Sunday, June 23, 2013

• ந.பெரியசாமி கண்டடைந்த கவிதைகள் •

(மதுவாகினி தொகுப்பை முன்வைத்து)

- ப.தியாகு

முன்பு தீராநதியில் வெளியான ந.பெரியசாமியின் ’எஞ்சியவை’ என்ற ஒரு கவிதை இப்படித் துவங்கும்,

// பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவப்புக் கண்ணீர்த்துளிகள் //

அதன் பின்பு எப்போது மாதுளம் பழத்தை பிளந்தபோதும் உடையும் ஐந்தாறு கண்ணீர்த் துளிகளிலாவது விரல்கள் நனைந்திட நேர்கையில் பெரியசாமியின் இக்கவிதை நினைவில் வழிந்திடாமல் இருந்ததில்லை.

அடுத்தொரு கவிதை மழை பற்றியது. வெயில்நதியில் வெளியானதும் கூட. ‘உயிர்ப்பு’ எனும் அந்தக் கவிதை இவ்வாறு துவங்கும்,
// நேற்றைய மழை முழுவதையும்
சுவடற்றுக் குடித்தேன் //

இப்படி மழையும் தானும் இரண்டறக் கலந்து, மழையின் பயணத்தில் அதன் அத்தனை குணங்களையும் தன்னில் பிரதிபலிப்பதாயமைந்த ந.பெரியசாமியின் மற்றுமொரு அற்புதமான கவிதை அது. கவித்துவம் மிகுந்திருக்கும் இவ்விரு கவிதைகள் மூலம் எனக்கு அறிமுகமான ந.பெரியசாமியை சிதறலாக அங்கும் இங்கும் சிற்றிதழ்கள், இணைய இதழ்களில் வாசித்து வந்த என் கையில் புரளும் தொகுப்பு மதுவாகினி, அவரை இன்னும் அருகிருந்து வாசிப்பதில் வரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

தொகுப்பில் ந.பெரியசாமி தன்னுரையாக தந்திருக்கும் பத்தியின் ஆரம்ப வரிகள் அது ஒரு தனிக் கவிதை போல அழகு சேர்த்திருக்கின்றன. கவிதையை நீச்சலுடன் ஒப்பிட்டு அவர் சொல்லியிருப்பது எத்தனை உண்மை என்பது, அடிக்கடி மூக்கிலும் வாயிலும் நீர் புகுந்துவிட திணறித் தத்தளிக்கும் என் போன்ற, நாளும் கவிதை நீச்சல் பழகுபவர்களுக்கு புரிபடும்.

இந்தயிடத்தில் ‘நிறைய நண்பர்கள் நிறைய எத்து விட்டும் புரிந்தும் புரியாமலுமாக ஏதோவொரு மாய விளையாட்டை இன்னமும் கவிதைகளோடு நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று வெளிப்படையாய்ச் சொல்லிவைப்பது பெரியசாமியின் தன்னடக்கத்தை காட்டுகிறபோதும், இப்படியும் சொல்லும் பெரியசாமியின் மதுவாகினி தொகுப்போ மாயவிளையாட்டு தன்னை தளர்த்திக்கொண்ட பொழுதில் அவர் கண்டடைந்த கவிதைகளால் நிரம்பியிருக்கிறது.

முதலாவதாக என்னை பெரிதும் பாதித்த கவிதை, ’நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்’ (பக்கம்-44). தான் அருகிருந்து பார்த்த ஒரு பித்தனைப் பற்றிய சித்திரம் பிசகாமல் வெளிப்பட்டிருக்கும், நெகிழ வைக்கும் கவிதையிதில்.

// சடை சடையாய்
உடலெங்கும் தொங்கிக் கிடக்கும்
சாவிகளும் பூட்டுகளும் //

என்று விவரணையாக வரும் வரிகள் அந்த பித்தனை நம் கண்முன் நிறுத்துகின்றன. மேலும் ஒரு பிராந்தனை, அவனின் வினோதச் செய்கைகளை அவனை கலைத்திடாமல் கள்ளத்தனமாக கவனிக்க விழைவதை

// ஒலி செவியடையும் தூரத்தில்
எனதுடலை வைத்தேன்
எனதிருப்பை சவமாக்கி
வேகமாய் பேசத் துவங்கினான் //

என்பதாக எழுதியிருப்பதில் இருக்கும் நுட்பம் வியக்க வைக்கிறது.

அடுத்து ‘அறிதலின் பின் கதவு’ (பக்கம்-17) கவிதையில், காதலர் தம்முள் பேசிக்கொள்வதை

// மழைபட்ட தகரமாக தடதடத்து
பேசியவைகளை திரும்பத் திரும்ப பேசி //

என்று எழுதியிருப்பது பரவசப்படுத்துகிறது.

வழமை போலவே மழை, நீர் அல்லது இயற்கையை மையச் சரடாக கொண்ட பெரியசாமியின் அனேகக்கவிதைகளில் ’மிச்சமிருக்கும் நாட்களில்’ (பக்கம்-23) என்கிற கவிதை அது சொல்லும் சேதியால், நடையால், கிளர்த்தும் உணர்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது.

// வகைமைகள் அற்றுப்போக
தின்றழித்து பெருக்கம் கொள்கின்றன
பாலையெனும் ஒற்றை நிலம்

அவசரமாக ஆயுளை விழுங்கும்
இழப்பின் பட்டியல் நீள
புகைந்து கிடக்கும் நம்மின்
நெடுங்கோபத்தை
சேகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது
விதைகளென. //

இயல்பில் வரிகள் பிரச்சார நெடியோடு இருப்பினும், கோரும் மௌன வாசிப்பில் மனதை உணர்வுத் தளத்தோடு இணைக்கிறது இக்கவிதை.

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு என்று சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அவர்களின் குரலாக ஒலித்திருக்கும் ஒரு கவிதை ‘சுமைதாங்கி கற்களல்ல’ (பக்கம்-78) என்பது. திரைத்துறை (ஒன்றிரண்டு பேர் இதில் விதிவிலக்கு) முதலான ஊடகங்கள் என்றென்றைக்குமாக திருநங்கைகளை பரிகாசப்பொருளாக, பாலியல்

தொழிலாளிகளாக, யாசகர்களாக சித்தரித்துவந்ததையெல்லாம் தாண்டி, அவர்களின் காலம் இன்றைக்கு மாறி வருகிறது. எந்தத்துறையிலும் சாதிக்கவான மன உறுதியும், தடைகளை தகர்ப்பதற்கான ஒற்றுமையும் அவர்களிடம் கூடி வருவது தெளிவு. பெரியசாமியின் கவிதை மூலம் எவரின் பாசாங்கான கழிவிறக்கத்தையும், பச்சாதாபத்தையும் திருநங்கைகள் வீராவேசத்தோடு புறந்தள்ளுவதாயமைந்த வரிகள் இவை,

// இறக்கி வைத்தபடியே இருக்க வேண்டாம்
தன்னிரக்கங்களை
சுமைதாங்கி கற்களல்ல

…………………………………..
…………………………………..

எங்களுக்கும் தெரியும்
மண்ணை மிதித்து நடப்பது எப்படியென //

கார்ட்டூன் சானல்களினூடாக குழந்தைகள் மட்டுமே வீட்டிற்குள் உலவ அனுமதிக்கும் பன்றிகளையும் நேசிக்கும் மதுவாகினி

// தன் முலை வருடியபடி
விதந்துகொண்டிருப்பாள்
முட்டி இழுக்கும் குட்டிகளுக்கு
ஒருசேர பசியடக்கும்
தாய்மையை //

இப்படியாக மெய்யாகவே நெஞ்சை உருகச்செய்கிறாள், ‘பன்றிகளின் இருப்பைத் தேடும் மதுவாகினி’ (பக்கம்-38).

இன்னும், ‘குலைத்து தீரா மௌனம்’ (பக்கம்-31)-ல்
// கருத்த மண் படர்ந்த
காட்டின் மையத்தில்
திரண்ட மக்காச்சோளக் கதிரென நிற்பாள் //

’கொன்றைப் பூக்கள் உதிரத் துவங்கின’ (பக்கம்-48)-ல்

// தன்னில் பயணித்த நீரோடைகளின்
தடயங்களோடிருக்கும் மணல் பரப்பில் //

’நகைப்புக்காலம்’ (பக்கம்-73)-ல்

// ஆழமிகு கிணற்றிலிருந்து
ராட்டினங்களின் துணையின்றி
மேலேறி வந்தன முக்காலமும் //

‘காத்திருந்த துளி’ (பக்கம்-77)-ல்

// துளி நீராக்கினேன் உயிரை
பசிய இலையொன்றில் மிதக்கச் செய்தேன் //

’காத்திருப்பு’ (பக்கம்-35)-ல்

// விரிந்து கிடக்கும் பாலை நிலத்தில்
கையளவு நீரை கண்டடையும்
தவிப்புக்கு ஒப்பானது
வாழ்வின் துணையை அடைவதும் //

’பொருந்தாக் காலம்’ (பக்கம்-25)-ல்

// கன்றுண்ணாது த்தும்பும் மடியென
வழிந்தன குளம் குட்டைகள் //

போன்ற வரிகள் தரும் போதை அசாத்தியமானது.

தவிர, தொகுப்பின் சில கவிதைகளான

• புலி வால் பிடித்த கதை
• தறுதலை
• அவள் போட்ட விடுகதை
• புதைகுழி
• சித்திரங்கள்
• தவிப்பு
போன்ற கவிதைகள் எளிமையும், வாசிப்பில் அயர்ச்சியையும் தருபவையாக இருக்கின்றன என்பதை என்னளவில் அவதானிக்கிறேன்.



மதுவாகினி (கவிதைகள்)
ந.பெரியசாமி

விலை : ரூ.70

வெளியீடு:
அகநாழிகை பதிப்பகம்
தொடர்பு எண்: 9994541010

Saturday, June 22, 2013

சன்னல் வழியாக
எனை அழைத்தது
தன் துளிகளை அனுப்பி
வேடிக்கை பார்க்க
தன் ஆட்டத்தை துவங்கியது மழை
காமக் களியாட்டத்தில் மனம்

Tuesday, June 18, 2013

தொடரும் கதை

கடலும் மலையும் தாண்டி
மந்திரவாதியால் காக்கப்படும் குப்பியுள்
அடைபட்டதும் அல்ல

அதிகாரம்
பொய்யை உண்மையாக்க
நக்கீரனை வீழ்த்திய நாடகத்தில்
கொங்குதேர் வாழ்க்கை...
பாடலிலிருந்து உதிர்ந்ததும் அல்ல

மாட்டுக்கறி ருசித்த
மதிய பொழுதொன்றில்
சோற்றில் சிக்குண்டதை மீட்க
சிரிப்பை மின்னச் செய்தது

மகிழ்வுதான்
மயிர் நீட்டிக்கும்
உறவுகளை நினைக்க...

Sunday, June 16, 2013

ரயிலானவன்

தற்கொலை செய்துகொள்ள தோன்றியது
சலிப்பூட்டும் மருத்துவச் செலவீனங்களுக்குப் பின்னும்
துளிர்ப்பூட்டும் நோய்மை தீராதிருக்க

தூக்கிட்டுக் கொள்ளலாமென யோசிக்க
முன்பு பார்க்க நேர்ந்த
தூக்கிட்டு இறந்தவரின் காட்சி தோன்றியது
முடிவை மாற்றிக்கொண்டேன்

வரும் ரயிலின் முன் பாய்ந்திட தீர்மானித்தேன்
தற்கொலைக்காரர்களின் கனிவான கவனத்திற்கு
எதிர்பார்க்கப்படுகிறது
இன்னும் சற்று நேரத்திற்குள் வருமென
அறிவிப்புப் பெண்ணின் குரல் ரசித்துக் கடந்தேன்
நிலையத்திலிருந்து வேகமெடுக்கும்
இடம் கனித்து நின்றேன்

என்னுள் பச்சை நிறம் ஒளிர்ந்திட
வேகமெடுத்து அருகில் வந்தது
ஒவ்வொரு பெட்டியும்
ஒவ்வொரு குழந்தையானது
ஓடிப்போய் நானும் ரயிலானேன்.

Saturday, June 1, 2013

நெட்டிலிங்கப்பூ

வீழ்ந்தும் மலர்ந்திருந்த
நெட்டிலிங்கப் பூவின் எதிர் அமர்ந்தேன்
எனக்கான கலயத்தை நிரப்பி
அதற்கும் துளி ஊட்டினேன்
பிரதேசத்தை இளம் மஞ்சள் நிறமாக்கியது
என் பார்வையின் எல்லைக்குள்
அனு உலையேதும் நிறுவப்படாமலிருக்க
கிடைத்த சாவகாசப் பொழுது கரைந்தது
நிழலாய் போராடுபவர்களின் துயரம்
உருமாற்றம் கொள்ளச் செய்யும்
ரசவாதமிருப்பின்
தாய்ப்பாலென புகட்டி
கரப்பான்களின் பிரதேசமாக அறிவித்து
களிப்படைந்திருக்கும் அரசு
வழியற்றுப் போக
வெளியேற்றப்படவேண்டிய கழிவுகளாய்
பதிவேட்டில் படிந்த எம்மக்களின்
துளிர்த்தெழும் அறப்போராட்டங்கள்
வெற்றிகொள்ளுமெனும் நம்பிக்கையில்
ததும்பத் துவங்கியது நெட்டிலிங்கப்பூ.

நன்றி: காக்கைச் சிறகினிலே மே 2013