கும் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் நினைவு வந்தது. பத்தாண்டு ஆகியும் இன்னமும் முகில் அப்பா முகில் அம்மா என்று அழைப்பது. தனாக சிரிப்பதை பார்த்து லூசா அங்கில் எதுவுமே சொல்லாம சிரிக்கிறிங்க என்றாள். அதற்கும் சிரித்து ஒரு முத்தமிட வேண்டினேன். ஆங்.... அஸ்க்கு.... நான் தரமாட்டேன் என்றாள்.
எப்படியாவது முத்தம் பெற்றுவிட வேண்டுமென அவளோடு உரையாடலை துவங்கினேன். ரோஜாவிற்கு பூக்குட்டியென பெயரிட்டேன். அவளுக்கும் பிடித்துப்போக சந்தோசமானாள். பூக்குட்டிக்கு என்ன வேண்டுமென கேட்க, எதையும் யோசிக்காமல் டக்கென கரடி பொம்மை என்றாள். நெடுநாளாக பெரிய கரடி பொம்மை கேட்டு அடம்கொள்ளும் என் மகனின் நினைவு வர வாங்கும் சக்தியற்று வாழ்வது குறித்த கவலையில் சுருங்கினேன். பூக்குட்டியின் கவனத்தைத் திருப்ப சோட்டா பீம் குறித்து உரையாடினேன்.
இம்முறையும் பூக்குட்டி முத்தம் கொடுக்க மறுத்துவிட்டாள். பாரதியின் மீசை, சூ அணிந்து வந்த வள்ளுவர், பெரியாரின் தடியென நிறைய்ய கதைகளை சொல்லத் துவங்கினேன். நிறைய்ய கேள்விகளோடு ஊம் கொட்டிக்கொண்டிருந்தவள்.டக்கென பிரகாசமானாள். அறுந்த புலி வாலைத் தைக்க குண்டூசி தேடிக்கொண்டிருந்த முயலின் கதையைக் கூறுகையில்.
பூக்குட்டி ரயிலில் கிடந்த விளம்பர நோட்டீஸ்களை எடுத்துவந்தாள். ஒரு பக்கம் எழுத்தில்லாமல் இருந்தவைகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவைகளை தூக்கி எறிந்தாள். பையிலிருந்த என் பேனாவை பிடிங்கினாள். மேலிருந்து கீழாக ஒ,ஃ,த,ந,ஊ என நிறைய்ய எழுதிக்கொண்டே வந்தவள் ஒவ்வொரு எழுத்திற்கும் நேராக கையை வைத்து இது எப்படி இருக்கென கேட்கத் துவங்கினாள். யானை, காகம், புறா, அன்னம், தண்ணீ லாரி என எங்கள் பெட்டி நிறைய்யத் துவங்கியது.
அடிக்கடி எழுந்த வாம்மா... அங்கிளை டிஸ்டர்ப் செய்யாதே எனும் குரலை காதுகொள்ளாதிருந்தவள் என்னிடம் அவளின் அம்மாவை பழிப்புக்காட்டிக்கொண்டிருந்தாள். மறுபடியும் கதை கேட்டாள். குடுவையின் அடியில் இருந்த நீரை அருந்த சிறுசிறு கற்களை பொறுக்கப்போன காகத்தின் கதையைக் கூற தலையில் அடித்துக்கொண்டு காக்கா டீச்சர் சரியாகவே சொல்லித்தரல அங்கில், பேசாம ஒரே ஒரு ஸ்ட்ராவை எடுத்து வர சொல்லிக்கொடுத்திருக்கலாம் என்று சிரித்தவள் மேலே பார்த்தபடி இருந்தாள். நானும் பார்க்க இயேசுவின் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. என்ன பூக்குட்டி இயேசப்பாவா என்றேன். இல்ல, இயேசு தாத்தா என்றாள். புன்னகைத்த இயேசு தன் மடியிலிருந்த ஆட்டுக்குட்டியை பூக்குட்டியோடு வி¬ளாயட அனுப்பிவைக்க இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். என் பால்யத்தில் பக்கத்துவீட்டு பையன்களோடு ராசு தாத்தா கதை சொல்லிய இரவில் பெய்த மழை நினைவில் வர நனைந்துகொண்டிருந்தேன். என் ஈரம் உலர்த்த ஆட்டை அனுப்பிவிட்டு சூரியனை அழைத்து வந்தாள் பூக்குட்டி.
கை தட்டும் ஓசை கேட்க இருவரும் திரும்பினோம். தேவதைகளாக திருநங்கைகள். கொடுத்த பத்து ரூபாயிற்கு இருவரையும் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க பூக்குட்டி அவர்களுக்கு முத்தத்தை பரிசாக்கினாள். நானும் ஆசையாக கன்னம் காட்ட அன்பால் அடி ஒன்று கிடைத்தது.
விரல்களிடம் தன் அப்பா குறித்து கோள்மூட்டிக்கொண்டிருந்தவளை இடைமறித்து போதும் விடுப்பா அப்பா பாவம் என்றேன். ஆமாம் அப்பா பாவம்தான் என அவளும் கூறினாள் அவள் அம்மாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி.
எங்கள் பெட்டிக்கு இப்போ கிளி ஜோசியர் வர கிளியை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் பூக்குட்டி. கூண்டிலிருக்கும் கிளி பள்ளியிலிருக்கும் குழந்தையாக எனக்குத் தோன்றியது. அக்குழந்தை திரும்பி எனைப் பார்த்து சிரிக்க பூக்குட்டியாக இருக்க அதிர்ந்தேன். கிளிக்கூண்டின் முகப்பில் எல்.கே .ஜி என எழுதியிருந்தது. ஒரு டீச்சர் உள்ளே நுழைந்தார். ராபிட்-முயல், பேரட்-கிளி, டக்-வாத்து என சொல்லிக்கொடுத்தபடி இருந்த டீச்சரை இடை மறித்து மிஸ் பெங்குவினுக்கு தமிழ் பெயர் என்ன? எனக் கேட்க, எத்தனை முறை உங்களுக்கு சொல்வது பாடம் நடத்தும்போது டிஸ்டர்ப் செய்யக் கூடாதென. பிறகு கேளுங்க என அதட்டியபடி வெளியேறினார். எழுந்த மணியோசைக்கு எல்லோரும் சர்ச் பக்கம் விளையாடப்போக சத்தம் போடாதிங்க என பாதிரியார் விரட்ட தூரமாக விளையாடச் செல்கிறார்கள் உடன் இயேசுவும் சென்றுகொண்டிருந்தார். அவர்களை நோக்கி கை அசைத்துக்கொண்டிருந்தேன்.
ஐய்யோ அங்கிள் அங்க யாரு இருக்கா டாட்டா காட்டிக்கிட்டிருக்கீங்கவென என் தலையிலடித்தாள். உனக்குத்தான் காட்டினேன் பூக்குட்டியென மழுப்பினேன். சரி உங்களுக்குத் தெரியுமா எனக்கு எங்க ஹெல்மெட் கிடைக்குமென எங்க அப்பாவுக்கு தெரியல என்றாள். குழந்தைகளுக்கெல்லாம் ஹெல்மெட் தயாரிப்பதில்லை என்றேன். நாங்களும்தானே வண்டியில் போகிறோமென்றாள். குற்ற உணர்வில் முகம் பார்க்க தவறினேன். உங்க அப்பா எங்கேவென கேட்ட பக்கத்துவீட்டு சிறுமியிடம் அவர் சாமியிடம் போயிருக்கார் என நான் கூற, சாமிதான் முதலில் செத்தாரா எனக் கேட்டதும் நினைவில் வர இதுகாறும் குழந்தைகள் மீதான என் புரிதல் குறித்து ஏற்பட்ட குழப்பத்தோடு இருந்தேன்.
திடுமென பூக்குட்டி முத்தமிட்டாள். இறங்கப்போறோம் டாட்டா அங்கிள் என்றாள். அவளின் ஈரம் என்னுள் மகிழ்வை விதைத்தபடி இருக்க வாசித்துக்கொண்டிருந்த சொந்த ரயில்காரி தொகுப்பை பையிலிட்டு எனது நிறுத்தத்தை எதிர்பார்த்திருக்கையில் மறவாது கைகுலுக்கினேன். வாழ்த்துக்கள் ஜான் சுந்தர்.
சொந்த ரயில்காரி
ஜான்சுந்தர் கவிதைகள்
அகநாழிகை பதிப்பகம்.
nantri:malaigal.com