Wednesday, February 22, 2012

வதைகளின் ருசியறிந்தவர்கள்


சமச்சீராக வெட்டப்பட்ட

புல்தரையின் மத்தியில்தான் கண்டேன்
ஏற்றுக்கொள்ளுங்கள்
சொல்வது உங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவன்
சிலுவை சுமந்தால் நம்புவீரென்றால்
தயாராகவே இருக்கிறேன்
யார்தான் ஏற்றப்போகிறீர்கள்
ஒப்புக்கொள்வேன் யாராகினும்
கவிச்சி மணம் வீசும்
தேவதையாக இருப்பின்
கூடுதல் மகிழ்வு
போதி மரத்தினடியிலிருந்துதான்
சொல்லப்பட வேண்டுமெனில்
ஒன்றும் செய்வதற்கில்லை
எல்லாவற்றையுமே வெட்டித் தொலைத்தீர்கள்
வேறு எதையோ
கதைக்கத் தொடங்கிவிட்டேன்
மன்னியுங்கள்
நிகழ்விற்கு வருகிறேன்
ஏன் எல்லோரும்
காதை அடைத்துக் கொண்டீர்கள்
உண்மைகள் வேண்டாமென்றோ
யானறியேனே பொய்யுரைக்க
காத்திருப்பேன்
அடைத்திருக்கும் கைகளை
மாற்றிக்கொள்ளும் துளி நேரத்திற்கு...
ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு

ஆண்ட கிழவனாரும்

ஆளும் குமரியும்...

Monday, February 20, 2012

பயணத் துணை

தேரியின் சிவந்த மண்ணில்
மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம்
மேல்தளம் இருந்தவர்கள்
ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து
நம்பிக்கையை நதியாக்கினர்
முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும்
பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும்
அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர்
அருகிருந்த நெல்லி
மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது
தன் துவர்ப்பை இழந்து விடாது
சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர
அறை அன்பின் தேவாலயமானது
பல்படாது செய் நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும்
இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென
ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும்
இதேதான் பற்றிக்கொண்டாய்
விட்டுவிடாது தொடரென்றும்
வார்த்தைகள் குழைந்து குழைந்து
பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது
பயணிக்கிறேன்
மயில்தோகையின் வருடல்களோடும்
ஓயாது கூவிய சேவலின் இசையோடும்...

நன்றி: நவீனவிருட்சம்

Friday, February 17, 2012

வெறுமனே இருந்த நாளொன்றில்

மனம் விரும்பும் வேலையற்ற பொழுதினில்
வெறுமனே வேடிக்கையில் இருந்தேன்
சுவற்றில் அலைந்த பூச்சிகளை
தன் ஈர நாவால்
இழுத்துக்கொண்டிருந்தது பல்லி
அருகிருந்த சன்னல் வெளியில்
தன்னுள் இருந்த ஆயிரமாயிரம்
பின்னல்களை திரையாக்கி
விழும் பூச்சிகளை இரையாக்கியது
எட்டுக்கால் பூச்சி
இதிலென்னவென சலிப்படையாது
மேலே தொடருங்கள்
நானும் சலிப்படைந்த கணத்தில்தான்
காட்சிகளை மாற்றியமைத்தேன்
எட்டுக்கால் பூட்சியின் வேட்டைவலையில்
விழவைத்தேன் பல்லியை
பூச்சியின் நிலை குறித்து
சொல்வதற்கு ஒன்றுமில்லை
நீங்களாகவே விருப்பம்போல்
முடிவெடுத்துக்கொள்ளுங்கள்...
-நன்றி : பண்புடன் இணைய இதழ்

Wednesday, February 15, 2012

பரிகாரம்

காதறுந்த வீடுகள்
கலையா துயிலில் சுகித்திருக்க
பனிபோர்த்திய மைய இரவில்
குறி இசைத்தான்
கெட்டகாலம் பிறக்க
கெடுதிகள் நடக்குமினி
நோய்மை மனிதர்களையும்
கடந்த பிணமும் கண்டு
கற்றறிய பற்றற்றுப் போன
போதியாய் உன் மகனும்
தேசாந்திரியாவான்
முதிர்ந்த உடல் கிடத்தி
நிம்மதிக்கான வாழ்வின் கனவு
பங்கப்படாமலிருக்க பரிகாரம் உண்டிங்கு
அதிகாலை எனை அடைய
ஆறுதல் கொள்வாய்யெனும் ஒலி தேய
தொலைந்த நித்திரையை
துழாவிடத் துவங்கினோம்… 


nantri: thinnai

உதிர்வு


நெடிதாய் பேசி களிக்க
ஆவலில் சோளமாய் பொறிந்திடுவேன்
பக்கத்து வீட்டக்கா வந்திருக்காங்க
அப்புறமென அணைச்சிச் செல்லவும்...
உன் மலர்ச்சியை
இந்நாள்வரை கண்டிலேன் எப்பூவிலுமெனும்
எஸ் எம் எஸ்களை ஒருவழிப்பாதையில் கிடத்திடவும்...
ஒரு இலையை உலர்த்தி
உதிரச்செய்யும் செடியாகவும்
மாற்றங்கொள்வதேன் மதுவாகினி.
 
nantri: navinavirutcham

Tuesday, February 7, 2012

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே...


சடசடவென பொழிந்த மழைக்குப் பின்னான புழுக்கம்

சரசரவென அடித்த காற்றால் தின்றழிக்கப்படுகிறது
ஒன்றை எப்பொழுதும் வேறொன்று வீழ்த்தக் காத்திருக்க
வருத்தமெதற்கு வளரும் தொப்பை குறித்து
பாரம் சுமக்கும் உடல் அறியும்
பருமன் குறைக்கும் ரகசியங்களை
மெலிந்த தேகத்தோடு இருந்தவன்
உரையாடிக் கொண்டிருந்தான்
சொல்லுதல் யாவர்க்கும்... குறள் தவளையாக குதிக்க
ஒரு கோலினால் திருப்பிவிட்டேன்
மனம் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை
மீண்டும் துழாவிடத் துவங்க
வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே
என்னிடம் வாருங்கள்...

பாவம் இயேசுபிரான்

இப்பாரம் குறித்தெல்லாம் அறிந்திருக்கமாட்டார்.


nantri:thinnai.com

Saturday, February 4, 2012

நதி ஈந்த எறும்பு


ஓய்விலிருந்தது மாமரம்
உதிர்ந்த இலைகளோடு நானும்
நழுவிய தினசரியிலிருந்த
அணைக்கட்டின் மீது ஊர்ந்தன
வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலுமாக
இரு சாரியாக எறும்புகள்
வெள்ளையின் பசியறிந்த கருப்பு
சுமந்து வந்த வயலை ஈந்தது
கருப்பின் தாகமறிந்த வெள்ளை
விழுங்கிவந்த நதியை கொடுத்து கொடுத்து
தன்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன...

நன்றி: நவீனவிருட்சம்

Thursday, February 2, 2012

பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி

மதுவாகினிக்கு
பன்றிகள் மீது பரிவு அதிகம்
அவதாரத்தில் இறையடி கண்டதாலல்ல...
நோய் பரப்பும் அசிங்க ஜந்தென
முகம் சுழிப்போரை விலக்கி
தேடித்தேடி இருப்பை அடைவாள்
அதுஅதுகள் தன்போக்கில் திரிய
ஏமாற்றத்தால் சோம்பியும் கிடப்பாள்
என்றாவது தரிசிக்கும் பொழுதில்
தவத்தால் கரு தரித்தவளாய்
கண்கள் பனித்திருக்கும்
என் இருப்பு குறித்து
எச்சலனமுமின்றி
அனிச்சையாக அவளே
தன் முலை வருடியபடி
விதந்து கொண்டிருப்பாள்
முட்டி இழுக்கும் குட்டிகளுக்கு
ஒருசேர பசியடக்கும்
தாய்மையை...

nantri:vallinam