Tuesday, July 4, 2023

நன்றி: செம்மலர்

 நிலம் பூக்கும் சூரியன்கள்

- ந.பெரியசாமி



அங்கும் இங்குமாக எதன்பொருட்டு என்பதை அறியாமலே அலைந்துகொண்டிருக்கும் நாய்களின் பொழப்பை ஒத்ததாக இருக்கிறது நம் வாழ்வும். கொஞ்சம் நிதானிக்கச் செய்து தவறவிட்டவைகளின் அழகியலை காட்டி, ஒளிர்வை காணாது கண்மூடிக் கடந்ததைச் சுட்டி, இதுவும் வாழ்வுதான் எதை வாழ்கிறாய் என கேள்விகேட்டு, நம்முள் குடியேறிக்கொண்டிருக்கும் மிருக குணங்களை கழட்டி விட்டபடியிருக்கிறது கலை இலக்கியங்கள்.  அதில் மிகு நுண்ணுணர்வையும் பிரதிபலிப்பதாக உள்ளன கவிதைகள். காலகாலமாக எழுதப்பட்டுக்கொண்டிருந்தாலும் இன்னும் சொல்லப்படாத சங்கதிகள் இருந்துகொண்டே இருக்கின்றன. நந்தன் கனகராஜ் தன் மேழி நகரும் தடம் தொகுப்பில் நமக்கான புதிய சங்கதிகளை வைத்துள்ளார். அவரின் முந்தைய தொகுப்பிலிருந்து மாற்றம் கொண்டு கவிதை சொல்முறையில் கச்சிதத்தன்மையை அடைய முயற்சி செய்துள்ளார். 


உறுதித்தன்மையை பிரதிபலிக்கக் கூடியது பாறைகள். ஆனால் அப்பாறைகளில் மெல்லிய கோடிட்டு ஓங்கியடிக்க பிளவுகொண்டுவிடும். ஒருவிதமான இளகியத்தன்மையை அது உள்ளொடுங்கி வைத்துள்ளது. அது நீரின் சலனமாகவும் பறவைகளின் கீச்சொலிகள், மரங்களின் பேச்சு என சலனம் கவிதையில் கண்டடைந்துள்ளார்.


உலகம் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்ட போதும் 'கவனமாக விடிந்து, சரியாக இருட்டி' கிராமங்கள் அதற்கேயுரிய தனித்தன்மைகளை இன்னமும் கூட அடைகாத்து வைத்துக் கொண்டிருப்பதை காட்சிபடுத்துகின்றன கவிதைகள்.


" யார் தச்ச சட்ட...

இது

எங்க தாத்தா தச்ச சட்ட..." 

எனும் சிறார்களின் பாடல்களில் மிதந்து வழியும் கொண்டாட்டம் நம்மை என்றும் தொற்றிக் கொள்ளும். இதுபோன்ற பாடல்கள் வழக்கொழிந்து போன காலத்தில் நம்மை காலத்தால் பின்நோக்கி பயணிக்க வைக்கிறது கவிதை. நம் நிர்வாணத்தை மறைக்க உற்பத்தி செய்த பாடுகளை மெச்சும் பாடல் அது. நிலம் பூக்கும் வெள்ளைச் சூரியன்களான பருத்தியை விளைவிக்கும் வாழ்விலிருக்கும் வாதைகளிலிருந்து ஆசுவாசம் கொள்ளச் செய்யும் பாடல் அது. 'நீர்- நிறை- வெள்ளை' கவிதையில் கசப்பேறாத கிராமத்து இளைஞனான கனகராஜிடம் இக்கவிதை உருக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.


கொத்து மலர்களைக்

கையளித்து

வார்த்தைகளற்று நிற்கிறேன்.


உள்ளிருந்து 

ஒளிரும் சுடருக்கு

மலரின் சுகந்தம்.

*

தொலைவு


கைப்பிடித் தண்ணீரில்

வரவேற்பறையின் மலர்

புன்னகைக்கிறது.


நெடுந் தொலைவில் 

அதன்

இளந் தண்டுகளை

வெயிலுக்கு ஏந்தி நிற்கிறேன்.


இந்த இரு கவிதைகளும் அகத்திற்கும் புறத்திற்குமான ஓர்மையை உணர்த்துகின்றன. கொத்து மலர்களை கையளித்த போதும் மனதுள் அதன் நறுமணங்களை வைத்துக் கொள்ளுதலும், வரவேற்பறை மலர் கண்ட கணம் தொலைவிலிருக்கும் குளமாக மாற்றம் கொண்டு, இளம் தண்டைத் தாங்கும் நீராகவும் தன்னை மாற்றிக் கொள்ளும் உருமாற்றம் தரும் அழகியலை ரசித்துக் கிடக்க செய்கின்றன கவிதைகள். ' வெளி வெளிச்சம்' எனும் கவிதையில் வரும்  ' காட்டுப் பூக்களாக மலர்ந்து நிற்கிறேன்' என்பதையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம். கண்டராதித்தனின் திருச்சாழல் தொகுப்பில் வரும் 'ஞானப் பூங்கோதைக்கு  நாற்பது வயது' எனும் கவிதையில் கவிசொல்லி ஞானப் பூங்கோதையாக மாறுவதும், பின் ஞானப் பூங்கோதையாகவே வாழ்ந்திருப்பதையும் கூறும் பொக்கிசமான அக்கவிதையும் நம்முள் வந்துபோகும்.



அறத்திற்கு புறம்பான செயல்களைச் செய்ய நம்முள் குற்ற உணர்வுகளை எற்படச் செய்யாது, அதனை சமன்செய்ய அல்லது மன்னிப்பை பெற பரிகாரம் எனும் ஏற்பாட்டை உருவாக்கியிருக்கும் மதச் செயல்பாட்டை பரிகாசம் செய்கிறது 'பரிகாரம்' கவிதை.


எவரிடம் எதை எப்படி பேசவேண்டும் என அறிந்திருந்தல் ஒருவித கலை, இவன் இவன் எதற்காக இதை பேசுகிறான் என அறிந்துகொள்ளுதல் மற்றொரு கலை. உங்கள் எழுத்து பாரதியை நினைவூட்டுகிறது என்பதையும், உங்கள் வாழ்வில் காந்தியை காண்கிறேன் என்பதையும் நம்மால் மெச்சிக்கொள்ள இயலுமா? சிலருக்கு நாணம் நாக்கை தொங்கச் செய்திடும், பலருக்கோ புத்தியை அழிக்கும் போதையூட்டும். 'சொல்' கவிதையில் வரும் 'சொல்லை நாடகமாடச் செய்தல்' எனும் கூற்று அழகு.


பொதுபுத்தியில் இன்னமும் கூட பெண் குழந்தைகளை பெற்றவர்களின் மீதான பார்வை எத்தகைய அபத்தமிக்கது என்பதை உணரச் செய்கிறது 'துலக்கம்' கவிதை. ஐந்து பெண் பிறந்தால் அரசனாக இருந்தாலும் ஆண்டியாவன் எனும் சொலவடை வேறு. அவர்கள் எத்தகைய செயலைச் செய்தாலும் வீட்டில் பெண் பிள்ளை இருப்பதை மறந்திட்டியா என தொடர்ந்து குற்றவாளி போன்ற மனநிலையில் வைத்திருக்கச் செய்யும் மனப்போக்கு தற்காலத்தில் மாறியிருப்பது ஆறுதலாக உள்ளது. வாழ்வின் மீதான பயம் எதை எதையெல்லாம் பிடித்தாலும், பிடிக்காவிட்டலும் சமன்செய்து வாழவேண்டி இருக்கிறது என்பதை 'அச்சம்' கவிதையில் உணரலாம்.


யுக கசப்பு


உலகின்

கடவுச் சொல்லைக் கொண்டு வந்த

சிசு

கைகளை இறுக்கி மூடியிருந்தது

இனிப்புச் சுவையின் 

மூன்று சொட்டுகளை

ஒவ்வொருவராக

நாக்கில் விடத் தொடங்கினர்

நிர்வாண உடம்பில் தொற்றிக் கொண்ட

எல்லாவற்றிற்குமாக

வீறிடத் தொடங்குகிறது.


பிளவுகொண்டு வரும் பிறப்புகள் அனைத்துமே ஏதேனுமொரு மாற்றத்தைக் கொண்டு வரும் கடவுச் சொல்லோடே இருக்கும். கண்களையும் கைகளையும் இறுக்கிக் கிடக்கும் குழந்தையின் வாயில் உன் வருகையின் பொருட்டு எங்களின் மகிழ்விதுவென்பதைச் சுட்டும் முதல் சொட்டும், அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாய் இரு என இரண்டாம் சொட்டும், கற்றறிந்து புதியனவற்றை இவ்வுலகுக்கு வழங்கென மூன்றாம் சொட்டும் வைத்து எங்கள் மிதேறிக் கிடக்கும் கசப்பை அகற்று எனும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க சிசு வீறிடுகிறதென்றும் நமக்கான அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ளவும் கவிதை இடமளிக்கிறது.


ஒப்பீடுகள் சிக்கல்களையும், சங்கடங்களையும் உருவாக்கக் கூடியதுதான். ஆனால் சமூகம் குருட்டாம்போக்கில் ஒப்பீடுகளை செய்துவிடுவதில்லை. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது, தாயப்போல பிள்ளை, நூலைப்போல சேலை என்பதைப் போன்று, பேரைக் கெடுக்க பிறந்திருக்கான் பாரென்றும் சொல்வதுண்டு. நிறம் உருவ ஒற்றுமை மட்டுமே காரணிகளாக இருந்துவிடுவதில்லை. பண்புகளையும் அறிந்த பின்னே சொல்லப்படுவதுண்டு. நமக்கு வேண்டுமென்றால் நிறைவுகொள்ளாதிருக்க சங்கடங்கள் ஏற்படுவதை நேர்த்தியாக விவரிக்கும் 'சிக்கல்கள்' கவிதையில் தன் தாத்தாவின் பெருமிதத்தையும் சொல்வதாக இருப்பதால் இக்கவிதை மேன்மையடைகிறது. 


சிக்கல்கள்


தாத்தனின்

கடைந்தெடுத்த உருவம் என்கிறார்கள்.


அத்தனை நெருக்கத்திலா

தள்ளி விடுவது.


எதிர்படுபவரிடம்

தொலைவைச் சுருக்கும்

எந்தப் பதிலையும் எனக்குத் தெரியாது.


சேகரிப்பில் உள்ள

தானியங்களை விதைத்து

அனைத்தும் தர இயலாது.


வாய்க்காலும்

வண்டி மாடுகளும்

நிலைகொள்ளாமல் இருக்கும்

உழைப்பை வழங்க முடியாது.


ஒவ்வொரு பருவத்திற்கு

முன்னும் பின்னும்

மண்ணை வயப்படுத்தும்

நுட்பம் திறக்க வராது.


இணையிடம்

அப்படியொரு காதலில்

நிறைந்திருக்கத் தெரியவே தெரியாது.


என்னை

அவ்வளவு

முண்டியடித்துத் தள்ள வேண்டுமா

என்ன.


இக்கவிதையில் நாம் நமக்கான தாத்தாக்களையும் வாழச் செய்திடலாம்.


பரந்துபட்ட வாசிப்பும் எழுத்தின் மீதான காதலும் நிறைந்து சமூகத்தில் அன்றாடம் சனங்களோடு புழங்கி, தாத்தா, பாட்டிகளின் வாழ்வு குறித்த சொற்களை மனக்குதிரில் கொட்டி வைத்திருக்கும் நந்தன் கனகராஜ் மொழியில் தனக்கான தனித்த நடையும், சொல்லல் முறையும் கண்டடைந்து மொழிக்கு நிறைவான பங்களிப்பை செய்வார் எனும் நம்பிக்கையை வலசை பதிப்பத்தில் வந்திருக்கும் 'மேழி நகரும் தடம்' தொகுப்பு ஏற்படுத்துகிறது.