Saturday, September 26, 2015

நாமாகவும் இருக்கக் கூடும்


காரம் தூக்கலான போண்டாவிற்காக
அக்கடைக்கு அவ்வப்போது செல்வீர்கள்
தொட்டுப் பார்க்க மகிழ்ந்து
நான்கைந்தை கையால் சுருட்டி அமர்ந்தீர்கள்
நைந்த நாளிதழை விரித்து
வெளிநாட்டுப் விளம்பரங்களிடையே
துண்டான செய்திகளை வாசித்து வெளியேறினீர்கள்.

வருகிறீர்கள் காலம் கடந்து
விரிந்த சாலையில்
அக்கடையும் காணாமல் போயிருக்க
துணுக்குற்று நிமிர்கிறீர்கள்
கண்ணாடிகள் போர்த்தி பளிச்சிட்டபடி
முளைத்திருக்கும் கடையொன்றில்
சமச்சீராக அடுக்கப்பட்டிருக்கின்றன போண்டாக்கள்
உள் நுழைகிறீர்கள் ஊறும் எச்சிலோடு.
மேசைமீது கிடந்த விலைப்பட்டியலில்
பத்து ரூபாயாக போண்டா பரிணாமித்திருந்தது
சமாதானத்தோடு ஆர்டர் செய்கிறீர்கள்
உங்களுக்கு சந்தோசம் இறுப்புக்கொள்ளவில்லை
காரம் தூக்கலான அதே சுவை
டிஸ்யூ பேப்பரில் உதடுகளை ஒத்தியவாறு
நியான் விளக்கடியிலிருந்த தேவதையிடம்
பார்கோடிட்ட பில்காட்டிய தொகை கொடுத்து
சமையலறையை எட்டிப் பார்க்கிறீர்கள்
மாஸ்டராக பழைய கடைக்காரர்
தொப்பி கழட்டி வியர்வையை துடைக்கிறார்.
அவரின் நிலைக்காக வேதனைப்பட துவங்குகையில்
உங்களின் நினைவுக் காட்சியில்
அங்கிருக்கும் டேபிள்களை
சீருடை அணிந்து நீங்கள்
துடைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி- கணையாழி