Friday, January 31, 2014

nantri: Ungal Noolagam

போராளிகள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்
-ந.பெரியசாமி

ஏழு எட்டு ஆண்டுகள் இருக்கும் குளிர் நிறைந்த மாலைப் பொழுதொன்றில் தமுஎச நிகழ்வு ஒன்றிற்காக நானும் ஆதவன் தீட்சண்யாவும் ஒசூரில் தொழிலதிபர்களுள் ஒருவராக அறியப்பட்ட திரு.வசந்தசந்திரன் என்பவரை காணச் சென்றோம். அவரது அலுவலகத்தில் ஒரு போட்டோ மாட்டியிருந்தார். அதில் ஜி.நாராயணம்மாள் தனிநபர் சத்யாகிரகி என எழுதப்பட்டிருந்தது. அவர் குறித்து விசாரிக்க, தனது அத்தை என தொடங்கி 1941ல் காந்தி தனிநபர் சத்யாகிரகப் போராட்டத்தை துவங்கினார். காந்தியிடம் அனுமதி பெற்று அத்தையும் ஊரில் சத்யாகிரகப் போராட்டத்தை ஊரில் நடத்தி சிறைபிடிக்கப்பட்டு சிறையில் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்திருக்கிறார்கள். காந்திக்கு இத்தகவல் அறிய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதி அந்த சப் இன்ஸ்பெக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். அத்தைக்கு மூன்று மாத தண்டனை அல்லது அபதாரம் விதிக்கப்பட்டது. அபதார தொகைக்காக கோர்ட்டில் அத்தையின் தாலி ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த செய்தி காந்தியின் ஹரிஜன் பத்திரிக்கையில் வெளிவந்திருக்கு. அதனால் அத்தையை பார்க்க அப்போ நிறைய்ய தோழர்கள் வந்துபோவார்கள் எனக் கூறியவர் அப்பாவும் இராமநாதபுர ஜில்லாவில் விவசாய சங்கம் அமைத்து போராடியவர். சுதந்திரப்போராட்ட போராளிதான் எனக்கூறி ஒரு டைரியை எடுத்துக் காட்டினார்.

பக்கங்கள் மடங்கி எழுத்துக்கள் ஆங்காங்கே அழிந்த நிலையிலும் இருந்த தாளில் ஒரு சில பகுதியை வாசித்து அப்படியே விட்டுவிடாம சீக்கிரம் புத்தகமா கொண்டு வர முயற்சிக்கலாம் தோழர் என கூறி எனக்கு காட்டினார்.

எனக்குத் தெரிந்த, பாடபுத்தகங்கள், கேட்டறிந்த வரலாறு என்பதன் அர்த்தம் சிதறுண்டது. வரலாறு என்பது பெரும் தலைவர்களோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல சாமானியர்களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை அறியத் துவங்கினேன்.

டைரியின் ஒரு பக்கத்தை திறந்து வாசிக்கத் துவங்கினேன். ‘’நாங்கள் சிறை சென்ற சமயம் ஐரிஸ் பெண்ணை மணந்த ஆங்கிலேயர் சிறை சூப்பரிண்டெண்டாக இருந்தார். அப்பெண்மணி அயர்லாந்து சுதந்திரப்போரில் ஈடுபட்ட குடும்பத்தை சேர்ந்தவராம். அப்பெண்மணி தனது கணவரிடம் அரசியல் கைதிகளைத் தொந்தரவு செய்தால் நான் விவாகரத்து செய்து கொண்டு போய் விடுவேன் என்று எச்சரித்தாராம். அதனால் அச்சமயம் திருச்சி சிறை எங்களுக்கு சுதந்திர உலகமாக இருந்தது. சிறையில் நல்ல தேகப்பயிற்சிகள் செய்து வந்தோம்.” என்ற பகுதியை வாசித்ததும் எதையோ கண்டடைந்ததைப்போல உடல் விழித்தது.

அன்றைய இரவு டைரியின் விரிந்த பக்கங்களும் எழுத்துக்களுமாக கனவில் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய சிப்ட் முடிந்ததும் நேராக வசந்தசந்திரன் அலுவலகம் சென்று நான் அந்த டைரியை உங்கள் கம்ப்யூட்டரில் டைப் செய்து வைக்கவா என அனுமதி கேட்டேன். அவரும் உற்சாகமாகி ஒத்துக்கொண்டார். தினசரி அங்கு சென்று கொஞ்சம் கொஞ்சமாக அடித்து முடித்தேன். அதன் பிறகு அவரது அலுவலகம் போகும்போதெல்லாம் கேட்டபடியே இருப்பேன். எப்ப சார் புத்தகம் கொண்டு வருவீங்கவென. ஊரில் அண்ணனும் அதற்கான முயற்சியில் இருக்கார் விரைவாக வந்துவிடும் என்ற பதிலோடு இருப்பார். நீண்ட காலங்கள் காத்திருக்கச்செய்து இப்பொழுதுதான் வந்திருக்கு பாவை பப்ளிகேசன் வெளியீடாக. புத்தகத்தை கையிலெடுத்த சமயம் உடல் சிலிர்த்து பழைய நாட்களின் நினைவில் கண்கள் பனித்தன.

“தொண்டர் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்கின்றோம்- என்ற பாடலின் கருத்தை கவனித்து அந்த தொண்டர் பல்லாயிரவர்களில் நாமும் ஒருவன் ஏன் ஆகக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதன் பின் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தேன்” எனக்கூறும் போராளி ஜி.ராமச்சந்திரன் மதுரையில் அன்னியத் துணி எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைசென்று ஆறுமாத கடுங்காவல் தண்டனையை அனுபவித்து பின்னர் நிறைய்ய சுதந்திர போராட்டங்களில் கலந்துகொண்டவராறு இருந்தவர். 1942 ஆகஸ்டில் நிகழ்ந் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பிரச்சாரப் போராட்டத்திலும் கலந்துகொண்டதால் போலிஸ் படை இவரது வீட்டிற்கு வந்தது. “ வீட்டை சோதனை செய்து பிரசுரங்கள் மற்றும் வெள்ளைப் பேப்பர்களை எடுத்துக்கொண்டு நீ எந்த ஊர் எங்கே வந்தாய் எனக் கேட்டனர். நான் உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதைக் கண்ட சிவகாசி சப் இன்ஸ்பெக்டர் எஜமான் நின்று கொண்டிருக்கிறார் நீ உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய் என அடித்தான். நான், பிரிட்டீஸ்காரன் பூட்ஸ் கால் நக்கும் உனக்கு மரியாதையா ராஸ்கல்? என எழுந்தேன். பத்துபோர் சேர்ந்து என்னை அடித்தார்கள். கைது செய்திருப்பதாக கூறினார்கள். சட்டைபையில் வைத்திருந்த மற்ற தோழர்களின் விலாசங்களை வாயில் போட்டு மென்றுகொண்டேயிருந்தேன்.” எனக்கூறும் ராமச்சந்திரன் இதற்காக நிறைய்ய இன்னல்களை அனுபவித்திருப்பதை படிக்க உடல் சிலிர்த்து. தொடர்ந்து அலிப்புரம் சிறை சென்றிருக்கிறார். அங்கு கம்யூனிஸ்ட் தேச பக்தர்கள் சிறையில் அரசியல் வகுப்பு நடத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ்காரர்கள் வெறுமனே பஜனை பாடுவதும், காந்தியைப் போற்றுவதுமாய் இருந்ததால் சலிப்புற்றிருந்த ராமச்சந்திரன் அலிப்புரம் சிறையில் முழு கம்யூனிஸ்டாகவே மாறி பி.சீனிவாசராவைச் சந்தித்து அதன் பின் இராமநாதபுர ஜில்லாவில் விவசாச சங்கம் கட்டமைத்து விவசாயிகளுக்காக நிறைய்ய போராட்டங்களை நடத்தி சிறைசென்று வருகிறார். வாழ்வின் பெரும் காலம் சிறையிலும் தலைமறைவு வாழ்க்கையிலுமாக கடந்துகொண்டிருக்க 1950ல் கைதான சம்பவத்தை ஒட்டி நிகழ்ந்ததிது. “சப் மாஜிஸ்ட்ரேடிடம் அரசியல் கைதியாக நடத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கு, சப்மாஜிஸ்ட்ரேட் அரசியல் கைதியாக நடத்துவதற்குள்ள(செக்சன்) சட்ட விபரம் தெரியாது. நான் புதியவன் தேவகோட்டை ஜில்லா மாஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்களென்று சொல்லி எனது வாரண்டில் ‘பயங்கர கம்யூனிஸ்ட்” என்று எழுதிவிட்டான். அதனால் ஸ்டேசனில் லாக்கப்பில் சட்டை போட்டுக்கொள்ள அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். ‘பயங்கர கம்யூனிஸ்ட்’ என்று எழுதப்பட்ட விசயம் போலிஸ்க்கு பீதியை உண்டாக்கிவிட்டது. எனது கை விலங்கில் நீண்ட சங்கிலியைப் பூட்டி எந்நேரமும் பிடித்துக்கொண்டே நின்றனர்” என எழுதியுள்ளதை வாசிக்க சாமானியர்கள் பட்ட பாடு குறித்து எவ்வித பதிவும் அற்று ஏனோ தலைவர்களால் மட்டுமே சுதந்திரம் கிடைத்ததுபோல் வரலாறுகளை திரும்பத் திரும்ப புதிப்பித்துக்கொண்டே இருக்கிறார்களே என வலியோடு கடக்கவேண்டியிருந்தது.

இவரின் சுயசரிதையோடு இவரை அடிக்கடி தேடி அலைந்தபடியே இருக்கும் இவரது தாயர் ஒரு முறை இவரை கண்கள் வீங்க அடித்த போலிஸ் ஸ்டேசனுக்கு சென்று எவன் என் மகனை கைதுசெய்து அடித்து இம்சித்தது என பெரும் சப்தம் போட்டது... தனிநபர் சத்யாகிரகம் துவங்கி தொடர்ந்து சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்த இவரது தமைக்கை ஜி.நாராயணம்மாள், தன் குடும்பத்தாருக்குப் பிடிக்காது போனாலும் தன் கணவரின் போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அவரது துணைவியாருமென மூன்று பெண்களின் வரலாறும் பதிவாகி இருப்பது இப்புத்தகத்தின் மிகச் சிறப்பு.

ஜனசக்தியில் இவர் எழுதியி கட்டுரைகளும், இவர் குறித்து தலைவர்களின் கட்டுரைகளும், மற்றும் தாயார் துணைவியார் எழுதிய கடிதங்கள் என முக்கிய ஆவணங்களாக உள்ளன.

விடுதலைப்போராட்டத்தில் பங்கெடுத்த ஜி.இராமச்சந்திரனின் சுயசரிதை இப்பொழுதாவது வந்திருக்கென ஆறுதல்கொள்ளும் வேலையில் இவரைப்போன்று எத்தனையோ போராளிகள் எதையுமே பதிய வைக்காது வாய்வழிக்கதையாக மட்டுமே சொல்லி மறைந்திருக்கக்கூடும். எத்தனையோ வரலாறுகள் மண்ணோடு மண்ணாக கலந்திருக்கும் என்ற வருத்தமும் மேலோங்கியது...

விடுதலைப்போராளி ஜி.இராமச்சந்திரன்
தொகுப்பு- ஆர்.பாலச்சந்திரன்

வெளியீடு- பாவை பப்ளிகேஷன்ஸ்
142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600014
விலை- ரூ.80

Thursday, January 23, 2014

உங்களின் நெருக்கடியான போராட்டச் சூழலிலும் எனது தொகுப்பை வாசித்து பகிர்வு கொண்டமைக்கு மிகவும் நன்றி தோழர்
ந. பெரியசாமி, _மதுவாகினி_. மதுராந்தகம்: அகநாழிகை பதிப்பகம், 2012 (பக். 80; ரூ. 70; 9994541010).

மதுவாகினியும், கோபமும், சிகப்புச் சிந்தையும் சேர்ந்தே பயணிக்கின்றனர் கவிதைகளின் ஊடே. சிந்திக்க, சீர்தூக்க, செயலில் இறங்க எண்ணிறந்த முத்துக்கள் இந்நூல் முழுவதும்:

[] தீதும் நன்றும் பிறர்தர வாராதென்பது
நாய்களுக்குப் பொருந்தக்கூடும்.

[] ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு
ஆண்ட கிழவனாரும்
ஆளும் குமரியும்.

[] எதையும் செவிகொள்ளாது
சுயம் வளர்க்க தீராபசியோடிருக்கும்
அழிவின் வேட்டையில் தீராதிருக்கும்
மயிராண்டிகளின் வாழ்வின் மீது
சாவகாசமாய் நின்று
நிறைவான மூத்திரம் பெய்வோம்.

Saturday, January 18, 2014

அணில் வரவற்ற வதை முகாம்கள்...

ஒரு நிமிடத்துக்கு முன் ·


இறைவன் சிவனடியாராக மாறுவேடம் தரித்து இயற்பகையாரிடம் அவரின் மனைவியை கேட்க, அவரும் எவ்வித மறுப்பும் சொல்லாமல் உடன் அனுப்பி, எதிர்த்த ஊர் மக்களை வெட்டி வீழ்த்தி காவலாகவும் செல்கிறார். இனி நாங்கள் பத்திரமாக சென்று விடுவோம் எனக் கூற திரும்பி நடக்கிறார். அவரை அழைத்து இறைவனாக காட்சி தந்து அவருடனே அவர் மனைவியை அனுப்பி வைத்து இயற்பகை நாயனாரின் சிவச்சேவையை உலகுக்கு உணர்த்தும் இது போன்ற கதைகளை வாசிக்கையில் எரிச்சலும், பரிகாசமும் தோன்றினாலும், தான் நம்பும் ஒன்றிற்காக தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

தான் வாழும் சமூகத்தின் மீதான அக்கறையில் தன்னை ஒருவன் முழுமையாக ஒப்புக்கொடுக்க நினைத்து வாழ முற்பட எதிர்கொள்ளும் சிக்கலும் அதனால் உண்டாகும் எரிச்சலும் பெரும் கோபத்தையே ஏற்படுத்தும். தன் மீதும், தன் சமகால மனிதர்கள் மீதான கோபத்தையும், தன் நிலைப்பாட்டின் மீதான தெளிவற்ற கருத்தை பெரிதும் நம்பி இடது வலது என குழம்பி நான் என்றும் நடுநிலைதான் எனக்கெதற்கு இந்த அரசியல் கருமமெல்லாம் என சொல்லித்திரியும் மயிராண்டிகளின் மீதான கோபத்தையும் கவிதையாக்கியுள்ளார் லிபி.

சீனாவைப் பார், ரஷ்யாவைப் பார், அமெரிக்காவைப் பார் என கையை தூக்கியபடியே திரியாமல் தன் வீடு, தன் பக்கத்து வீடு, தான் வாழும் ஊர் என அன்றாடம் நிகழும் பிரச்சினைகளை கண்டும் காணாமல் தான் உண்டு தன் வேலையுண்டென ரோபோ மனிதனாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களையும், தான் என்னவாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டும் நிழலாகவும் கவிதைகள் இருக்க வாசித்து முடித்த பின் அவசரத்திற்கு மஞ்சள் பை கிடைக்காவிட்டாலும்கூட பிளாஸ்டிக் பையிலாவது செருப்பை போட்டு அடித்துக்கொள்ள செய்கின்றன கவிதைகள்...

என்றோ ஓர் நாள் சூழலின் மீதான அக்கறையால் இலவச மரக்கன்றுகளை வைத்து புதைத்து வாழ்வில் நிறைய சாதித்து விட்டோமென பிளாஸ்டிக் கடைகளில் பேரம் பேசிக்கொண்டிருப்பதை போகிற போக்கில் நினைவூட்டி நம் யோக்கியதையை நிர்வாணப்படுத்துகின்றன கவிதைகள்.

கவிதை எழுதத் துவங்கியதும் ஏதோ ஒரு கவிதையையாவது நட்சத்திரமாக்கி விடுவது என எல்லா கவிதைகளையும் வான் நோக்கி வீச, எல்லாம் மோல்டிங்கில் முட்டி வெள்ளையடித்த தொழிலாளியின் உழைப்பை மட்டுமே கீறி வீழ்ந்து அது பேரிச்சம் பழத்திற்குக் கூட வழியற்று போனலும், மின்சாரமற்ற பொழுதில் ஒரு கொசு கடித்தாலும் இடிந்தகரை மக்களை திட்டும் அரசியல் ஞானவாதிகள் மிகுந்து வாழும் ஊரில் பத்தோடு பதினொன்றாக நானும் அவனோடு ஒருவனாக வாழ்ந்து மடியாது என்னை அவர்களிடமிருந்து பிரித்துக்காட்ட, நான் நீ இல்லையென துப்ப எதையாவது எழுதத்தான் வேண்டியிருக்கு. லிபிக்கு அன்பான வேண்டுகோள் தயவுசெய்து பழையபேப்பருக்கு பேரிச்சம் பழம் விற்பவனை அனுப்ப வேண்டாம்.

கின்னங்களில் மிதக்கும் நம் உடைந்த சிறுநீரக கற்களாக பொடிந்து போயின மலைகள். குன்றுமணி திருட்டைக்கூட பொறுத்துக்கொள்ளாத நம் அரசு குன்றுகளின் திருட்டில் சுகப்படுகிறது...

ஒரு நகரின் தூய்மை, அழகு, இயக்கம் என அனைத்தையும் நிகழ்த்துவது இயந்திரம் பிதுக்கி வெளித்தள்ளும் கருமை படிந்த கிரீஸ்களாக தன் உடலைக் கெடுத்து கழிவுகளை அகற்றி நகரின் உபரிகளாக வாழும் தொழிலாளிகளின் துயரம்...

கிறுமிகளின் கூடாரமாக இருக்கும் அரசு அலுவலகங்கள் குறித்த நையாண்டி...

முகம் பார்த்து சிரித்து பேசி ஓசு வாங்கி வீடு வரும் வாழ்க்கை இழந்து பெரும் பெரும் பிக் பஜார்களில் திரளச் செய்துவிட்ட சூதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டதன் எரிச்சலை வெளிப்படுத்தி நம் போன்று எதற்கும் லாயக்கற்று நிற்கும் நம் கடவுளையும் ஏசுகிறார்.

தன் பள்ளியின் அருகில் இருக்கும் பழக்கடையில் புதுசா விரல்மாதிரி நீளமாக பழம் இருக்கு வாங்கிக்கொடுவென அடம் பிடிக்க, எதைச் சொல்கிறானென பழக்கடையில் பார்க்க எரியக்கூடாத இடமெல்லாம் எரிந்தது. அடப்பாவிகளா இதையுமாவென வாய்விட்டு புலம்பியபடி வாங்கினேன். மிக அழகாக பேக் செய்யப்பட்ட கவரில் 10 புளியம்பழம் இருந்தது. தூரதேசங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எளிதில் கிடைக்கக்கூடிய நாவல், புளியம்பழம் கூட இறக்குமதிசெய்து விற்பனைக்கு வந்துவிட்டது நம் காலத்தின் பெரும் துயரம்தான். மக்களின் அவசரமும் வியபாரிகளின் பேராசையும் அறியாத மரங்கள் வழக்கம்போலவே அதன் சுழற்சியில் காய்களை கனியாக்குகிறது. நாம்தான் அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாதே. சுண்ணாம்புக்கல் வைத்து பழுக்கச்செய்து விடுகிறோம். பழ வியபாரிகளுக்கும் மருத்துவருக்கும் ஏதாவது ஒப்பந்தம் இருக்கும்போல நிறைய்ய நோயாளிகளை அனுப்பி வைப்பதில் இவர்கள் பங்கும் நிறைய்ய இருக்கு. அதைவிடக் கொடுமை வாழைத்தாரின் நுனியை அறுத்துவிட்டு பிளாஸ்டிக் பையில் யூரியாவை வைத்து கட்டிவிடுகிறார்கள். யூரியாவை உரிஞ்சும் வாழைத்தார் நல்ல பெருத்த வாழைப்பழங்களை பிறப்பிக்கிறது. நாமும் நல்ல சைஸ் என வாயில் வைத்துக்கொள்கிறோம். திராட்சை விளைவிப்பு அதைவிடக்கொடுமை... லிபியின் கவிதைகனை வாசித்துக்கொண்டிருக்கையில் நம்மாழ்வாரோடு திரிந்த மாலைகள் நினைவில்....

நாமே நம்மை வெகு நிதானமாக ஆர்வத்தோடு அழித்துக்கொண்டிருக்கிறோம் உலகமயமாக்கல் எனும் ரப்பரை வைத்து, ரப்பர் காலியாக காலியாக நட்சத்திரங்களிலிருந்து விழுந்துகொண்டே இருக்கின்றன ரப்பர்கள்.

மரத்திலிருந்தபடி பழங்களை உதிர்த்து சுட்டபழமிதுவென தன் மொழிவிளையாட்டை நிகழ்த்தி புத்திகூர்மைமிக்கவர்கள் குழந்தைகள் என நமக்கு ஏற்கனவே சொல்லப்பட்டிருந்த போதிலும் எதையும் காதுகொள்ளாது அவர்களுக்கு ஏதும் தெரியாது நாம் தான் எல்லாவற்றையும் கற்றுத்தர வேண்டுமென்ற அதிகார மமதையோடு திரியும் நமக்கு லிபி தன் கவிதைகளில் சூடுவைத்துள்ளார்.

குழந்தைகள் மீது புகார்கள் அற்று இருப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் குழந்தைகளின் உலகில் நிகழும் அற்புதங்களை தரிசித்து சிலிர்ப்படையும் கணங்களில் கரைபவர்கள். அவர்களுக்குத்தான் தெரியும் சிலேட்டில் எழுதும் இ எண்ணையில் மிதக்கும் ஜாங்கிரியாக...

அலுப்பூட்டும் வீட்டுப் பாடங்களை குழந்தைகள் செய்ய டி.வி.யை பார்க்காமலும், பார்க்க விடாமலும் மனதுள் சனியன் சீக்கிரம் முடிக்கிறதா பாரென திட்டியபடி அவர்களை துரிதப்படுத்திக் கொண்டிருக்க அவர்கள் தங்களின் வீட்டுப் பாடங்களோடு நிகழ்த்தும் சுவாரசியமான உரையாடலை ரசிக்க மனநிலையற்று கடந்துகொண்டிருக்கும் நாட்களை நினைவூட்டி ஐயோ இவ்வளவு காலம் தவறவிட்டோமே எனும் மனநிலையை உண்டாக்குகின்றன கவிதைகள்.

கையில் ஒரு பிளேடை எடுத்துக்கொண்டு சிறுவனையோ சிறுமியையோ அழைத்து உடலில் கோடுபோடுதல், வட்டமிடுதல், பெருக்கல் குறியிடுதல் என யாராவது செய்தால் நம் மனம் எப்படி பதபதைக்கும். பார்த்து சும்மா இருந்துவிடுவோமா... அப்படித்தானே இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களது விடைத்தாளை பார்க்க. உங்கள் பாடதிட்டமும் பாடங்களும் எதற்கு லாயக்கானது என்பதை அறியாதவர்களா நீங்கள். கால காலமாக விடைத்தாளில் காட்டும் உங்கள் அதிகாரத்தை தயவு செய்து இனியாவது உங்கள் நிர்வாகத்திடம் காட்டுங்கள். ஆசிரியர்கள் தகுதிதேர்வு எழுதவேண்டுமென்றதும் எப்படியெல்லாம் பதைத்தீர்கள். எத்தனை ஆசிரியர்கள் டியூசன் போய்க்கொண்டிருக்கிறீர்கள். எத்தனைபேர் பெயிலாயி பெயிலாயி பாஸ் செய்தீர்கள் தேர்ச்சிபெற எல்லாவித கயமைகளிலும் ஈடுபடத்தானே செய்கிறீர்கள். இதையெல்லாம் மறந்து எப்படி உங்களுக்கு மாணவர்கள் என்றால்மட்டும் கொம்பு முளைத்து அவர்களை குத்தி ரணப்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் எனும் நம்முள் இருக்கும் கோபத்தையும் கிளிறி வெளிக்கொணர்ந்துவிடுகிறார்.

வதைமுகாம்களாக மாற்றம் கொண்டு வரும் பள்ளியிலிருந்து வெளியேறி மாடுமேய்ப்பவனின் வெட்டவெளி ஆட்டம் பாட்டம் புல்வெளி புங்கநிழல் காட்டுப்பூ கவண்கல் தவளைவிடுதல் தும்மைப்பூவின் துளித்தேன் என அவரின் பட்டியலை வாசிக்கும் யாருக்கும் அப்படியொரு வாழ்வு கிடைக்காமைக்காக வருத்தப்படத்தான் செய்வார்கள்.

அணில்கள் வராதுபோன பள்ளிகள் வதைமுகாம்கள்தானே...

எனது பள்ளியின் பருவத்தில் கொடுக்கும் பைசாக்களுக்கு மிளாகய் தூளில் உருண்டபடி இருக்கும் நெல்லி மாங்காய் துண்டுகளை கையளித்து மலர்த்தும் பாட்டி, பஞ்சுமிட்டாய்க்காரர், ஐஸ் விற்பவர் என நிறைய சித்திரங்களை மீட்டுக்கொடுத்ததோடு மட்டுமல்லாது அன்றைய நாட்களையும் கொடுத்தவாறு இருந்தன கவிதைகள்.

நகரின் வளர்ச்சியில் தொலைந்த தன் வீட்டை அடையாளங்காட்ட இயலாது தேம்பி அழும் சிறுமியாகி பகடி செய்கின்றன.

கவிதைகள் நம் கயமைகளை தோலுரித்து நிர்வாணப்படுத்த அசிங்கம் தாளாது மனம் பதற தாயின் சாந்த நிலையம் சென்றேன். மூக்கறுக்கும் நெடி வரவேற்றது. தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்கக்கூடாதெனும் மூத்தோர் சொல்லை மதித்து கேட்டது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை வாங்கி அமர்ந்தேன். மூலையில் நின்றவாறு மூத்திரம் பெய்துகொண்டிருந்தான் ஒருவன். எடுத்த வாந்தியில் ஈக்களோடு படுத்தபடியிருந்தான் மற்றொருவன். வேறொருவனோ காறி உமிழ்ந்துகொண்டே இருந்தான், தன் டேபிளிலேயே மூக்கை சிந்தியபடி இருந்தான். நமக்கான இடம்தானே நாம்தானே சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்ற நினைவு துளிகூட அற்று இந்த மாதத்தோடு பத்தாவது முறையாகிறது தொடர்ந்தாற்போல் கிரிவலம் போவது என்றும், நான் இந்த வருடம் போனால்15 வருடமாகிறது சபரிமலைக்குப்போய் என பெருமைபேசியவர்களிடம் மேலும் காது கொடுக்க சகிக்காது ஒவ்வாமையில் உடல் பதற லபக்கென்று ஊற்றிவைத்த கிளாஸை காலிசெய்ய சூழல் பழகிய இடமாக மாற்றம்கொண்டது. மனிதர்கள் மிகவும் இனிமையானவர்களாக மாறினார்கள். எதிரிலிருந்துவன் தனக்கான ஊறுகாயை எனக்கும் நீட்ட நக்கியபடி வெளியேறினேன். மார்வாடிப்பெண்கள் வலதுசாரிகள் மற்றவர்கள் இடதுசாரிகள் எனும் லிபியின் பார்வையில் மகிழ்ந்தேன். தொகுப்பிலிருந்த தேவதைகள் நினைவில் மிதக்கத் துவங்கினர்.

தன் கை அசைவில் சந்திப்புகளில் வாகனங்கனை வழிநடத்தும் இளவரசிகளை மனம் கடந்துபோகாதிருக்க நகர்ந்து...

மேலிமைகளின் சிமிட்டலில் கருணை கசிய சுகப்பட்டும் அகப்பட்டும் கடந்து...

புசித்த மீன் என ஊடுபவளை பசித்த மீனாக்கி நதியில் மிதக்கச் செய்து...

ஸ்கூட்டியில் மிதந்து போகும் ஒடிசல் தேவதையிடம் வாங்கிய பழத்தை முகத்தில் மட்டுமல்லாது வாயிலும் கொஞ்சம் போட்டுக்கொள்ள சொல்லும் லிபியின் அக்கறை நியாயமானதுதான். ஆனால் ஒடிசலாக இருப்பதால்தான் ஸ்கூட்டியில் தேவதைகளாக மிதக்குகிறார்கள். உறக்கம் பீடிக்க கனவிலும் நிறைய்ய தேவதைகள் மிதக்க கடுமையான தலைவலி நனவுலகுக்கு கொண்டுவர மூடிய ஜட்டரை வெறித்துப் பார்த்து சொட்டு கருணையுமற்று குவிந்துகிடக்கும் பாட்டில்களை எட்டி உதைத்து உடல் நடுங்க பிதற்றுபவனாக மாற்றம்கொள்ளச் செய்தது தொகுப்பு.

எடுக்க மறந்த சைடு ஸ்டேண்டை நினைவூட்டி, எதிர்வரும் வாகனத்தில் தேவையற்று எரியும் விளக்கை அணைக்கக்கோரி சைகை செய்து, பறக்கும் துப்பட்டா பின் சக்கரத்தில் சிக்குமென அக்கறையைச் சொல்லி நாம் மிகுந்த கருணைமிக்கவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம் எனும் நினைப்பை ஏளனப்படுத்தின கவிதைகள்.

எல்லாவற்றிலும் சமரசமென வாழப் பழகிபோன நம்மை வாழ்வு முச்சந்தியில் நிறுத்தியிருக்கிறது. வாகனங்களின் புகை படிந்து சாலை கருமையேறிக் கிடக்கிறது. அதில் எச்சமிட பறவைகளும் அருகிப்போய் மேலும் மேலும் கருமை பத்துகள் பிடித்துக்கொண்டிருப்பதை நினைவூட்டியவாறு இருக்கிறது லிபியின் உபரி வடைகளின் நகரம்.

nantri:malaigal.com