Thursday, June 30, 2016

தானியக்காளியின் முத்த விதைகள்...

தனித்திருந்தேன் மதிய பொழுதொன்றில். சூரியன் உடலுக்கருகில். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் அருவியாக கொட்டியபடி இருந்தது. எதன் மீதும் நாட்டங்களற்றிருந்தேன். பாலைக்கான நிறத்தை கொட்டியபடி இருந்தது காலம். வாசல் திறந்தது. முத்தம் ஒன்று உடல் அணைக்க சூரியன் விலகியது. குளிர்மையின் நிறம் அறையுள் நிரம்பிக்கொண்டிருந்தது. எல்லாவற்றின் மீதும் பற்றுகள் அரும்பத் துவங்கின. முத்தத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சக்திஜோதி முத்தத்தின் வலிமை உணர்ந்தவர்போலும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் முத்தத்தின் ஈரத்தை உணரலாம். மழைக்குப்பின் இலைகளில் தேக்கி வைக்கும் சொட்டு துளி போல் இவரின் கவிதைகளில் முத்தம் தொக்கி நிற்கும். மழைபோல் முத்தம் பேதமற்றது.

சக்திஜோதியின் கவிமுலை எப்பொழுதும் பாலை முத்தத்தின் ஈரத்தோடு நிறுத்தங்களற்று சுரந்தபடியேதான் இருக்கிறது. இது எல்லோருக்கும் வாய்க்காது. அவருக்கு வாய்த்திருக்கிறது. அவரும் அதை லாவகமாக கையாள்கிறார். நீர்த்துப்போகாது அவ் வார்த்தையை உயிர்ப்போடு வைத்திருப்பது அவரின் ஆளுமையாக இருக்கிறது. அக்கவிமுலை ஆதித்தாயின் முலையாகவும் மாறுகிறது. ஆதிப்பெண்களின் வலியை தன் கவிதைகளில் உணரச் செய்திடுகிறார்.

ஓதற்பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, காவற்பிரிவு, பொருள்வயிற் பிரிவு, பரத்தையற் பிரிவு என வெளியேறிப்போயிருக்கும் தலைவனுக்காக காத்திருப்பின் வலியையும், காத்திருப்பின் காலங்களில் அவர்களின் நினைவில் இருக்கும் காதலையும் இன்றைய மொழியில் அதன் வலிமையோடு தந்தபடி இருக்கிறார் கவிதைகளில். அப்படியான கவிதைகளை இவரின் ஆறாவது தொகுப்பாக வந்திருக்கும் சொல் எனும் தானியம் தொகுப்பிலும் காணமுடிகிறது.

தான் பிறர் கையகப்படுத்தும் நிலம் அல்ல என்பதை உணர்ந்து நிலவை தனதாக்கிக் கொண்டு சூரியனை நோக்கி பயணிப்பவள்...

தன் வேலை நிமித்தமான பிரிவின் காலங்களை மகளின் ஓவியங்களில் கண்டடைபவள்..

புறப்புகார்களில் வெறுப்புற்று தன்னை தனிமைப்படுத்தி சொற்களின் ஆழம் கண்டு மௌனத்தில் ஆரவாரிப்பவள்...

தன் கனவின் ரகசியங்களை பறவைகளுக்கு இரையாக்குபவள்...

கால மாற்றத்திற்கேற்ப அப்பா மகள் உறவுகளில் ஏற்படும் மாற்றத்தை தன் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கத்தோடு கவனித்திருப்பவள்..

தன் இயல்பை கணித்து பஞ்ச பூதமாக பரிணமித்திருப்பவள்...

புதிரும் மாயங்களும் நிறைந்த வாயிற்கதவை என்றுதான் திறக்கப்போகிறீர்களோவெனும் எதிர்பார்ப்போடு இருப்பவள்...

வானுயர வலம் வரும் தேவனுக்காகவும், பால்ய சிநேகிதிக்காகவும் காத்திருப்பவள்...

வனதேவதையாக மின்னலை வெடிப்புறச் செய்து தீக்கோளமாகி நடனமிட்டு காமத்தை விளைவிப்பவள்...

உள்கிடக்கும் அழுக்கு, தோய்ந்த குருதி, துயருற்ற கண்ணீரின் உப்புப் படிமமென எல்லாவற்றையும் முத்தத்தால் கலைத்து காத்திருப்பவள்...

கூந்தலில் வழியும் பச்சை மழையை வேடிக்கை பார்த்திருப்பவள்...

முந்தானையில் நிரப்பி வந்த கூலியால் வீட்டின் பசியாற்றி நிலமெங்கும் காதலை விளைவித்துக்கொண்டிருப்பவள்...

தன்னிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யாவற்றையும் நேசிப்பவள்...

இங்கு எல்லாம் பெண்ணாகவே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கென்று ஏதுமில்லை எனும் நிலையில் இச்சமூகம் வைத்திருந்தபோதும் அன்பின் நிலமென இருக்கிறேன் எனும் பெருமிதம் கொள்பவள்...

தன்னுள் இருக்கும் காதல் சுரபியின் காரணம் தெரியாது வியந்து கிடப்பவள்...

விடுவித்துக்கொள்ள இயலாத சிலிப்புறும் கணங்களை வரிசையிட்டு விடுவித்துக்கொள்ளப்போவதாக பாவனை செய்பவள்...
சூரிய வாசம் உணர்ந்து தன்னை ஒப்புக்கொடுத்த தினத்தின் நினைவுகளை காட்சிப்படுத்துபவள்...

கடல் சேரா கூழாங்கற்களின் இசையை கேட்டபடி வெயில் நதியில் தகித்திருப்பவள்...

திளைத்திருந்த கணங்களை காட்சியாக்கி கொண்டாடக் கூப்பிடுபவள்...

மௌனப் பரிசில் நிரம்பி விடுபவள்...

பனித்துளிகளை சுவைப்பவள்...

கிடைத்த  கிடைக்கும் முத்தங்களை, உடலை நெகிழச்செய்து கண்களை சிவப்பேற்றிய முதல் முத்தத்தோடு பொருத்திப் பார்ப்பவள்..

புராதன வேட்கை எதுவென அறிந்து கொள்ள இளமையை தொலைத்தேனா அறிந்தேனா எனும் குழப்பங்களோடு இருப்பவள்...

நீர்க்கால்களின் தடம் அறிந்து அருந்த வல்லவரை தன் இமைக்குள் வைத்து நீலவானமாக ஒளிர்விக்கச் செய்பவள்...

மாசற்றது நிர்வாணம் என பெருமை பூப்பவள்...

கசடுகள் நிரம்பிய மனதோடு காலங்காலமாக உடன் வாழும் சக இனத்தை தங்களின் சவுகரியங்களுக்காக பெரும் துரோகங்களை விளைவித்துக்கொண்டிருப்பதால் உண்டான தொடரும் தூக்கமற்ற இரவுகளின் வலியைக் கூறி சவம்போல் யுகாந்திர உறக்கம் எனை தழுவட்டும் என வேண்டுபவள்...

மனதில் தாவரங்களை வளர்த்தபடி இருப்பவள்...

நிலைத்திருத்தலில் தன் இயங்குதல்களை கண்டடைந்தவள்...

ஒளிர்தலின் மர்மங்களை சொற்களாக்கி பூசிக்கொண்டிருப்பவள்...

வீடு மட்டுமே தன் உலகமல்ல என வாழ்பவள்...

காயப்படுத்தியது போதும் ஒரு முத்தம் அல்லது ஒரு சொல் போதுமென இறைஞ்சுபவள்...

கொடுக்கப்படாத முத்தத்தை உடலில் துளிர்க்கச் செய்திருப்பவள்...
என எண்ணற்ற பெண்களை சொல் எனும் தானியம் தொகுப்பில் தரிசிக்க இயலுகிறது.

சொல்லப்படும் சமாதானங்களிலும் சுயமான சமாதானங்களிலும் தங்கள் வாழ்வை இயல்பாக நகர்த்தியபடி இருக்கும் பெண்களின் வலிகளை இத்தொகுப்பெங்கும் சக்திஜோதி விதைத்தபடி செல்கிறார்.

நன்றி- படிகம்

Thursday, June 23, 2016

சொற்களற்ற அனுபவங்கள்...


பாம்புகள் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். தன் தோலை உரித்து வெளியேறுவதன்
மூலம். அவ்வப்போது வாசகனும் தன்னை புதுப்பித்துக்கொள்ளச் செய்ய வேண்டி
இருக்கிறது. மொழி அதற்கான தேவையை உருவாக்கிவிடுகிறது.

வாசிப்பின் ஆரம்ப காலங்களில் கவிதைகளை உரத்து வாசித்து ஒலியை உள்வாங்கி
ஒளிப்படமாக்கி பார்ப்பதுண்டு. எவ்வளவு அவசர கதியில் இருந்தாலும் ஏதோவொரு
ஒளிப்படம் நம்மை நிதானிக்கச் செய்வதுபோல சில கவிதைகள் நிதானிக்கச்
செய்தன. பின் கவிதைகளை ஓவியமாக்கிப் பார்த்து ரசிக்கத் துவங்கினேன். இதை
என் வாசிப்பின் அடுத்த படிநிலையாக பார்த்தேன். சில ஓவியங்கள்
தூக்கமிழக்கச் செய்தன. வேறு ஓவியங்களை வரையவும் தூண்டின. எதையும்
உற்றுநோக்கி உள்பிரியும் வேர்களோடு பயணிக்கச் செய்து திரளும் சிறு சிறு
முடிச்சுகளை நீவிப்பார்த்து மனம் லயித்துப்போய் கிடப்பதுண்டு. இப்படியான
சூழலில் நரனின் ‘ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள்’ தொகுப்பின் கவிதைகள்
புரிதல் சார்ந்த விளையாட்டுகளை நிகழ்த்திப் பார்க்கச் செய்தன. சில
கவிதைகள் கைகளை மூடிக்கொண்டு உள் இருப்பதை அறிய செய்யும் விளையாட்டில்
தோற்பதும் ஜெயிப்பதுமான நிலை இருக்க ஆர்வம் குறையாது தொடர்ந்து பயணிக்கச்
செய்தன. சிறு சிறு கீச்சுமூட்டலில் கைகளை எளிதில் விரித்திடும்
குழந்தைகளாக இல்லாமல் அதற்கான சிரத்தையையும் உழைப்பையும் கோரின கவிதைகள்.
சில கவிதைகள் பிரிக்க இயலாது பசைகள் இறுகிப்போயி இருந்ததால் போதும் என்று
கடக்க வேண்டியும் இருந்தது. வேறு சந்தர்ப்பங்களில் மீண்டும்
முயற்சிக்கலாம் என விட்டுவிட வேண்டியதாகிவிட்டது.

‘சிறிய தோட்ட’ தொகுப்பின் முதல் கவிதை உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி
அனிச்சையாக கைகள் அருகிலிருக்கும் குழந்தைகளை வருடத் துவங்கின. போரில்
எதையெல்லாம் செய்யக்கூடாதென்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கும் நம்
காலத்தில் நடந்த சிங்கள அரசின் இன அழித்தொழிப்பு போர். தொலைக்காட்சியில்
பார்த்த குழந்தைகளின் முகம் என்றும் நீங்கா காட்சியாக மனதில் இருக்கும்.

அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா குழந்தையின் உடலுக்கென...

என முடியும் இக்கவிதையின் நீட்சியாக பார்க்கலாம் ‘எப்படியும் இறக்கப்
போகிறோம்’ கவிதையை. உழவு கழப்பையை கழு முனையாக நிமிர்த்தி வைத்து ஒழுங்கு
குலையாது வரிசையாக நின்று தற்கொலை செய்துகொள்ளம் விவசாயிகளின் உதிரங்களை
குதிரைச் சக்தியாக்கி விரைந்து அழிவை உண்டாக்கி வெற்றிகொண்டபடி இருக்கும்
வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரபோக்கை சுட்டுகிறது
கவிதை. ஆனால் நாமோ எதையும் கண்டுகொள்ளாது நம் மலைகளை டெண்டர் விட்டு
மெருகேற்றி சமதள பலகையாக்கி பூங்காக்களில் வேடிக்கை பார்ப்பதை கவலையோடு
‘காதை மூடிக்கொள்’ கவிதையில் காட்சிபடுத்தியுள்ளார். காலங்களையும்,
வரலாறுகளையும், ஓவியங்களையும், சிற்பங்களையும், மூதாதையரின் வாழ்வையும்
தாங்கி ஆதி உயிராய் இருக்கும் மலைகளை சிறு சிறு ஜெலட்டின் குச்சிகளால்
தகர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதன் துயரம் எப்பொழுது போராட்டமாக
உருக்கொள்ளுமோ தெரியவில்லை.

ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் அவன் மட்டுமே அந்நிறுவனம் சார்ந்து
இருப்பதில்லை. அவனது குடும்பமும் அந்நிறுவனம் சார்ந்தே இருக்க வேண்டியதாக
இருக்கிறது. குடும்பத்தின் நிகழ்வுகளைக்கூட தீர்மானிப்பது
நிர்வாகமாகத்தான் இருக்கிறது. நேரடியாக வேலை பார்க்காவிட்டாலும் குடும்ப
உறுப்பினர்களும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக
இருக்க வேண்டி இருக்கிறது. ஒருவனுக்கு மட்டும் குறைந்த கூலியை
கொடுத்துவிட்டு ஒரு குடும்பத்தையே தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும்
உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் போக்கை வெளிப்படுத்துகிறார் ‘’ஷூ’’
கவிதையில்.

காலையில் விடைபெறும் போது மனைவியின்
உதட்டைக் கவ்வி அவள் நாவை என் எச்சிலால்
ஈரப்படுத்துவேன்
-பதிலீடாய் அவளும்-
தினமும் அலுவலம் வந்ததும்
என் எஜமானனின் ‘’லீ கூப்பர்’’ கால் பதாகைகளை (ஷூ)
நாவால் நக்கி சுத்தப்படுத்துவேன்.

மனைவியின் நாவால் வலதுகால் ‘’ஷூ’’ சுத்தமாச்சு.
இத்துயர் அறியா உழைப்பாளிகள் இன்னமும் விசுவாசமாக வாழ்ந்துகொண்டிருப்பது
பெரும் சோகம்.

சாதாரணங்களை அசாதாரணங்களாக மாற்றுகையில் படைப்பாளிகளின் நுட்பம்
கொண்டாடப்படுகிறது. கல் குதிரை முதுவேனிற்கால இதழில் வந்த இசையின்
‘’நளினக்கிளி’’ கவிதை எல்லோரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது.
இத்தொகுப்பில் இருக்கும் ‘பறவை’ கவிதையும் அப்படியானதொரு நுட்பமான
பார்வையை அழகியலோடு வெளிப்படுத்தும் கவிதைதான். பச்சை குத்தப்பட்ட பறவையை
பறவையாகவே பார்க்கும் இக்கவிதையில் இயங்கும் குழந்தை மனம் எல்லோருக்கும்
பிடித்தமானதாகவே இருக்கம். தன் நுட்பத்தால் வாசகனை வியப்பிற்கு
உள்ளாக்கும் நிறைய்ய கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு. ‘பேரம் படியாத போது
கவிதையில் இருக்கும் லாடக்காரன், வரைந்த மலைப்பாம்பில் அயர்ச்சியோடு
தூங்கியவன், யோனியை குளிர்ந்த சூரியனாக்குபவள்... என நீளும் கவிதைகள்
உண்டு.

எதையாவது செய். பிறரின் கவனத்தை நூல் அளவிலேனும் ஊடறுத்து விடு
என்பதாகத்தான் பட்டது வரையப்பட்ட குகைக்கும், வரையப்படாத குகைக்குமான
வேறுபாடுகளை கூறும் ‘தைலவர்ண கரம்’ கவிதை.

நாளிதழ்களில் வரும் குழந்தைகளுக்கான பகுதியில் செய்துபார்க்கும்
பயிற்சிக்காக வரையப்படும் உருவங்கள் அதில் காட்சிபடுத்தியுள்ளதை விடவும்
வேறுவிதமான அழகியலோடு குழந்தைகள் வெளிப்படுத்துவதுண்டு. இத்தொகுப்பிலும்
சில கவிதைகள் வேறுவிதமான அனுபவங்களை ஏற்படுத்துகின்றன. மொழியில்
எனக்கிருக்கும் பற்றாக்குறையால் அதன் நுட்பங்களை காட்சிபடுத்த
தெரியவில்லை. என் வாசிப்பின் போதாமையை உணரச்செய்தன கவிதைகள்.
படைப்பாளியின் அனுபவங்களை கண்டடைவதும் அதன் காட்சியமைப்பில்
லயித்துப்போவதும். அக்காட்சியமைப்பு நெடுநேரம் மனத்திரையில்
ஒட்டிக்கிடப்பதும் நிகழ்ந்தபடியே இருக்கிறது. ‘பசியோடிருக்கும்
கரையான்கள்’, ‘மரமேறத் தெரியாதெனச் சொன்னவன்’, ‘2 பாயிண்ட் தீவிரம்’
போன்ற கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நாம் எவ்வளவு அப்பாவிகளாக இருந்து ஏமாற்றம் கொண்டு அடிமை வாழ்விற்குப்
பழகிப்போகிறோம் என்பதை ‘கனவு தானே நண்பா...’ கவிதை சுட்டுகிறது.
தொடர்ந்தாற்போல் இருக்கும் ‘இங்கே’, ‘உணவு வு...ண...உம் குறிப்பிடத்தக்க
கவிதைகள். நம்மை ஆளும் நாற்காலி சாயம்போன பழுப்பேறிய சிந்தனை படிந்து
அதில் அமரும் முகம் மட்டுமே மாறிக்கொண்டிருக்க நாம் வாழ்வில் எவ்வித
மாற்றமும் அற்று உடலில் இருக்கும் சவுக்கடி விளாறுகளை
‘ரே-பான்’,’ரீபோக்’-களால் பளபளத்திருப்பதை வல்லரசு வாழ்வில் மக்கள்
மகிழ்கிறார்கள் என வாய் கூசாது அரசுகளின் புழுகு நீடிப்பதை
உணர்த்துகிறது.

பெரும் துயர்களையும், அழிவுகளையும் அவ்வப்போது மட்டும் நினைவில்
வைத்திருந்து காலப்போக்கில் எவ்வித சலனமும் இன்றி மறந்து விடுகிறோம்.
நம்மை மறதி மிக்கவர்களாக வைத்திருப்பதில் ஊடகங்கள் பெரும்
பங்காற்றுகின்றன. ஆனால் படைப்பாளிகளோ அதை நமக்கு நினைவூட்டிக்கொண்டே
இருப்பார்கள். இதை முரகாமியின் ‘யானை காணாமலாகிறது’ கதை வெகு அற்புதமாக
சித்தரித்திருக்கும். நரனும் ‘நிறை மஞ்சள் கோதுமை’ கவிதையில் போபாலில்
அடுக்கி வைக்கப்பட்ட ஓராயிரம் மண்டை ஓடுகளை நினைவூட்டி மீண்டும் அதற்கான
சூழலில் வாழ்கிறோம் அணுஉலைக் கழிவால் உண்டாகப்போகும் அழிவை நினைவு
படுத்துகிறார்.

தேசத்தில் நாம் தொலைத்தவைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில்
தேசத்தையே தொலைத்துக்கொண்டிருக்கிறோம் எனும் உண்மை உரத்துக் கூறுகிறது
இத்தொகுப்பு.

கவிதைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. வேறுவிதமான பார்வைகளோ, முயற்சியோ
இல்லை என சலிப்பும் வருத்தமும் அடைந்து பேசிக்கொண்டிருப்பவர்களின்
கைகளில் நம்பிக்கையோடு திணிக்கலாம் நரனின் ‘ஏழாம் நூற்றாண்டின்
குதிரைகள்’ தொகுப்பை.


வெளியீடு
கொம்பு
எண்-11, பப்ளிக் ஆபிஸ் ரோடு,
தேவி தியேட்டர் எதிரில்,
நாகப்பட்டினம்-611 001
விலை-ரூ.60.

nantri:malveedu

Wednesday, June 22, 2016

கதை மாந்தரான கனவுகள்

கதை மாந்தரான கனவுகள்


சிகரெட்டின் வெளிச்சம் மட்டுமே உள்ள அறையில் மது அருந்தினோம். கடைசி புகையை இழுத்து இருட்டாக்கினாள். லைட்டரின் ஒளியில் அவளின் முகம் பிரகாசித்தது. எதையோ பேசியபடி இருந்தோம் அம் மீச்சிறு வெளிச்சத்தில்...

தன்னுடைய மொழிபெயர்ப்புப்  புத்தகமென நீட்டினார். ஆர்வம் பொங்க கைகளை நீட்டினேன். தராமல் மீண்டும் பையில் வைத்துக்கொண்டார். வேறு நிலத்தின் கலாச்சாரம் பண்பாடு மொழிப்பற்று என பேசிக்கொண்டே இருந்தார். நான் புத்தகத்தை பெற மீண்டும் கைகளை நீட்டினேன். மொழியை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இது பயன்படாதென மறைந்தார்...

படுத்திருந்தேன். குழந்தைகள் கும்பலாக வந்தனர். அவரவர் கையில் ஜாமெண்டரி பாக்ஸ் கருவிகள். ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த கோடுகளை வரைந்தனர். குறும்புக்கார சிறுவன் குறியில் அம்பு பாய்ச்சி விளையாடினான். வெளியேறிய இரத்தம் ஓவியமாகிக்கொண்டிருந்தது...

பழைய கட்டிடம் ஒன்றினுள் நுழைகிறேன். அங்கிருக்கும் காவலாளியை ஏமாற்றி அரிதான நாணயங்களோடு வெளியேறுகிறேன். எதிரில் சைரன் ஒலியற்று ஜீப் ஒன்று வந்தது. உள்ளிருந்து நீண்ட குழாயிலிருந்து வெளியேறிய சிறு குண்டு என் உடலில். நாணயங்கள் இரத்தத்தில் மிதக்கத் துவங்கின...

தெருவில் சித்திரம் தீட்டியபடி இருந்தவனை அழைத்து வந்தேன். எனது ஆடைகளை அணியக் கொடுத்து பசி மறக்க சோற்றை கவளம் கவளமாக ஊட்டினேன். வீடு சித்திரங்களின் வசிப்பிடமாக மாறிக்கொண்டிருந்தது...

இப்படியாக எனக்கு வேறுவேறான கனவுகள் வந்துகொண்டே இருந்தன. தமிழவனின் 'நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்' தொகுப்பை வாசித்துக்கொண்டிருந்த நாட்களில். எனக்கு சாத்தியப்படாத சூழலைக்கொண்ட சம்பவங்கள் என்னுள் குறுக்கீடு செய்தமையால் இக் கனவுகள் வாய்த்திருக்கக்கூடும் என நினைக்கிறேன். ஒரு பிரதியால் வாசகனின் கனவுத் தன்மையை மாற்றம் செய்ய முடிவது மகிழ்வுக்குரியது. நம் மொழி பற்பல பரிமாணங்களோடு பயணித்திருக்கிறது இத் தொகுப்பில்.

இத் தொகுப்பின் கதைகளில் கனவும் ஒரு கேரக்டராக வந்தபடி இருக்கிறது. உரையாடல்களாலும் சம்பவங்களாலும் மட்டுமே கதை நகராது கதை மாந்தர்களின் மனநிலை, சூழலின் மாற்றத்தோடு கொள்ளும் குறுக்கீடுகளே கதைகளின் மையமாகவும் இருக்கிறது. மொழி, கலாச்சார மாற்றம், பண்பாட்டின் மாற்றம், புதிய தலைமுறைகளின் மனவோட்டம், மொழி குறித்த பெருமிதம் அற்றுப்போன வாழ்வு என தோய்வற்ற சொல்லாடலில் புதுபுதுப்புதுக் காட்சிகளை தந்தபடியே இருக்கின்றன. மேம்போக்கான மனநிலையோடு இக்கதைகளை அனுகினால் நம்மை ஏமாற்றம் கொள்ளச் செய்யும். சில கதைகளின் கரு பழையதாக இருந்தபோதும் தமிழவன் தனக்கான உத்தியால் அதற்கு வேறு தன்மையை ஏற்படுத்திவிடுவதால் எவரும் நிராகரிக்க முடியாத தளத்திற்கு சென்றுவிடுகின்றன.

வாழ்வை அதன் போக்கிலேயே வாழ்ந்து தேடலற்று இருப்பதை வேற்றுப் பிரதேச வாசியின் குரலில் கேலி செய்கிறார் 'உங்களுக்கு பாரம்பரியம் இல்லையென்பது உண்மையா?' கதையில். 'புரிந்து கொள்வாய் இறுதியாக' கதையில் தன் திருமண வாழ்வின் சாட்சியங்களை காட்ட மறுத்து, காதல் வாழ்வின் நினைவுகளில் வேறு வாழ்வை கலந்திட விரும்பாது வர்ஸாவில் வாழும் அன்னா நம் நினைவிலும் இருப்பாள். இவ்விரு கதைகளிலுமே கதை மாந்தர்களின் உரையாடல்கள் மட்டுமல்லாது கதை நிகழும் இடத்தின் பின்னணியும் கதையில் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டே இருப்பதால் நல்ல சினிமாவைக் கண்ட நிறைவைத் தந்தன.

அடுத்தடுத்த வாசிப்புகளை செலுத்திய பின்னரே தன்னுள் இருக்கும் புதிரின் கண்ணியை காட்டத் துவங்கும் 'நால்வரின் அறையில் இன்னும் சிலர்' கதை. குற்றம், குற்றத்திற்கான காரணிகள் ஒற்றைத் தன்மையோ, பொதுத் தன்மையோ கொண்டதல்ல. மாறாக குற்றவாளிகள், குற்றவாளிகளாக ஆக்கப்படுபவர்களின் மனவோட்டத்தின் கூறுகளோடு தொடர்புடையது என்பதாக என் வாசிப்பில் கண்டேன். வேறு வாசகனுக்கு வேறான அர்த்தத்தையும் இக் கதை தரக்கூடும். அதற்கான மாயங்களோடுதான் அக் கதை இருக்கிறது.

விலாவழி குழந்தை பிறப்பு போன்ற கற்பனைகளை நிஜமென பாவிப்பவர்களின் மீதான எள்ளலோடு, அவரவர்களும் தன் சார்ந்த வேலைகளோடு இயல்பான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்க அறிவைத் தேடும் அரசனின் நிலையைக் கூறும் 'ஹர்ஷவர்த்தனின் அறிவு' கதைகள் சுவாரஸ்யமான நகர்வு.

பெற்றோர்கள் வேலை பார்க்கச் செல்ல தனித்து விடப்பட்ட குழந்தைகளின் மன உலகை சித்தரிக்கும் 'மூவரும் மௌனமானார்கள்' வாசிப்பின் இறுதியில் நம்மையும் மௌனமாக்கி விடுகிறார். இது போன்ற கதை ஏற்கனவே சினிமாவிலும், கதையிலும் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் தமிழவன் சொல்லியிருக்கும் உத்தி நம்மை பதட்டமடையச் செய்கிறது.

தங்களின் பொறுப்பற்றத் தன்மையால் வளம் சேர்க்க வேண்டிய மொழியை கண்டுகொள்ளாது தங்களுக்குள்ளான ஈகோக்களை சாந்தப்படுத்த மொழிக்கு துரோகம் செய்தபடி இருக்கும் நிறுவனங்களின் கேடுகளை விவரிக்கிறது 'மொழிபெயர்ப்பு நிறுவனம்'.

'அவனுக்கு என்னைப் பார்க்கிறபோது பார்வை இல்லாது போய்விடுகிறது பார்' எனும் 'அற்புதம்' கதையில் வரும் சொல்லாடல் தலைமுறைகளினிடையே ஏற்படும் மனச்சிக்கலை காட்சிப்படுத்துகிறது.

நம்மால் வெற்றிகொள்ள இயலாது போன செயலை, வேறு யாராகினும் வெற்றிகொண்டு தேர்ந்தவராக வலம் வருவதை சகிக்காது அவர்களின் மீது தொடர்ந்து சந்தேகப்பட்டவாறு இருப்பதை சித்தரிக்கிறது 'ஹெமிஸ்ட்ரி பாடம் புரியுமா?' .

என்றைக்காவது தட்டுப்படும் வித்தியாசமான நபர்கள், அவர்களின் செயல்பாட்டால் நம் வாழ்வில் தினசரி குறுக்கீடு செய்தபடியே இருக்க, என்றும் நம் நினைவில் தங்கிப்போய்விடுவதைக் கூறுகிறது 'யாருக்கும் தெரியாது' கதை.

ஒன்றைப்பற்றிய தொடர் நினைவால் இயல்பின் சமன் கலைய தானே அந்த நினைவாக மாற்றம் கொண்டு விடுவதை விவரிக்கிறது 'கொலை செய்யாதிருப்பாயாக'.

மொழியின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் நடத்தி உணர்வுப் பிச்சையில் உல்லாச வாழ்வை அடைவோர் நம் சிந்தனையை மட்டுப்படுத்தி விட்டதைச் சுட்டி ஒரு மொழி தொலையும் போது அவற்றுடன் நம் வாழ்வும் தொலைந்து போவது குறித்து கவனிப்பை உண்டாக்கும் கதையாக வந்துள்ளது 'மொழி'.

பதிலற்ற, பதில் கூற விரும்பாத கேள்விகளை தேர்வு செய்தபடியே இருக்கும் 'நடனக்காரியான 35வயது எழுத்தாளர்' என நம் நினைவில் காட்சிகளாக படிந்து நம்முடன் அடிக்கடி உரையாடலை நடத்தும் இத்தொகுப்பின் கதைகள்.

சில சொற்கள் கவிதையிலோ கதையிலோ வாசிக்க ஏனோ ஒரு வித அசூசை ஏற்படுவதுண்டு. 'மொழி' கதையில் கண்களுக்கு பட்டாம்பூச்சியை உவமையாக்கி இருப்பதைப் பார்த்து சலிப்பேற்பட்டது. தமிழவனிடம் நான் பட்டாம்பூச்சிகளை எதிர்பார்க்கவில்லை.

இத் தொகுப்பின் கதைகளில் உரையாடலின் போது இது அவன், அவள் இது, அவன் கூறினான், இவள் கூறியது என கதை சொல்லியும் கதையின் மாந்தர்களோடு கலந்திருப்பது ஆரம்பத்தில் இடையூராக தோன்றினாலும் அடுத்தடுத்த வாசிப்புகளில் கதைப்போக்கில் கதைமாந்தர்களோடு கதைசொல்லியும் இணைந்துகொண்டிருப்பது ரசிக்கத்தக்கதாக உள்ளது.

வெளியீடு
புது எழுத்து
2/205. அண்ணா நகர், கவேரிப்பட்டிணம்-635112.

நன்றி-தீராநதி

Thursday, June 9, 2016

வாசல் தெளிப்பின் மணம்...
அதிகாலையில் அம்மா தெளிக்கும் சாணத்தின் மணம் நிலத்தின் மணத்தோடு சேர்ந்து வெளியேற விழிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான குடும்பங்களில் வாசல் தெளிப்புக்குப் பின்னரே வீட்டிலிருக்கும் ஆண்களை வெளியேற்ற அனுமதிப்பார்கள். வீட்டையும் நிலத்தையும் என்றும் நினைவில் வைத்திரு என்பதாகப்படுகிற பழக்கம் இது. கதிர்பாரதியின் ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் தொகுப்பை வாசித்த பின் அம்மாவின் வாசல் தெளிப்பு மணம் நினைவிற்கு வந்தது.
கை விரல்களால் வீடு கட்டும் வித்தை கற்ற குழந்தைகளின் துள்ளல்களையும், கண்டிஷன்களின் சொற்கள் மிதக்கும் வாடகைவீட்டில் வெளியைச் சுருக்கி இறகு பந்தாடும் குழந்தைகளின் துயரையும் நமக்கானதாக்கிவிடுகின்றன கவிதைகள்.
வீடு
இரு கைவிரல் நுனிகளை
கோபுரமெனக் குவித்து
விடுன்னா இப்படித்தான் இருக்கும் என்று
புன்னகைக்கிற திலீபன்
மழை பெஞ்சா நனைஞ்சுடும்
அப்போ வீட்டை மூடிடணும் என்று
இரு உள்ளங்கைகள் வரை
ஒட்டவைத்துக்கொள்கிறான்
நனைந்தும்
நினைந்தும்
வாழ்வதற்கு
போதுமானதாக இருக்கிறது
இந்த வீடு.
தொகுப்பிலிருக்கும் திலீபன் குறித்த கவிதைகள் நம்மோடிருக்கும் குழந்தைகளின் உலகத்தையும் நினைவூட்டியபடி இருந்தன.
வெள்ளந்தியான மனம் நிறைந்திருப்போரும், உள் ஊறும் வன்மத்தை புன்னகையுள் ஒளித்து வைத்திருப்போரும் தம்தம் நிலைக்கேற்ப இப்புவியை விளையாட்டுக் களமாக்கி புள்ளிகளை சேகரிக்கும் சூட்சுமத்தையும். ஊர்ப்புறத்திற்கும் நகரமயமாக்கலுக்குமான மாற்றத்தில் சிக்குண்டவர்களின் மனப்பிறழ்வுகளை காட்சிபடுத்தியும் செல்கின்றன கவிதைகள்.
தேவனின் படைப்பில் உன்னதமானது பெண்ணெனக் கொண்டாடி, அவள் வராத கோடையில் பொசுங்கி, அருகில் வந்தவளின்பால் ஏற்பட்ட இன்பத்தைவிடவும் வந்து விடுவதாக நம்பிக்கை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் ஏற்படும் இன்பத்தை சுகித்தும், மழையை மார்பகமாக்கி தாகம் தணிப்பவனின் பெரும் காதலை முத்தத்தின் வழியாக வெளிப்படுத்தியவாறு இருக்கின்றன பெரும்பாலான கவிதைகள்.
உழவு மாடுகள், இறாபுட்டி, குலசாமிகளின் கதைகள், நீர்முள்ளிப் பூக்கள் நிறைந்த கனவு, பயிர்களின் பருவங்களுக்கேற்ற பாடல் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்த தாத்தாவின் உப்பு படிந்த உடலில் கிடந்து வளர்ந்தவன் தன்னிடம் ஏதும் இல்லாது போவதும், தாத்தா உயிராக நினைத்த நிலமும் மெட்டோபாலிடல் அரசியலுக்கு பலியாக்கப்படுவதும், விடுதலை உணர்வையும் நிம்மதியையும் தரும் நிலம் பெரும் கனவானதாகிவிட, சொந்தமாக ஒதுங்க ஒரு செண்ட் நிலமும் அதில் சிறு வீடும் கட்டவதற்காகவே வேலை ஓய்வுபெறும் வரை உழைக்க வேண்டியிருக்கிற அவலத்தையும் கிளறிவிடுகின்றன கவிதைகள்.
.............................
என் தாத்தாவிடம்
கண்ணீரும் தாகமும்கூட இருந்தன
மயக்கமுற்று நிலத்தின் மடியில் வீழ்ந்தவருக்கு
டமக்கரான் போத்தலில் தண்ணீர் வந்தது.
அதை முகத்தில் தெளித்து அவரைப் புதைத்தபோது
அழுது அரற்ற அவர் பாடல் இல்லை எம்மிடம்.
பெறவேண்டிய உரிமையை பெரும் கனவாக்கி அதைநோக்கி நமை ஓடவைக்கிறது எஜமானர்களின் உலகம். கொஞ்சமான எஜமானர்கள் குரங்காட்டிகளாக இருந்து நமை குட்டிக்கரணம் போட வைத்து வேடிக்கைக் காட்டி அவர்களின் தட்டை நிரப்பி உல்லாச வாழ்வு வாழும் பல மல்லையாக்களை நினைவூட்டுகின்றன கவிதைகள்.
என்னவாகப்போகிறதோ எனும் பதட்டத்தில் வாசித்துக்கொண்டிருக்கையில் சிறுவன் சேனலை மாற்றிவிட ஆசுவாசம் அடைந்து ரசித்திடச்செய்தது 'மெய் நிகர் தீபம்'.
மொட்டைமாடியின் முத்தத்தை கடன் வாங்கி ஒளிர்ந்த கற்கள் நட்சத்திரமாகினவெனும் வரிகள் என்றும் நினைவிலிருக்கும்.
தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளில் ஆனந்தி மிளிர்கிறாள். ஆனந்தியின் பொருட்டு காதல் மிகுவதும், காதல் மிகுந்து சரணாகதி அடைவதும், சரணாகதி மிகுந்திட காமம் பிறப்பதும், காமம் பிறக்கையில் பெண் நிலமாக மாறுவதும், நிலம் என்பது சொத்து எனும் வஸ்துவாகிவிடுவதால் சொந்தமாக்கி உரிமை கொண்டாடுவதும், உரிமை அதிகாரமாக மாற்றம் கொள்வதும் கவிதைகளின் போக்கில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
நெடும் காலத்தின் நீட்சிதான் ஆண் எனும் அதிகாரம். அது நீண்ட ஆணி வேராக புதைந்து கிடக்கிறது. நம் வாசிப்பும் சக ஜீவிகளின் மீதான கரிசனமும் சிறிது சிறிதாக அதை பட்டுப்போக செய்துகொண்டிருக்கிறது. அது முற்றாக பட்டுப்போக வைக்கவும் முடியும். 'ஒரு குளத்துக் குரவையாக' கவிதையில் வரும் 'அதிகாரம் என் சொற்களில் மட்கி எருவாகும்' எனும் வரி அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
வெளியீடு- உயிர்மை பதிப்பகம்.
nantri:malaigal.com