Saturday, March 25, 2017

ந.பெரியசாமியின் குழந்தைப் படிமங்கள்

ந.பெரியசாமியின் குழந்தைப் படிமங்கள்
வெளிரங்கராஜன்

குழந்தைகளும் பித்தர்களும் நடைமுறை உலகின் தர்க்க ஒழுங்கிலிருந்து தப்பித்து அசாத்தியங்களின் உலகில் சஞ்சரிப்பவர்கள். அசாத்தியங்களை ஒரு எளிய நெருக்கத்திலும், இடமாற்றத்திலும் கண்டு உரையாடுபவர்கள்.
அங்கு கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் கடிவாளங்களோ, காலம் தூரம் ஆகிய தடைகளோ இல்லை. விநோத சேர்க்கைகளுக்கும், தோழமைகளுக்கும், ரகசிய துயரங்களுக்கும் பங்சமில்லை. தூரிகைகள் கையில் இருக்க பிரபங்சமும், மனிதர்களும், பொருள்களும் அவர்களுடைய கட்டுப்பாட்டில். புதிய வடிவங்கள், புதிய விளையாட்டுகள், புதிய பொய்கள், புதிய மகிழ்வுகள் என படைப்பியக்கம் கொள்பவர்கள். நிறுவனங்களாலும், நிறுவனங்களாகிப்போன பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் முடக்கப்படும் அவ்வுலகை வலியுடன் பார்க்கிறது கவிமனம்.
அழாமலேயே
கண்களில் நீர் வருகிறதெனும்
புகாரில் தொடங்கி
உடலின் பாகங்களை பட்டியலிட்டு
வலிக்கிறதென
ஒன்றின் மீதொன்றாய்
அடுக்கியபடியே இருந்தான்
பொய்களை.
என் கனவு
பங்கப்பட்டுவிடுமெனப் பயந்து
பள்ளிக்கு இழுத்துச் செல்ல
கடுகடுத்த முகத்தில் மறைத்தான்
கையசைப்பின் புன்னகையை
என்னுள் துளிர்த்து
கொடியெனப் பற்றியது
மெய்யான வலி.
என்றும்
அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழிபோடுவாள்
விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்
தேவைகளை வாங்கிக்கொள்ள
உறுதியளித்தபின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட் வண்டி சாவிகளை
கொஞ்ச நாட்களாக
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்
மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி.
எனவும் பொய்களும், கற்பனைகளும் பல்கிப் பெருகிய ஒரு குழந்தமையின் பேரிழப்பு நினைவுகொள்கிறது.

இங்கு குழந்தைகள மட்டுமல்ல குழந்தைகளின் படிமங்களும் இழப்பை சந்திக்கின்றன. விரும்பும் நிறம் பூசப்படும் கனிகள், நட்சத்திரங்களைப் பிடிக்க தூண்டில், வானம், வானுக்குத் துணையாக ஒரு துணை வானம், நட்சத்திரங்கள் பொதித்து வைக்கப்பட்ட சாணி உருண்டை, வடை தூக்கும் காக்கை கதையில் உறக்கம்கொள்ளும் கடவுள், மழைக்கு பசிக்குமென இட்டிலி, புள்ளி கட்டம் கோடு சதுரம் மரம் எல்லாம் வீடாவது, தென்னங்கீற்றுகள் பாம்புகளாகி தென்னைக்கு திரும்புதல் என எண்ணற்ற படிமங்கள் தோன்றியபடியும், மறைந்தபடியும் இருக்க கணத்தில் சமாதானமாகிறது குழந்தை மனம். ஆனால் கவிமனம் சமாதானமாவதில்லை.

தனக்கானதை கட்டங்களில் நிரப்பி
எடுத்துச் சென்றனர்
எனக்கானதை நிரப்ப கட்டங்களில்லை
எனவும்
வரைந்த திராட்சையை நரி புலி குரங்கு
ஆடுமாடு கோழி தின்றன
எனக்கு மட்டும் திராட்சையின் சாயல்
எனவும் கவிமனத்தின் துயரங்கள் எண்ணற்றவை.
முயற்சியால் வெற்றிகொண்டான்
மேகங்கள் உருவாகியிருந்தன
வேடர்களுக்கு சிக்காத
பறவைகளை மிதக்கச் செய்தான்
புற்களை உருவாக்கி
மரங்களை வளர்த்து வீடொன்றை
கட்டினான்
வெளிச்சம் வேண்டி
நிலவை பிறப்பித்தான்
நிறைவுகொள்ள
வேறுதாளை எடுத்து
நதியை உருவாக்கத் துவங்கினான்
சனியன் சதா கிறுக்கிக்கிட்டே இருக்கு
அப்பாவின் குரல்.
என்றபடி உலகியல் முரன் மீண்டும் மீண்டும் கவனம் கொள்கிறது.

முன்னுரையில் றியாஸ் குரானா குறிப்பிடுவதுபோல் குழந்தையின் இயல்புகளை நேராக சந்திக்க விரும்பும் கவிதைகளாக இவை உள்ளன. குழந்தைமையின் இழப்பில் நாம் கற்பனைகளற்ற வறண்ட சமூகமாவதை எளிதெனத் தோன்றும் சரள மொழியில் உரையாடிச் செல்கின்றன இக்கவிதைகள். கட்டற்ற உறவு நிலைகளின் மீது உருவாக்கப்படும் நிர்ப்பந்தங்களை இவை பரிகசிக்கின்றன.

நன்றி: தீராநதி.