Monday, November 16, 2015

கசாப்பு கடையிலிருந்து மீண்ட ஆட்டுக்குட்டிகள்

ஆட்டுக்குட்டிகள் ஆண் இல்லா வீட்டின் அதிசயங்களை அறிந்தவை. எதையாவது சாக்கிட்டு வெளியேறியபடியே இருப்பவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வீட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான ஆட்டின் உறவை. தன் துள்ளலில் காதலை வெளிப்படுத்தும் ஆட்டுக்குட்டிகளுக்கு முத்தப் பரிசுகள் கிடைத்தபடியே இருக்கும். குழந்தைகளைக் போல் மென்மையானவை. பெண்களை மகிழ்விக்கும் நுனுக்கங்களை கற்றவை. இயேசுவிற்கு ஆதனால்தான் ஆட்டுக்குட்டிகளின் மீது அத்தனை பிரியம் போலும். எஸ்.சுதந்திரிவல்லிக்கும் ஆட்டுக்குட்டிகள் மீது வெகுவான பிரியம் போலும்.தன் அன்பை சமர்ப்பனத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தொகுப்பில் நாய், ஆட்டுக்குட்டி, பூனை, மைக்குட்டி(கம்பளிப்பூச்சி) என வீட்டிலிருக்கும் சக ஜீவிகள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார்.

ஆடு, பூனை, நாய் மூன்றும்  வீட்டில் இருக்கம் பெண்களுக்கு நெருங்கிய தோழமைகளாக இருக்கிறது. அன்பையும் துயரையும் அவைகளுடனான உரையாடிலில்தான் பகிர்வு கொள்கிறார்கள். பெண்ணின் ரகசியம் காக்கும்  ஜீவிகளாகவும் அவைகள் இருக்கின்றன.
குலதெய்வங்களுக்கு நேர்த்திக் கடனுக்காக ஆடுகளை, கோழிகளை பலிகொடுப்பதே வழக்கம். அவைகளின் சம்மதத்தோடுதான் பலியிடுகிறோமெனும் பாவனையில் நம்பிக் கிடக்கிறோம். நீர் தெளிக்க துள்ளுவது சம்மதத்தின் அறிகுறியாக மாற்றியது மனிதனின் தந்திரம். இத்தந்திரம் பெண்கள் மீதும் இச் சமூகம் தொடர்ந்து ஏற்றிவைத்துள்ளது. ஏதேனும் ஒரு தந்திரத்தை கையாண்டு அவர்களின் விருப்பங்களை நீர் தெளித்து துளுத்ததாக கணக்கிட்டு அவர்கள் விரும்பாமலே வேறு இல்லங்களுக்கு பலிகொடுத்து தன் கடமையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். பெண்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்குமான பந்தத்தின் கன்னி இதுவாகக்கூட இருக்கக்கூடும். பிடித்த பெயரை வைத்து பிடித்த மாதிரி அழைத்து அவைகளோடு உறவாடி இருப்பவர்களுக்கு அவர்களின் உலகம் குறித்த புரிதல் இருப்பதால் சுதந்திரவல்லியின் கவிதைகளை நெருக்கமாக உணர முடிகிறது.

நாம் அக்கறையோடு விரும்பிப் பார்க்கும் தொழிலாக இருந்தாலும் சுமத்தப்படும் அழுத்தத்தின் காரணமாக நமக்கு அதன் மீதொரு வெறுப்பு உண்டாவது இயல்பு. ஆசிரியராக இருப்பதைவிடவும் ஆடு மேய்ப்பது ஆத்ம திருப்தி அளிக்கிறதெனும் சுதந்திரவல்லியின் வரிகளில் நம் பனியின் அழுத்தத்தையும் கழற்றி வைக்க முடிகிறது.

தொகுப்பிலிருக்கும் 'குட்டி நாய்' கவிதையில் சங்கலியால் கட்டப்பட்டிருக்கும் குட்டி நயை இஷ்டம்போல் எல்லா நாய்களும் புணர்ந்து போகும், பலவீனங்களை தமக்கு சாதகமாக எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் பலமானவர்களின் அறம் குறித்த கேலியாகவும் அக்கவிதையை உணர முடிகிறது.பப்பியோடு நமக்கும் ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது பப்பி கவிதை.

குறைகள் குறித்த புகார்பட்டியலோடு வாழ்வு இயல்பாக நகர அருகாமை பிசாசாகவும், தொலைவின் நீளம் இஷ்ட தேவதையாகவும் தோற்றம் கொள்ள, வீசிய மாங்காய் உண்ட முதல் காதலின் நினைவுகளோடு, மின்மினி வண்ணத்துப்பூச்சி தட்டான்கள் சிலந்தி ஈசலின் வண்ணங்களோடு காத்திருக்கம் புணர்ச்சியின் வண்ணங்களை வெளிக்காட்டி ஆசைகளை நிறைவேற்றிப் பார்த்த புகை சூழ்ந்த இருளின் இன்பம் சுகித்து, தன்னை திருடுபவனுக்காக காத்திருந்த நாட்களின் நினைவுகளை கவிதைகள் காட்சியாக்கும் அக உலகில் நாமும் நம்மை கண்டடைய முடிகிறது.

சதா சந்தேகத்தோடும், அவநம்பிக்கையோடும் இருக்கும் ஆண்கள் மீது ஒற்றை செருப்பை வீசியதுபோல துவங்கிய 'ஒற்றை விழி' கவிதை துவங்கி, பக்கத்து வீட்டு சண்டை பார்க்க காத்திருக்கும் ஜன்னல் அறைந்து, அதிகாரிகளின் மோப்பக் கண்களை குருடாக்கி, ஞானி ஞானியாக இருக்க, சூன்யம் சூன்யமாகவே இருக்கட்டுமே அதனால் என்னவாகிடப்போகிறதென சலிப்படைந்து, நிஜம் இழக்க சாயல்களாக வாழும் அவலம் கூறி, கொல்லும் போதையின் வன்மத்தால் வெளிப்படும் வார்த்தைகள் வலி உணர்த்தி, விரல் நகங்கள் கத்திகளாக மாறும் காலத்திற்காக காத்திருக்கம் நிலை கூறி, குழந்தைகளையும் கிழிக்கும் போதை முட்களின் கூர்மையை காட்சியாக்கி, இசக்கியை பொறாமை கொள்ளச் செய்து பேய் பாதையில் பயணித்து பட்டனம் செல்ல அங்கும் விருப்பம்போல் வாழ இயலாது போக ரயிலின் நினைவுகளோடு கிராமம் வந்து சேர்ந்ததாக ஒரு கதையை நாம் கண்டடைய முடிகிறது தொகுப்பில்.

'முதிர் கன்னி' கவிதை கடவுளை காதலனாக்கி பாசுரம் பாடிய ஆண்டாளை போற்றும் இச் சமூகம் தன் கண்ணனுக்காக காத்திருக்கும் முதிர்கன்னியை ஏலனப்படுத்தும் அவலத்தை நினைவூட்டுகிறது.

எஸ்.சுதந்திரவல்லியின் பட்டணத்து ரயிலை மட்டும் கிராமத்தை நோக்கிக் கொண்டு வந்து சேர்த்தாள் தொகுப்பு நம் உடன் வாழும் பெண்களை மேலும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

வெளியீடு
சிலேட் பதிப்பகம்
விலை-ரூ.50

நன்றி - படிகம்

Tuesday, November 3, 2015

நன்றி- தீராநதி.

தோட்டாக்கள் பாயும் வெளி
மதிப்புரை- கமலாலயன்

'நதிச்சிறை', 'மதுவாகினி' என முதலிரு தொகுப்புகளுக்குப் பின் ந.பெரியசாமியின் மூன்றாவது கவிதைத் தொகுதியாக 'தோட்டாக்கள் பாயும் வெளி' வந்திருக்கிறது. சம காலத்து வாழ்க்கையில் குழந்தைகள், பெண்களின் துணையுடன் அடைகிற, அடையத் தவிக்கிற சின்னச் சின்ன சந்தோஷங்களைப் பேசுகிற கவிதைகள் இவை. எதிர்ப்படுகிற துயரங்கள், எதார்த்தங்களின் அவலங்கள், ஏமாற்றங்களையும் சொல்கின்றன. சிறு சிறு சம்பவங்களை, அல்லது மன வெளியில் உருவாகும் காட்சித் துணுக்குகளை கவித்துவத் திரைச்சீலைப் பின்னணியில் கோட்டோவியங்களாகத் தீட்டிக் காட்டுகிறார் கவிஞர்.

மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவதில் தொடங்கும் பயிற்சி, பெரிய சைக்கிளில் பெடல் அடித்து ஓட்டுகிற நிலையை அடைவதற்கும் உடலெங்கும் சிராய்ப்புகள், முட்டிகளில் காயங்கள் என 'விழுப்புண்கள்' பெற்ற பிறகே ஓரளவு தைரியமாக சைக்கிள் ஓட்ட முடிகிற அளவுக்குச் செழுமையடைகிறது. இது தன் கவிதைகளுக்கும் பொருந்தும் என்கிறார் பெரியசாமி. ¢

குழந்தைகளின் மன உலகம் குறித்த கரிசனமும் அதன் வெளிகளில் பயணித்து பதிவுகளாக்க முற்படும் உந்துதலும் சமீப காலங்களில் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. பள்ளி செல்லும் வயது முன்பெல்லாம் 5 அல்லது 6ஆக இருந்தது. இப்போதோ ஒன்றரை வயதானதுமே மழழையர் பள்ளி நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகிவிட வேண்டிய நிலைக்குக் குழந்தைகள் ஆளாக்கப்படுகிறார்கள். இந்த 'வலியின் சித்திரங்கள்' மனதில் அச்சமூட்ட ''பதட்டத்தில் உடல் நடுங்கினோம்/நாளை அனுப்ப வேண்டும் -பள்ளிக்கு'' என பெற்றோர் மனம் பதைப்பது கவிதையாகிறது.(பக்-10,11)

'அணிலாடு முன்றில்களுக்கு இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கை வெளிகள்' இடமளிப்பதில்லை. எனவே, ஒண்டுக் குடித்தன அறைகளினுள் அணிலோ, குருவியோ, பூனைகளோ அழையா விருந்தாளிகளாய் நுழைந்து எட்டிப் பார்க்கின்றன. இங்கு வருகிற அணிலுக்குக் குடில் அமைத்து உணவு சேமிக்கத் தொடங்குகிறார் கவிஞர். இருப்பின் கொஞ்சலும், இல்லாமையின் தவிப்பும் இருவருக்கும் பொதுவான உணர்வுகள். அணிலின் மொழி பரிச்சயமாகி, உறவு நீடிக்கிறது. மகளின் பிடிவாதங் கருதி, அணில் உடலின் கோடுகளின் கதையைக் கூறுமகிறார் கவிஞர். அடுத்தடுத்த நாட்களில் எஞ்சியிருப்பது சிறு குடிலும் அதன் வீச்சமும் மட்டுமே.

மண்ணின் மொழியறிய முற்படுகிறவர்களுக்கு மழை வரும் நாட்கள் மிகவும் உவப்பானவை. பெய்யும் மழை முழுவதையும் சுவடு கூட எஞ்சிராமல் குடித்துவிட முடிகிறது அவர்களால். நீர்த்தாகமெடுத்து அலைபாயும் வேர்களும், ஆற்று மணற்பரப்பும், குளம் - குட்டைகளும் வெடித்துக் கிடக்கும் நிலப் பிளவுகளும் உயிர் நீரை உறிஞ்சியபின் உயிர்ப்படைகின்றன. காய்ந்து பழுப்பேறிக் கிடப்பவை பசுமையடைகின்றன. இந்த 'உயிர்ப்பு' மிக்க பரிமாற்றங்களின் வளர்ச்சிப் போக்கில் மழை வரும் நாளில் மண்ணின் உடலாகவே மாறிவிடுகிற விந்தையைச் சொல்கிறது ஒரு கவிதை (பக்-18.).

ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டின் மனிதர்கள்,. வீட்டினுள் மழை ஈரம் படாமல் தப்பிப் பிழைக்கும் சில மூலைகளில் ஒடுங்கிக் கொண்டு, சொட்டும் நீர்த்துளிகளால் நிறைந்து வழியும் பாத்திரங்களை இடம் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டு நாட்களைக் கடத்துவது எதார்த்தமான ஒரு வாழ்நிலை. இந்தப் படிமத்தை ஒன்றை மறந்து புதிதாக வேறொன்றைக் கேட்கும் மகனின் ஆசைகளை எதிர்கொள்வதற்கு நாளை, அடுத்த வாரம், கட்டாயம் வரும் மாதம் என பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும்  பெற்றோருக்கு ஒப்புமையாக்கி இருக்கிறார் பெரியசாமி. உவமை பழையது. வாழ்நிலைக்கூறு புதியது. இத் தொகுப்பின் பல கவிதைகளில் இத்தகைய தன்மைகளைக் காண முடிகிறது.

குழந்தைகளின் உலகில் பயணிக்கும் மற்றொரு கவிதை- 'வெளியே மழை பெய்தது'. மேலும், 'தலையணை', 'துணைவானம்', 'புதைந்தகுரல்கள்', 'நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்', 'பூங்கா தேவதை', 'நிழல் சுவை', 'நிலையானது', 'சித்திரச் சுவர்கள்', 'சாயற்கனி' இப்படியாக இத்தொகுப்பின் பல கவிதைகள் பிஞ்சு மனங்களுக்குள் பெரும் படைப்பாற்றல் நிறைந்த தூரிகைகள் ஓயாமற் பிரசவித்துக் கொண்டிருக்கும் உயிரோவியங்களை இடம் பெயர்த்து வார்த்தைப்படுத்துகிறவையாய் அமைந்துள்ளன.

அடுக்கு மாடிக் குடியிருப்புகளால் இன்று விண்முட்ட உயர்ந்தோங்கிய கட்டடங்களின் அடித்தளங்களினுள் புதையுண்டு கிடப்பவை, நூற்றாண்டு காலங்களைக் கடந்த பெரும் நீர் ஆதாரங்கள் என்பது நாமெல்லாரும் அறிந்ததே. நீர்நிலைகள் மட்டுமின்றி, மரம், செடி-கொடிகள், மண் உள்ளிட்ட இயற்கைப் படைப்புகளும் நம்முள் எண்ணற்ற சிற்றுயிர்களையும் சேர்த்தேதான் பராமரித்து வந்திருக்கின்றன. இனியும் தொடர்ந்து பராமரிக்கப் போகிறவை அவைதாம். ஆனால் அந்த உயிராதார நீர்ப்பரப்புகளையும், வனங்களையும், உணவு வயல்களையும் மனம்போன போக்கில் அழித்துக் கொண்டிருக்கிற இன்றைய பெருவாணிகக் கூட்டங்கள், கேளாக் காதுகளுடையவையாகவும், பாராமுகங்களைக் கொண்டவையாகவுமே இருக்கின்றன. இந்தக் கூட்டத்தினரின் கேளாக்காதுகளுக்கு உரத்த குரலில் முழங்கித் தீர வேண்டியதன் அவசியத்தை 'புதைந்த குரல்கள்' கவிதை (பக்-63) உணர்த்துகிறது.

படைப்பாக்க மனநிலையைத் துணைக்கொண்டு புனைவுலகில் நாம் தொலைந்து போக முற்படும் வேளைகளில் சிறகுகள் நினைவூட்ட தரையைப் பார்க்கிறோம். வீடுகள் நிலவுகளாகவும், நிலவெளி வானமாகவும் விரிவுகொள்கின்ற விந்தை நிகழ்கிறது. (புறா-பக்-64) இதையே தலைகீழாக்கிப் பார்க்கிறாள் ஒரு சிறுமி. அவள் வரைந்தனுப்பிய துணை வானம், ஒரு நிலா, ஒரு சூரியன், நிறைய நட்சத்திரங்கள்தாம் இன்று நாம் காண்கிற பால்வெளி வீதிக் காட்சிகள் என்கிற கவிதை (துணைவானம்-பக்-65) நெஞ்சை ஈர்க்கிறது.
தலைப்பு இடப்படாத ஒரு கவிதையின் இறுதி வரிகள் இவை. ''தன் உயிரை எழுத்தாக்கி மிதக்கச் செய்தாள் யாரேனும் சிறுசிறு கற்கள் கொண்டு நிரப்பி வழியும் நீரில் தன்னை வாசிக்கக் கூடுமென்று'' படைப்புக் கலைஞர்களின் உயிரைக் குடித்துக் குடித்தே உருப்பெற்று வெளிப்படுகின்றவை கவிதைகள், சிற்பங்கள், ஓவியங்கள், காவியங்கள், இசைப்பாடல்கள்- இன்ன பிற யாவும் கேட்பதற்குச் செவிகளும், பார்ப்பதற்குக் கண்களும் வேண்டுமே''.

உரத்துப் பேச வேண்டிய காலமாக நம்முடையது ஆகிவிட்டது. சமூக வெளியில் நிகழும் அவலங்கள் குறித்து முணுமுணுப்பையேனும் வெளிப்படுத்தத் தவறுகிற கலைஞர்கள் என்றேனும் ஒரு நாள் காலத்தின் விசாரணையிலிருந்து தப்பவே முடியாது. பெரும் வன்முறைகளையும், கொலைவெறித் தாக்குதல்களையும் அதிகார வர்க்கத் தடைகளையும், தோட்டாக்களையும் முன்னெப்போதையும் விட எதிர்கொண்டே தீரவேண்டிய நாட்களாகி விட்டன இன்றைய நாட்கள். சுற்றி நடக்கின்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், நமக்கெதுக்கு ஊர் வம்பு என நல்லத்தனமாக புனைவுப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு கனவுலகவாசிகளாயிருப்பவர்கள் தாம் எழுத்துலகில் அதிகம். இது ஏதோ இன்றைய நிலைமை மட்டுமன்று. எந்தக் காலத்திலும், எதிர்ப்புக் குரலெழுப்பி மாற்றும் சிந்தனைகளை முன் வைப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

அதே வேளையில், தோட்டாக்கள் பாயும் வெளி தான் இது என நன்கறிந்தே அந்த வெளிகளை ஊடறுத்துக் கொண்டு முன்னேறிப் போய்ப் புதுப்பாதையை உருவாக்குவதற்காக, நெருஞ்சி முட்கள் நிரம்பிக் கிடக்கும் ஒற்றையடிப் பாதையில் நடக்க முற்படுகிறவர்கள் சிலர்தாம். எனினும் அவர்களும் இதே சமகாலத்தின் குரல்களை எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அத்தகையவர்களுள், ந.பெரியசாமியும் ஒருவர் என நிறுவுகிறது 'தோட்டாக்கள் பாயும் வெளி'

வெளியீடு-புதுஎழுத்து

நன்றி- தீராநதி.

Monday, November 2, 2015

nantri: vaa.manikandan

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.
குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?
இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.
கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார்.
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்
எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்
இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.
இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?
இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது.
‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.
இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.
கழுவினேன்
கையிலிருந்த பிசுபிசுப்பை.
இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம்.
இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை.
கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை.
இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-
துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது
மழை
வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்
விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
nantri: vaa.manikandan