Thursday, August 23, 2012


தறுதலை


சரியான திருட்டுப்பயல்
தொங்கும் அப்பாவின் சட்டையில்
அடிக்கடி கை வைப்பதுண்டு
கால் சட்டையில் திணித்து வரும் பருத்தி
கல்கோணா தேன்மிட்டாயாக இனிக்கும்
சரியான தறுதலப்பயல்
அர்த்தங்கள் ஏதுமறியாது சுமந்தேன்

ஏவப்படும் வேலைகளை செய்ய மறுக்க
திமிர்பிடித்த கழுதையாகவும்...
கேள்விகள் நிறைய்ய கேட்டேன்
மொடமசுறு பிடித்தவனென்றார்கள்
கொஞ்ச நாட்கள்
கொழுப்பெடுத்தவனாகவும்
ஊதாரி உதவாக்கரையெனும்
பட்டங்களுக்கும் பஞ்சமில்லை
என் படிப்பு கூடுதலாகிக் கொண்டிருக்க
பேசிக்கொள்ள துவங்கினார்கள்
நல்ல பிள்ளையெனவும்
மாற்றங்கள் குறித்த சலனம் ஏதுமின்றி
மௌனித்து காலம் நகர்ந்தபடியிருக்க
பிழைக்க புகுந்த கூட்டில்
அடைந்து கிடக்கின்றேன்
வம்புதும்பற்ற
அற்பக் கூலியாக...

நன்றி: தீராநதி

Wednesday, August 22, 2012

எனது ஹீரோக்கள்
                                                                                                                 1

சித்திரம் பேசுதடி
என் சிந்தை கலங்குதடி...
அடிக்கடி பாடிக்கொண்டு திரிவேன். யார் எழுதியது யார் பாடியது என்பதுகுறித்தெல்லாம் எந்த புரிதலும் இல்லாத வயது.  அடிக்கடி இதையே முணுமுணுப்பேன். தோழிகள்கூட எப்பவாவது கிண்டலடிப்பார்கள். சித்திரம் பேசுதடி வராண்டியென... அதுகுறித்தெல்லாம் எவ்வித வருத்தமோ கோபமோ ஏற்படுவதில்லை. ஏன்னா எனது ஹீரோ அதைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டிருப்பார். அவரிடமிருந்துதான் எனக்கு ஒட்டிக்கொண்டது அப்பாடல். அதை நான் பெருமிதமாகவே நினைத்திருந்தேன். எல்லோரும் கமலையும் ரஜினியையும் ஹீரோவாக கொண்டாடுகிறார்கள் நீ என்னடான்னா போஸ்டர் ஒட்டுறவன்மேல் இப்படி பைத்தியமாத் திரியறே என கிண்டலடிப்பார்கள். இவர் ஒட்டும் போஸ்டரால்தான் அவர்களே அழகாக காட்சியளிக்கிறார்கள் அவர்களை விட இவர்தான் பெருசு என வாதிடுவேன். ரொம்ப பேசிக்கொண்டே இருந்தால் உங்க ஹீரோவை நீங்க தொடுங்கடா பாப்பம். என் ஹீரோ எனை தொடுவார்டா என வாயடைத்துவிடுவேன்.

யாருக்கும் தெரியாது இருட்டிலே  வந்து இருட்டிலோ போய் இருக்கக்கூடும். யாரைக்கேட்டாலும் தெரியாது என்பார்கள். திடுமென முளைத்திருக்கும் இன்றே இப்படம் கடைசியெனும் துக்கடா போஸ்டர். அதை பார்த்ததிலிருந்தே கால்கள் தரைதேயாது மிதந்து திரிவேன். பள்ளியில் வேறு எல்லோருக்கும் பாடம் நடந்து கொண்டிருக்கும். எனது மனதில் வேறு சித்திரம் ஓடிக்கொண்டிருக்கும். என்ன பாடமாக இருக்கம். யார் நடித்திருப்பார்கள். யார் ஜோடி, யார் வில்லன் இப்படியாகவே இருக்கும். தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்திருப்பேன். விடிந்தும் விடியாததுமாய் ஓடிப்போய் சாவடிப்பக்கம் நின்று கொள்வேன். அங்குதான் பெரிய சுவர் இருக்கும். துண்டு துண்டாக நான்கு போஸ்டரை ஒட்டி பெரிய சைஸ்சில் இருக்கும் திரையில் இருக்கும் காட்சிபோலவே இருக்கும். எப்படியும் ஆறிலிருந்து ஆறறைக்குள் வந்துவிடுவார். அவர் சர்ரென வேகமாக வர அவரது பீடிப்புகை பின்னோக்கி ரயிலாய் ஓடும். இறங்கும் வேகத்தில் ஸ்டைலாக ஸ்டேண்டை போடுவார். அக்காட்சி விவரிக்க முடியாத சித்திரமாகத்தான் இன்னமும் என் மனதில் ஓடுகிறது. வந்துட்டியா கண்ணாவென கண்ணம் தட்ட உடலெங்கும் பசை மணக்கும். மடித்து வைக்கப்பட்ட போஸ்டர்களை விரித்து ஒட்டும் வேகம் வேறு யாருக்கும் சாத்தியமற்றதுதான். நானும் சமயங்களில் முயற்சித்து பார்த்திருக்கிறேன். ஓசூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  சங்கத்தில் ஏற்பாடு  செய்யும் நிகழ்ச்சிக்காக போஸ்டர் ஒட்டப் போகும்போது, ஒரு நாளும் கைவந்ததே இல்லை. உடன் வரும் தோழர்களோடு வேறு எதையோ பேசிக்கொண்டிருந்தாலும் நினைவு முழுக்க அவரே நிற்பார். அவர் போஸ்டரை ஒட்டி முடிக்கும் தருவாயில் ஓடிப்போய் டீ வாங்கி வருவேன். அதற்குள் அடுத்த பீடியோடு நின்று பார்த்துக்கொண்டிருப்பார் போஸ்டரை சரியாக இருக்காவென. சிறிதாக பிசிறு தட்டியிருந்தாலும்  மீண்டும் பிரித்து ஒட்டுவார். சுவற்றிலிருந்து எத்தனைமுறை பிரித்தாலும் அவருக்கு மட்டும் அந்த போஸ்டர் கிழியவே கிழியாது. மீண்டும் கன்னம்தட்டி சிரிப்பை கையில் அசைத்து பறப்பார். பசைமண மகிழ்வில் வீடு திரும்புவேன். ஒரு நாளும் பெயரைக் கேட்டதே இல்லை. அவரும்தான். கண்ணாவென கூப்பிடுவார். நானும் போஸ்டரண்ணே என்பேன். மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்வோம் தியோட்டருக்கு. வரும்போதும் நடந்தேதான். பஸ்சிற்கு காசு தரமாட்டார்கள். சினிமாவிற்கு மட்டும்தான் காசுகொடுப்பார்கள். மழைக்காலத்தில் மட்டும் பஸ்சிற்கும் கொடுப்பார்கள். போஸ்டர் அண்ணாதான் டிக்கெட் கிழிப்பவராக இருப்பார். நான் விரும்பும் இடத்தில் எனை ஒக்கார வைப்பார். ஆப்ரேட்டர் ரூமுக்கு அழைத்துச் செல்வார். இடைவேளையின்போது அங்கு போய் பிலிம் ரோலை சுற்றிக்கொண்டிருப்பேன். கல்கோணாவோ, முறுக்கோ தவறாமல் கிடைத்துவிடும்.
தியேட்டரில் ஒரு மூலையில் சிறியதாக இருந்த கடை கை கால் முளைத்து பெரும் உருவமாய் மாறிக்கொண்டிருக்க அதன் பசிக்கு தியேட்டரே பலியாகிட அவ்விடங்களில் பெரிய கடை மட்டுமே இப்போது... எனது ஹீரோ எங்கு இருப்பாரோ... எப்படி இருக்காரோ...

                                                                                                                   2


துள்ளலோடு பள்ளிக்கு கிளம்புவேன் புதன்கிழமையென்றால். ஒவ்வொரு புதனுக்குள் எப்படியாவது நாலணாவோ எட்டணாவோ தேத்திவிடுவேன். அதற்காகவே யார் கடைக்குப் போகச் சொன்னாலும் சலிக்காமல் ஓடுவேன். ஐந்து பைசாவோ பத்து பைசாவோ மீதியானால் கொடுப்பார்கள். ஒண்ணுக்கு பெல் அடித்ததும் சிட்டாக பறப்பேன். நான்தான் முதல் ஆளாக இருக்க வேண்டுமென... அவர் உலக்கை போன்று இருக்கும் அதை கையில் பிடித்திருப்பதை பார்க்க தெருக்கூத்தில் வரும் ராஜாபோலிருப்பார். அந்த குச்சி நல்ல வழவழப்பாக இருக்கும். அதன் நடுவில் கலர் துணி தொங்கும் தேர்சிலையாக கைதுடைத்துக் கொள்ள. அருகில் அவரின் வருகையை சொல்லும் மணி இருக்கும். ரோஸ் வெள்ளை பச்சையென வண்ணக்கலவைகளால் விருப்பங்களை நிறைவேற்றும் இனிப்பு கலயத்தை சுற்றி வைத்திருப்பார். சிறிய டப்பாவிலிருக்கும் எண்ணையை தொட்டுத்தொட்டு உருவி உருவி ஓவியமாக்கி ஒட்டுவார். ஓசுக்காக தாவாயில் ஒட்டும் மீசை மிட்டாய் உடனடியாக கரைந்திடும் ஊறியிருக்கும் எச்சில் குளத்தில். கடிகாரம் பூ பூச்சியென பசங்க கேட்க கேட்க இறங்கும் மழையென சரசரவென ஒட்டியபடி இருப்பார். முட்டாம ஒவ்வொருத்தரா நீட்டுங்கவென முனுமுனுத்தபடி இருப்பார். எல்லோருக்கும் ஒட்டி முடிக்கும் வரை அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பேன். எனக்கு மட்டும் பெரிதாக தேள் செய்து ஒட்டுவார் உடம்பு கொடுக்கு வால் வேவ்வேறு கலரில் மிக அழகாக இருக்கும் கொடுக்கு அசைந்தபடியே இருப்பதாக தோன்றும். பெருமிதத்தில் நீச்சலடிப்பேன் துள்ளும் மீன்களோடு.

எப்பொழுதாவது குலசாமி கோயிலுக்கு போனால்கூட சாமியின் முகத்தில்
முட்டாய்க்காரரின் முகம்மிளிரும் உடல் இனிக்க கடந்த நாட்களை
கைபிடித்தபடியே அலைகிறேன்.

இன்னும் வந்துகொண்டுதான் இருக்கின்றன வெறும் புதன்கிழமைகள்...

                                                                                                         3


நமச்சிவாயபுரம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது. அம்மாவின் ஊர். வருடம்தோறும் திருவிழா நடக்கும். திருவிழாவென்றால் தெருக்கூத்து இல்லாதிருக்காது. இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும். பெரும்பாலும் அரியலூர் மணி செட்டுதான் வருவார்கள். வேறு எந்த செட்டும் ஊர் மக்களை திருப்திபடுத்துவதில்லை. மணி பாண்டியன் கெட்டியக்காரன் அண்ணாமலை மூவரும் எல்லோருக்கும் பரிச்சயமானவர்கள். அந்த செட்டின் தேதிக்கேற்ப திருவிழா தேதியும் முடிவு செய்யப்படும். யாராவது நாளைக்கு சுத்திப் போடணும் ஊர் கண்ணே விழுந்திருக்கும் பாவி மவன் இம்புட்டு அயவா புடவ கட்டி ஆடுறானே வயசு புள்ள தோத்தா போவென கிழடுகள் அங்காலாய்ப்பார்கள். மணி பெண்வேசமிட்டு வர ஊரே வாய் பிளந்து ரசிக்கும் அவர் தனக்கான பாடலோடு வெளிவந்து நடனமிட்டு முடித்து அடேய் அண்ணாமல...ல என ராகமிட்டு அழைக்க ஓடிவரும் கட்டியக்காரன் ஆமாம் ஆமாம் நான் தொடாத மொலதானென பிடிக்கப் போக அவர் துரத்த பார்வையாளர் பக்கமெல்லாம் புகுந்து வர மழைக்குப்பின் தெருவில் கூடும் குழந்தைகளின் கொண்டாட்டம் ரத்தத்தில் வெப்பமேற்ற சுறுசுறுப்பாகிவிடுவோம். ஒரே பாடலில் பத்து சேலைகள் மாற்றிவர அதிசயத்து வாய் பிளந்து பார்ப்பேன். கூத்து முடிந்து பஸ் ஏறி செல்லும் வரை பார்த்து பார்த்து வியந்தபடி இருப்பேன். இப்பவும் எங்காவது கூத்து பார்க்க சென்றால் வரும் பெண் வேசங்களோடு அரியலூர் மணியை பொருத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது நினைவு...

ன்றி...தமுஎகச  தமிழக பண்பாட்டு மலர்
 

Wednesday, August 8, 2012

நிறமாற்றம்

வாகான குச்சி ஒன்றை ஒடிப்பேன்
ஒரு முனையை நன்றாக மென்று
கசப்பை விழுங்கி குச்சியை
கற்றறிந்தவாறு பற்களில்
பயணிக்கச் செய்வேன்
குச்சியை இரண்டாக பிளந்து
நாக்கில்
சரஸ்வதி எழுதியதை
சுத்தமாக வழித்தெடுப்பேன்
பொழுதுகள் ஆரோக்கியமாகவும்
உற்சாகத்தோடும் உருண்டன
எழுத்துக்களால் நாக்கு தடித்தவர்கள்
நிறைய்ய சிந்திக்கலாயினர்
மரங்கள் சரிந்தன
இடப்பெயர்வில் மண் நிறமாறியது
உடல் நாணல் தன்மைகொள்ள
அவரவர் கூறுவதற்கேற்ப
தட்டை வளைவு குழி குவியென
மாற்றி மாற்றி துலக்கி
சோம்பியபடி வாழப்பழகினோம்
வேறு வக்கற்று...

nantri:vallinam.com