Tuesday, August 29, 2017

Siva Sankar SJ

nantri: Siva Sankar SJ
·
திராட்சையின் சாயலை விழுங்கியவன்
------------------------------------------------
(குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
ந.பெரியசாமி)
மாலைப் பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை
இன்னொரு யானைதான்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
மற்றொரு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு..?
.......................................
மௌனித்திருந்தேன்
(பக்:20)
"நாம் குழந்தைகளை நம் உயரங்களுக்கு தூக்கிக் கொள்கிறோம்.ஒருபோதும் அவர்கள் உயரத்திற்கு குனிவதில்லை"
குட்டிமீன்கள் வரைந்து தள்ளும் ஒரு உலகம் பெரியசாமியின் வழியாக நம் கண்களை திறக்ககிறது.குட்டிமீன்கள்தான் நிறங்களின் கடவுளர்கள்.அந்த கைகளின் லாவகம் புது பிரபஞ்சத்தை உருவாக்க வல்லது.அதை அறிய நாம் குனிய வேண்டும்.தரையோடு தரையாக தவழவேண்டும்."பெரிசு" தவழ்ந்திருக்கிறார்.
என் வானத்தின் குட்டிமீன்கள் எனக்கு கற்று தந்தது ஏராளம்.அதுவோர் தனி மொழியுலகம்...
1)மூத்த நந்தன்- "மீதியை சாப்பிட்டுட்டு பாதியை வச்சிருக்கேன்பா " என்பான்.அம்மா ஒட்டகச்சிவிங்கி/ஜிராஃபி என சொல்லிக்குடுக்க இவன் ஒட்டாஃபி என்பான்.
2)மற்றொரு குட்டிமீன் ஆயிஷா -மழையோடு பேசுவாள்.காக்கைக்கும் பூனைக்கும் பெயர் சூட்டுவாள்
3)ஆமினா - சின்ன சொல்லில் பெரியவர்களை கேலிச்சித்திரமாய் தீட்டி விடுவாள்.
4)சின்ன நந்தன் உலகத்தையே குட்டியாய் மாற்றிவிட்டான் ..
குழந்தைகளிடம் கொடுக்கப்படும் தாள்கள் பாக்கியம் செய்தவை..அதன் எல்லைகளுக்கு வெளியேதான் கிடக்கிறோம் நாம்
தமிழ் சினிமாவின் அதிகப்பிரசங்கி குழந்தைகள் -செய்யப்படுபவை..அசலான குழந்தைகள் இதுபோன்ற கவிதைகளில்தான் உலவுகிறார்கள் குட்டிமீன்களாய்..
அந்த வானம் பூரிப்பூட்டுகிறது,வண்ணங்களை பொழிகிறது..பாடல்களை தூவுகிறது..
நாம் உயரங்களை குறைப்போம்..தவழ்வோம்..மீன்களாவோம்..
Child is the father of man. (Father..?/ Man.....?)
அன்பும் வாழ்த்தும் ந.பெரியசாமி
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
தக்கை வெளியீடு
விலை:30/-

Monday, August 28, 2017

Karl Max Ganapathy

1996 ம் வருடம். முதல் முறையாக வேலைக்கு சென்ற வெளியூர் ஓசூர். அந்த ஊருக்குச் சென்ற முதல் நாளின் குளிர் நிரம்பிய அந்தப் பேருந்து நிலையமும், எப்போதும் துவைக்காத சால்வையொன்றை போர்த்தியபடியே திரியும் உள்ளூர் மனிதர்களும் இன்னும் நினைவில் இருக்கிறார்கள். ஆறே மாதம்தான் இருக்க முடிந்தது என்னால். அந்த குறைந்த காலத்துக்குள் நிறைய நண்பர்கள். ஆதவன் தீட்சண்யா, போப்பு, பெரியசாமி, தங்கபாண்டி, தமிழன், பவித்ரன் குமார் இவையெல்லாம் இப்போதும் நினைவில் இருக்கும் பெயர்கள்.
எல்லாருமே இடதுசாரிகள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். தொழிற்சங்கங்களில் பங்குபெறுபவர்கள். ஆதவன் மட்டும் தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இப்போதும் அதில் இருக்கிறார். தேவா என்ற ஒரு நண்பரின் கடையில்தான் மாலை நேரங்களில் நண்பர்கள் சந்திப்போம். நான் மிகவும் புதியவன் அவர்களுக்கு. ஆனால் ஒரு இனிய தோழமையை உணர்த்தும் நண்பர்களாக அனைவரும் இருந்தார்கள். எல்லாருக்கும் படிக்கும் பழக்கம் இருந்தது. அதிசயமாக எல்லா பேச்சிலர்களும் தங்களது அறைகளை சுத்தமாக வைத்திருப்பார்கள். நிறைய புத்தகங்கள் இருக்கும். அது குறித்த உரையாடலுக்கு பஞ்சமிருக்காது.
அப்போது நடந்த ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவை’ ஒட்டி ஆதவனின் கவிதைத் தொகுப்பு ஒன்றும், தோழர்கள் அனைவரின் ஒவ்வொரு கவிதைகள் அடங்கிய ஒரு தொகுப்பும் வெளியிடப்பட்டது. ‘பனியெனக் கவியும்’ என்பது அந்த தொகுப்பின் பெயர் என்று ஞாபகம். அதில் தான் எனது முதல் கவிதை வெளிவந்தது. பெரியசாமியின் கவிதை ஒன்றும் அதில் வந்தது.
எனது அந்த கவிதைக்குப் பிறகு கிட்டத்தட்ட பத்தொன்பது ஆண்டுகள் நான் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை. எனது முதல் சிறுகதையை 2014 ன் இறுதியில் எழுதத் தொடங்கி 2015 ன் இறுதியில் பத்து கதைகளை எழுதி முடித்தேன். அதுதான் 2016 பெப்ருவரியில் தொகுப்பாக வெளிவந்த 'வருவதற்கு முன்பிருந்த வெயில்'. தமிழனின் கவிதை ஒன்றும் ‘பனியெனக் கவியும்’ தொகுப்பில் வெளி வந்திருந்தது. அதற்குப் பிறகு அவர் வேறு எதுவும் எழுதவில்லை போல. நண்பர்களில் பெரியசாமி மட்டும் விடாப்பிடியாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். கோபாலும் தான். ஆதவனையும் போப்பையும் இதில் சேர்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே அறியப்பட்ட எழுத்தாளர்களாக இருந்தார்கள்.
பெரியசாமியின் நான்காவது கவிதைத் தொகுப்பு இப்போது வெளிவரும் ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீல வானம்’. நதிச்சிறை, மதுவாகினி, தோட்டாக்கள் பாயும் வெளி ஆகியவை முந்தைய தொகுப்புகள். இந்த தொகுப்பு முழுக்கவும் குழந்தைகளைப் பற்றியும், குழந்தைமையைப் பற்றியும் பேசும் கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. ‘’குழந்தைகளை அவர்களின் பாட்டிலே விளையாடவிட்டு, அருகிலிருந்து பார்க்கும் ஒரு கவிஞனின் பார்வை இந்தத் தொகுப்பில் நிறைந்திருக்கின்றன’’ என்று நூலுக்கான முன்னுரையில் சொல்லியிருக்கிறார் கவிஞர் ரியாஸ் குரானா. உண்மைதான்.
பெரியசாமியின் கவிதையுலகம் அவரைப் போலவே மிகவும் எளிமையானது. கவிதை அது அடையக் கூடிய வீச்சின் எல்லைகளைப் பற்றிய எந்த பரபரப்பும் இல்லாத மெல்லிய உணர்வுகளை பேசுவதில் கவனம் குவிப்பவையாக இருக்கின்றன அவரது கவிதைகள். நான் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே ஆகிருதியாகவே இப்போதும் இருக்கிறார் அவர்.
தனி மனித வாழ்வு நிறுவனமயப்பட்ட அமைப்பு முறை ஒன்றில் ஆழமாக பிணைக்கப்பட்டிருக்கும் சூழலில், வெளிறிப்போய்க் கொண்டிருக்கும் குழந்தைமையின் இழப்பைக் குறித்து மென்மையான குரலில் பேசும் பல கவிதைகள் இதில் இருக்கின்றன. ‘இழந்த வாழ்வு அல்லது கைவிடப்பட்ட குழந்தைமை’ என்பதைப் பாட முயல்கையில் இயல்பான ‘இருமை’ ஒன்று கட்டமைந்துவிடுவதாகத் தோன்றுகிறது. அது இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளை மாத்திரமல்ல, பெரியசாமியின் கவிமனதையே ஒரு சட்டகத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறது. அது கவிதையை ஒரு எல்லைக்குள் முடக்குகிறது.
குழந்தமை என்பது எல்லைகளற்ற சுதந்திரத்தின் குறியீடு. அதைக் கவிதையாக்குகிறபோது ஒரு பரந்த வெளிக்குள் வைத்து அதைக் கவிஞன் எவ்வாறு சொல்கிறான் என்பதும், குழந்தைமை ஒரு வன்முறை இயக்கத்தின் அபத்தக் கூறாக எங்ஙனம் உருமாற்றப்படுகிறது என்பதைச் சொல்வதிலும் இருக்கிறது கவிதையின் ரசவாதம். ஆனால் அதை நோக்கி நகராமல் விம்மலாக அல்லது ஏக்கமாக முடிகின்றன பல கவிதைகள்.
மொத்தமாக கவிதைகளைப் படிக்கையில் அவை நமது பால்யங்களை நோக்கி நம்மைத் திருப்புகிற, நாம் எளிமையாகக் கடந்து போகிற குழந்தைகளைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்ற உணர்வெழுச்சிக்குள் இழுத்து விடுகிற கவிதைகளாக இருக்கின்றன. அதிலுள்ள விசும்பல் தொனி, கவிதை புகாராக மாறுவதைத் தடுக்கிறது. அந்த தொனியின் மூலமே அது நம்மிடம் உரையாட முயல்கிறது. வீட்டை விட்டு வெளியேறுகையில் நமது காலைக் கட்டிக்கொண்டு நாம் வெளியேறுவதை மறுத்து அடம் பிடிக்கும் குழந்தையைப் போல.
Periyasamyக்கு எப்போதுமிருக்கும் எனது அன்பு!

Friday, August 4, 2017

-கணியன் பூங்குன்றன்



ஒரு பொருட் பன்மொழி
-கணியன் பூங்குன்றன்
குழந்தைகளின் உலகம் என்கிற ஒற்றைக் குவிமையத்தை தேர்ந்து கொண்டு, சிறிதும் பெரிதுமான கோடுகளால் வெவ்வேறு சாயல்களில் வரையப்பட்டிருக்கும் விதவிதமான சித்திரங்களின் தொகை இது. வளர்ந்து பெரியவர்களாகி இந்த உலகத்திற்கு தகுந்தாற்போல, தங்களைப் பொருத்திக் கொள்ள கற்பதற்கு முன்பாக, குழந்தைகள் தங்களின் களங்கமற்ற வசீகரத்தோடு தம்போக்கில் உலவித் திரிகின்றனர். அப்பருவத்தில் அவர்கள் கொள்ளும் பரபரப்பு, ஆனந்தம், வினோதம், கற்பனை, கனவு முதலியன அவற்றின் இயல்பு எளிமை காரணமாக எல்லோரையும் ஈர்த்து நிறுத்தும் தன்மையுடையது. அத்தகைய தருணங்கள் பலவற்றை தனது வார்த்தைகளால் ஒற்றியெடுத்து, ஒவ்வொன்றையும் ஒரு கவிதையாக ஆக்கிப் பார்த்திருக்கிறார் பெரியசாமி. உலகப் புகழ்பெற்ற ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை அதன் ஆசிரியர் ‘முன்பு ஒரு காலத்தின் குழந்தைகளாக இருந்த பெரியவர்களுக்கு’ சமர்பணம் செய்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு பெரியவரின் நோக்கிலிருந்து எழுதப்பட்டவை எனலாம் இக்கவிதைகளை. மொழியின் இலக்கணத்திற்கு தன் கற்பனைகளை ஒப்புக்கொடுக்கத் தொடங்கும் கணத்திலிருந்து தான் ஒரு குழந்தை, தனது குழந்தமையிலிருந்து வெளியேறத் தொடங்குகிறது எனலாம். குழந்தைகளினுடைய அன்றாடத்தனத்திலிருந்து உருவாகும் கவித்துவம் என்பது பெரும்பாலும் அதனுடைய மொழி வழுவலிலிருந்து பிறப்பதுவே. சொற்களின் கண்ணாடித் தடுப்பை ஊடுருவிப் போனால் மாத்திரமே அதன் முழுவனப்பையும் கொண்டுவர முடியும். பெரியசாமி அதற்காக ஒரு தூண்டில்காரனின் பொறுமையோடுக் காத்திருக்கப் பழகுவாரெனில், நெளிந்தோடும் நீலவானத்தில் குட்டிமீன்களோடு சில நட்சத்திர மீன்களையும் பிடிக்கக்கூடும்.
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீல வானம் – ந. பெரியசாமி – தக்கை, 15, திரு.வி.க.சாலை, அம்மாபேட்டை, சேலம்-3. பக்.40 ; விலை.ரூ.30.