Saturday, August 3, 2013

மூன்றாம் நாளில்...


மூன்றாவது நாளாக தொடர்ந்தேன்
தனித்த அறையொன்றில்
இன்றும் வீதியில் கீரை விற்பனை
கண்களை இறுக மூடி உச்சரித்தேன்
இந்த விளங்காதவனை கட்டியதற்குப் பதிலா
வீட்டிலேயே கெடந்திருக்கலாம்
அருகாமை இல்லத்தில் ஆரம்பமாகியது
நம்ம டீம் மேட்சில்
என்னம்மா கலக்கிட்டானுவ தெரியுமா
உரையாடல் கடந்தது
அவசரமாக தலையிலடித்துக் கொண்டு
மீண்டும் இறுக மூடினேன்
அம்மாடியோவ் கொலுசு சத்தம்
ஆதாரமாய் மனசில் நிற்கும்...
வரிகளை ரசித்து திரும்பினேன்
பாரும்மா இந்த சுப்புவை
பழிச்சிக் காட்டிக்கிட்டே இருக்கா
புகார் ரசித்து மீண்டு
ஞானமடைந்தேன்
தனித்திருத்தலே தியானிப்பாகாதென...
0

அம்மாவாசை நிலவு

நுணா மரக்கன்றை நட்டு வைத்தேன்
என் பிணைப்பை
தன் தளதளப்பில் காட்டியது
மின்சாரமற்ற இரவில்
புழுக்கம் தணிக்க மரம் அடைந்தேன்
அதுவும் விழித்திருந்தது
பால்யத்தில் வேறொரு நுணாவோடிருந்த
நட்பு குறித்து பேசினேன்
மகிழ்வை இலையாக
உடலில் சரிந்தது
நகர மனமின்றி அதன் உடல் சாய்ந்தேன்
ஏதாவது கேட்கச் சொன்னது
நிலவை தொட்டுப் பார்க்க வேண்டுமென்றேன்
சம்மதத்தை கனியாக உதிர்த்தது
எறும்பாக கற்று
வரும் அம்மாவாசைக்கு வந்துவிடு
எறும்பு ஊற
உயர்ந்து கொண்டே இருப்பேன்
எளிதாய் தொட்டுத் திரும்பலாமென்றது
ஒவ்வொரு மாதமும் கடந்துபோகிறது
அம்மாவாசை...

நன்றி:குவர்னிகா 41வது இலக்கிய சந்திப்பு மலர்


No comments:

Post a Comment