Saturday, July 27, 2013

பேரதிசயமாக இன்றும்
வழக்கமான மேசை கிடைத்தது
சிநேகம் பூத்த சிரிப்பிற்கு
இரண்டு பீர்கள் வந்தன
எண்ணும் இறந்து கிடக்கு
பார்த்து வாரமாகிவிட்டதென தொடங்கியவன்
இரண்டாம் பீரின் இறுதியில்
அழத் துவங்கிவிட்டான்
இனி அடுத்து ஆர்டர் செய்தால்
நிகழும் விபரீதம் அறிந்திருந்ததால்
வலியோடு எழுந்தேன்
எப்பவும் ஐந்தாம் பீரில் அழுபவன்
இன்று இரண்டிலேயே தொடங்கியமைக்காக...

Tuesday, July 23, 2013

அழிவுகளின் சாட்சியாக நிற்பவன்

அழிவுகளின் சாட்சியாக நிற்பவன்
இவ்வாண்டுத் துவக்கத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகளுக்கு சேலத்தில் விமர்சன அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதில், நான்,  ந.பெரியசாமியின் ‘மதுவாகினி’ தொகுப்புக்கு கட்டுரை வாசிப்பதாக இருந்தது.ஆனால், அப்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பில்லாமல் போனதால், இப்போதுதான் எழுதவும் முடிந்ததால், சுருக்கமான,மேலோட்டமான  என் விமர்சனக் கருத்துக்கள் இதோ:
பெரியசாமியின் மதுவாகினி தொகுப்பை பொதுவாக  நான்கு விதமான கவிதைகள் நிரம்பியதாகவே பகுத்துக்கொள்கிறேன்.
1. சுற்றுச்சூழல் அழிவு குறித்தும், இயற்கையோடியைந்த வாழ்விலிருந்து விலகிய இயந்திரமயமான,  நகரவாழ்க்கை குறித்தும், கொள்ளும் பதற்றம், கவலை
2.திருநங்கை, திருநம்பிகளின் மீதான கவன ஈர்ப்பு,அன்பு
3.காதல் மற்றும் கடந்த காலத்து நினைவு கூரல்
4.குழந்தைக் கவிதைகள் அதாவது பிள்ளைத் தமிழ்
இவை தவிரவும் அறிதலை நோக்கிய  கவிதைகள்,அகவயமான கவிதைகள் என்றும் உள்ளன.
பெரியசாமியின் கவிதைகள் கையாளும் களம் மற்றும் அவற்றில் அவர் செயலாற்றியிருக்கிற விதம் நேரடியான சமூகக் கவிதைகளாகவே இருக்கின்றன. எளிதில் பலரும் எழுதிவிடலாம் என்றே எண்ணத் தோன்றுகிற மாதிரியான களத்தேர்வுகள் மற்றும் செயல்படுத்தியிருக்கும் விதம். ஆனாலும்,கவிதைகளில் வெளிப்படும் அவருடைய உணர்வுகள், கவலைகள் உண்மையானவை. அவையே தேவையானது. தன்னுடைய வாழ்வனுபவங்களிலிருந்தும், பார்வைகளிலிருந்தும் சுயமாக அவற்றை முன்வைக்கிறார்.
பெரியசாமியின் கவிதைமொழி வாசிப்பில் சற்று அயர்ச்சியளிக்கிறது. நவீன கவிதைகளுக்கென்றே ஒரு மொழி நடையை நாம் கற்பித்துகொள்வதாலேயே இப்படியொரு மேடைச் சம்பிரதாயமான அல்லது சன்னதம் வந்தாற்போன்ற மொழியை கைக்கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. பெரியசாமியின் கவிதைகளை வேறு எந்தமாதிரியான மொழியில் எழுதலாம் என்று கேட்டால், அதற்கு என்னிடம் விடையில்லை.இன்னும் கொஞ்சம் எளிமையாகவே எழுதலாம் என்பது மட்டும்தான் என்னால் சொல்ல இயன்றது. ஏனெனில், அவரின் கவிதைகள் எளிமையானவை மற்றும் நேரடியானவை. 
மதுவாகினி கவிதைகள் பொதுவாக நன்றாக உள்ளன.அதில் ஒரு பித்து நிலை இருக்கிறது. அதுவே அவைகளுக்கு சிறப்பு சேர்க்கிறது. குழந்தைகள் கவிதைகளும் அதேபோல் நன்றாக உள்ளன.
’வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே’ என்று தொப்பைக்காரர்களை பகடி செய்கிறார்.கவிதை முழுவதுமே பகடியோடு நன்றாக வந்திருக்கிறது.தொகுப்பில் சற்று தனியாக தெரியும் கவிதையிது.அதேபோல் ’தீட்டுறிஞ்சி’ கவிதையும் தனித்துத் தெரிகிறது.
நல்ல நல்ல கவிதை அனுபவங்கள், காட்சிகளை கவிஞனுக்கேத் தேவையான விழிப்புணர்வோடு இருந்து கண்டடைந்து கவிதைகளில் பதிந்திருக்கிறார்.சிலவற்றை இன்னும் சற்று வேறுவிதமாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பொன்.வாசுதேவன் எழுதியுள்ள பின்னட்டை வாசகங்கள் பொருத்தமான, நெருக்கமான விதத்தில் தொகுப்பை முழுதும் நன்கு உள்வாங்கி, அணுகியிருக்கிறது.
தொகுப்பிலுள்ள கவிதைகளை மீண்டும் மூன்றுவகையில் அடையாளப்படுத்துகிறேன்.
  1. நல்ல கவிதைகள் அல்லது இன்னும் சற்றே வேறுவிதமாகச் சொல்லியிருந்தால் இன்னும் மேன்மையாகத் தோன்றும் கவிதைகள். எடுத்துக்காட்டாக, புலிவால் பிடித்தகதை, தோத்தாங்கோழி,மெய்வருத்தம்,கனவு வேட்டை,பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி,புதைகுழி, எளியவர் என் கடவுள்...
  2. நல்ல கரு, உணர்வு, உள்ளடக்கம் ஆகிய சிறப்புகளோடிருந்தும், கவிதையாக்கத்தில் தேக்கம் கண்ட கவிதைகள் எ.டு கசப்பு, மழைக்கு பசியாற்றினோம்...
  1. மோசமான கவிதைகள் ( ஆமாம், மோசமான கவிதைகள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது) எ.டு. ’கதாசிரியனுக்குப் பின்’  போன்ற பொதுவாக, நேரடியான அரசியல் கவிதைகள்.
எல்லாத் தரப்பு படைப்புகளுக்கும் வாசகர்கள் இருக்கிறார்கள். அதாவது, படைப்பாளர்களின் தரத்துக்கு இணையாக வாசகர்களின் தரம் இருக்கும். எனவே, வாசகர்களின் இருப்பு பற்றிய கவலைக்கே இடமிருக்காது.அதேசமயம், நாம் யாரிடம் பேர் வாங்க வேண்டும் என்று நமக்கு ஒரு இலக்கு இருக்கும் அல்லவா? அதை நோக்கிய தீவிர செயல்பாடுகளே படைப்பாளிகளுக்கான தொடர்ச்சியான உத்வேகத்தை அளிப்பது.
இப்படியெல்லாம் எழுதிவிடுவதால், நான் பெரிய இவன் என்றெல்லாம் காட்டிக்கொள்வதாக ஒரு தோற்றம் உருவாவதையும் உணரமுடிகிறது.ஆனால், மேலே சொன்ன கருத்துக்கள் எனக்கும், என் தொகுப்புக்கும் பொருந்தும் என்பதனால், நான் இப்படி முடிக்கிறேன்
’’நண்பா, பெரியசாமி! நாம் இப்போதைக்கு நம்முடைய இடம் எது என்பதை தெளிவாக அறிந்துகொள்வோம்.பிறகு, அங்கிருந்து மேலேறுவோம்’’
                                   ச.முத்துவேல்

Sunday, July 7, 2013

மொட்டை



மொட்டையடித்துக்கொண்டிருந்தேன். என் தலையை நானே. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துச் சென்றனர். பெரிதாய் அது குறித்து எனக்கு ஏதும் அக்கறையில்லை. எப்பவுமே அவர்களை மதிப்பதில்லை. தெருவில் நுழைந்ததுமே படைநோய் கண்டவனின் கைகளாய் மூளை சொறியத்துவங்கும். அநியாயத்திற்கு சுயநலமிகள். ஒரு குடம் தண்ணியைக் கூட எடுத்துக்கொள்ள அனுமதிக்காதவன் (ஆனால் இவன் காவேரி பங்கீடு குறித்து நியாயவாதியாக பேசிக்கொண்டே இருப்பான்.) ஒருவன் சோற்றுக்கையால் காக்காவைக்கூட துரத்தாதவன். காக்கா எங்கு இருக்கென கேட்காதீங்க. ரொம்ப காலமாக சொல்லப்பட்டிருப்பதால் அவன்  குறித்து இதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. இன்னொருவன் இருக்கான். ஏதாவது நன்கொடை பொதுவிஷயம் என போனால் வீட்டினுள்ளே இருந்துகொண்டு ஆளில்லை என சொல்லச் சொல்லிவிடுவான். இப்படியாக ஒவ்வொருவர் குறித்தும் நிறைய்ய தெரிந்து வைத்திருப்பதால் அவர்களை உதிர்ந்து கொண்டிருக்கும் உரோமமாகக் கூட மதிப்பதில்லை. புரோட்டின் சத்து மிகுந்தது உரோமம் எனும் விஷயம் தெரியத் துவங்கிய நாளிலிருந்து.

என் மனைவிக்கு நானே மொட்டையடித்துக் கொண்டிருப்பது கவுரவக் குறைச்சலாக இருந்ததால் அவங்க தோழி வீட்டிற்கு போய்விட்டாங்க. அவங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க நான்தான் கேட்பதாகயில்லை. சண்டையிட்டு எதுக்கு ஆயுளை குறைத்துக் கொள்வானே என தலையிலடித்துக் கொண்டு போய்விட்டாங்க.

அடித்து முடிக்கும் தருவாயில் பாவாயி அக்கா வந்தாங்க. ஏண்டா தம்பி இப்படி என கேட்டாங்க. அவங்களுக்கு நான் பதில் சொல்வதற்கு முன் அவங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லி விடுகிறேன். பெரிதாக ஏதும் கற்பனை செய்து கொள்ளாதிங்க. அவங்க குறித்து சில சுவாராஸ்சியமான விஷயங்கள் உண்டு. மரத்துக்கிட்ட கூட பேசுவாங்க. எங்க வீட்டு முன்னால ஒரு கசகசாமரம் இருக்கும். அதோட பழம் ரொம்ப சுவையாக இருக்கும். எப்பவாவது வந்து மரத்துக்கிட்ட அந்த பழத்தை யார் கண்ணிலும் படாம ஒளிச்சு வச்சிக்க. நாளைக்கு நான் உனக்கு தண்ணி ஊத்துறேன் என்பாங்க. அந்த பழத்தை பார்த்து இலைக்கு அடியில் ஒளிச்சுக்கு... நானே உனை சாப்பிட்டுக்கிறேன் என பேசிப் போவாங்க. யார் இருந்தாலும் அவர்கள் குறித்தெல்லாம் கவலைப்படமாட்டாங்க. அவங்க எதையாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப புழுக்கமா இருக்கு கொஞ்சம் காத்துக்கொடு என்பாங்க. நடந்து கொண்டே இருக்கிறப்ப என் உடம்பிலேயே இருந்து கொண்டு என்னைவிட நீளமாக இருக்கிய என திட்டுவாங்க. நானே குள்ளம் நீயாவது நீளமாக இருக்கக்கூடாதா நிழலேவென பேசுவாங்க. சமைக்கும்போது "ஏய் கொழம்பே டேஸ்டா வந்துடு. எங்க வீட்டுக்காரரு இன்னைக்கு என் பாராட்டனும்" என கேட்டுக்கொள்வாங்க. அரிசியை ஊற வைக்கும்போதே இன்னைக்கு குழைஞ்சிப் போகாது நல்லா பூத்திடு என பேசிக்கொண்டே வைப்பார்கள். இப்படியாக அவங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். என்ன கேட்டோம் எதற்கு வந்தோம் என்பதை மறந்து உதிர்ந்துகிடந்த உரோமங்களிடம் பேச ஆரம்பிச்சிட்டாங்க. நீ வளரலைன்னா எல்லோரும் எப்படி கஷ்டப்டறாங்க. ஏன் நீ எல்லோரையும் இப்படி சோதிக்கிற நீளமாக வளராட்டியும்  பரவாயில்லை. வழுக்கைத்தலையாக இல்லாமலாவது காப்பாத்து. எவ்வளவு காசை செலவு செய்யறாங்க தெரியுமா. உன்னை எப்படியாவது வளரவைக்க. கொஞ்சம் கருணை காட்டேன் பாவம் சனங்க எது எதுக்குத்தான் செலவு செய்வாங்கவென பேசிக்கிட்டே இருந்தாங்க.

ஏப்பா கடைக்குப்போனா நல்லா திருத்தமா பண்ணிவிடுவாங்கதானே... எதுக்கு இப்படி படாதபாடு பட்டுக்கிட்டிருக்க? எதாவது வேண்டுதலா உனக்கு  நீயே அடித்துக்கொள்வதென.

அட போங்க.... வேண்டுதலாவது கீண்டுதலாவது அதெல்லாம் ஒண்ணுமில்ல. முடி வெட்டிக்க மாசாமாசம் அறுபத எழுபது ரூபா கொடுக்க வேண்டியிருக்கு. மொட்டையப் போட்டுட்டா நாலைந்து மாதத்துக்கு கவல இல்லாம இருக்கலாமே, ஷாம்பு செலவு, எண்ணைய் செலவு என ஏகப்பட்டது மீதியாவுது. நான் இப்படி எல்லாம் கணக்குப் பாக்குற ஆள் இல்லைதான் என்ன செய்யறது. இந்த வருசம் அநியாயத்துக்கு ஸ்கூல் பீஸ் ஏத்திட்டாங்க. போதாக் குறைக்கு இரண்டாவது பையனை வேறு பள்ளிக்கூடத்துல போடப்போறேன். ரொம்ப சாதாரணமா ஒரு லட்சம், ஐம்பதாயிரம், இருபத்திஐந்தாயிரம் என கேட்குறாங்க. லட்ச ரூவா ஸ்கூல் பக்கம் திரும்பிக்கூட பாக்க முடியாது. ஏதோ நம்ம சக்திக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூவா டொனேஷன் ஸ்கூல்தான் சேர்க்க முடிந்தது. அப்புறம் டை, பேஜ் மயிறு மட்டைன்னு புடுங்கறானுவ. சம்பாதிப்பது படிப்பு செலவுக்கு மட்டும்தான் என ஆகிவிட்டது.

என்னை பள்ளிக்கூடம் சேக்கறப்ப மேளதாளம் வைத்து மிட்டாயை பித்தளை தாம்பூலம் நிறைய கொட்டிக்கிட்டு ஊரை சுத்திக் கொண்டு போய் பள்ளிக் கூடத்தில காதை தொட்டுக்காட்டிவிட்டு ஆளுக்கு ரெண்டு மிட்டாயைக் கொடுத்துவிட்டு சேர்த்துவிட்டு வந்தார்கள். சிலேட்டு புத்தகம் எல்லாம் பள்ளிக்கூடத்துலேயே கொடுத்தாங்க. இப்ப அப்படியா இருக்கு... கவர்மெண்ட்டு ஸ்கூல்பக்கம் பசங்கள அழைச்சிக்கிட்டு போனாக்கூட ஏற இறங்கப் பாக்குறாங்க. அப்படியொரு மவுசு மண்டையிலே ஏறி மக்கள படாதபாடு படுத்துது. அறிந்து கொள்வதற்காக இருந்த படிப்பு சம்பாத்தியத்திற்கான மூலதனமாக்கப்பட்டுவிட இப்படி சிக்கிச் சீரழியுறோம்.

எங்க ஊர்ல பாரதபூசாரி தாத்தான்னு ஒருத்தர் இருந்தார். பாரத கதையை தொண்டக்குழியிலேயே வைத்திருப்பார். எப்ப கேட்டாலும் உடனே பாட்டுப்பாடி கதை சொல்வார். எங்க ஊர்ல அவருதான் அதிக படிப்பு படிச்சவர்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். திருக்குறள் ஒன்றை மனப்பாடம் செய்து சொல்லத் தெரியாம திருதிருன்னு முழிச்சிக்கிட்டு இருந்தப்ப கோணப்புளியாங்க வாத்தியாரு பள்ளிக்கூடம் போவாத ஆனா ஆவன்னாக்கூட தெரியாத பாரதபூசாரி தாத்தாவைப் பாருங்கடா எவ்வளவு நினைவா எத்தனைப் பாட்டை மறக்காம இன்னும் பாடிக்கிட்டே இருக்காரு. ஒத்த திருக்குறளை மனப்பாடம் சொல்லத் தெரியாம இந்த முழி முழிக்கிறீங்கன்னு ரெண்டு எத்துவிட்டனிக்குத்தான் தெரியும் அவர் எழுத படிக்கத் தெரியாதவர் என. எதுக்கெடுத்தாலும் என்ன படிச்சிருக்கன்னு கேட்குற இந்த காலத்துல அத பத்தி பேசி என்ன செய்ய. அதனாலதான் இப்படியொரு முடிவு செய்திருக்கே, இனி வண்டி எடுப்பதில்லை. முடிந்தளவு நடந்தே போகப்போறேன். துணியை நானே சலவை செய்துகொள்ளப்போறேன். வீட்டில் வேறு யாரோட செலவையும் நான் கட்டுப்படுத்த முடியாது. அவங்கவங்க சந்தோசத்தை நாம எப்படி தடுக்க முடியும். அவங்க எப்படியோ இருந்துட்டுப் போகட்டும் என்னால முடிந்தளவு செலவை குறைக்கப் போறேன். அதன் முதற்கட்டமாகத்தான் இந்த நடவடிக்கை என்றேன்.

ஆமாண்டா தம்பி நீ சொல்றதும் உண்மைதான். படிப்பு செலவு போகத்தான் மீதி செலவை திட்டமிட முடிகிறதென கிளம்பிய அக்கா மறக்காம இதையும் சொல்லிப்போனாங்க. இனி நானும் எங்க வீட்டுக்காரருக்கு மொட்டைப் போடப் போறேன்.

நன்றி- பாவையர் மலர்.

Friday, July 5, 2013

நிரம்பும் பாத்திரம்



இறுக மூடிய பின்னும்
சொட்டும் துளிகள்
நிரம்பி வழிகிறது

ஒன்றை மறந்து
பிரிதொன்றை கேட்டபடி இருக்கும்
மகனின் ஆசைகளும்

நாளை பார்க்கலாம்
அடுத்த வாரம்
கட்டாயம் வரும் மாதமென
பாத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறேன்...