Saturday, February 1, 2014

nantri:puthu visai

மரணத்தோடு கண்ணாமூச்சு...
-ந.பெரியசாமி

பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ...
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக்கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக...

பால் சக்காரியாவின் சந்தனுவின் பறவைகள் கதை வாசிக்க நான் எழுதிய கவிதை.. ஒரு நல்ல படைப்பு எதையாவது செய்யத் தூண்டும்தானே...

நான் கேட்கத் துவங்கிய முதல் கதை வாசித்த முதல் கதை எதுவாக இருக்குமென அப்பப்போ தேடிப் பயணிப்பதுண்டு விடையற்று வானமாய் பெரும் தடுப்பு ஏற்பட பயணம் மறந்து போகும். நிச்சயம் ஒரு நல்ல கதையைத்தான் கேட்டிருப்பேன். இல்லையெனில் தொடர்ந்து கதை கேட்கும் ஆர்வம் இருந்திருக்காது. கதை படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டிருக்காது. நல்ல எழுத்துக்களை அப்பப்போ வாசிப்பதால்தான் தொடர்ந்து இன்னும் வாசித்துக்கொண்டே இருக்க முடிகிறது. பால்சக்காரியாவின் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் தொகுப்பும் மேலும் என் வாசிப்பை நீட்டிக்கச் செய்தது.

அழுது தொலைக்க வேண்டியதாகிவிட்டது. சனியன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அடக்க முடியவில்லை.

அப்பா, பறவைகள் சாவதில்லையா?

இல்லை சந்தனு அவைகள் பறந்து பறந்து மேகம் கடந்து விண்வெளியை அடைந்து விடுகிறது.

அம்மா பறவையாகி பறந்து போவதை பார்த்தியாப்பாவெனும் கேள்வி கண்களை நீர்க்குமிழியாக்கிவிடுகிறது. ஏதோ குழந்தைகளுக்கு கதை சொல்லியிருக்கிறார் என வாசித்து வர மரணத்தை பறவையில் ஏற்றி மிதக்கச் செய்துவிடுகிறார் சந்தனுவின் பறவைகள் கதையில்...

என்றோ செய்த பயணத்தின்போது பார்க்க நேர்ந்த விபத்தில் சிதைந்த உடல் அவ்விடத்தை எப்பொழுது கடந்தாலும் நினைவில் வருவதை தவிர்க்க முடிவதில்லை. கருத்து முரண்பாடுகளோடு அடிக்கடி சண்டையிட்டு வாழும் தம்பதியர் பார்க்க ஒருவனை தற்கொலை செய்து ‘கடல்’ கதையில் கூறுகிறார் நினைவில் தேங்கி நிற்கும் மரணத்தை...

அந்தகாரம் கொடுத்த அமைதியையும் பாதுகாப்பையும் அங்கிகரிக்காது கிணறே உலகமாய் சுற்றி வலம் வர, கிணற்றின் பொந்துகளில் மறைந்துகிடக்கும் மரணங்களோடு இதுதான் உலகம் இதுதான் உலகமென கவிதையாய் நீண்ட தவளையின் பயணத்தில் மரணத்தையும் கூறிச்செல்கிறார் ‘பிரபஞ்சத்தின் சிதைவுகள்’ கதையில்.

விசில் ஒலியை ஒரு புள்ளியாக்கி மொழியால் அப்புள்ளியை பாவு காய்ச்சி அதை ‘ஒரு குறுகலான இடம்’ ஊற்றி வாசிக்கவும் கேட்கவுமாக இசையாகிறது மரணம்...

எனக்கும் ஆசையாகிவிட்டது. இறந்து பின் எழுந்து பார்த்தேன். உறவுகளின் துயர் பீறிட்ட அழுகை, மௌனம், யார் யாரெல்லாம் வந்துகொண்டிருக்கிறார்கள், பசிதாங்காதவர்கள் வேறெங்கோ போகிறமாதிரி போய் டீயோ ரொட்டியோ தின்று வருவது, எதையாவது காரணம் சொல்லி வராது இருப்பவர்கள், புதைப்பதாக இருந்தால் எந்த இடத்தில் புதைப்பார்கள், எரிப்பதாக இருந்தால் எந்த இடத்தில் எரிப்பார்கள். நண்பர்கள் பேஸ்புக்கில் போடும் மரணச்செய்திக்கு எத்தனை லைக் கிடைக்கும். உள் நாட்டில் எத்தனை நண்பர்கள் வெளி நாட்டில் எத்தனை நண்பர்கள் லைக் இட்டார்கள். அஞ்சலி கருத்து எத்தனைபேர் எழுதுவார்கள். நான் இருந்துகொண்டிருக்கும் தமுஎகச அமைப்பு அஞ்சலி நோட்டீஸ் அடிப்பார்களா, என்ன மாதிரி அடிப்பார்கள். எந்த போட்டோ பயன்படுத்துவார்கள். இப்ப ஒன்றும் பிரச்சினையில்லை பேஸ்புக்கில் நிறைய நல்ல போட்டோக்கள் இருக்கு. எனக்காக மெனக்கிட்டு எந்தந்த தோழிகள் வருவார்கள், மரணிக்கும் தருவாயில் யார்யாருக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும். இத்தனை வருட வாழ்வில் யார் யாரெல்லாம் நம்முடன் உண்மையாக இருந்தார்கள். கொஞ்சம் கவிதைகள் எழுதியிருப்பதால் எழுத்தாளன் என மதித்து ஏதாவது இதழ்களில் அஞ்சலி கட்டுரை வருமா. யார் யாரெல்லாம் எந்தெந்த பத்திரிகையில் எழுத சாத்தியமிருக்கிறது, வாய் மூடி கண்மூடி அழகாக உறங்குவதுபோலத்தான் இருக்கும் எனது பிரேதம் என நீண்ட நேரம் அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும் கதையில் வரும் அல்ஃபோன்சம்மாவாகவே இருக்க செய்துவிட்டார்...

மரணம் குறித்திருந்த பயத்தை பிடிங்கி எறிந்து மரணத்தை ஒரு குழந்தையாக்கி மடியிலிட்டு கொஞ்சவும், அதனோடு கண்ணாமூச்சாடாவும் செய்த சக்காரியாவை என்றாவது பார்க்க தழுவி கைகுலுக்க ஆவலோடு இருக்கச் செய்தது தொகுப்பு.

தொகுப்பில் வேறு கதைகளும் நிழலாய் உடன் வந்தபடி இருந்தன. சிறுவயதில் பாட்டியிடம் கேட்ட கதைகளில் வரும் ஆடு, மாடு, கிளி, மரம், வண்டு என எல்லாமே பேசும். அடுத்த நாள் காலை போய் அதுகளிடம் நீண்ட நேரம் பேசிப்பார்க்க எப்பதிலும் அதுகளிடமிருந்து வராதிருக்க ஏமாற்றங்களோடு பாட்டியிடம் போய் ஏன் என்னிடம் எதுவும் பேசமாட்டேன் என்கிறது எனக் கேட்க, போட போக்கத்தவனே அது கதையில்தான் பேசும் என்பார். ‘ஓரிடத்தில்’ கதையில் தவளை மூலம் நம் இயலாமையின் வலியை பேசிச் செல்கிறார்.

சில கதைகள் அது சொல்லப்பட்ட விதத்தில் நம் நினைவின் குடிபெயர்ந்து விடுவதுண்டு. ‘ரகசியப் போலீசும் ஓர் ஆட்டிடையனும்’ கதையும் அப்படித்தான். ஒரு கதை மர்மமாக முடிச்சுகளை போட்டுக்கொண்டே செல்வதும், அக்கதையில் இருக்கும் வேறு கதை அதை அவிழ்த்தப்படியே தொடர்வதாக பின்னப்பட்ட இக்கதையின் போக்கில் இராணுவத்தின் வறண்ட தன்மையையும், சாமானிய எழுத்தாளனின் கரிசனம் மிக்க போக்கையும் போகிற போக்கில் இசைத்து காட்டியிருப்பது அழகு...

‘குஞ்ஞாப்பு எப்படிப்பட்ட ஆளு, குஞ்ஞாப்புவுக்கு எல்லாம் தெரியும். வானத்தைப் பார்த்துக்கொண்டே ‘இதோ, இப்ப மழை வரப் போகுது என்பார் மழையைச் சும்மா அப்படியே தோளில் போட்டுக்கொண்டு எவ்வளவு வேகமாக நடக்கிறார். இப்போ மழை கீழே விழுமெனத் தோன்றும் அது சுகமாயிருக்கும்...’ குஞ்ஞாப்பு போன்றவர்களை எங்காவது சந்திக்க நேர்வதுண்டு. எல்லா விசயங்களிலும் குழந்தைமையோடு இருப்பார்கள். குஞ்ஞாப்புக்கும் உண்ணிக்குமான உறவுகளின் காட்சி கவிதையாக விரிகிறது ‘குழந்தை உண்ணி’ கதையில்.

நவீன மனிதனின் மன இடைவெளிக்குள் மற்றொரு மனிதன் நுழைய முடியாதபோது அவனது இடைவெளியில் பியானோ, புத்தகங்கள் மட்டுமே நுழைய முடியும் சாத்தியங்கள் இருப்பதால் எனது விரல்கள் பியனோவையும், புத்தகங்களையும் பற்றியிருக்கிறது என்பார் கோணங்கி.-இத்தொகுப்பின் கதைகள் வாசித்த நாட்களில் மனம் நிரம்பி விரல் பிடித்து உடன் அலைந்துகொண்டேயிருந்தனர் தொகுப்பிலிருந்த மனிதர்கள்.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மா இரண்டு ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்தார். அதிலொன்றை சித்தி வளர்க்க எடுத்துச்சென்றார். சிறிது காலம் கழித்து வளர்ப்பதற்கான சூழல் இல்லையென திரும்ப அக்குட்டியை விட்டுச்சென்றார். இரண்டு குட்டிகளும் ஒன்றைப்போலவே இருப்பதால் என் தங்கைக்கு அடிக்கடி சந்தேகம் வரும் சித்தி விட்டுச்சென்ற குட்டி எதுவென. இத்தொகுப்பை வாசித்து முடிக்க நானும் என் தங்கையின் நிலையில்... கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் எழுதிய கதைகளா மொழிபெயர்த்த கதைகளாவென... நெருக்கமான நிறைவான மொழியக்கம் செய்துள்ளார் கே.வி.ஜெயஸ்ரீ.

அல்ஃபோன்சாம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்
பால் சக்காரியா - தமிழில்-கே.வி.ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ், 19டி.எம்.சாரோன், திருவண்ணாமலை. விலை-100.