Saturday, April 22, 2017

 Ramesh Kalyan.
நான் நெருங்கிய உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர்கள் வீட்டில் மூன்று வயது குழந்தைச் சிறுமி. மிகச்சுட்டிக் குழந்தை அவள். கண்களும் மூக்கும் கன்னக்கதுப்பும், மென்மையான விரல்களும், சின்ன கொழுக்முழுக் கால்களும், கால்விரல்களில் நெற்றிப்பொட்டு அளவுக்கு சிறிய கால்விரல் நகங்களுமாக ஒரு குட்டி தேவதை போல இருந்தாள். குழந்தையை முத்தமிடும் ஆவலைக் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு அழகுமு சுட்டியும். அந்தக் குழந்தையை நெற்றியோடு முத்தி மிருதுவாக எங்கள் வீட்டு குழந்தைகளைப் போலவே கொஞ்சிய போது அது விரும்பாத்து போல விடுவித்துக்கொண்டது. எங்கள் வீட்டுச் சிறுமி அதைக் கொஞ்சினாலும் அப்படித்தான். தூரமாக இருந்து ஒரு கண்ணாடி பொம்மை போலத்தான் அக்குழந்தை பழக்கமாயிருந்தது. அவ்வீட்டில் அவளை கொஞ்சுவதற்கு ஆளில்லை. இருந்தவர்களுக்கு கொஞ்சத் தெரியவும் இல்லை. எனக்கு வருத்தமாக இருந்தது.
மற்றொரு வீட்டில் ஒரு நான்கு வயது குழந்தை பளிச் பளிச் சென பேசியது. சற்றும் வார்த்தைகளில் பிசிறில்லை. காப்பி குடித்த தம்பளர்களை சமையலறையில் வைப்பது, தண்ணீர் பாட்டிலை காலில் இடறாமல் ஓரமாக வைப்பது என்றிருந்தது. அவளது பொறுப்பை அனைவரும் ரசித்தனர். தொலைக்காட்சி சீரியல்களின் பெயர்களை சொல்லி பாத்திரங்கள் என்ன பேசும் என்பதை சொல்லிக்காட்டியபோது, அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர். பேசும் பேச்சும் முதியவர்களின் பேச்சுப்போல இருந்தது. எனக்கு வருத்தமாக இருந்தது.
குழந்தைகளை தனித்தொட்டிலில் இடுவதும், கன்னத்தை சிறுமென் கிள்ளலின்றி தொட்டுக்கொஞ்சுவதுமாக, குழந்தையோடான நெருக்கங்கள் மிக அமரிக்கையாக மாறிக்கொண்டிருக்கிறது. கிராமங்களில் குழந்தையோடு விளையாடுகையில் கொன்னுடுவன் கொன்னு என்று சொல்லிக் காட்டி சிரிப்பார்கள். இதை “கொன்னுவிரல் காட்டி“ என ஒரு கதையில் எழுதுவார் (கண்மணி குணசேகரன் என எண்ணுகிறேன்). இத்தகு விளையாடல் இல்லாத குழந்தைப்பருவம் குழந்தைகளுக்கு அல்ல பெற்றவருக்கும், மற்றவருக்கும் பேரிழப்பு. கிராமங்களில் கூட இவை தேய்ந்துவருகின்றன.
குழந்தைகளின் உலகம் கடவுள்களில் உலகத்திற்கு மிக நெருக்கமானது. அங்கே விதிகளும் சட்டதிட்டங்களும் இல்லை. அவை கலைத்துப்போடுவதுதான் அவற்றின் ஒழுங்கின் அழகு. குழந்தைகளின் உலகில் நாம் நுழைவது மிக கடினம். அவற்றை குறைந்தபட்சம் ரசிக்கவாவது தெரியவேண்டும். சுவற்றில் கிறுக்குவதற்கு ஒரு குழந்தை வேண்டும், கோலத்தைக் கலைக்க ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்வதுண்டு. அதுதான் குழந்தைகளின் மிகப்பெரிய சந்தோஷம். சுவற்றில் கிறுக்கும் குழந்தையைக் கண்டிக்கும் பெற்றோர்களை நான் கண்டித்திருக்கிறேன். அதைவிட பெரிய வாழ்வியல் சுவை எது. “சிறு கை அளாவிய கூழ்“ என்ற வள்ளுவன் எவ்வளவு கவித்துவமாக குழந்தையை ரசித்திருக்கிறான்!
இப்படியான கூழ் அளையும் சிறு கைகளை பலவித தருணங்களில் வார்த்தைகளால் படம் பிடித்திருக்கிறார் பெரியசாமி தனது குட்டி மீன்கள் நெறிந்தோடு நீலவானம் கவிதைத் தொகுப்பில். முதலில் இப்படி ஒரு முயற்சிக்கு பாராட்டுக்கள் நண்பரே. உங்கள் கவிதையின் இந்த பார்வை மிக அத்தியாவசியான பார்வை, அதுவும் இன்றைய சூழலில்.
குழந்தைகளில் உலகை பெரியவர்கள் பார்க்கும், பார்க்கவேண்டிய தருணங்களை கனிந்த. ஏக்கம் மிகுந்த மற்றும் தவிர்க்கவியாலாத நிலைமைகளில் பல படிகளில் இருந்து பார்க்கும் கவிதைகள் பல இதில உள்ளன. பலவற்றை நாம் கேட்டிருப்போம். கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதில் நாம் காணாதவற்றை, காணவேண்டியதாக பெரியசாமி காண்கிறார். சொல்கிறார்.
அலெக்ஸ் மரம் என்ற கவிதையில் பட்டியிலிருந்து துள்ளிவரும் கன்றுக்குட்டி போல வந்த சிறுவன் ஆலமரத்தை வரைந்து காட்டி இது அலெக்ஸ் மரம் என்கிறான். இது ஆலமரம் என்று சொல்லும்போது, அதை இப்படி எழுதுகிறார் –
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா அலெக்ஸ் மரம் என்றான்
சரி செய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்.
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்
எவ்வளவு அழகான கவிதை இது. நம்மை குழந்தைகளின் மனதுக்கு அருகில் சென்று அவர்களது பால்வாசம் உணரவைக்கும் நெருக்கம் இதில உணரமுடியும். குழந்தைகளிடம் தான் என்ற ஒன்று முளைவிடும் அற்புத தருணம் அது. அங்கிருந்துதான் அவர்களது உலகம் பிறக்கிறது. பார்வை தொடங்குகிறது. இதைவிட தனது உருவாக்கம் என்ற சந்தோஷமும், அதில அவன் தன்னையோ காண்பதும் எவ்வளது அழகாக தெரிகிறது.
பள்ளிக்கூடம் என்ற கவிதையில் சோப்பு விளையாடி பூனை மீது பழிபோடுவாள், விருந்தினரின் செருப்புகளை ஒளித்து விளையாடுவாள், நாயின் மீது பழிபோடுவாள். வண்டி சாவிகளை, ரிமோட்களை தலையணைக்குள் மறைத்து விளையாடுவான் அந்த சிறுமி.
“கொஞ்ச நாட்களாக
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்.
மாதம் ஒன்றுதான் ஆகியிருந்த்து
அவளை பள்ளிக்கு அனுப்பி“ என்று முடிகிறது கவிதை. தற்போதைய இறுக்கமான கல்வி சூழலை இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இப்போது பள்ளிக்கூட துவக்க காலம் என்பதால் இந்தக் கவிதையை ஜெராக்ஸ் எடுத்து எனக்கு தெரிந்த எல்.கே.ஜி குழந்தைகளின் பெற்றோர்களிடம் தரலாம் என்றிருக்கிறேன் (பெரியசாமியின் அனுமதி பெற்று).
யானைக்கு மற்றொரு யானை துணை. காக்காவிற்கு மற்றொரு காக்கா துணை என்று மாலைப்பொழுதொன்றில் பேசிய சிறுமி, ஒரு தாளில் படம் வரைந்து அனுப்புகிறாள். துணைவானம். சூரியன். நட்சத்திரம் என்று. யாவரும் கண்டு கொண்டிருப்பது அவளனுப்பிய துணைகளைத்தான் என்று முடியும் கவிதையில் – அவள் அனுப்பிய என்ற வார்த்தையில் அவள் இப்போது அருகில் இல்லை. தனது அபிலாஷைகளை சித்திரங்களாக்கி அனுப்புகிறாள் என்று உணரும்போது மனம் கனக்கிறது.
”வெற்றுத்தாளை வனமாக்கியவள்” என்ற அட்டகாசமான கவிதை. சிறுமி காகிதத்தில் மேகங்கள், வேடர்களுக்கு சிக்காத பறவை, மரம் நிலவு என முடித்து நதியை வரைய வேறொரு தாளை எடுக்கும்போது –
“சனியன் எப்பவும்
கிறுக்கிகிட்டே இருக்கு
அப்பாவின் குரல் கேட்டு அதிர்ந்தாள்
ஒரு நதி
துவக்கத்திலேயே வறண்டது” என முடிகிறது கவிதை. எவ்வளவு நல்ல கவிதை.
பூனையாவாள் என்ற கவிதையில் உணவு ஊட்டும்போது காக்கை குருவி நிலா என சொல்லி ஊட்டும்போது துப்பும் குழந்தையோடு போராடும் பெண்ணைச் சொல்லி –
அம்மா
நினைவில்
அம்மா என்கிறது கவிதை. தனது குழந்தைக்கு உணவு ஊட்டும்போது தன்னுடைய அம்மாவை நினைக்கையில் ஊட்டும் அம்மா சட்டென குழந்தையாவதை உணர்கிறோம். மிக அழகிய கவிதை இது. ஆனால் அப்படியான அம்மாக்கள் இன்று அரிதாகி வருவதையும் வேதனையுடன் நினைவுகொள்ள வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் மொட்டை மாடிக்கு கூட குழந்தையை கொண்டு வருவதில்லை. திருஷ்டி படும் என்றும், காற்றில் தூசு படும் என்றும் காரணங்கள். தொலைக்காட்சியின் டிஜிடல் உருவங்களில் தங்களை இழந்துகொண்டிருக்கும் இன்றைய குழந்தைகள் பரிதாபத்திற்குரியவர்கள்.
“தன் பிரசன்னத்தால்
எல்லோரும் சூழச்செய்தாள்
குட்டி தேவதை“ - என்று ஒரு வரி வருகிறது. பிரசன்னம் என்ற வார்த்தை தெய்வீகம் சம்மந்தப்பட்டது. மிக கவனமாக போடப்பட்டிருக்கும் இந்த வார்த்தான் இந்த தொகுப்பின் மையப்புள்ளி. கடவுளர்கள் குழந்தைகள் உருவாக உலவி நெகிழும் காலங்களில் நாம் குழந்தைகளையே பார்க்காத குருடர்களாக இயந்திரமாக உழலும்போது கடவுளை எங்கே பார்க்கமுடியப் போகிறது.
நல்ல பல கவிதைகள் உள்ள இதில், பவனி, எழுத மறந்த பக்கங்கள், வெளியே மழை பெய்தது போன்ற சில கவிதைகள் சாதாரணமாக நிற்கின்றன. பெரும்பாலான கவிதைகளில் குழந்தைகள் வரையும் ஓவியங்கள் அதிகம் இருக்கின்றன. இது பெரிய குறையல்ல. எண்ணிக்கை குறைவான தொகுப்பில் இதன் பொருண்மை கூடுதலாக தெரிகிறது. அவ்வளவே.
சிக்கலில்லாது, மென்மையாக அனுபவங்களை அடுக்கி, ஒரு அழகிய பார்வையை கொண்ட கவிதைகள் உள்ள தொகுப்பு.
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
ந.பெரியசாமி Periyasamy Periyasamynatarajan
தக்கை வெளியீடு, சேலம்.

Monday, April 3, 2017

நூல் அறிமுகம்: கமலாலயன்

குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
நூல் அறிமுகம்: கமலாலயன்

குழந்தை ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியென ந.பெரியசாமியின் கவிமனதை உருவகிக்கிறார் கவிஞர் சம்பு. 2004-2014ம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட பத்தாண்டுகளில் ஆரவாரமின்றி மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தவர் ந.பெரியசாமி. இவருடைய மூன்றாவது தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கே.சி.எஸ். அருணாசலம் நினைவு விருதும், கலகம் விருதும் வழங்கப்பட்டுள்ளன.

மீன்கள். அதிலும் குட்டி மீன்கள். நெளிந்தோடும் நீலவானத்தை நோக்கி தூண்டில் விசுகிற குழந்தைகளின் மன உலகைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் கவிஞர். ஏங்கியழுது வெறுமையாய்க் கிடக்கும் வெற்றுத்தாளில் பிஞ்சுக்கைகள் ரதமொன்றை வரைகின்றன. இன்னொரு தாளில் புரவிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. உருவான ரதம் வீடு மினுங்கும் பேரழகோடு ஒளிர்கிறது. வானில் நிகழ்கிறது படைத்தவனின் பவனி.

அலெக்ஸ் வரைந்த மரத்துக்கு ‘ஆலமரம்’ எனப் பெயரிடுவது பெரியவர்களின் இயல்பு. ஏற்க மறுத்து வரைந்தவன் கூறுகிறான் ‘என் மரம் என் பெயர்தான்’ வகுப்பாசிரியர்களால் தான் அனுபவித்த வலிகளை கேலிச் சித்திரங்களின் மூலம் வெளிப்படுத்துகிறாள் அனாமிக. பெரும் குறும்புக்காரியாயிருந்த ஒரு சிறுபெண். கொஞ்ச நாட்களாகச் சத்தமே இல்லாமல் அமைதியாகிவிட்டாள். பள்ளிக்கு அனுப்பி ஒரே மாதத்தில் நடந்திருக்கிறது இந்த மாற்றம். உடனாளிகளோடு உண்ணுகிற குழந்தை, பூனை, ஆடு, மயில், யானை என காண்கிற எவ்வுயிரினூடாகவும் கூடுவிட்டுக் கூடு பாய்கிறவன், துணையற்றுத் தவித்துக் கிடந்த வானத்துக்கு ஒரு நிலா, ஒரு சூரியன், துணை வானமொன்று, நிறைய்ய நட்சத்திரங்களை வரைந்தனுப்பி வாட்டம் போக்கிய சிறுமி என்று ந.பெரியசாமியின் கவிதைகளில் உருவங்கொள்கிற குழந்தைகள் வசீகரமானவர்கள்.

குழந்தைகளிடம் அன்பாகவோ, கோபமாகவோ, அறிவுரைக்கும் விதமாகவோ பேசிவிடுவதோடு நின்று விடாமல் அவர்களுடைய எதிர்வினைகளைப் பொறுமையாகக் கவனிக்கிறார் கவிஞர். மண்ணுள் புதைந்து போன உயிர்களின் குரல்கனையும் கூட கூர்மையாகக் கேட்டு இனங்காணத் தெரிகிறது குழந்தைகளுக்கு. மேற்கண்டவாறு குழந்தைகளின் பலவகையான தருணங்களை கவிதைச் சம்பவங்களாக மாற்றி சின்னச் சின்ன கதைகளாக அவற்றைக் கவிதைகளில் பொதிந்து வைத்து நமக்குத் தருகிறார் ந.பெரியசாமி. றியாஸ் குரானாவும், சம்புவும் இந்த அம்சங்களைச் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். மேலட்டை ஓவியம், புனைவுலகின் விரிவாக அமைந்து கருத்தைக் கவர்கிறது. ‘தக்கை’யின்நூல் தயாரிப்பு அருமையாக அமைந்துள்ளது.
நன்றி: புத்தகம் பேசுது.

Saturday, March 25, 2017

ந.பெரியசாமியின் குழந்தைப் படிமங்கள்

ந.பெரியசாமியின் குழந்தைப் படிமங்கள்
வெளிரங்கராஜன்

குழந்தைகளும் பித்தர்களும் நடைமுறை உலகின் தர்க்க ஒழுங்கிலிருந்து தப்பித்து அசாத்தியங்களின் உலகில் சஞ்சரிப்பவர்கள். அசாத்தியங்களை ஒரு எளிய நெருக்கத்திலும், இடமாற்றத்திலும் கண்டு உரையாடுபவர்கள்.
அங்கு கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் கடிவாளங்களோ, காலம் தூரம் ஆகிய தடைகளோ இல்லை. விநோத சேர்க்கைகளுக்கும், தோழமைகளுக்கும், ரகசிய துயரங்களுக்கும் பங்சமில்லை. தூரிகைகள் கையில் இருக்க பிரபங்சமும், மனிதர்களும், பொருள்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டில். புதிய வடிவங்கள், புதிய விளையாட்டுகள், புதிய பொய்கள், புதிய மகிழ்வுகள் என படைப்பியக்கம் கொள்பவர்கள். நிறுவனங்களாலும், நிறுவனங்களாகிப்போன பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் முடக்கப்படும் அவ்வுலகை வலியுடன் பார்க்கிறது கவிமனம்.
அழாமலேயே
கண்களில் நீர் வருகிறதெனும்
புகாரில் தொடங்கி
உடலின் பாகங்களை பட்டியலிட்டு
வலிக்கிறதென
ஒன்றின் மீதொன்றாய்
அடுக்கியபடியே இருந்தான்
பொய்களை.
என் கனவு
பங்கப்பட்டுவிடுமெனப் பயந்து
பள்ளிக்கு இழுத்துச் செல்ல
கடுகடுத்த முகத்தில் மறைத்தான்
கையசைப்பின் புன்னகையை
என்னுள் துளிர்த்து
கொடியெனப் பற்றியது
மெய்யான வலி.
என்றும்
அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழிபோடுவாள்
விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்
தேவைகளை வாங்கிக்கொள்ள
உறுதியளித்தபின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட் வண்டி சாவிகளை
கொஞ்ச நாட்களாக
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்
மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி.
எனவும் பொய்களும், கற்பனைகளும் பல்கிப் பெருகிய ஒரு குழந்தமையின் பேரிழப்பு நினைவுகொள்கிறது.

இங்கு குழந்தைகள மட்டுமல்ல குழந்தைகளின் படிமங்களும் இழப்பை சந்திக்கின்றன. விரும்பும் நிறம் பூசப்படும் கனிகள், நட்சத்திரங்களைப் பிடிக்க தூண்டில், வானம், வானுக்குத் துணையாக ஒரு துணை வானம், நட்சத்திரங்கள் பொதித்து வைக்கப்பட்ட சாணி உருண்டை, வடை தூக்கும் காக்கை கதையில் உறக்கம்கொள்ளும் கடவுள், மழைக்கு பசிக்குமென இட்டிலி, புள்ளி கட்டம் கோடு சதுரம் மரம் எல்லாம் வீடாவது, தென்னங்கீற்றுகள் பாம்புகளாகி தென்னைக்கு திரும்புதல் என எண்ணற்ற படிமங்கள் தோன்றியபடியும், மறைந்தபடியும் இருக்க கணத்தில் சமாதானமாகிறது குழந்தை மனம். ஆனால் கவிமனம் சமாதானமாவதில்லை.

தனக்கானதை கட்டங்களில் நிரப்பி
எடுத்துச் சென்றனர்
எனக்கானதை நிரப்ப கட்டங்களில்லை
எனவும்
வரைந்த திராட்சையை நரி புலி குரங்கு
ஆடுமாடு கோழி தின்றன
எனக்கு மட்டும் திராட்சையின் சாயல்
எனவும் கவிமனத்தின் துயரங்கள் எண்ணற்றவை.
முயற்சியால் வெற்றிகொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்கு சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து வீடொன்றை
கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவை பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறுதாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்
சனியன் சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு
அப்பாவின் குரல்.
என்றபடி உலகியல் முரன் மீண்டும் மீண்டும் கவனம் கொள்கிறது.

முன்னுரையில் றியாஸ் குரானா குறிப்பிடுவதுபோல் குழந்தையின் இயல்புகளை நேராக சந்திக்க விரும்பும் கவிதைகளாக இவை உள்ளன. குழந்தைமையின் இழப்பில் நாம் கற்பனைகளற்ற வறண்ட சமூகமாவதை எளிதெனத் தோன்றும் சரள மொழியில் உரையாடிச் செல்கின்றன இக்கவிதைகள். கட்டற்ற உறவு நிலைகளின் மீது உருவாக்கப்படும் நிர்ப்பந்தங்களை இவை பரிகசிக்கின்றன.

நன்றி: தீராநதி.


Monday, February 27, 2017

Suthenthiravalli Manivannan
குட்டி மீன்கள் நெளிந்தோடு்ம் நீலவானம்
_______________________________________________
ந.பெரியசாமி
_______________
மெட்ரிக் மேல் நிலை பள்ளி ஒன்றில் ஏழு வருடங்களாக எல்.கே.ஜி.,யு.கே.ஜி.க்கு வகுப்பெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் பள்ளி திறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே காய்ச்சல் வந்து விடுவது போன்ற பயம் அப்பி கொள்ளும். பள்ளியில் எல்.கே.ஜி.க்கு நான்கு பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு பிரிவிலும் ஏறதாள அறுபது குழந்தைகளும் இரண்டு ஆசிரியர்களும் இருப்பார்கள். பள்ளி திறந்த முதல் இரண்டு வாரம் குழந்தைகளை பராமரிப்பது மிக சிரமம். அறையின் கதவுகள் மூடியே இருக்கும் சில நாட்கள்.சில குழந்தைகள் தவிர்த்து மற்ற குழந்தைகள் அழுது உருண்டு எதுவும் கேட்காது சிரமபடுத்துவார்கள். குழந்தைகளின் குணங்களிலிருந்து அவர்களது பெற்றோர்களை அறிந்து கொள்வோம். ஒரு பெண்குழந்தையின் அப்பா அவளை வகுப்பறையில் விட்டுட்டு அங்கேயே பத்து பதினைந்து நிமிடங்கள் நின்று அவள் புத்தக பை சாப்பாட்டு பை அதனதன் இடத்தில் வைத்துகொண்டு தனது இருக்கையில்இருந்து ஆசிரியரை கவனிக்கும் வரை நின்று கொண்டிருப்பார். மாலையில் அவளை தூக்கிகொண்டு முகம் முழுக்க முத்தம் பதித்து கொண்டு குழந்தை சிரிக்க சிரிக்க கொண்டு செல்வார். அந்த குழந்தை ஆசிரியருக்கோ மற்ற குழந்தைக்கோ எந்த சிரமமும் தராது இருப்பாள். பல குழந்தைகள் பழகுவது வரை வகுப்பறையை சிறைசாலை போன்றே உணர்வதுண்டு. அறுபது குழந்தைகள் இருந்தாலும் கொஞ்ச நாட்களிலேயே அவர்களின் குணங்களை தனி தனியே புரிந்துவைத்து கொள்வோம்.
கவிஞர் ந.பெரியசாமி யின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் என்ற கவிதை தொகுப்பு குழந்தைகளின் அக புற உலகின் அழகியலை இயல்பாகவும் கற்பனையும் கலந்து சித்தரிக்கிறது. குழந்தைகளின் உலகம் விசித்திரமானது கவிதைகளுக்குள் அடங்கிவிடாது என்பதே எனது எண்ணம்.
தொகுப்பின் முதல் கவிதை
அலெக்ஸ் மரம்
________________
பட்டியிலிருந்து விடுவிக்கப்பட்ட
கன்றுக்குட்டியின் துள்ளாட்டத்தோடு
வந்தவன் காட்டினான்
வரைந்த ஓவியத்தை
ஆலமரம் அழகென்றேன்
இல்லப்பா இது
அலெக்ஸ் மரம் என்றான்
சரிசெய்யும் பதட்டத்தில்
மீண்டும் வலியுறுத்தினேன்
ஏற்க மறுத்தவன் கூறினான்
என் மரம்
என் பெயர்தான்.
இந்த கவிதை அதிகமாக கவர்ந்தது. குழந்தைகளின் ஏற்க மறுக்கும் குணத்தை இயல்பாக சித்தரிக்கிறது. அபாரமானதும் கூட.
கனவு மோதிரம்
___________________
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்.
பாட்டியின்
கதை மோதிரத்தை.
குழந்தைகளின் கற்பனை அழகியலை இக்கவிதை சித்தரிக்கிறது.
உடனாளிகளோடு உண்பவள், துணை வானம் ,வெற்று தாளை வனமாக்கியவன் ,தலையணை, மிஞ்சிவிட்டதான மிளிர்வு ,அருவி,
போன்ற கவிதைகளும் எனக்கு பிடித்தமானவை.குழந்தைகளை மொழிக்குள் வசமாக்கியிருக்கிற முயற்சியும் கூட. வாழ்த்துகள். தக்கை பதிப்பக வெளியீடு.
______________________________________________
எஸ்.சுதந்திரவல்லி.

Saturday, February 18, 2017

 தோழர்
Elancheral Ramamoorthy
ந.பெரியசாமியின் நான்காவது கவிதைத் தொகுப்பு
“குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்”
பூங்கா தேவதை
தன் பிரசன்னத்தால்
எல்லோரும் சூழச் செய்தாள்
குட்டி தேவதை
கண்களை இறுக மூடச் சொல்லி
தேவைகளைக் கேட்டறிந்து
சொற்களைப் பிறப்பித்துப் பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவரும் தம் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர். பக்-19
குழந்தைமையின் மீது கொள்கிற அக்கறைகள் அதிகமாகவேண்டிய காலம் இது. ந.பெரியசாமியின் கவிதைகளில் குழந்தைகள் உலகம் பற்றிய கனவு நனவுச் சித்திரங்கள் கொண்ட நூல் இது. மற்ற தனது தொகுப்புகளிலிருக்கிற கவிதைகளுடன் புதிய கவிதைகள் இணைக்கப்பட்ட தொகுப்பு இது. இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் சொற்றொடரைப் பேசத் துவங்கியதும் குழந்தைகளுக்குப் பாடம் வாசிக்கவும் ஓவியங்கள் வரையவும் நடனமாடவும் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என பெற்றோர்கள் ஆசைப்படுகிற பொருளியல் புகழ் நோய் அதிகரித்துவிட்ட காலம். குழந்தைகளின் செயல்பாடுகளை ஆச்சர்யத்துடன் பேசி மகிழ்வதும் அதன் மீது எதிர்கால புகழ் போதையை ஏற்றுவதுமாக நடுத்தரக் குழந்தைவாசிகள் பழக்கப்பட்டுவிட்டார்கள். நவீன வாழக்கையில் குழந்தைகள் ஏற்கும் கதாபாத்திரங்கள் மிகவும் சிக்கலானது. பெற்றோர்களுக்குப் புகழையும் செல்வத்தையும் அள்ளி அள்ளிக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் கடமைப்பட்டவர்களாக இருப்பதை ந.பெரியசாமி தன் கவிதைகளில் பேசுகிறார்.
குடும்பத்தில் குழந்தைகள் வெகுவாகக் குறைந்து போய்விட்ட காலமும் இது. அச்சுருத்தும் எதிர்காலப் பொருளாதார வாழ்வு. பணத்தையும் பணப்பரிவர்த்தனை அட்டைகள் கடன் அட்டைகள் சூழப்பட்ட வாழ்க்கையில் ஆறுதல் தந்து கொண்டிருப்பவர்கள் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் சுட்டுவது எதிர்காலத்தை நமக்கான எதிர்காலத்தை. ஆனால் அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய அக்கறையோ ஆர்வமோ சிலாகிப்போ இல்லாதவர்கள் குழந்தைகள். உண்மையைப் பேசுவதனால் குழந்தைகளுக்காகத்தான் பெற்றோர்களில் சில கலைஞர்களாக மாறத்துவங்குகிறார்கள். குழந்தைகள் மூலமாகத் தான் அச்சத்தை உணர்ந்து விடுபடக்கற்றுக் கொள்கிறோம். எந்தத் திணிப்பையும் எதிர்க் கேள்விகளால் கட்டுடைப்பைச் செய்கிற முதல் கலைஞராக அறியப் படுகிறவர்கள்
குழந்தைகள் பற்றிய விவரணைகள், செய்திகள், விவர அட்டவணைகள் சமகாலத்தில் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரே குழந்தையை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட பணத்தை வைத்துக் கொண்டு அதிகமான வசதிகளைப் பெற்று உலகம் தெரியாமல் வளர்கிற குழந்தையும் சமூகத்தில் உள்ளது. அதே போல ஏழை எளிய மக்களின் சேரிகளில் ஒரு சத்துணவு ஆயாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வசிக்கிற குழந்தைகளும் உண்டு. எந்த இடத்திலும் இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்காத ஒன்று அவர்களின் கனவுகளுக்குரிய இடங்கள்தான். காணவிரும்புகிற இடங்கள்.
குழந்தைமை அறியாத ஒன்று ஏற்றத்தாழ்வும் அதன் பகிரங்கங்களும். அவன் ஏன் மிகவும் சிவப்பாக அழகாக குண்டாக இருக்கிறான். விளம்பரங்களில் வரும் குழந்தைகள் எங்கிருந்து வருகிறது. நிஜமாகவே அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு அதே போல அவர்கள் விரும்புவது வாங்கித்தருகிறார்களா பெற்றோர்கள் எனும் சந்தேகங்கள் எழும். அவர்களின் சந்தேகக் கேள்விகள்தான் இந்த உலகத்தின் அடுத்த பக்கத்தைப் புரட்டிப்பார்க்கத் தோன்றும் விசயம்.
ந.பெரியசாமியின் இந்த நூலில் உள்ள கவிதைகளில் குழந்தைமையின் நவீன மனஉலகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் உள்ள சிறார் இலக்கிய வகைமையிலிருந்து நவீன கவிஞனின் பார்வையில் குழந்தைமையின் கனவுகள் பற்றிய சொற்களைக் காணமுடிகிறது. புத்திசாலித்தனமிக்க குழந்தைகளுக்கும் கவிஞனுக்குமான உறவு எப்படி இருக்கும் என்பதை உணரக்கூடியதாக இக்கவிதைகள் உள்ளது. பல நூறு குடும்பங்கள் உள்ள ஒரு தெருவில் நான்கைந்து குழந்தைகள் மட்டுமெ தெருவில் விளையாடிப்பார்க்கும் அருகதை கொண்டவர்கள் நாம். நம்முடைய பிரதான பொழுதுபோக்கே குழந்தைகளின் அறிவார்த்தமான செயல்பாடுகளைக் குற்றம் சொல்வதும் மறுத்து வாதிடுவதும்தான்.
நிழல் சுவை
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
உருமாற்றப் படையெடுப்புகள்...
எனக்கிது போதுமென
கொடுத்தத் திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்.-------பக் 34
மேலே குறிப்பிட்ட கவிதையில் உள்ள பண்புருவமும் புனைவும் மாய எதார்தமும் நிறைந்த கவிதையாக அமையப்பெற்றதாகும். முப்பது கவிதைகளே அடங்கிய தொகுப்பு என்றாலும் கவித்துவத்தின் பளுவை உள்ளடங்கிய தொகுப்பு. Intuition எனும் உள்ளுணர்வு மிக்க கவிதைகள் பல உண்டு. குழந்தைகள் உள்பட பல எளிய வாசகர்கள் வாசித்து அறிய முடியாத வண்ணம் முழுமையாக நவீன கவிதையின் உருவகங்களும் படிமங்களும் நிறைந்தவையாக இருப்பது விமர்சனத்திற்குரியது. ந.பெரியசாமி விரும்பும் “கொட்டுக்காய்“த் தனமிக்க விமர்சனம் இது.
குழந்தையின் மனத்திலிருந்தும் கவிஞனின் மனத்திலிருந்தும் வெளிப்படுகிற சொற்கள் முற்றிலும் பல முரண்களையும் திருப்பங்களை அரூபமான கனவிலி சம்பவங்களையும் சொல்கிறது. மிக இயல்பாக மிக எளிய முறையிலேயே விவரித்திருக்கலம். “அப்படியா நான் நினைத்தேன்..நான் அந்தப் பொருளில் சிந்திக்கவில்லையே“ குழந்தைகள் மனம் எதிர் கேள்விகள் கேட்கிற தொனியில் சில கவிதைகள். என்றாலும் எதாவது குறிப்பிடவேண்டுமே என்பதல்ல.. எளிமைக்கும் நவீன வடிவத்திற்குமான அமைப்பியல் என்பதே தர்க்கத்தை விளைவிக்க வைப்பதே..நவீனத்திற்குத் தர்க்கம்தான் அவசியம்..
வாழ்த்துக்கள் பெரியசாமி.. தக்கை நண்பர்களுக்கும் அன்பு...

Saturday, February 11, 2017

Leena Manimekalai
தக்கை வெளியீடாக வந்திருக்கும் நண்பன் கவிஞர் பெரியசாமியின் நான்காவது கவிதை தொகுப்பு. அவ்வளவு மென்மையாகவும் அவ்வளவு கனமானதுமான "கொட்டு'க்காய்கள். தொகுப்பை வாசித்து முடிக்கும்போது வீடெங்கும் குழந்தைகள் நிரம்பி, மடியில் ஒன்று, தோளில் ஒன்று, முதுகில் ஒன்றென ஒரே சலசலப்புடன் விளையாடிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. வெறும் தாள்களையும் வார்த்தைகளையும் குழந்தைமையைக் கொண்டு மாய நிலமாக மாற்றிப் பார்க்கிறார் கவிஞர். புதைந்த குரல்கள், வலியின் சித்திரங்கள், அலெக்ஸ் மரம், அருவி, கனவு மோதிரம், வாஞ்சையின் கடும் ஈரம் போன்ற கவிதைகள், குழந்தைகளின் பிரத்யேக உலகத்திற்கு உள்ளே அழைத்துச் செல்வதும் வெளியிலிருந்து அவதானிப்பதாகவுமாய் நம்மோடு உரையாடுகின்றன.
குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின்
கதை மோதிரத்தை
- இது மேற்கோள் கவிதை யல்ல. கவிஞன் அடைகாத்த மழழைப்புலம்.
சித்திரங்கள் உயிர்பெற்று வரும் motiff திரும்ப திரும்ப வருவதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி நல்ல வாசக மனம் இருந்தால், கவிஞனோடும் கவிஞன் படைக்கும் குழந்தைகளோடும், நாமும் பொக்கை விழுந்த வானத்திலிருந்து விழும் நட்சத்திரங்களுக்காக ஆவென வாயைப் பிளந்துக் கொண்டு நிற்கும் உற்சாகம் வாய்க்கும்.
பெரியசாமிக்கு என் அன்பு முத்தங்கள். <3