Wednesday, December 18, 2013

வறண்ட நீர்த்துளிகள்... 
தொழிற்சாலை ஒன்றில் இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. சரிசெய்யும் பிரிவில் இருந்த வேலையாள் மூன்று நாள் விடுப்பில் சென்றிருந்தார். மற்றைய வேலையாட்கள் முயற்சிக்கிறார்கள். ஒரு பொழுதே கழிய சரிசெய்ய இயலவில்லை. நிர்வாகத்தின் அழுத்தம் தாளாது காண்ட்ராக்டில் பழுது நீக்க ஆட்கள் வருகிறார்கள். அவர்களாலும் இயலாது போக நிர்வாகம் பெரும் பதற்றமாகிவிடுகிறது.

விடுப்பு முடிந்து வழக்கம் போல் வேலைக்கு வருகிறார். அவரது உயர் அதிகாரி  மூன்று நாளாக நிகழ்ந்ததைக் கூறாமல் அந்த இயந்திரத்தின் பெயரைக்கூறி பழுது ரிப்போர்ட் வந்திருக்கு போய் பார்த்து வாவென ஆனையிடுகிறார். இவரும் சென்று பார்த்து ஒரு மணி நேரத்திற்குள் பழுது நீக்கிவிடுகிறார். இயந்திரம் உற்பத்திகளை பிறப்பிக்கிறது. நிர்வாகம் இயல்பாகிறது.

இப்படியான தொழிலாளர்கள்  ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நிறைய்ய உண்டு. ஒவ்வொருவரும் தனக்கான தனித்திறன்களோடுதான் பணியாற்றுகிறார்கள். அரசின் கொள்ளை (கொள்கை) மாற்றத்தால் உலகமயமாக்கல் வருகிறது. அதன் பாதிப்பு வெகு விரைவாகவே தொழிற்சாலைகளுக்குள் ஆபத்தினை உண்டாக்குகிறது. ஒரு பொருளின் உற்பத்தியில் 10 இயந்திரம் இருப்பின் 10 வேலையாட்கள்  இருப்பார்கள். ஆனால் வளர்ச்சியால்10 இயந்திரங்களை இயக்க ஒன்றிரண்டுபேர் போதுமானதாக இருக்கிறது. மீதி ஆட்கள் விருப்ப ஓய்வு கட்டாய ஓய்வு எனும் பெயர்களில் வெளியேற்றம் நிகழ்கிறது. தனிமனித தேவையும் திறமையும் பலனற்றுப்போகிறது. வெளியேறிய சிலர் வேறுவேறு தொழில் செய்து பிழைக்கிறார்கள். சிலரோ மன அழுத்தத்தால் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிட, காலப்போக்கில் மதுவே உணவாக மாற்றம்கொள்ள அவர்களது குடும்பம் பெரும் சிக்கலுக்குள்ளாகிறது.

நண்பர் ரகுபதி மிகத் தேர்ந்த எலக்ட்ரீசன். அவரும் ஆட்குறைப்பிற்கு ஆளாகியது பெரும் அதிர்ச்சியானது.  நிர்வாகத்தின் நோக்கத்திற்கு திறமை, திறமையின்மை என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்களது நோக்கத்தில் வெற்றிகொள்வது மட்டுமே அவர்களுக்கு இலட்சியம். பாதிப்பிற்கு உள்ளான நண்பர் பெரும் குடிகாரராக மாறினார். அப்படி மாறியிருக்கத் தேவையில்லைதான். அவரைத் தேடி ஓசூரில் சிறுதொழில் நடத்தும் முதலாளிகள் அலைந்துகொண்டே இருப்பார்கள்.  எவ்வளவு போதையில் இருந்தாலும் டெஸ்ட்டரை கையில் பிடித்தால் பிதாமகனாகிவிடுவார். பிரச்சினை சரிசெய்யப்பட்டதும் மீண்டும் போதை மனநிலைக்குத் தயாராகிவிடுவார். ஒரே மாதிரியான சுழற்சி, பாதுகாப்பான வேலை என்ற மனநிலையில் பெரும் கட்டத்தை நமக்கு நாமே போட்டுக்கொள்வதால் சூழல் மாற்றம் கொள்ள புதிய சூழலுக்கு தன்னை தகவமைக்காமல் நொடிந்து போகிறார்கள் பெரும்பாலானோர். வீதியில் டீக்கடை, கபாப் கடை, வடை போண்டா கடையென எதையாவது செய்து வாழ்வை மீட்டெடுக்கும் தொழிலாளிகள் ஓசூரில் நிறைய்ய உண்டு. ரகுபதி போன்று சிக்கிச் சிதைந்த தொழிலாளிகளும் நிறைய்ய...

பனி முடிய வீட்டிற்கு செல்லும்போது ஏதாவது மூலையில் யாராவது வீழ்ந்து கிடக்க மனம் பதற்றம் கொள்ளத் தொடங்கிவிடும் ஐய்யோ ரகுபதியாக இருக்கக் கூடாதென. நிறைய்ய நாட்கள் அப்படி கிடந்திருக்கிறார். தூக்கி சென்று வீட்டில் விட்டிருக்கோம். நம்பிக்கையூட்டும் சின்னஞ்சிறு நீர்த்துளி கூடவா இவரது வாழ்வில் இல்லாது வறண்டபோயிருக்குமென தூக்கம்கெட்டு யோசித்து கிடந்ததுண்டு. ஓசூரில் தொழிலாளிகள் ஆளுமைகளோடு இருந்த காலங்களில் தொழிற்சங்கக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்ததுண்டு. பெரும் வெற்றிகளையும் நியாயங்களையும் அடைந்ததுண்டு. ஆனால் நடப்பு காலங்களில் தொழிற்சங்கம் பெரும் சவாலை சந்திக்கிறது. கோரிக்கைகளை வைத்து போராடி வெற்றி கொள்வது என்பது பெரும் கனவாகிவிட்டது. தற்சமயம் நிர்வாகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்து ஒன்றிரண்டு பலன்களை மட்டுமே அடைய முடிகிறது. நிர்வாகம் அழித்து அழித்து போடும் கோடுகளில் வரிசை குலையாது ஒழுங்காக நடக்கவைக்கும் வேலையை தொழிற்சங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் அவலம்தான். எல்லாவற்றிற்குமான நியாயங்கள் கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மே-1ம் மிட்டாய் சப்பும் சம்பிராதய தினமாக மாறிக்கொண்டிருக்கிறது.

நன்றி: மலைகள். காம்

Tuesday, December 3, 2013

நன்றி: உயிர் எழுத்து

கிளி பச்சை நிற தேவதை

பார்வையிடுவோரின் நினைவில்
இலைகளை உதிர்த்து
ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன
மரக்கட்டைகள் உயிரற்று
வேலிகளாக குரோட்டன்ஸ் சூழ்ந்திருக்க
நிலத்தையும் தங்களோடு சேர்த்து
விளையாடிக் கொண்டிருந்தனர்
பெரும் சப்தத்தால்
எல்லோரையும் சூழச் செய்தவள்
கண்களை இறுக மூடச்சொல்லி
கிளிபச்சை நிற தேவதையானாள்
தன் புன்னகையால் வசீகரித்து
தேவைகளை கேட்டறிந்தவள்
சொற்களை பிறப்பித்து பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவர்களும் தன் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர்...

நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்

பாட்டியிள் வீடு சென்று
பூப்போட்ட பம்பரம் எடுத்து வரவும்
சின்ன தாத்தா தோட்டத்தில்
மர உச்சியமர்ந்து கொய்யா தின்றிட
ஐந்து - சீ-யில் படிக்கும்
ஆனந்தை கிள்ளி வைக்க
ஹெட்மிஸ் வீடு அடைந்து
தலை வீங்க கொட்டு இட
குளத்தங்கரை செல்லியம்மன்
தலையிலிருக்கும் சிகப்புக் கல் தோண்ட
விளையாட தர மறுக்கும்
மூன்று - பி- அருணாவின்
கார் பொம்மையை காணாமலடிக்க
நட்சத்திரம் ஒன்றை பிடித்து
அறையுள் ஒளித்து வைக்கவென
பட்டியலிட்டபடியே இருந்தாள்
உடலில் முளைத்த சிறகுகளுக்கு
முத்தமிட்டபடி...

பூ அரவம்

புதர் நிறைந்த காடொன்றை
செப்பணிட்டுக் கொன்றிருந்தவர்கள்
விடுகதைகளுக்கு விடையை தேடி
களைப்பகற்றிக் கொண்டிருந்தனர்
அய்யோ அரவமென அலறியவனின் திசைநோக்க
வெண்ணிறத்தில் நீண்ட உடலை மடக்கி
தலை தூக்கி நின்றது
அடித்திடலாமா விட்டுடலாமாவென்ற
விவாதங்கள் நிகழ்ந்தபடி இருக்க
பாம்பு தன் வாயிலிருந்து
பூக்களை உதிர்த்தது
பணிந்து கலைந்தனர்
கனவை கேட்டவர்கள் களித்து
இனி நல்லகாலம் உனக்கென்றார்கள்...

மாயமுட்டை

கண்கள் திறப்புகொள்ள அதிர்ந்தேன்
எனதறையின் மூலையில்
சற்றே பெருத்த முட்டை
இடும் விலங்கினம் ஏதமற்றிருக்க
கல் விழுந்த குளமானேன்
பூனை ஒருபோதும் முட்டையிடாது
உலகறிந்த உண்மை
ஏற்கனவே வீட்டில் வளர்த்த
கோழியின் உருவம் உயிர்பெற்றது
அடிக்கடி சுத்தம் செய்ய
நீர் வறண்ட வீடானதால்
விற்று தொலைத்துவிட்டோம்
அறையின் கதகதப்பு
முட்டையிட ஏதவாக
இருக்கக் கூடுமென நினைத்த கணம்
ஆசனவாய் இலேசாக வலிக்கத் தொடங்கியது...

யாசகம்

கண்ணாடியிலிருந்து வெளிவந்த உருவம்
என்னைப்போலிருக்க நெருங்கினேன்
நீர்கொட்ட கலைந்த ஓவியமாக
உருவற்ற முகமாக இருக்கத் தயங்கினேன்
கைகளை இறுகப் பிடித்தது
காதலியின் முதல் தொடுதலை நினைவூட்ட
காய்ச்சல் ஏற்பட்டது உடலுக்கு
நடுங்கும் கைகளும் துடித்த உதடும்
எதையோ கேட்க முற்பட
தேவனானேன் நிவர்த்திக்க
திறப்பிற்கு வழியற்று
நிறைந்த மூத்திரப்பையின் வலியோடிருக்கிறேன்
அவசரமாக காட்சியாக்க வேண்டும்
விரைவில் உறங்கச் செல்லென யாசித்தது
கனவு..

நன்றி: உயிர் எழுத்து

Friday, November 22, 2013

உடல் தகிக்கும் வெப்பக் காற்று...


ராஜா வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியிலே ஏறலாமா...

இந்த சொலவடையை நினைவூட்டும் விதமான உரையாடல்கள் தீபாவளியை ஒட்டி நிகழ்வுவதுண்டு.

நேரடி உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகளும், அவைகளுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறுசிறு தொழிற்சாலைகளும் கலவையாக இருக்கும் ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் வாழுபவர்களுக்கு தீபாவளி ஏற்படுத்தும் மனநிலை வேறுமாதிரியானவை...

பெரிய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் என்ன கார் வாங்கலாம், என்ன மாதிரியான நகை வாங்கலாம், எங்கே வீட்டுமனை வாங்கலாம், இருக்கும் வீட்டில் செய்யவேண்டிய மாறுபாடுகள்(வாஸ்துக்காகவும்) என விரிவுகொள்ளும் உரையாடல்கள் நிகழும். அதற்காக அங்கெல்லாம் லட்சக் கணக்கில் போனஸ் தருகிறார்கள் என தப்பர்த்தம் கொள்ளவேண்டும். இருபத்தி ஐந்தாயரத்திலிருந்து அறுபதாயிரம் வரை கொடுப்பார்கள். உற்பத்தி, விற்பனையின் சதவிகிதம் மற்றும் தளர்வுகொள்ளாது போராடிக்கொண்டே இருக்கும் தொழிற்சங்கத்தின் உழைப்பு இவையே தொகையை நிர்ணயிக்கும். ஏற்கனவே இருக்கும் சேமிப்பு, அல்லது வாங்கும் கடன் இதனோடு வரப்போகும் போனஸையும் சேர்த்துத்தான் மேற்கண்ட உரையாடல்.

இப் பெரிய நிறுவனங்களின் சம்பளம், போனஸ் தொகை குறித்து பேசிப்பேசி ஏக்கப்பெருமூச்சுவிட்டு என்றாவது அத்தொகையில் பாதியாவது வாங்கிட மாட்டோமா என்ற கனவுகளோடு வாழும் தொழிலாளர்களிடையே இருக்கும் டூ வீலரை சர்விஸ் விடவேண்டும், அடகு வைத்த செயினை மீட்கவேண்டும், சொசைட்டி லோனிற்கு கொஞ்சமாவது அசல் கட்டவேண்டும், இரண்டு பாக்சிலிருந்து மூன்று பாக்ஸ் பட்டாசு கேட்கும் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இதுபோன்ற உரையாடல்கள். இரண்டு மூன்று வருடம் போனஸ் வாங்காமல் இருந்தாவது நாமும் ஒரு முறையாவது முப்பதாயிரம் போனஸ் வாங்கவேண்டும் எனச் சொல்லும் விரக்தியான உரையாடலுக்கும் பஞ்சமில்லை.

போன ஆண்டு கொடுத்த தொகையைவிட எப்படியும் இரண்டாயிரமாவது சேர்த்து வரும் என நம்பிக்கையின் கணக்கிற்கு பெரும் ஆசை பட்டியலை தயாரித்து வைத்திருக்கும் தொழிலாளிகளின் மனநிலையை காலம்தாழ்த்தி ஐந்தாறுமுறை பேச்சுவார்த்தை நிகழ்த்தி போன ஆண்டு கொடுத்த தொகையையாவது இந்த ஆண்டு கொடுத்தால் போதும் என்று தொழிற்சங்கம் கெஞ்சிக் கூத்தாடி வைக்கும் நிர்வாகம்.

போட்டு வைத்திருக்கும் பட்டியலை சப்தம் இல்லாமல் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கும் மனதோடு தீபாவளி பண்டிகையை எப்பாடு பட்டு கடக்கப்போகிறோமென யாரிடம் எதை வைத்து கடன் வாங்க வேண்டுமென்ற கணக்கிடலுக்கு தயாராகும். 8400 ரூபாயை விட அதிகமாக வாங்கும் ஒவ்வொரு ரூபாயிக்கும் பெரும் பாடும் பெரும் துயரமும் உண்டு.

உடன் பணிபுரியும் நண்பரின் மகன் திருமனத்திற்கு போனபோது இந்த ஆண்டு போனஸ் பத்தாயிரம் வாங்கிவிட்டோம் என்று பெருமைபொங்க ஒரு தொழிலாளி கூறினார், அப்பெருமிதம் சில கணங்கள் கூட நீடிக்கவில்லை அடுத்து தீபாவளிக்குள் தான் ஓய்வுபெற போகிறேன் என்றார். இன்னும் இரு ஆண்டுகளாவது சர்வீஸ் இருக்கக்கூடாதாவென அவர் வெளியேற்றிய வெப்பக் காற்றில் உடல் தகித்தது. பெரும்பாலான தொழிலாளிகளின் நிலை இதுவாகத்தான் இருக்கு. ஓய்வுக்காலம் வரையும் ஒருவன் வேலை பார்த்து போனஸ் பத்தாயிரம் வாங்கமுடியாத அவலச் சூழல்தான். கூடவே விவசாயிகள், விவசாயக்கூலிகளுக்கு யார் என்ன போனஸ் தருகிறார்கள் என்ற கவலையும் ஏற்படாமலில்லை. 25 ஆண்டுக்கு மேல் ஒரே தொழிற்சாலையில் என்றாவது நம் வாழ்வில் மகிழ்வூட்டக்கூடிய தருணத்தை ஏற்படுத்த நல்ல சம்பளம் முதலாளி கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து உழைத்துக் கிடப்பவனை கழிவுகளோடு கழிவாக வெளியேற்றும். உண்மை அறிந்தும் முன்மாதிரிகள் இருந்தும் வேறு வழியற்று இன்னும் தொழிற்சாலை கேட் முன் காத்துக்கிடக்கும் துயரத்தை என்ன சொல்ல...

சங்கு ஊத வேலை ஆரம்பித்து மறு சங்கில் சாப்பிட்டு அடுத்த சிப்ட் துவங்க ஒலிக்கும் சங்கில் வெளியேறி சங்கொலியின் கட்டளைக்கு உழைத்து உதிரும் தொழிலாளர்களின் நிறைவேறாத போனஸ் கனவு இந்த ஆண்டும் இந்த தீபாவளியிலும்...

nantri:malaigal.com

Monday, November 4, 2013

அம்மாக்கள்...

வாழ்ந்தோம் பெரும் வாழ்வென
நினைத்த கணத்தில்
பழுக்கத் துவங்கினாள்
தன்னில் பிரிந்த விழுதொன்று
பற்றற்று அலைவது
பெரும் பாரமாகியது
படையலிட்டு வேண்டியும்
பலனற்றுப் போக
மண்ணைத் தூற்றி காறி உழிழ்ந்தாள்
வேறு வழியற்று அப்பாதை செல்ல
முகம் கொடுக்காது கடந்தாள்
எனது பாடுகளும் வீணாகினவென
கனவில் கண்ணீர் வடித்தார்
மனம் இறங்கியவள்
மன்னித்து பூசையிட
குளிர்ந்தார் கடவுள்
ஆயினும் அவள்
சதா புலம்பியபடியே...
*

துணை வானம்

குழந்தை தவழ்ந்தது
தாயும் தவழ்ந்து தூக்கினாள்
வேடிக்கையில் பேசியபடி இருந்தனர்
நிலாவும் இருந்தது
நட்சத்திரங்களும் மின்னின
நாம் கண்டபடி இருக்கும்
நிலவும் நட்சத்திரமும் இதுவல்ல
பகலில் காணும் சூரியனும் அப்படியே
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
மாலை பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை என்றாள்
இன்னொரு யானைதான் என்றேன்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
வேறு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு
மௌனித்திருந்தேன்
அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்
துணை வானம் ஒன்றையும்
ஒரு நிலா ஒரு சூரியன்
நிறைய்ய நட்சத்திரங்களையும்
இப்பொழுது யாவரும் காண்பது
அவள் அனுப்பிய துணைகளைத்தான்...
   
nantri:malaigal.com

Friday, October 25, 2013

தன் இருப்பை நினைவூட்டக்கூடுமென்று
யாரோ விட்டுச் சென்ற குடுவை
வெய்யில் குடித்தும்
நினைவில் மழை பெய்ய
அடியில் தேங்கியது நீர்
தன் உயிரை எழுத்தாக்கி
மிதக்கச் செய்தாள்
யாரேனும் சிறு சிறு கல் நிரப்பி
வழியும் நீரில்
தனை வாசிக்கக் கூடுமென...

Wednesday, October 2, 2013

nantri:Slate

மழை

மீந்த மின்னலை
ஒரு சிப்பியுள் அடைத்தேன்
தன் நிழலை
தாண்ட முயற்ச்சித்தபடி ஆட்டுக்குட்டி
மேய்ச்சலில் இருந்த மாட்டிற்கு
உனி பிடுங்கியவாறு பூனை
குழாயிலிருந்து குதித்த நீர் துளிகளில்
தாகமடங்கியவாறு காக்கை
தன் வெறுமையை காட்சியாக்கி
நீண்டு கொண்டிருந்த நிலத்தில்
சாம்பல் படிந்த உடலோடு
எதிரில் வந்த மதுவாகினி
கொஞ்சமாவது மழை தந்திடு
வான் நோக்கி கை கூப்பினாள்
காத்திருந்தார்போல் சிப்பியை உடைத்தேன்
மிதந்தலைந்தோம் வண்ண மீன்களாக...
*

நிலையானது

இருள் விளைந்த வேளையில்
விளையாடிக்கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய்ய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள் தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில் சூரியகாந்திப்பூ
அடுத்தடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவைகளை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப
கட்டங்களற்று வெறிச்சோடிப் போனேன்...
*
சங்கடை அமுது

நீர் கசிவிக்கும்
பார்வை குமிழியின்
பிணி தணிக்க முலை பிசைந்து
சங்கடையில் தேங்கிய அமுது நனைக்க
வழிந்த ஒரு சொட்டு
உதட்டில் பரவி
உடலை தித்திப்பின் துளிகளாக்கி
காலத்தை சுருட்டியவாறு
வயலடைந்தன

புழுக்கைகளை சதுரமாக காட்சிபடுத்தி
வளப்படுத்தும் கெடையில்
இருளை முத்தமிட்டவாறு இருந்த
ஆடொன்றின் நீண்ட காம்பிலிருந்து
பீச்சிய பால் மணத்தால்
மீண்டு உடலானேன்...

விருப்பம் · · விளம்பர

Friday, September 6, 2013

சாயக்கனி

தொட்டி ஒன்று
தன் குறுகிய எல்லைக்குள்
வேர்களை உயிர்ப்பிக்க வைத்து
நேர்த்தியாக வளர்த்திருந்தது
மணத்தக்காளிச் செடியை
சாயமேறித் தொங்கும் நீர்த்துளிகளாக
அதன் கனிகள்
அவசர அவசரமாக பறித்துத் தின்றவன்
சிறிதளவு என்னிடம் காட்டினான்
இது எப்போ சிவப்பாகுமென்றான்
கருப்பாகத்தானிருக்கும் இப்பழமென்றேன்
சிகப்பானால்தானே பழம்
எல்லா பழங்களும் சிகப்பாகாதென்றேன்
திருப்தியின்மையோடு ஓடிப்போனான்
அடுத்த நாளில் அதிசயம் கண்டேன்
கனிகளுக்கு சிவப்பு வர்ணம் பூசிக்கொண்டிருந்தவன்
மணத்தக்காளிக்கு அறிவுறுத்தினான்
இனி இப்படித்தான் பழமாக வேண்டுமென...
*

பவனி

தாள் ஒன்று
தன்னில் எதையாவது வரையுமாறு
அழைப்பதாக கூறிச் சென்றவன்
இருந்த வர்ணங்களை சரிபார்த்து
ஒன்றிரண்டை வாங்கிவர பணித்தான்
என்ன செய்ய போகிறாய்
மகாபாரதம் தொடரில் பார்த்த
ரதம் ஒன்றை வரையத் துவங்கினான்
ஒளிர்வில் வீடு மினுங்க
ரதம் நின்றது பேரழகோடு
வலம் வந்து நின்றவன்
மற்றொரு தாளில்
புரவிகளை உயிர்ப்பித்து பூட்டினான்
ஊரே அதிசயித்து நோக்க
வானில் பவனி வந்தான்
இந்நிகழ்விற்கு பின்னான நாட்களில்
வரையும் சித்திரங்கள் வாகனமாகிட
தொலைந்து போவது தொடர்கதையானது...

நன்றி: திராநதி.

Wednesday, September 4, 2013

சூரியனை
சிறு கயிறாக திரித்து
அறையுள் அனுப்பியது கூரைத்துளை
கயிற்றை கண்ணாடியால் அறுத்தேன்
வாசலில் வட்டத்தை இட்டது
கடந்தவள் வளையலால் மீண்டும்
உட்செலுத்தி கூசச்செய்து
சிரிப்பை நிறுத்திச் சென்றாள்
துளை இப்போ மழையை திரித்தனுப்ப
அறையும் குளிர்ந்தது

தாளாத குளிர்விப்பு


இருள் பிளந்தது
வெண்மை பூக்கச் பிரிந்தது
பலாச்சுளை
தித்திப்புக் கடலில்
எத்துளியை பருகுவதென
மருகி ஊர்ந்தேன் எறும்பாகி
தாளாத குளிர்விப்பில்
உடல் கரைந்தது.

Sunday, September 1, 2013

பசியாற்றும் கண்கள்

மதநீர் சுரக்க
எனதுடல் பிரிந்த யானை
அறிந்தேன் நிகழும் மாற்றங்களை
மிளிரும் மூக்குத்தி
சிமிட்டும் தொங்கட்டான்கள்
மறையத் துவங்கின
நெளிவுறும் வானவில்
கிளர்த்தும் மதனமேடுகள்
அசைவுகளின் நளினமென
கள்ளத்தனமான கயமைகளை
பாசியாக்கி படியச் செய்தேன்
பசியடக்கத் தவறவில்லை
கண்கள்...

Sunday, August 18, 2013

nantri:malaigal.com

பிறழ்ச்சி

காற்று
பெருக்கெடுத்து வீசிய போதும்
ஒலி நகராது காதருகேயே
கோடைக்குப் பின்
முதல் துளியின் ஈரம் பரவிய நிலமானேன்
குத்துண்ட விதைகளெல்லாம்
மொக்கிட்டு மலர்ந்தபடி
வெண்ணிற மேகம் சூழ இறங்கி
தேவதைகள் ஏதும் கூறிடவில்லை
உடனிருப்பவள்தான்
என்றாவதுதான் கேக்க வாய்க்கிறது
பிறழ்ச்சியில் பிறப்பிக்கும்
கொலைகாராவை...
*
நிறுத்தமற்ற பயணம்

சரியாக நினைவில் இல்லை
கச்சிதமாக சொல்ல
இது ஆய்வுக் கட்டுரையுமல்ல
பத்து பனிரெண்டு வருடமாக நீடிக்கிறது
பயணத்தில் உண்டான முகப்பழக்கம்தான்
பார்க்கையில் இதழ் அவிழ்ப்போம்
அன்றொரு நாள் என் அருகாமையை
தன் இருப்பால் நிறைத்தாள்
ரொம்ப நாளானது பார்த்தென்றேன்
கணவரது வாகனத்தில் செல்வதாக கூறினாள்
வேலையின் தன்மை குழந்தைகளின் படிப்பென
விசாரிப்புகளை நீட்டினேன்
அவளின் நிறுத்தம் நெருங்கியது
தயங்கிக் கேட்டேன்
கையிலிருந்த செல்போனை பையிலிட்டு
டிக்கட்டின் பின்புறம் எழுதினாள்
எனது எண்ணைக் கேட்டு
மீண்டும் வெற்றிடம் சூழ
அவளது எண்ணைத் தராது
நாசுக்காக மறுத்திட்டாளென நினைத்திருந்தேன்
பொய்யாக்கி பேசினாள்
பேசிக்கொண்டே இருக்கிறாள்
திருவிழா பார்த்து வந்த
குழந்தையாக...

Saturday, August 10, 2013

கிளியொன்று
பழம் தின்னக் கண்டேன்
பசியடக்க பயணித்தேன்
மரவட்டை ரயிலேறி
வெப்பம் தணிக்க உச்சியில்
வெய்யலை மறைத்தபடி
உடன் தொடர்ந்தது கழுகும்
மரவள்ளி தோட்டம் நெருங்க
இணையை பார்த்த மரவட்டை
கவிழ்த்தெனைக் கடந்தது
கழுகு பசியாறியதை உங்களுக்கு
யார் சொல்லக் கூடுமோ...

Saturday, August 3, 2013

மூன்றாம் நாளில்...


மூன்றாவது நாளாக தொடர்ந்தேன்
தனித்த அறையொன்றில்
இன்றும் வீதியில் கீரை விற்பனை
கண்களை இறுக மூடி உச்சரித்தேன்
இந்த விளங்காதவனை கட்டியதற்குப் பதிலா
வீட்டிலேயே கெடந்திருக்கலாம்
அருகாமை இல்லத்தில் ஆரம்பமாகியது
நம்ம டீம் மேட்சில்
என்னம்மா கலக்கிட்டானுவ தெரியுமா
உரையாடல் கடந்தது
அவசரமாக தலையிலடித்துக் கொண்டு
மீண்டும் இறுக மூடினேன்
அம்மாடியோவ் கொலுசு சத்தம்
ஆதாரமாய் மனசில் நிற்கும்...
வரிகளை ரசித்து திரும்பினேன்
பாரும்மா இந்த சுப்புவை
பழிச்சிக் காட்டிக்கிட்டே இருக்கா
புகார் ரசித்து மீண்டு
ஞானமடைந்தேன்
தனித்திருத்தலே தியானிப்பாகாதென...
0

அம்மாவாசை நிலவு

நுணா மரக்கன்றை நட்டு வைத்தேன்
என் பிணைப்பை
தன் தளதளப்பில் காட்டியது
மின்சாரமற்ற இரவில்
புழுக்கம் தணிக்க மரம் அடைந்தேன்
அதுவும் விழித்திருந்தது
பால்யத்தில் வேறொரு நுணாவோடிருந்த
நட்பு குறித்து பேசினேன்
மகிழ்வை இலையாக
உடலில் சரிந்தது
நகர மனமின்றி அதன் உடல் சாய்ந்தேன்
ஏதாவது கேட்கச் சொன்னது
நிலவை தொட்டுப் பார்க்க வேண்டுமென்றேன்
சம்மதத்தை கனியாக உதிர்த்தது
எறும்பாக கற்று
வரும் அம்மாவாசைக்கு வந்துவிடு
எறும்பு ஊற
உயர்ந்து கொண்டே இருப்பேன்
எளிதாய் தொட்டுத் திரும்பலாமென்றது
ஒவ்வொரு மாதமும் கடந்துபோகிறது
அம்மாவாசை...

நன்றி:குவர்னிகா 41வது இலக்கிய சந்திப்பு மலர்


Saturday, July 27, 2013

பேரதிசயமாக இன்றும்
வழக்கமான மேசை கிடைத்தது
சிநேகம் பூத்த சிரிப்பிற்கு
இரண்டு பீர்கள் வந்தன
எண்ணும் இறந்து கிடக்கு
பார்த்து வாரமாகிவிட்டதென தொடங்கியவன்
இரண்டாம் பீரின் இறுதியில்
அழத் துவங்கிவிட்டான்
இனி அடுத்து ஆர்டர் செய்தால்
நிகழும் விபரீதம் அறிந்திருந்ததால்
வலியோடு எழுந்தேன்
எப்பவும் ஐந்தாம் பீரில் அழுபவன்
இன்று இரண்டிலேயே தொடங்கியமைக்காக...

Tuesday, July 23, 2013

அழிவுகளின் சாட்சியாக நிற்பவன்

அழிவுகளின் சாட்சியாக நிற்பவன்
இவ்வாண்டுத் துவக்கத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளுக்கு சேலத்தில் விமர்சன அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில், நான்,  ந.பெரியசாமியின் ‘மதுவாகினி’ தொகுப்புக்கு கட்டுரை வாசிப்பதாக இருந்தது.ஆனால், அப்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால், இப்போதுதான் எழுதவும் முடிந்ததால், சுருக்கமான,மேலோட்டமான  என் விமர்சனக் கருத்துக்கள் இதோ:
பெரியசாமியின் மதுவாகினி தொகுப்பை பொதுவாக  நான்கு விதமான கவிதைகள் நிரம்பியதாகவே பகுத்துக்கொள்கிறேன்.
1. சுற்றுச்சூழல் அழிவு குறித்தும், இயற்கையோடியைந்த வாழ்விலிருந்து விலகிய இயந்திரமயமான,  நகரவாழ்க்கை குறித்தும், கொள்ளும் பதற்றம், கவலை
2.திருநங்கை, திருநம்பிகளின் மீதான கவன ஈர்ப்பு,அன்பு
3.காதல் மற்றும் கடந்த காலத்து நினைவு கூரல்
4.குழந்தைக் கவிதைகள் அதாவது பிள்ளைத் தமிழ்
இவை தவிரவும் அறிதலை நோக்கிய  கவிதைகள்,அகவயமான கவிதைகள் என்றும் உள்ளன.
பெரியசாமியின் கவிதைகள் கையாளும் களம் மற்றும் அவற்றில் அவர் செயலாற்றியிருக்கிற விதம் நேரடியான சமூகக் கவிதைகளாகவே இருக்கின்றன. எளிதில் பலரும் எழுதிவிடலாம் என்றே எண்ணத் தோன்றுகிற மாதிரியான களத்தேர்வுகள் மற்றும் செயல்படுத்தியிருக்கும் விதம். ஆனாலும்,கவிதைகளில் வெளிப்படும் அவருடைய உணர்வுகள், கவலைகள் உண்மையானவை. அவையே தேவையானது. தன்னுடைய வாழ்வனுபவங்களிலிருந்தும், பார்வைகளிலிருந்தும் சுயமாக அவற்றை முன்வைக்கிறார்.
பெரியசாமியின் கவிதைமொழி வாசிப்பில் சற்று அயர்ச்சியளிக்கிறது. நவீன கவிதைகளுக்கென்றே ஒரு மொழி நடையை நாம் கற்பித்துகொள்வதாலேயே இப்படியொரு மேடைச் சம்பிரதாயமான அல்லது சன்னதம் வந்தாற்போன்ற மொழியை கைக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. பெரியசாமியின் கவிதைகளை வேறு எந்தமாதிரியான மொழியில் எழுதலாம் என்று கேட்டால், அதற்கு என்னிடம் விடையில்லை.இன்னும் கொஞ்சம் எளிமையாகவே எழுதலாம் என்பது மட்டும்தான் என்னால் சொல்ல இயன்றது. ஏனெனில், அவரின் கவிதைகள் எளிமையானவை மற்றும் நேரடியானவை. 
மதுவாகினி கவிதைகள் பொதுவாக நன்றாக உள்ளன.அதில் ஒரு பித்து நிலை இருக்கிறது. அதுவே அவைகளுக்கு சிறப்பு சேர்க்கிறது. குழந்தைகள் கவிதைகளும் அதேபோல் நன்றாக உள்ளன.
’வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே’ என்று தொப்பைக்காரர்களை பகடி செய்கிறார்.கவிதை முழுவதுமே பகடியோடு நன்றாக வந்திருக்கிறது.தொகுப்பில் சற்று தனியாக தெரியும் கவிதையிது.அதேபோல் ’தீட்டுறிஞ்சி’ கவிதையும் தனித்துத் தெரிகிறது.
நல்ல நல்ல கவிதை அனுபவங்கள், காட்சிகளை கவிஞனுக்கேத் தேவையான விழிப்புணர்வோடு இருந்து கண்டடைந்து கவிதைகளில் பதிந்திருக்கிறார்.சிலவற்றை இன்னும் சற்று வேறுவிதமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பொன்.வாசுதேவன் எழுதியுள்ள பின்னட்டை வாசகங்கள் பொருத்தமான, நெருக்கமான விதத்தில் தொகுப்பை முழுதும் நன்கு உள்வாங்கி, அணுகியிருக்கிறது.
தொகுப்பிலுள்ள கவிதைகளை மீண்டும் மூன்றுவகையில் அடையாளப்படுத்துகிறேன்.
  1. நல்ல கவிதைகள் அல்லது இன்னும் சற்றே வேறுவிதமாகச் சொல்லியிருந்தால் இன்னும் மேன்மையாகத் தோன்றும் கவிதைகள். எடுத்துக்காட்டாக, புலிவால் பிடித்தகதை, தோத்தாங்கோழி,மெய்வருத்தம்,கனவு வேட்டை,பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி,புதைகுழி, எளியவர் என் கடவுள்...
  2. நல்ல கரு, உணர்வு, உள்ளடக்கம் ஆகிய சிறப்புகளோடிருந்தும், கவிதையாக்கத்தில் தேக்கம் கண்ட கவிதைகள் எ.டு கசப்பு, மழைக்கு பசியாற்றினோம்...
  1. மோசமான கவிதைகள் ( ஆமாம், மோசமான கவிதைகள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது) எ.டு. ’கதாசிரியனுக்குப் பின்’  போன்ற பொதுவாக, நேரடியான அரசியல் கவிதைகள்.
எல்லாத் தரப்பு படைப்புகளுக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். அதாவது, படைப்பாளர்களின் தரத்துக்கு இணையாக வாசகர்களின் தரம் இருக்கும். எனவே, வாசகர்களின் இருப்பு பற்றிய கவலைக்கே இடமிருக்காது.அதேசமயம், நாம் யாரிடம் பேர் வாங்க வேண்டும் என்று நமக்கு ஒரு இலக்கு இருக்கும் அல்லவா? அதை நோக்கிய தீவிர செயல்பாடுகளே படைப்பாளிகளுக்கான தொடர்ச்சியான உத்வேகத்தை அளிப்பது.
இப்படியெல்லாம் எழுதிவிடுவதால், நான் பெரிய இவன் என்றெல்லாம் காட்டிக்கொள்வதாக ஒரு தோற்றம் உருவாவதையும் உணரமுடிகிறது.ஆனால், மேலே சொன்ன கருத்துக்கள் எனக்கும், என் தொகுப்புக்கும் பொருந்தும் என்பதனால், நான் இப்படி முடிக்கிறேன்
’’நண்பா, பெரியசாமி! நாம் இப்போதைக்கு நம்முடைய இடம் எது என்பதை தெளிவாக அறிந்துகொள்வோம்.பிறகு, அங்கிருந்து மேலேறுவோம்’’
                                   ச.முத்துவேல்

Sunday, July 7, 2013

மொட்டைமொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன்  குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்துகொண்டு ஆளில்லை என சொல்லச் சொல்லிவிடுவான். இப்படியாக ஒவ்வொருவர் குறித்தும் நிறைய்ய தெரிந்து வைத்திருப்பதால் அவர்களை உதிர்ந்து கொண்டிருக்கும் உரோமமாகக் கூட மதிப்பதில்லை. புரோட்டின் சத்து மிகுந்தது உரோமம் எனும் விஷயம் தெரியத் துவங்கிய நாளிலிருந்து.

என் மனைவிக்கு நானே மொட்டையடித்துக் கொண்டிருப்பது கவுரவக் குறைச்சலாக இருந்ததால் அவங்க தோழி வீட்டிற்கு போய்விட்டாங்க. அவங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க நான்தான் கேட்பதாகயில்லை. சண்டையிட்டு எதுக்கு ஆயுளை குறைத்துக் கொள்வானே என தலையிலடித்துக் கொண்டு போய்விட்டாங்க.

அடித்து முடிக்கும் தருவாயில் பாவாயி அக்கா வந்தாங்க. ஏண்டா தம்பி இப்படி என கேட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு முன் அவங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடுகிறேன். பெரிதாக ஏதும் கற்பனை செய்து கொள்ளாதிங்க. அவங்க குறித்து சில சுவாராஸ்சியமான விஷயங்கள் உண்டு. மரத்துக்கிட்ட கூட பேசுவாங்க. எங்க வீட்டு முன்னால ஒரு கசகசாமரம் இருக்கும். அதோட பழம் ரொம்ப சுவையாக இருக்கும். எப்பவாவது வந்து மரத்துக்கிட்ட அந்த பழத்தை யார் கண்ணிலும் படாம ஒளிச்சு வச்சிக்க. நாளைக்கு நான் உனக்கு தண்ணி ஊத்துறேன் என்பாங்க. அந்த பழத்தை பார்த்து இலைக்கு அடியில் ஒளிச்சுக்கு... நானே உனை சாப்பிட்டுக்கிறேன் என பேசிப் போவாங்க. யார் இருந்தாலும் அவர்கள் குறித்தெல்லாம் கவலைப்படமாட்டாங்க. அவங்க எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப புழுக்கமா இருக்கு கொஞ்சம் காத்துக்கொடு என்பாங்க. நடந்து கொண்டே இருக்கிறப்ப என் உடம்பிலேயே இருந்து கொண்டு என்னைவிட நீளமாக இருக்கிய என திட்டுவாங்க. நானே குள்ளம் நீயாவது நீளமாக இருக்கக்கூடாதா நிழலேவென பேசுவாங்க. சமைக்கும்போது "ஏய் கொழம்பே டேஸ்டா வந்துடு. எங்க வீட்டுக்காரரு இன்னைக்கு என் பாராட்டனும்" என கேட்டுக்கொள்வாங்க. அரிசியை ஊற வைக்கும்போதே இன்னைக்கு குழைஞ்சிப் போகாது நல்லா பூத்திடு என பேசிக்கொண்டே வைப்பார்கள். இப்படியாக அவங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். என்ன கேட்டோம் எதற்கு வந்தோம் என்பதை மறந்து உதிர்ந்துகிடந்த உரோமங்களிடம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. நீ வளரலைன்னா எல்லோரும் எப்படி கஷ்டப்டறாங்க. ஏன் நீ எல்லோரையும் இப்படி சோதிக்கிற நீளமாக வளராட்டியும்  பரவாயில்லை. வழுக்கைத்தலையாக இல்லாமலாவது காப்பாத்து. எவ்வளவு காசை செலவு செய்யறாங்க தெரியுமா. உன்னை எப்படியாவது வளரவைக்க. கொஞ்சம் கருணை காட்டேன் பாவம் சனங்க எது எதுக்குத்தான் செலவு செய்வாங்கவென பேசிக்கிட்டே இருந்தாங்க.

ஏப்பா கடைக்குப்போனா நல்லா திருத்தமா பண்ணிவிடுவாங்கதானே... எதுக்கு இப்படி படாதபாடு பட்டுக்கிட்டிருக்க? எதாவது வேண்டுதலா உனக்கு  நீயே அடித்துக்கொள்வதென.

அட போங்க.... வேண்டுதலாவது கீண்டுதலாவது அதெல்லாம் ஒண்ணுமில்ல. முடி வெட்டிக்க மாசாமாசம் அறுபத எழுபது ரூபா கொடுக்க வேண்டியிருக்கு. மொட்டையப் போட்டுட்டா நாலைந்து மாதத்துக்கு கவல இல்லாம இருக்கலாமே, ஷாம்பு செலவு, எண்ணைய் செலவு என ஏகப்பட்டது மீதியாவுது. நான் இப்படி எல்லாம் கணக்குப் பாக்குற ஆள் இல்லைதான் என்ன செய்யறது. இந்த வருசம் அநியாயத்துக்கு ஸ்கூல் பீஸ் ஏத்திட்டாங்க. போதாக் குறைக்கு இரண்டாவது பையனை வேறு பள்ளிக்கூடத்துல போடப்போறேன். ரொம்ப சாதாரணமா ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இருபத்திஐந்தாயிரம் என கேட்குறாங்க. லட்ச ரூவா ஸ்கூல் பக்கம் திரும்பிக்கூட பாக்க முடியாது. ஏதோ நம்ம சக்திக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூவா டொனேஷன் ஸ்கூல்தான் சேர்க்க முடிந்தது. அப்புறம் டை, பேஜ் மயிறு மட்டைன்னு புடுங்கறானுவ. சம்பாதிப்பது படிப்பு செலவுக்கு மட்டும்தான் என ஆகிவிட்டது.

என்னை பள்ளிக்கூடம் சேக்கறப்ப மேளதாளம் வைத்து மிட்டாயை பித்தளை தாம்பூலம் நிறைய கொட்டிக்கிட்டு ஊரை சுத்திக் கொண்டு போய் பள்ளிக் கூடத்தில காதை தொட்டுக்காட்டிவிட்டு ஆளுக்கு ரெண்டு மிட்டாயைக் கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டு வந்தார்கள். சிலேட்டு புத்தகம் எல்லாம் பள்ளிக்கூடத்துலேயே கொடுத்தாங்க. இப்ப அப்படியா இருக்கு... கவர்மெண்ட்டு ஸ்கூல்பக்கம் பசங்கள அழைச்சிக்கிட்டு போனாக்கூட ஏற இறங்கப் பாக்குறாங்க. அப்படியொரு மவுசு மண்டையிலே ஏறி மக்கள படாதபாடு படுத்துது. அறிந்து கொள்வதற்காக இருந்த படிப்பு சம்பாத்தியத்திற்கான மூலதனமாக்கப்பட்டுவிட இப்படி சிக்கிச் சீரழியுறோம்.

எங்க ஊர்ல பாரதபூசாரி தாத்தான்னு ஒருத்தர் இருந்தார். பாரத கதையை தொண்டக்குழியிலேயே வைத்திருப்பார். எப்ப கேட்டாலும் உடனே பாட்டுப்பாடி கதை சொல்வார். எங்க ஊர்ல அவருதான் அதிக படிப்பு படிச்சவர்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். திருக்குறள் ஒன்றை மனப்பாடம் செய்து சொல்லத் தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தப்ப கோணப்புளியாங்க வாத்தியாரு பள்ளிக்கூடம் போவாத ஆனா ஆவன்னாக்கூட தெரியாத பாரதபூசாரி தாத்தாவைப் பாருங்கடா எவ்வளவு நினைவா எத்தனைப் பாட்டை மறக்காம இன்னும் பாடிக்கிட்டே இருக்காரு. ஒத்த திருக்குறளை மனப்பாடம் சொல்லத் தெரியாம இந்த முழி முழிக்கிறீங்கன்னு ரெண்டு எத்துவிட்டனிக்குத்தான் தெரியும் அவர் எழுத படிக்கத் தெரியாதவர் என. எதுக்கெடுத்தாலும் என்ன படிச்சிருக்கன்னு கேட்குற இந்த காலத்துல அத பத்தி பேசி என்ன செய்ய. அதனாலதான் இப்படியொரு முடிவு செய்திருக்கே, இனி வண்டி எடுப்பதில்லை. முடிந்தளவு நடந்தே போகப்போறேன். துணியை நானே சலவை செய்துகொள்ளப்போறேன். வீட்டில் வேறு யாரோட செலவையும் நான் கட்டுப்படுத்த முடியாது. அவங்கவங்க சந்தோசத்தை நாம எப்படி தடுக்க முடியும். அவங்க எப்படியோ இருந்துட்டுப் போகட்டும் என்னால முடிந்தளவு செலவை குறைக்கப் போறேன். அதன் முதற்கட்டமாகத்தான் இந்த நடவடிக்கை என்றேன்.

ஆமாண்டா தம்பி நீ சொல்றதும் உண்மைதான். படிப்பு செலவு போகத்தான் மீதி செலவை திட்டமிட முடிகிறதென கிளம்பிய அக்கா மறக்காம இதையும் சொல்லிப்போனாங்க. இனி நானும் எங்க வீட்டுக்காரருக்கு மொட்டைப் போடப் போறேன்.

நன்றி- பாவையர் மலர்.

Friday, July 5, 2013

நிரம்பும் பாத்திரம்இறுக மூடிய பின்னும்
சொட்டும் துளிகள்
நிரம்பி வழிகிறது

ஒன்றை மறந்து
பிரிதொன்றை கேட்டபடி இருக்கும்
மகனின் ஆசைகளும்

நாளை பார்க்கலாம்
அடுத்த வாரம்
கட்டாயம் வரும் மாதமென
பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்...

Sunday, June 23, 2013

• ந.பெரியசாமி கண்டடைந்த கவிதைகள் •

(மதுவாகினி தொகுப்பை முன்வைத்து)

- ப.தியாகு

முன்பு தீராநதியில் வெளியான ந.பெரியசாமியின் ’எஞ்சியவை’ என்ற ஒரு கவிதை இப்படித் துவங்கும்,

// பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவப்புக் கண்ணீர்த்துளிகள் //

அதன் பின்பு எப்போது மாதுளம் பழத்தை பிளந்தபோதும் உடையும் ஐந்தாறு கண்ணீர்த் துளிகளிலாவது விரல்கள் நனைந்திட நேர்கையில் பெரியசாமியின் இக்கவிதை நினைவில் வழிந்திடாமல் இருந்ததில்லை.

அடுத்தொரு கவிதை மழை பற்றியது. வெயில்நதியில் வெளியானதும் கூட. ‘உயிர்ப்பு’ எனும் அந்தக் கவிதை இவ்வாறு துவங்கும்,
// நேற்றைய மழை முழுவதையும்
சுவடற்றுக் குடித்தேன் //

இப்படி மழையும் தானும் இரண்டறக் கலந்து, மழையின் பயணத்தில் அதன் அத்தனை குணங்களையும் தன்னில் பிரதிபலிப்பதாயமைந்த ந.பெரியசாமியின் மற்றுமொரு அற்புதமான கவிதை அது. கவித்துவம் மிகுந்திருக்கும் இவ்விரு கவிதைகள் மூலம் எனக்கு அறிமுகமான ந.பெரியசாமியை சிதறலாக அங்கும் இங்கும் சிற்றிதழ்கள், இணைய இதழ்களில் வாசித்து வந்த என் கையில் புரளும் தொகுப்பு மதுவாகினி, அவரை இன்னும் அருகிருந்து வாசிப்பதில் வரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

தொகுப்பில் ந.பெரியசாமி தன்னுரையாக தந்திருக்கும் பத்தியின் ஆரம்ப வரிகள் அது ஒரு தனிக் கவிதை போல அழகு சேர்த்திருக்கின்றன. கவிதையை நீச்சலுடன் ஒப்பிட்டு அவர் சொல்லியிருப்பது எத்தனை உண்மை என்பது, அடிக்கடி மூக்கிலும் வாயிலும் நீர் புகுந்துவிட திணறித் தத்தளிக்கும் என் போன்ற, நாளும் கவிதை நீச்சல் பழகுபவர்களுக்கு புரிபடும்.

இந்தயிடத்தில் ‘நிறைய நண்பர்கள் நிறைய எத்து விட்டும் புரிந்தும் புரியாமலுமாக ஏதோவொரு மாய விளையாட்டை இன்னமும் கவிதைகளோடு நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று வெளிப்படையாய்ச் சொல்லிவைப்பது பெரியசாமியின் தன்னடக்கத்தை காட்டுகிறபோதும், இப்படியும் சொல்லும் பெரியசாமியின் மதுவாகினி தொகுப்போ மாயவிளையாட்டு தன்னை தளர்த்திக்கொண்ட பொழுதில் அவர் கண்டடைந்த கவிதைகளால் நிரம்பியிருக்கிறது.

முதலாவதாக என்னை பெரிதும் பாதித்த கவிதை, ’நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்’ (பக்கம்-44). தான் அருகிருந்து பார்த்த ஒரு பித்தனைப் பற்றிய சித்திரம் பிசகாமல் வெளிப்பட்டிருக்கும், நெகிழ வைக்கும் கவிதையிதில்.

// சடை சடையாய்
உடலெங்கும் தொங்கிக் கிடக்கும்
சாவிகளும் பூட்டுகளும் //

என்று விவரணையாக வரும் வரிகள் அந்த பித்தனை நம் கண்முன் நிறுத்துகின்றன. மேலும் ஒரு பிராந்தனை, அவனின் வினோதச் செய்கைகளை அவனை கலைத்திடாமல் கள்ளத்தனமாக கவனிக்க விழைவதை

// ஒலி செவியடையும் தூரத்தில்
எனதுடலை வைத்தேன்
எனதிருப்பை சவமாக்கி
வேகமாய் பேசத் துவங்கினான் //

என்பதாக எழுதியிருப்பதில் இருக்கும் நுட்பம் வியக்க வைக்கிறது.

அடுத்து ‘அறிதலின் பின் கதவு’ (பக்கம்-17) கவிதையில், காதலர் தம்முள் பேசிக்கொள்வதை

// மழைபட்ட தகரமாக தடதடத்து
பேசியவைகளை திரும்பத் திரும்ப பேசி //

என்று எழுதியிருப்பது பரவசப்படுத்துகிறது.

வழமை போலவே மழை, நீர் அல்லது இயற்கையை மையச் சரடாக கொண்ட பெரியசாமியின் அனேகக்கவிதைகளில் ’மிச்சமிருக்கும் நாட்களில்’ (பக்கம்-23) என்கிற கவிதை அது சொல்லும் சேதியால், நடையால், கிளர்த்தும் உணர்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

// வகைமைகள் அற்றுப்போக
தின்றழித்து பெருக்கம் கொள்கின்றன
பாலையெனும் ஒற்றை நிலம்

அவசரமாக ஆயுளை விழுங்கும்
இழப்பின் பட்டியல் நீள
புகைந்து கிடக்கும் நம்மின்
நெடுங்கோபத்தை
சேகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது
விதைகளென. //

இயல்பில் வரிகள் பிரச்சார நெடியோடு இருப்பினும், கோரும் மௌன வாசிப்பில் மனதை உணர்வுத் தளத்தோடு இணைக்கிறது இக்கவிதை.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு என்று சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அவர்களின் குரலாக ஒலித்திருக்கும் ஒரு கவிதை ‘சுமைதாங்கி கற்களல்ல’ (பக்கம்-78) என்பது. திரைத்துறை (ஒன்றிரண்டு பேர் இதில் விதிவிலக்கு) முதலான ஊடகங்கள் என்றென்றைக்குமாக திருநங்கைகளை பரிகாசப்பொருளாக, பாலியல்

தொழிலாளிகளாக, யாசகர்களாக சித்தரித்துவந்ததையெல்லாம் தாண்டி, அவர்களின் காலம் இன்றைக்கு மாறி வருகிறது. எந்தத்துறையிலும் சாதிக்கவான மன உறுதியும், தடைகளை தகர்ப்பதற்கான ஒற்றுமையும் அவர்களிடம் கூடி வருவது தெளிவு. பெரியசாமியின் கவிதை மூலம் எவரின் பாசாங்கான கழிவிறக்கத்தையும், பச்சாதாபத்தையும் திருநங்கைகள் வீராவேசத்தோடு புறந்தள்ளுவதாயமைந்த வரிகள் இவை,

// இறக்கி வைத்தபடியே இருக்க வேண்டாம்
தன்னிரக்கங்களை
சுமைதாங்கி கற்களல்ல

…………………………………..
…………………………………..

எங்களுக்கும் தெரியும்
மண்ணை மிதித்து நடப்பது எப்படியென //

கார்ட்டூன் சானல்களினூடாக குழந்தைகள் மட்டுமே வீட்டிற்குள் உலவ அனுமதிக்கும் பன்றிகளையும் நேசிக்கும் மதுவாகினி

// தன் முலை வருடியபடி
விதந்துகொண்டிருப்பாள்
முட்டி இழுக்கும் குட்டிகளுக்கு
ஒருசேர பசியடக்கும்
தாய்மையை //

இப்படியாக மெய்யாகவே நெஞ்சை உருகச்செய்கிறாள், ‘பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி’ (பக்கம்-38).

இன்னும், ‘குலைத்து தீரா மௌனம்’ (பக்கம்-31)-ல்
// கருத்த மண் படர்ந்த
காட்டின் மையத்தில்
திரண்ட மக்காச்சோளக் கதிரென நிற்பாள் //

’கொன்றைப் பூக்கள் உதிரத் துவங்கின’ (பக்கம்-48)-ல்

// தன்னில் பயணித்த நீரோடைகளின்
தடயங்களோடிருக்கும் மணல் பரப்பில் //

’நகைப்புக்காலம்’ (பக்கம்-73)-ல்

// ஆழமிகு கிணற்றிலிருந்து
ராட்டினங்களின் துணையின்றி
மேலேறி வந்தன முக்காலமும் //

‘காத்திருந்த துளி’ (பக்கம்-77)-ல்

// துளி நீராக்கினேன் உயிரை
பசிய இலையொன்றில் மிதக்கச் செய்தேன் //

’காத்திருப்பு’ (பக்கம்-35)-ல்

// விரிந்து கிடக்கும் பாலை நிலத்தில்
கையளவு நீரை கண்டடையும்
தவிப்புக்கு ஒப்பானது
வாழ்வின் துணையை அடைவதும் //

’பொருந்தாக் காலம்’ (பக்கம்-25)-ல்

// கன்றுண்ணாது த்தும்பும் மடியென
வழிந்தன குளம் குட்டைகள் //

போன்ற வரிகள் தரும் போதை அசாத்தியமானது.

தவிர, தொகுப்பின் சில கவிதைகளான

• புலி வால் பிடித்த கதை
• தறுதலை
• அவள் போட்ட விடுகதை
• புதைகுழி
• சித்திரங்கள்
• தவிப்பு
போன்ற கவிதைகள் எளிமையும், வாசிப்பில் அயர்ச்சியையும் தருபவையாக இருக்கின்றன என்பதை என்னளவில் அவதானிக்கிறேன்.மதுவாகினி (கவிதைகள்)
ந.பெரியசாமி

விலை : ரூ.70

வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்
தொடர்பு எண்: 9994541010

Saturday, June 22, 2013

சன்னல் வழியாக
எனை அழைத்தது
தன் துளிகளை அனுப்பி
வேடிக்கை பார்க்க
தன் ஆட்டத்தை துவங்கியது மழை
காமக் களியாட்டத்தில் மனம்

Tuesday, June 18, 2013

தொடரும் கதை

கடலும் மலையும் தாண்டி
மந்திரவாதியால் காக்கப்படும் குப்பியுள்
அடைபட்டதும் அல்ல

அதிகாரம்
பொய்யை உண்மையாக்க
நக்கீரனை வீழ்த்திய நாடகத்தில்
கொங்குதேர் வாழ்க்கை...
பாடலிலிருந்து உதிர்ந்ததும் அல்ல

மாட்டுக்கறி ருசித்த
மதிய பொழுதொன்றில்
சோற்றில் சிக்குண்டதை மீட்க
சிரிப்பை மின்னச் செய்தது

மகிழ்வுதான்
மயிர் நீட்டிக்கும்
உறவுகளை நினைக்க...

Sunday, June 16, 2013

ரயிலானவன்

தற்கொலை செய்துகொள்ள தோன்றியது
சலிப்பூட்டும் மருத்துவச் செலவீனங்களுக்குப் பின்னும்
துளிர்ப்பூட்டும் நோய்மை தீராதிருக்க

தூக்கிட்டுக் கொள்ளலாமென யோசிக்க
முன்பு பார்க்க நேர்ந்த
தூக்கிட்டு இறந்தவரின் காட்சி தோன்றியது
முடிவை மாற்றிக்கொண்டேன்

வரும் ரயிலின் முன் பாய்ந்திட தீர்மானித்தேன்
தற்கொலைக்காரர்களின் கனிவான கவனத்திற்கு
எதிர்பார்க்கப்படுகிறது
இன்னும் சற்று நேரத்திற்குள் வருமென
அறிவிப்புப் பெண்ணின் குரல் ரசித்துக் கடந்தேன்
நிலையத்திலிருந்து வேகமெடுக்கும்
இடம் கனித்து நின்றேன்

என்னுள் பச்சை நிறம் ஒளிர்ந்திட
வேகமெடுத்து அருகில் வந்தது
ஒவ்வொரு பெட்டியும்
ஒவ்வொரு குழந்தையானது
ஓடிப்போய் நானும் ரயிலானேன்.

Saturday, June 1, 2013

நெட்டிலிங்கப்பூ

வீழ்ந்தும் மலர்ந்திருந்த
நெட்டிலிங்கப் பூவின் எதிர் அமர்ந்தேன்
எனக்கான கலயத்தை நிரப்பி
அதற்கும் துளி ஊட்டினேன்
பிரதேசத்தை இளம் மஞ்சள் நிறமாக்கியது
என் பார்வையின் எல்லைக்குள்
அனு உலையேதும் நிறுவப்படாமலிருக்க
கிடைத்த சாவகாசப் பொழுது கரைந்தது
நிழலாய் போராடுபவர்களின் துயரம்
உருமாற்றம் கொள்ளச் செய்யும்
ரசவாதமிருப்பின்
தாய்ப்பாலென புகட்டி
கரப்பான்களின் பிரதேசமாக அறிவித்து
களிப்படைந்திருக்கும் அரசு
வழியற்றுப் போக
வெளியேற்றப்படவேண்டிய கழிவுகளாய்
பதிவேட்டில் படிந்த எம்மக்களின்
துளிர்த்தெழும் அறப்போராட்டங்கள்
வெற்றிகொள்ளுமெனும் நம்பிக்கையில்
ததும்பத் துவங்கியது நெட்டிலிங்கப்பூ.

நன்றி: காக்கைச் சிறகினிலே மே 2013

Saturday, May 25, 2013

ஓராண்டானது அண்ணாச்சி
 -ந.பெரியசாமி


எது ஒள்றிலும் புழங்கத் துவங்கும் முன்

எளிதாக அதை மனம் ஒத்துக்கொள்வதில்லை…சேலத்தில் நிகழ்ந்த இலக்கிய நிகழ்வு ஒள்றை முடித்து இரவு விடுதியில் அமர்ந்திருந்தபோது உடன் சிபிச்செல்வனும் இருந்தார். உடையாடலின் இடையே நிறைய்ய இணைய இதழ்களிலும் முகநூலிலும் கவிதைகள் எழுதிறீங்க இது வேண்டாமே. அச்சு இதழுக்கு அனுப்புங்க. அதிகமாக எழுதாதிங்க என்றார். நிறைய்ய நண்பர்களும் இக்குற்றச்சாட்டை சொல்லிக்கொண்டிருந்தனர். வழக்கம் போலவே சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தேன். ஏனோ குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்பு தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. உடனடியாக மறுப்பு தெரிவித்தால் குற்றச்சாட்டுகளை திரும்ப யோசிக்கவும் மாற்றங்கொள்ளவும் முடியாதென்பதால். நம்மீது அக்கறை உள்ளவர்கள்தானே நமை குற்றம்சாட்டுவார்கள்.2004ல் எனது முதல் கவிதைதொகுப்பு நதிச்சிறை வந்த பிறகு அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு அச்சு இதழ்களில் வந்துகொண்டிருந்தாலும் நிறைய்ய கவிதைகள் நோட்டுகளிலேயே அடை காத்துக்கொண்டிருந்தன. இச்சூழலில் எனது மொபைல் பழுதடைந்துவிட புதிய மொபைல் ஒன்று வாங்கினேன். அதில் தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்க முகநூல் ஆரம்பித்தேன். பின் மெய்ல் அனுப்ப கற்றுக்கொண்டேன். நிறைய்ய இணைய இதழ்கள் இருப்பதை அறிந்தேன். புதிதாக கிடைத்த சைக்கிளை எப்பவும் ஓட்டிக்கொண்டிருக்கும் சிறுவனின் மனநிலையோடிருந்தேன். இருக்கும் எல்லா கவிதைகளையும் தினம் ஒன்றாக வெளியிட்டுக்கொண்டிருந்தேன்.  உடனடியாக விருப்பம் தெரிவிப்பதும் அவர்களது போட்டோவோடும் எண்ணிக்கைகளை பார்க்க சந்தோசமாகத்தான் இருந்தது. நிறைய்ய வெளிநாட்டு நண்பர்களின் நட்பும் கவிதைகள் குறித்த உரையாடலும் கிடைத்தது.  திடுமென ஒரு சந்தேகம் எழுந்தது இணைய இதழ்கள் எதை அனுப்பினாலும் பிரசுரித்துவிடுவார்களோவென. எனக்கு திருப்தி ஏற்படுத்தாத என் சில கவிதைகளை அனுப்பிப்பார்த்தேன். யாரும் வெளியிடவில்லை. மேலும் எனக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. பஸ் பயணம், அலுவலகத்தில் டீ டைம், லஞ்ச் டைம் என என்னேறமும் செல்வழியாக இணையத்தோடே இருந்ததால் நிறைய்ய எழுதுவதாக தோற்றம் வந்துவிட்டது.இச்சூழலில் சிபி அண்ணாச்சி தொலைபேசியில் உரையாடினர். தான் ஒரு வலைப்பக்கம் துவங்கி அதில் இலக்கிய இணைய இதழ் நடத்தப் போவதாக. சேலத்தில் அறையில் அவர் பேசியது காட்சியாக ஓடி மறைந்தாலும். மாற்றங்களை கொண்டாடும் மனோபாவத்தோடு உற்சாகமாக அவரோடு உரையாடினேன். இலக்கியச் சுற்றம் என பெயரிட்டு  படைப்புகளை வாங்கி வெளியிட்டார். அவரது வலைப்பக்கத்தின் பார்வையாளர்களின் பங்களிப்பு  அதிகரிப்பதைக் கண்டு அவருக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.கொஞ்ச நாட்கள் அப்படியே நகர மீண்டும் பேசினார் அடுத்த இதழ் மலைகள்.காமாக வரப்போகிறதென. வழக்கம்போலவே அவரோடு உற்சாகமாக பேசினேன். சமரசமற்ற படைப்புத் தேர்வு, புதியவர்களை வரவேற்பது, ஆளுமைகளை எழுதச்செய்வது, நல்ல மொழிபெயர்ப்புகளை கொண்டு வருவது என அவரின் கடின உழைப்பை செலுத்தியபடியே இருந்தார். ஆங்காங்கே நண்பர்களும் மலைகள் குறித்து பாராட்டுகளை தெரிவித்தனர்.நேரில் பார்க்கும் போதும், முகநூலில் உடையாடும்போதும் மலைகள் மலைகள் என ஓயாது பேசிக்கொண்டே இருப்பார். எரிச்சலாகக் கூட இருக்கும். எப்பப்பாரு மலைகள் மலைகள் என பேசிக்கிட்டே இருக்காறேவென. நிறைய்ய நண்பர்களும் குறைபட்டுக்கொண்டார்கள். யாரையாவது பார்த்தால் வாங்க எப்படி இருக்கீங்க என கேட்ட அடுத்த நொடியே நம்ம சைட் பார்த்தீங்களா அந்த மொழிபெயர்ப்பு படிச்சீங்களா இந்தக் கவிதையை படிச்சீங்களாவென மலைகள் குறித்தே பேசிக்கொண்டே இருப்பார்.சமீபத்தில் ஓசூர் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்த நம்மாழ்வார் ஒருவன் எத்துறையை தேர்ந்தெடுக்கிறானோ அத்துறை குறித்த அக்கறையும் அதுசார்ந்த சிந்தனையோடும் இருந்துகொண்டே இருந்தால் அத்துறையில் அவன் பெரும் நிபுணனாக வரமுடியும். எல்லோரும்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் யாரோ ஒரு சிலர் மட்டும்தானே ஒலிம்பிக்கில் ஓட முடிகிறது என்றார். அப்போது எனக்கு சிபி அண்ணாச்சியும் மலைகள்.காமும் நினைவுக்கு வந்தது.மலைகள்.காம் இணைய இதழாக இருந்தபோதும் குறித்த காலத்திற்கு கொண்டு வரும் ஒழுங்கும், அதற்காக தன்னை எப்பவும் ஒப்புக்கொடுக்க காத்துக்கொண்டிருப்பதும், சலிப்படையாத உழைப்பும் இன்னும் மலைகள்.காமை உலகத்தாரிடையே கவனப்படுத்தும் என நம்புகிறேன்.

இரண்டாம் வயதை துவங்கும் மலைகள்.காமை உங்களைப் போன்றே நானும் மகிழ்வோடு வரவேற்கிறேன்.

nantri:malaigal.com

Friday, May 24, 2013

தாய்மையும் உலகமும் பெரியசாமியின் ’மதுவாகினி’
பாவண்ணன்

பெரியசாமியின் இரண்டாவது  கவிதைத் தொகுதி மதுவாகினி. சிக்கலற்ற இயல்பான சொற்செட்டுகளோடும்  வசீகரமான கற்பனையோடும் இருக்கின்றன  அவருடைய கவிதைகள். புறக்காட்சிகளில் இயல்பாகவே ஈடுட்பாட்டுன்  படியும் மனம்கொண்டவராக  உள்ளார் பெரியசாமி. இந்த ஒன்றுதலால் உள்ளோங்கியெழும்  அனுபவங்கள் பெரியசாமியிடமிருந்து அழகான கவிதைகளாக வெளிப்படுகின்றன.

குழந்தைக்குச் சோறூட்டும் மனைவியைப் பார்த்து, தன்  தாயை நினைத்துக்கொள்ளும் கணவனைப்பற்றிய சித்திரத்தைக்  கொண்ட ‘பூனையாவாள் அம்மா’ கவிதை நல்ல வாசிப்பனுபத்தைக் கொண்ட ஒன்றாகும். எல்லாக்  குழந்தைகளும் இயல்பாகவே  உணவுண்ண அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. அதற்கு உளவியலாளர்கள் சில  காரணங்களை முன்வைக்கிறார்கள். பிறந்த குழந்தையை, அதன் பக்கத்திலேயே இருந்து கவனித்துக்கொள்கிறாள் தாய் . தொடக்கத்தில் ஒரு நாளின் தொண்ணூற்றியைந்து விழுக்காடு நேரத்துக்கும் மேல் குழந்தையின் அருகிலேயே செலவழிக்கிறாள் தாய். வயிற்றுக்குள் சுமந்து பார்த்துக்கொண்டதுபோலவே பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்கிறாள் அவள். அவள் உடல்மணத்தாலும் ஆடைகள் மணத்தாலும்தான் தாயை அடையாளம் வைத்துக்கொள்கிறது குழந்தை. குரல் அடையாளமும் தொடுகை அடையாளமும் அடுத்தடுத்து உருவாகின்றன. முக அடையாளம் இறுதியாகவே உருவாகிறது. தாய்ப்பாலில் இருந்து மாறி உணவுண்ணும் பருவத்துக்கு குழந்தை அப்போது வந்து சேர்கிறது. தொடக்கத்தில் தொண்ணூற்றியைந்து விழுக்காடு குழந்தையின் அருகில் செலவழித்த தாய்க்கு அதே அளவு நேரத்தைத் தொடர்ச்சியாகசச் செலவழிக்க முடிவதில்லை. வீட்டுப் பொறுப்புகள் முக்கியமான காரணம். எண்பது, எழுபது, அறுபது, ஐம்பது என அந்த நெருக்கம் குறைந்துகொண்டே வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் குழந்தைகளால், அந்த மாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. எப்பாடு பட்டாவது, தன் தாயை தன்னருகில் அதிக நேரம் வைத்துக்கொள்ள குழந்தை நினைத்துக்கொள்கிறது. அழுகையின் மூலம் முதலில் அது தன் எண்ணத்தைச் சாதிக்க நினைக்கிறது. அல்லது சிரிப்பின் மூலமோ விளையாட்டின் மூலமோ தன் விருப்பத்தைச் சாதிக்க நினைக்கிறது. அவையிரண்டின் வழியாகவும் தன் எண்ணங்கள் நிறைவேறுகின்றன என்பதை உணரும் குழந்தை, அவற்றையே தன் முக்கிய ஆயுதங்களாக வைத்துக்கொள்கின்றன. பொதுவாக உணவுண்ணும் பருவத்தில் குழந்தைகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதற்குக் காரணம் இதுதான். அது ஒரு குழந்தைத்தந்திரம். குழந்தைக்கு உணவூட்டுவதற்காக பூனைபோலவும் மயில் போலவும் யானைபோலவும் உடல் அசைவுகள் காட்டி, குரல் வேறுபாடு காட்டி, மணிக்கணக்கில் செலவழிக்கும் மனைவியைப் பார்க்கும் இளம்கணவனுக்கு தன் குழந்தைப்பருவமும் தன் தாயின் உருவமும் ஒருசேர நினைவுக்கு வருகின்றன. தாய்மையே இந்த மானுடத்தைக் காப்பாற்றித் தாங்கிக்கொள்கிறது. பெரியசாமியின் கவிதை வரிகள் இத்திசையின் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

தாய்மையைக் கொண்டாடும் மற்றொரு கவிதை ’பன்றிகளின்  இருப்பைத் தேடும் மதுவாகினி’. தாய்ப்பன்றியிடம் முட்டிமுட்டிப் பாலருந்தும் குட்டிப்பன்றிகளைப் பார்த்து தன்முலை வருடிப் பார்க்கும் மதுவாகினியின் சித்திரம்தான் இக்கவிதை. விலங்கானால் என்ன, பெண்ணானால் என்ன, இரண்டு சூழல்களிலும் தாய்மை என்பது ஒன்றென உணர்த்தும் தருணம் மகத்தானது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது வள்ளலார் வரி. பால் ஊற்றெடுக்கும் மார்பைக் கண்டபோதெல்லாம் பாலூறும் தாய்மையும் உயர்ந்த குணம்.

பெரியசாமியின் கவியாளுமை  வெளிப்படும் சிறந்த கவிதை  ‘மழையின் பசியாற்றினோம்’. ’விசும்பின் துளிவீழின் அல்லால்  மற்றாங்கே பசும்புல் தலைகாண்பதரிது’ என்பது வள்ளுவர் வாக்கு. மண்ணின் பசியை ஆற்றுகிறது மழை. பசியாறிய மண்ணிலிருந்து உயிர் தழைத்து மேலோங்குகிறது. மழைக்குப் பசிக்காதா என்றொரு கேள்வியை முன்வைக்கிறது குழந்தை. கொட்டாங்கச்சியில் மன் இட்லிகளைத் தட்டித்தட்டி எடுத்து மழையின் முன் வைக்கிறது. உக்கிரமான பசியோடு கொட்டும் மழை அந்த மண் இட்லிகளைக் கரைத்துண்டு பசியாறி உற்சாகத்தோடு பொழியத் தொடங்குகிறது. இந்த மண்ணுலகைக் காக்கும் தாய்மையை மழை வெளிப்படுத்துகிறது என்றால், மழையின் பசியாற்றிக் காக்கும் தாய்மையை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறது. குழந்தைமையின் கற்பனையோடு ஒளிரும் இக்கவிதையின் வரிகள் படித்த கணத்திலேயே மனத்தில் பதிந்துவிடுகின்றன.   குழந்தைமையின் பண்புகளோடு கூடிய ’கனவுவேட்டை’ கவிதைக்காட்சியும் மறக்கமுடியாத ஓர் அனுபவம்.

குழந்தைகள் வளரும் பருவத்தில், பெற்றோர்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் விசித்திரமானது. ஒரு கட்டம்வரைக்கும் குழந்தையின்  விருப்பத்தையொட்டி நடந்துகொள்ளும் பெற்றோர்கள், அடுத்த கட்டத்தில் பானை வனைவதைப்போல தன் விருப்பத்துக்கும்  கனவுக்கும் ஏற்றவகையில்  குழந்தைகளை வனையும்  முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகளின் இயல்பான ஆர்வத்தையோ ஈடுபாட்டையோ  அவர்கள் ஒருசிறிதும் பொருட்படுத்துவதில்லை. வெற்றிப்புள்ளியைநோக்கி அவர்களைத் தள்ளிச் சென்று நிறுத்துவது தன் கடமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். குழந்தைகளின் கனவுகளும் பெற்றோர்களின் கனவுகளும் மோதிக்கொள்ளும் விசித்திரமான புள்ளியொன்றை ’சித்திரங்கள்’ என்னும் தலைப்பில் அழகான கவிதையாக மாற்றியிருக்கிறார் பெரியசாமி. ஒரு குழந்தை ஓவியம் பழகிக்கொண்டிருக்கிறது. ஓவியம் இன்னொரு உலகுக்கு அக்குழந்தையை அழைத்துச் செல்கிறது. இந்த உலகத்துக்குள் இருந்துகொண்டே நிறங்கள் வழியாகவும் கோடுகள்வழியாகவும் இன்னொரு உலகத்தை அது தீட்டிக்கொள்கிறது. மேகம், பறவை, வானம் என பெயர் சூட்டி மகிழ்கிறது. கிணறு வரைந்து, அதிலிருந்து பாயும் நீரால் புல்வெளி வளர்த்து மரங்கள் வளர்த்து குடிசையும் உயர்ந்தெழும்வண்ணம் செய்கின்றது. கற்பனை செல்லும் திசையில் மிதந்தவனாக மேலும் வானம், இருள், நிலவு என தீட்டிக்கொண்டே போகிறது.  அக்குழந்தையை உருப்படியான ஆளுமையாக உருவாக்கும் கனவில் உள்ள பெற்றோரின் குறுக்கீடு, குழந்தையின் கனவை தவிடுபொடியாக ஆக்கிவிடுகின்றது.

’பரிகாரம்’ என்னும் கவிதையில் காதறுந்த வீடுகள் என ஒரு புதிய சொல்லை உருவாக்கியுள்ளார் பெரியசாமி. ’காதறுந்த ஊசியும் கடைவழிக்கே வாராதுகாண்’ என்றொரு பழைய பிரயோகம் உண்டு. அந்தப் பிரயோகத்தின் தூண்டுதலால் பெரியசாமி இப்படி ஒரு சொல்லை உருவாக்கியிருக்கக் கூடும். காதறுந்த ஊசிபோலவே காதறுந்த வீடுகளும் நன்றாகவே உள்ளது. புற ஓசைகளும் அசைவுகளும் பிரக்ஞையிலேயே பதியாதபடி உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக்கொண்ட வீட்டை அடையாளப்படுத்தவே காதறுந்த வீடு என்கிற அடையாளம் உதவுகிறது. தூக்கம் கலைந்து, தன்னை வந்தடைந்த ஓசைகளையும் சொற்களையும் கேட்கும்போது அவை எவ்வகையிலும் மகிழ்ச்சியைத் தராதவையாக இருப்பது துரதிருஷ்டமானது. காதறுந்த வீடுகளே காதுள்ள வீடுகளைவிட மேலானவைபோலும். ஆனால் விழிப்பைவிட உறக்கம் உயர்வானதாக மாறுவது எவ்வளவு பெரிய துரதிருஷ்டம். அந்தத் துரதிருஷ்டத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழியை யோசிக்கவைக்கிறது கவிதை.

’காது அவிஞ்சான்பட்டி’ அழகான ஓர் அரசியல் கவிதை. நாட்டுப்புறக்கதைகளின் சாயல் படிந்த இக்கவிதையில் உள்ள இயற்கைத்தன்மை மனத்தைக் கவர்கிறது.

கிணற்றில் தள்ளிவிடப்பட்டு, கால்களையும் கைகளையும்  உதறி உதறி தானாகவே நீச்சல்  பழகிய அனுபவத்தை நினைவுபடுத்திக்கொண்டு, கவிதையையும் அதுபோலவே பழகியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஒரு கட்டம்வரைக்கும் இது  சரி. நீச்சல் பழகியவர்கள்  ஆழச் சென்று மூச்சடக்கி தரைமண்ணைத் தொடுகிறார்கள். கிளறிப்  பார்க்கிறார்கள். வைரத்துகள்களை  அள்ளிவருவதுபோல நீர்மட்டத்துக்கு வந்து கையுயர்த்திக் காட்டுகிறார்கள். விசித்திரமான நீர்த்தாவரங்களின்  அமைப்பையும் நிறத்தையும்  காண்கிறார்கள். தரையில்  புதைந்த பல பழைய பொருள்களை  அதிசயமாகக் கண்டடைகிறார்கள். இத்தகு அதிசயக் கண்டடைதல்கள்தாம் இரண்டாம் கட்டத்தில் நிகழவேண்டும். பெரியசாமியின் கவிதைப்பயணம் சரியான திசையிலேயே செல்வதாகவே தோன்றுகிறது. அவருடைய புதிய கண்டடைதல்களை அடுத்தடுத்த தொகுப்புகளில் காணமுடியும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது இத்தொகுதி.

(மதுவாகினி. கவிதைகள். ந.பெரியசாமி.  அகநாழிகை பதிப்பகம்.33, மண்டபம்  தெரு, மதுராந்தகம். விலை. ரூ.70)

nantri:malaigal.com

Sunday, May 12, 2013

கசப்பேறிய சிந்தனை

சொற்களின் கலவியால்
விஷமேற்றப்பட்ட சாதிக்காயை
வழிய வழிய தின்னச் செய்கிறார்கள்
கசப்பான சிந்தனையால் கல்லெறிந்தான்
பிறந்திருக்கும் தன் பேத்தியை
நினைவில் கொஞ்சியவாறு
காணப் பயணித்தவரின்
கண்ணைத் தின்றது
... சேதாரங்கள் தலைவனை விடுவிக்கும்
நம்பிக்கையில் இல்லம் அடைய அதிர்ந்தான்
இணையாளும் குழந்தையும்
தீக்காயங்களோடு தப்பிக் கிடந்தனர்
கண் போன தந்தையைக் காண
பயணித்த பஸ் எரியூட்டப்பட்டதாம்
இன்னமும் விடுதலை செய்யப்படாமலிருக்க
தலைவன் சிறையில் வாசித்துக்கொண்டிருக்கிறார்
காந்திய சிந்தனைகளை...