Saturday, December 16, 2017

சம்பு புதுவிசை

என் கவிதை தொகுப்பிற்கு சம்பு புதுவிசையில் எழுதியது
ந.பெரியசாமியின்
குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய வாசிப்பு மற்றும் சிறு அறிமுகக் குறிப்பு...
###
ந.பெரியசாமியின் நான்காவது தொகுப்பு இது. சுமார் 40 பக்கங்கள் அளவிலான இச்சிறிய தொகுப்பு முழுதும் நிறைந்திருப்பது குழந்தைகள். எல்லைகளற்று விரிந்து பரவும் அவர்களின் மன உலகம். அதில் அவர்களுக்கேயான புதிர்க்கனவுகள், குறுகுறுப்பு மற்றும் எதார்த்தத்தை குறுக்கீடு செய்கிற குழந்தை விருப்பங்கள் என இத்தொகுப்பு மிகுந்த அடர்த்தியாக வந்திருக்கிறது. குழந்தைகளின் ஒவ்வோர் அசைவையும் நாம் காண்பது நமது வளர்ந்த கண்களின் வழியாகவேதான் இருக்கிறது. இப்பொதுச்சமூகத்தின் பெரும்பகுதி வளர்ந்த கண்களின் வழியாகவேதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட வாழ்வு துரத்தும் நிலையற்ற ஓட்டத்திற்கும், இயந்திரத்தன மாக மாறிவிட்ட எல்லாவித உறவுநிலைகளின் முகமூடியை அணிந்து கொண்ட பிறகும் குழந்தைகளின் கண்கள் வழியாக இவ்வுலகைப் பார்ப்பது அரிதாகிப் போன ஒன்றுதானே? என்றும், எனினும் நம்மைச் சுற்றி குழந்தைகளின் பேருலகம் விரிந்து கிடக்கிறது. அவர்கள் குதூகலித்து விளையாடுகிறார்கள், சண்டையிடுகிறார்கள், ஏக்கங் கொள்கிறார்கள், அல்லலுறுகிறார்கள், அவர்களின் பிரபஞ்சம் வேறு த்வனியில் இயங்குகிறது. இந்த லௌகீக உலகின் எல்லைக்கு வெகு அப்பால் அவர்களது மின்மினிகள் பறக்கின்றன.
எல்லா விளையாட்டுக்ளும் முடிந்து வீடு திரும்பி அயர்ந்துறங்கும் குழந்தைகளின் கனவில் சதா ஒரு ரயில்வண்டி ஓடிக்கொண்டிருக்கி றது. ஒரு வினாடியும் அந்த ரயில் ஓய்வுக்கென நிற்பதில்லை. எந்த நிலையத்திலும் அதற்கு பச்சை, சிவப்பு விளக்குகள் கிடையாது. தண்டவாளத்திலிருந்து இறங்கி நிலத்தின் மீதும், நிலத்திலிருந்து விலகி நீரின் மீதும் பயணித்துக்கொண்டிருக்கிறது அந்த ரயில். எல்லா வண்ணக்கொடிகளையும் அசைத்தபடி உச்சபட்ச மகிழ்வில் நில்லாமல் அது போய்க்கொண்டிருக்கிறது, எவரின் கண்களுக்கும் புலப்படாமல்...
ந.பெரியசாமி அந்த ரயிலை அடையாளம் கண்டுகொள்கிறார். ரயிலும் அவரைக் கண்டுகொண்டு புன்னகைத்து ஸ்நேகிக்கிறது. பிறகு அவரின் குழந்தை ரயில் விளையாட்டு நொடியில் களைகட்டி விடுகிறது. ந.பெரியசாமி கவிதையின் சொற்களைக் கையில் வைத்துக்கொண்டு அந்த ரயிலை கவிதைக்குள் பிடித்துவிட கூடவே ஓடிச்செல்கிறார். இறுதிப் பெட்டியின் அரைஞாண் கயிற்றைப் பிடித்தும் விடுகிறார்.
இத்தொகுப்பு இரு விசயங்களைக் குறிப்பாக முன்வைக்கிறது. குழந்தைகளில் சித்திரங்களைப் படரவிடும்படியான கவிதைகளைக் கொண்ட இது குழந்தைகளுக்கானதல்ல. மாறாக, என்றோ கடந்து வந்துவிட்ட, நாம் கைமறதியாய் தவறவிட்ட அல்லது இப்போதும் காணத்தவறுகிற சிறுவர்களின் பேருலக அசைவுகளை நம்முன் விரித்துக்காட்டுகிறது. மற்றொன்று, மிக இயல்பாக மீண்டும் பின்னோக்கி குழந்தையாகக் கற்பிதம் கொள்ளும் மனநிலைக்கு நம்மை தகவமைக்கும் படியும் விழைகிறது.
நடப்பில் நிறைவேறாத ஏக்கங்களை தம் கற்பனையில் மாற்றை நிறுவி நிவர்த்திக்க முயலுகிறார்கள் குழந்தைகள். அந்த எண்ணங்களைக் கவிதையாக்கும்போது அறிவின் தடித்த மனம் குறுக்கிடாமல் கவனங்கொள்வது கடினம்தான். ந.பெரியசாமி தம் கவிமொழியை பிரத்யேகமாக இளகச்செய்து அந்த தடித்த மனதை எளிதில் கடக்கிறார். அதனாலேயே, இக்கவிதைகள் பெரிய எவ்வித முஸ்தீபுகளும் அற்று தொடங்கி இயல்பாக முடிவுறுகின்றன.
தனது விளையாட்டுக்காக ஒரு குழந்தையால் உருவாக்கப்பட்ட அலெக்ஸ் மரத்தை நம் தாவர வகைப்பாட்டியல் அறிவிற்குள் கண்டுணர இயலுமா? அம்மரத்தின் கீழமர்ந்து நிச்சலன மனதுடன் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறதே, இரு கைகள் நிறைய கல்லையும் மண்ணையும் அள்ளியள்ளி வீசிக்கொண்டிருக்கிறதே அது நம் பால்யமன்றி வேறென்ன? ஒரு மரத்திற்கு சடாரென அலெக்ஸ் மரம் எனப் பெயரிடுதலின் கபடமற்ற குழந்தைமையை ஒரு கவிதை சுட்டி நிற்பதை அப்போதுதானே நாம் உணரமுடியும்.
இந்தக் கவிதைகளின் உள்ளீடுகள் ந.பெரியசாமியின் கவிதை மனதை துலக்கம் கொள்ள ஏதுவாக இருக்கின்றன. அதிலிருந்து தனக்கான சிறு ஒளியை அவைகள் உருவாக்கிக் கொள்வதையும் காணமுடிகிறது.
எல்லாவற்றுக்கும் ஒரு துணை இருப்பதுபோல அசாதாரணக் கற்பனைதான் துணைவானம் என்பதும். வானிற்கு துணையாக இன்னொன்றை கற்பிதங்கொள்ள ஒரு கவிஞனுக்கு மொழியின் துணைமட்டும் போதாதுதானே. நிர்மலமான பாசங்கற்ற மனம்தான் அதைச் சாத்தியமாக்கம். அதனால்தான் இத்தொகுப்பின் கவிதை களில் குழந்தைகள் சதா காகிதத்தில் எதையாவது கிறுக்கி உருவங் கொடுக்கிறார்கள். அவர்களின் அருவி கொப்பளித்துக் கொட்டும் போது பூச்சிகள் நடுங்கத்தில் மரப்பொந்துகளில் அடைகின்றன. இக் குழந்தைகளின் சித்திரங்களுக்குள் ஒரு நீதி சதா ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடுகிறது. சாதாரணமாக அங்கு எழுதப்படும் சில தீர்ப்புகளினால் மட்டுமே அவர்கள் ஆற்றுப்படுத்தப் படுகிறார்கள்.
சிறிதான இத்தொகுப்பு குழந்தைகளின் சப்தத்தால் நிறைந்திருக்கிறது என்றோ கெட்டிப்பட்டுப்போன செவிக்குள்ளும் அச்சப்தம் ஒலிக்கிறது. புதிய அக்கறைகளுடன் சில கதவுகள் திறக்கப்படுகின்றன. ஏதாவ தொன்றை திறப்பதுதானே கவிதையின் சலனமும் கூட. அந்தச் சலனத்தை ந.பெரியசாமி இத்தொகுப்பில் கவனிக்கும்படி செய்திருக்கிறார்.
-தக்கை வெளியீடு, சேலம்.
தொடர்புக்கு : 9443479818