Tuesday, January 31, 2012

மரங்கொத்தி

உறிஞ்சி வீசப்பட்ட நொங்குக் குழியான
கண்ணுள் இருந்தும் வெளியேறியது மரங்கொத்தி
எளிதில் துளையிடக் கூடியதாகையால்
தென்படுவோரின் உள்ளாடைகளைக்
கொத்திக் கொத்தி எறிந்து கொண்டிருந்தது
உள்ளாடைகள் அற்றோரும் வந்திட
சபித்து
கடந்ததும் காண்போரை
சற்றே கடினமாகவும் கொத்திவிடுகிறது
வெளியெறிந்தவை பெரியதும் சிறியதுமாக
குத்திட்ட குன்றுகளாகி
குலை குலையாகத் தொங்கிக் கனக்க
குற்ற உணர்வு வேர்வையாகி வடிந்திட
ஒளிந்துகொள்ளும் மரங்கொத்திகள்
சும்மாவே இருப்பதில்லை...

சதா கொத்தித் திரியும் சிரமம் தவிர்க்க
வெளியெங்கும் மிதக்கவிட்ட நீலக்கன்னிகளின்
அவிழ்ந்து போடப்பட்ட ஆடைகளை
மோந்து கொழிக்கிறார்கள்...

nantri:uyirosai

Saturday, January 28, 2012

மாயங்கள் புரிகிறதே மதுவாகினி

உன்னுடனான உரையாடலுக்குப் பின்
செத்தை வெளியேற்றிய தாய்பசுவின் அமைதி கவ்வ
நூல் கோர்த்து தொங்கவிடப்பட்ட
வண்ண பலூன்களாக மிதக்கும் உன் வார்த்தைகள்
என்னுள் பயணிக்கத் துவங்குகிறது
சலவைக்குறியின் மையாகி
மகரந்தம் விதைக்கும் தட்டானாகவும்
நிலத்தை உயிர்ப்பூட்டும் மண்புழுவாகி
ஊற்றுக் கண்ணாகி கிணற்றை ஈரமாக்குகிறது
இலுப்பை பூவாகி உடலை சக்கரையாக்கி
பவளமல்லியாகி சுவாசம் மணந்திட்டு
தொட்டாஞ்சிணுங்கியாகி நாணம் காட்டுகிறது
சுற்றும் நாய் ஒன்றிற்கு
பரிவுபொங்க சோறிட்டு
மீந்த மீந்த பாலூட்டுகிறது பூனைக்கு
வழிய வழிய செடிகளுக்கு நீர் இறைத்து
கையேந்துபவருக்கு ரூபாய்தாளை பிச்சையிடுகிறது
இருசக்கர வாகனத்தையும்
குதிரைகள் பூட்டிய ரதமாக்கி
புவி ஆளப் பிறந்தவனாய் பவனிவரச் செய்து
மாயங்கள் புரிகிறதே மதுவாகினி...

நன்றி: நவீன விருட்சம்

Friday, January 27, 2012

வியப்பு

ஆதியில் என் பாட்டி
வர்ணங்களை குழைத்துக்கொண்டிருக்க
தவறி விழுந்த ஒரு சொட்டை
தன் வம்சத்தின் நிறமாக்கி
மூதாதைகளாக திரிகின்ற காக்கைகள்
ஒரு போதும் வந்ததில்லை
குருவி குருவி என்றோ
மைனா மைனாவென்றோ கூவிட...

Monday, January 23, 2012

நன்றி: உயிர்மொழி

சுழலும் கண்களை
என்னுள் மையமிடச் செய்யும்
ஆளுமையற்றன்தான்
பொந்துகளை நிரப்பும்
மண்ணாகவேணும் இருக்க லாயக்கற்றவனல்ல...

சொருகும் சேலையின்
மடிப்பு கலையாதிருக்கவும்
மலர் சூடிக்கொள்ள
ராமனுக்கு அணிலென
ஊக்கு வாங்கிக் கொடுக்க
ஈரம் வழியும் கூந்தல் உலர்த்த
சாம்பிரணி புகையிடவும்
உதிரும் குரல்களை
பொத்தி பொத்தி அடைகாக்கவும்
நதி ஏந்தி செல்லும் மலராக்கி
ஆசைகொள்ளும் தூரம்
இதழ்களின் ஒத்தடங்களால்
உடலசதி போக்கிடவும்
பேரன்பு செலுத்தக்கூடியவன்தான்

என்ன செய்ய
நோக்கிடும் ஆண்டாள்கள்
தன் பீடத்தோடு பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்
இறைவனை நோக்கி...

Wednesday, January 18, 2012

நன்றி : உயிர்மொழி

உருவானார்கள் மகான்கள்
நெடிய தவத்தினால்
கெடுதிகளை கண்டுணர்ந்தார்கள்
உலகின் மீதான பற்றுதல்களால்
பிரகடனப்படுத்தினார்கள் விடாது
வழித்தோன்றியவர்களும் தொடர்ந்தனர்
கதை கவிதை ஓவியமென
தனக்குத் தெரிந்த மொழிகளில்
இயற்கையும் சொல்லிப்பார்த்தது
அதற்கான மொழியில்
நிலம் நடுங்கி புயல்கண்டு
சுனாமியாகி கொத்தாய் பறித்தும்
எதையும் செவிகொள்ளாது
சுயம் வளர்க்க தீரா பசியோடிருக்கும்
மயிராண்டிகளின் வாழ்வின் மீது
சாவகாசமாய் நின்று
நிறைவான மூத்திரம் பெய்வோம்...

Friday, January 13, 2012

தேவனின் கை தவழ்ந்த ஆடு

கொப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கொம்பு
நீண்ட வாலோடும்
திமிர்த்துத் திரியும் காளையானேன்
இறக்கையிருந்தும் பறக்கவியலாது
ஒடுங்கிக்கிடந்த கறிக்கோழியாக
அவதரித்ததற்குப் பின்
சிறிது நேரம் கழிய
பாவப்பட்டவர்கள் பின்தொடர்ந்து வர
தேவனின் கைகளில் தவழும்
ஆட்டுக்குட்டியானேன்

ஆடு மாடு கோழிகளை ருசித்திராத
ஞாயிற்றுக் கிழமையின் இரவில்...

நன்றி: புன்னகை

Thursday, January 12, 2012

இனி நான் தனியன்

சுருட்டப்படாத காலத்தின் அடையாளங்களோடு
விரிந்து கிடந்த படுக்கை
சிதறிக்கிடந்த சிகரெட் துண்டுகள்
காலி மதுக்குப்பிகள்
இருப்பை நெடிவீசி நிச்சயித்தன
கைரேகைகளின் அழுத்தம் தாளாது
நசிந்துகிடந்தன ரம்மி சீட்டுகள்
சூழலுக்கேற்ற ராகங்கள்
அலைபேசியில் கசிந்துகொண்டிருக்க
நிகழவிருக்கும் அறை நண்பனின்
திருமண உரையாடலின் நீட்சியில்
மது நாவை தடிமனாக்க
பிதற்றத் துவங்கினான்
தேற்றுதல்களை செவிகொள்ளாது
இவ்வறையில்
இனி நான் தனியனென...

நன்றி : புன்னகை

Wednesday, January 11, 2012

நிறைவு

 எறும்பாக ஊர்ந்து
சிறு சிறு தானியங்களென
சொல்லைக்கடத்தி
புற்று நிறைத்தேன்
வழிந்த வார்த்தைகள்
அவளின் கன்னக்குழியமர்ந்தது
முத்தங்களாக...

நன்றி : புன்னகை

Tuesday, January 10, 2012

தீட்டுறிஞ்சி

..


தூர்த்த குளக்கரையிலிருந்து வந்த விசும்பலின்
துயர்வெடிக்க கலைந்த தூக்கத்தின் எரிச்சலோடு
இடம் அடைய அதிர்ந்தேன்
எழுப்பிய தூண்களிடையே நின்றிருந்தாள்
குலசாமியான செல்லியம்மன்
யாது துயர் தாயே
மண்டியிட்டேன்
அவளும் மண்டியிட்டு தலைநிமிராது
நாப்கீன்கள் படைத்திட வேண்டினாள்
வீடு திரும்ப நினைத்துக் கொண்டேன்
பெரியாயிக்கு சேலை படைக்கும்
அம்மாவின் வேண்டுதலையும்
நிறைவேற்றிட வேண்டுமென...

நன்றி: திண்ணை

Thursday, January 5, 2012

புலியாகும் மதுவாகினி

ஓய்ந்த நேரங்களில்
விளையாடத் துவங்குவோம்
எப்பொழுதுமே மதுவாகினியின் தேர்வு
புலியாகவே இருக்கும்
நான் ஆடாகிக் கொண்டிருப்பேன்
ஒன்றிரண்டை காவுகொள்ள
மகிழ்வில் நடனமாடுவாள் கட்டங்களில்
நகர இயலாது ஒரு புலியை மடக்க
பெரும் காடாகிவிடும் கட்டங்கள்
உடல் சிலிர்க்க மாறுவாள்
புலியாக மதுவாகினி
உக்கிரம் தாளாது
பயத்தில் அலைவுறும் ஆடுகள்
வெற்றிகொள்ள சாந்தமாவாள்
காடு மீண்டும் கட்டமாகிட
கலைந்து போவோம்
மீந்த காய்கள்
பெரும் ஆடாக வளர்கிறது என்னுள்
என் புலி
எவ் வனத்திலோ...

நன்றி : வல்லினம்

Sunday, January 1, 2012

வாசமற்ற வாழ்வு

அதுகளின் மொழி
எனக்கெப்படித் தெரியுமெனும்
வியாக்கியானங்களை விலக்கிவையுங்கள்
அன்பின் வயப்பட பரிச்சயமாகும்
அடர்ந்து கிடந்த அந்திமந்தாரையில்
அமர்ந்திருந்த தட்டான்களின்
உரையாடலின் கவலைப்பாடிது
துரத்த துரத்த போக்குக்காட்டி
களைப்புறும் கணம் கையுள் சிக்க
சிறு சிறு கல் தூக்கச் செய்யும்
தண்டனையிட்டு மகிழ்ந்திட்ட
மழலைகளின்
வாசனையற்றுப் போனதே
நம் வாழ்வு...