Friday, November 22, 2013

உடல் தகிக்கும் வெப்பக் காற்று...


ராஜா வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு
வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியிலே ஏறலாமா...

இந்த சொலவடையை நினைவூட்டும் விதமான உரையாடல்கள் தீபாவளியை ஒட்டி நிகழ்வுவதுண்டு.

நேரடி உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகளும், அவைகளுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறுசிறு தொழிற்சாலைகளும் கலவையாக இருக்கும் ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் வாழுபவர்களுக்கு தீபாவளி ஏற்படுத்தும் மனநிலை வேறுமாதிரியானவை...

பெரிய தொழிற்சாலைகளில் வேலைபார்ப்பவர்கள் என்ன கார் வாங்கலாம், என்ன மாதிரியான நகை வாங்கலாம், எங்கே வீட்டுமனை வாங்கலாம், இருக்கும் வீட்டில் செய்யவேண்டிய மாறுபாடுகள்(வாஸ்துக்காகவும்) என விரிவுகொள்ளும் உரையாடல்கள் நிகழும். அதற்காக அங்கெல்லாம் லட்சக் கணக்கில் போனஸ் தருகிறார்கள் என தப்பர்த்தம் கொள்ளவேண்டும். இருபத்தி ஐந்தாயரத்திலிருந்து அறுபதாயிரம் வரை கொடுப்பார்கள். உற்பத்தி, விற்பனையின் சதவிகிதம் மற்றும் தளர்வுகொள்ளாது போராடிக்கொண்டே இருக்கும் தொழிற்சங்கத்தின் உழைப்பு இவையே தொகையை நிர்ணயிக்கும். ஏற்கனவே இருக்கும் சேமிப்பு, அல்லது வாங்கும் கடன் இதனோடு வரப்போகும் போனஸையும் சேர்த்துத்தான் மேற்கண்ட உரையாடல்.

இப் பெரிய நிறுவனங்களின் சம்பளம், போனஸ் தொகை குறித்து பேசிப்பேசி ஏக்கப்பெருமூச்சுவிட்டு என்றாவது அத்தொகையில் பாதியாவது வாங்கிட மாட்டோமா என்ற கனவுகளோடு வாழும் தொழிலாளர்களிடையே இருக்கும் டூ வீலரை சர்விஸ் விடவேண்டும், அடகு வைத்த செயினை மீட்கவேண்டும், சொசைட்டி லோனிற்கு கொஞ்சமாவது அசல் கட்டவேண்டும், இரண்டு பாக்சிலிருந்து மூன்று பாக்ஸ் பட்டாசு கேட்கும் மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் இதுபோன்ற உரையாடல்கள். இரண்டு மூன்று வருடம் போனஸ் வாங்காமல் இருந்தாவது நாமும் ஒரு முறையாவது முப்பதாயிரம் போனஸ் வாங்கவேண்டும் எனச் சொல்லும் விரக்தியான உரையாடலுக்கும் பஞ்சமில்லை.

போன ஆண்டு கொடுத்த தொகையைவிட எப்படியும் இரண்டாயிரமாவது சேர்த்து வரும் என நம்பிக்கையின் கணக்கிற்கு பெரும் ஆசை பட்டியலை தயாரித்து வைத்திருக்கும் தொழிலாளிகளின் மனநிலையை காலம்தாழ்த்தி ஐந்தாறுமுறை பேச்சுவார்த்தை நிகழ்த்தி போன ஆண்டு கொடுத்த தொகையையாவது இந்த ஆண்டு கொடுத்தால் போதும் என்று தொழிற்சங்கம் கெஞ்சிக் கூத்தாடி வைக்கும் நிர்வாகம்.

போட்டு வைத்திருக்கும் பட்டியலை சப்தம் இல்லாமல் ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கும் மனதோடு தீபாவளி பண்டிகையை எப்பாடு பட்டு கடக்கப்போகிறோமென யாரிடம் எதை வைத்து கடன் வாங்க வேண்டுமென்ற கணக்கிடலுக்கு தயாராகும். 8400 ரூபாயை விட அதிகமாக வாங்கும் ஒவ்வொரு ரூபாயிக்கும் பெரும் பாடும் பெரும் துயரமும் உண்டு.

உடன் பணிபுரியும் நண்பரின் மகன் திருமனத்திற்கு போனபோது இந்த ஆண்டு போனஸ் பத்தாயிரம் வாங்கிவிட்டோம் என்று பெருமைபொங்க ஒரு தொழிலாளி கூறினார், அப்பெருமிதம் சில கணங்கள் கூட நீடிக்கவில்லை அடுத்து தீபாவளிக்குள் தான் ஓய்வுபெற போகிறேன் என்றார். இன்னும் இரு ஆண்டுகளாவது சர்வீஸ் இருக்கக்கூடாதாவென அவர் வெளியேற்றிய வெப்பக் காற்றில் உடல் தகித்தது. பெரும்பாலான தொழிலாளிகளின் நிலை இதுவாகத்தான் இருக்கு. ஓய்வுக்காலம் வரையும் ஒருவன் வேலை பார்த்து போனஸ் பத்தாயிரம் வாங்கமுடியாத அவலச் சூழல்தான். கூடவே விவசாயிகள், விவசாயக்கூலிகளுக்கு யார் என்ன போனஸ் தருகிறார்கள் என்ற கவலையும் ஏற்படாமலில்லை. 25 ஆண்டுக்கு மேல் ஒரே தொழிற்சாலையில் என்றாவது நம் வாழ்வில் மகிழ்வூட்டக்கூடிய தருணத்தை ஏற்படுத்த நல்ல சம்பளம் முதலாளி கொடுத்துவிடுவார் என எதிர்பார்த்து எதிர்பார்த்து உழைத்துக் கிடப்பவனை கழிவுகளோடு கழிவாக வெளியேற்றும். உண்மை அறிந்தும் முன்மாதிரிகள் இருந்தும் வேறு வழியற்று இன்னும் தொழிற்சாலை கேட் முன் காத்துக்கிடக்கும் துயரத்தை என்ன சொல்ல...

சங்கு ஊத வேலை ஆரம்பித்து மறு சங்கில் சாப்பிட்டு அடுத்த சிப்ட் துவங்க ஒலிக்கும் சங்கில் வெளியேறி சங்கொலியின் கட்டளைக்கு உழைத்து உதிரும் தொழிலாளர்களின் நிறைவேறாத போனஸ் கனவு இந்த ஆண்டும் இந்த தீபாவளியிலும்...

nantri:malaigal.com

Monday, November 4, 2013

அம்மாக்கள்...

வாழ்ந்தோம் பெரும் வாழ்வென
நினைத்த கணத்தில்
பழுக்கத் துவங்கினாள்
தன்னில் பிரிந்த விழுதொன்று
பற்றற்று அலைவது
பெரும் பாரமாகியது
படையலிட்டு வேண்டியும்
பலனற்றுப் போக
மண்ணைத் தூற்றி காறி உழிழ்ந்தாள்
வேறு வழியற்று அப்பாதை செல்ல
முகம் கொடுக்காது கடந்தாள்
எனது பாடுகளும் வீணாகினவென
கனவில் கண்ணீர் வடித்தார்
மனம் இறங்கியவள்
மன்னித்து பூசையிட
குளிர்ந்தார் கடவுள்
ஆயினும் அவள்
சதா புலம்பியபடியே...
*

துணை வானம்

குழந்தை தவழ்ந்தது
தாயும் தவழ்ந்து தூக்கினாள்
வேடிக்கையில் பேசியபடி இருந்தனர்
நிலாவும் இருந்தது
நட்சத்திரங்களும் மின்னின
நாம் கண்டபடி இருக்கும்
நிலவும் நட்சத்திரமும் இதுவல்ல
பகலில் காணும் சூரியனும் அப்படியே
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
மாலை பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை என்றாள்
இன்னொரு யானைதான் என்றேன்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
வேறு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு
மௌனித்திருந்தேன்
அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்
துணை வானம் ஒன்றையும்
ஒரு நிலா ஒரு சூரியன்
நிறைய்ய நட்சத்திரங்களையும்
இப்பொழுது யாவரும் காண்பது
அவள் அனுப்பிய துணைகளைத்தான்...
   
nantri:malaigal.com