Sunday, June 24, 2012

தவிப்பின் நிழல்கள்
உயிர் அறுந்து அறுந்து
உருமாறிக்கொண்டிருந்தது மதுவாகினி
தன் பச்சையத்தை உதிர்த்தன தாவரங்கள்
பெரும் நதியால் கைவிடப்பட்ட மணல்திட்டு
இரயில்கள் தொலைந்துபோக
வெறித்துக் கிடக்கும் தண்டவாளங்கள்
தொடுப்பார் இன்றிக் கிடந்த செருப்புகள்
பிடித்தவைகளை களவுகொடுத்த ஏமாற்றம்
ஈயம் பூசப்படாத பாத்திரமாய் வெறித்த சாலை
பிறரின் சுவாசம்படாது தொலைத்த எழுத்துக்கள்
வானம் பிதுக்கித் தள்ளிய நட்சத்திரங்கள்
ஈரம் துளிர்க்கும் துளைகள் தூர்ந்த பாறை
நாவின் ஈரம் தீண்டாத வைக்கோல் கன்று
கீறல்களின் ரணம் வடிக்கும் கள்ளிச்செடி
கண்ணடிகளால் வர்ணம் ஒடிந்த திருஷ்டிபொம்மை
உருவம் தீய்த்துக் கரையும் கற்பூரம்
எச்சங்கள் வறண்டு பொடுகாய் படிந்த
என் குலசாமியென
தவிப்பின் நடுக்கத்தோடு
நம் விரல்களின் ஸ்பரிசம்
வெட்டுண்ட கணத்தில்...

நன்றி: தீராநதி

Monday, June 18, 2012

அந்தி சிரித்தது
நீண்ட நாளைக்குப் பின்
என்னுடன் மதிய உணவை முடித்து
உறங்கியபடி இருந்த அந்தியை
சிறிது டீயோடு எழுப்பி
போகலையா நேரமாச்சென்றேன்
அலுப்பாகத்தான் இருக்கு
ஓய்வு கொள்ளட்டுமா
கற்றலின் பளு கூடிட
களைப்புறும் குழந்தைகள்
வேலையின் தாகமடங்காது
தவித்திடுவர் மக்கள்
சுகிக்கும் சிலரின் ரசணை
பொசுங்கிப்போகும்
சில ஜீவராசிகள் செத்துத் தொலைக்கும்
பாவம் மதியமும்
நீடித்திருக்க தவிப்புறும்
ஏற்படவிருக்கும் குழப்பங்களைத் தவிர்க்க
செல்லத்தான் வேண்டுமென
புறப்பட்ட தருணத்தில் அந்தி
கேட்டுச் சிரித்தது
எனை இன்னும் சேர்க்கவில்லைதானே
எச்சாதி சங்கத்திலுமென…
*
மது ஊறிய உதடுகள்
இரு பொழுதுகளுக்கிடையேயென
மங்கிய நேரத்தில் தனித்திருந்து
மொழியை அறிந்து கொண்டிருக்கையில்
திடுமென முகம் புதைத்து
இதழ் வலிக்கத் திணிக்கும்
அவளின் முத்தத்திற்கு இணையானதுதான்
முடிவின்மையோடு தொடரும்
நண்பர்களிடையேயான உரையாடலின்போது
மனம் குளிர விழும் சொற்களுக்காக
அவன் கொடுக்கும் முத்தமும்…
-இசைக்கு…
*
0
மல்லாந்து கிடக்கும்
பட்டாம்பூச்சியை நினைவூட்டி
அழகும் மணமும் ததும்பும்
பிளவுகளுக்கு
தன்னுள் விழும் விதைகளை
வைத்துக் கொள்ள தெரிவதில்லை
விதையாகவே…
*
0
பெரும் மரமெங்கும்
துளிர்த்திருக்கும் இலைக்கொன்றாக பறவைகள்
அதிசயித்துக் கேட்டான் வழிப்போக்கன்
அறியாயோ…
மரணமற்ற ஊர் இது
ஜீவிதம் முடிய பறவையாவார்களென்றேன்
அருகிலொருவன் அழைத்துக் கொண்டிருந்தான்
தன் மூதாதைப் பறவையை
உணவூட்டலுக்காக…

nantri:malaigal.com

Friday, June 15, 2012

நினைவின் புழுதி

நிறைந்த கிணற்றிற்கு
ஒற்றை பூச்சூடி
அழகு ததும்பச் செய்து
துளித்தேன் நா பரிமாறி
உடல் தித்தித்து
மனம்படிந்த புழுதியோடு
இணைந்தலைந்த பொழுதுகளை
நினைவுள் பூட்டி
தவித்தலைவாய்
வார்த்தை சாவிகளோடு அலைவுறும்
என்னைப்போலவே...
*

எறும்பு வீடு

கேட்டு சலித்தவள் அதிசயித்தாள்.
ஈ எறும்புகளை கொன்றொழித்திட
விஷம் வாங்கிய நாளின் அந்தியில்
வேடிக்கை பார்த்திருந்தோம் மழையை
பதட்டங்களை செவிகொள்ளாது
நனைந்து ஓடியவன்
திரும்பினான் கவலையோடு
மரத்தடியிருந்த எறும்பு வீட்டை
காணும்பாவென.
*

மயில்

காடலைந்து திரும்பியவன்
அழைத்து வந்தான்
கண்களின் பார்வைக்குத் தப்ப
புத்தகத்தினிடையே ஒளித்தான்
உறக்கம்கொள்கையில் பதுக்கினான்
தலையணையின் அடியில்
கானகத்தின் நினைவில் நடனமிட்டு
உறக்கமற்றிருந்த மயில்
பக்கங்களில் மிதந்த உயிரிகளை
தின்று முடித்தது.

நன்றி: குறி

Sunday, June 10, 2012


சுமைதாங்கி கற்களல்ல...


பொங்கும் கருணையை
கொப்புளங்களாக்கிக் கொள்ளுங்கள்
வசதியாக இருக்கும் சொரிந்துகொள்ள

வழியும் பவ்யங்களை
வழித்துக் குடித்துக்கொள்ளுங்கள்
உங்கள் எஜமானரிடம்
சிறந்த அடிமையென பெயரெடுக்க உதவும்

பாவப்பட வேண்டிய கட்டாயமெனில்
எங்களுக்கேதுமில்லை
உங்கள் இல்லத்தாளிடம் காட்டுங்கள்

நகைச்சுவை ஊறுகாயாக்கி
நக்கி நக்கி ருசித்ததுபோதும்
நாத்தம் மிகுமுன்
கழுவி கமுத்திடுங்கள்

புளித்த பாலின மொந்தையை
நீங்களே சுமந்து திரியுங்கள்
முதல் பாலின பெருமைக்காக
எங்கள் முதுகிலும்
தொங்கவிட துடிக்காதீர்கள்

இறக்கி வைத்தபடியே இருக்கவேண்டாம்
தன்னிரக்கங்களை
சுமைதாங்கி கற்களல்ல

கொழுத்துத் திரியும் உங்களின்
வக்கிர எலிகளை வலையவிடும்
பொந்துகளுமல்ல நாங்கள்

எங்களுக்கும் தெரியும்
மண்ணை மிதித்து
நடப்பது எப்படியென...
                      -லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு

nantri:vallinam.com

Wednesday, June 6, 2012

ஓணான் உருவாக்கிய பகை
 

ஓணான் ஒன்றை சாகடித்தேன்
நிலத்தில் புதைத்து அடையாளமிட்டு வந்தேன்
கிடைக்கும் காசை கொண்டு
வாங்கவேண்டிய பொருட்களின் பட்டியலோடு
இடம் அடைந்து தோண்டினேன்
காசை பிறப்பிக்கும் முன்னே
நிலம் ஓணானை தின்றுவிட்டிருந்தது
அன்றுதான் துவங்கியது
நிலத்தின் மீதான பகை
யார் மீதாவது கோபம் வந்தால்
ஓங்கி மிதிப்பேன் நிலத்தை
அடிக்கடி காறித் துப்புவதுமுண்டு
சொந்த நிலங்களை அப்பா விற்றபோது
வீடு துக்கத்திலிருக்க நான் மகிழ்வேன்
மனையாளின் தொந்தரவால்
வேறு வழியற்று சொந்தமாக்கினேன்
வீட்டுமனை மட்டும்
இப்பவும் ஓணான் பார்க்க
ஆசை எழுவதுண்டு
நிலத்தின் மீதான பகையை முடித்துக்கொள்ள
சனியன் வயது தடையாய்...

நன்றி: மாற்றுப்பிரதி

Friday, June 1, 2012

காலத்தின் நிழல்கள்

முன்னொரு காலத்தில்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தினடியில்
நைந்து கிடந்த மார்புக் கச்சையென
அறிமுகமாகிய புறா பருத்திக்காடானது
தன்னை நூலாக உருமாற்றி
இணங்கி இணங்கி ஆடையானது
விரிவு கொள்ளும் வானமாக
நீண்டு கொண்டிருந்தது ஆடை
என் சமூகத்தாரின் உடலேற்ற மறுக்கப்பட
எட்டுத்திக்கும் உலகை போர்த்தியது
பீச்சி வெளியேற்றப்பட்ட இழப்புகளின்
ரத்தங்களை உறிஞ்சக் கொடுத்து வெற்றிகொள்ள
உடலேறிய ஆடை
கம்பீரங்களின் கணம் மினுங்கியது
முப்பத்தியேழு ஆண்டுகால சிலுவையின்
துயர்தோய்ந்த கதை கூறி
முலை மறைத்து
மிதந்து சென்றது புறா
காலத்தின் நிழல்களை விதைத்தவாறு...
0

இருளென்பது குறைந்த ஒளி

எனை நினைவில் வைத்திருக்கிறாயா
என் வீதியில் குடியேறிய நாளில்தான் பூத்திட்டேன்
மாதாமாதம் தவறாது நிகழ்ந்திடுவதால்
கொண்டாட்டத்தின் நாளாகவே இன்றளவும்
நீ எதிர்படும் கணங்களில்
கரைந்து கரைந்து கூடியிருக்கேன்
எனக்கு தெரிந்திருக்கவில்லை
உன் மீதான காதலை எப்படி வெளிப்படுத்துவதென
விட்டுவிடலாம் முடிந்துபோன கதை
எதையோ எதிர்பார்த்தும் எழுதவில்லை
உன் பொருட்டும் ஒருத்தி
நீ அறிந்து கொள்ளத்தான்...
மேலும் தொடர முடியாதுபோக மன்னிப்புக்கோரி
வாசித்த நாவலின் பக்கங்களில்
அப்பெண்ணை உறங்கச் செய்தேன்
எங்களிடையே ஒளியூட்டிக் கொண்டிருந்த
கடைசி மெழுகுவர்த்தியும் உருவற்றுப் போக
அவளின் தவிப்பு என்னுள் ஊறி அடங்க
ஆசுவாசமடைந்தேன்
பாரதி வந்தான்
இருளென்பது குறைந்த ஒளியென
மீண்டும் நாவலை விரித்து
அப்பெண்ணை எழுப்பினேன்
என் வாழ்வைப் போலிருக்கு
உன் சூழலுமென மறுத்தாள்
வேறு வழியின்றி பராசக்தியிடம் முறையிட்டேன்
இருளிலும் வாசிக்கும் வல்லமை வேண்டி.
0

கனவு வேட்டை

காலியான ஊறுகாய் பாட்டிலில்
கையளவு கடலை நிரப்பி
அடம்கொண்டு வாங்கிவந்த
தங்கநிற மீன்களை மிதக்கவிட்டான்
நட்புகளுக்கு வேடிக்கை காட்டிவிட்டு
மீனாக மாறி உடன் நீந்தியபடியிருந்தான்
என்ன சாப்பிடும் எத்தனைதடவை சாப்பிடும்
பாத்ரூம் இல்லையே பாட்டிலில்
உச்சா ஆயி எங்கே போவுமென
கேள்விகளால் எரிச்சலூட்டியபடி இருந்தான்
அது குட்டி போட்டதும்
பெரிய்ய தொட்டி வாங்கிக் கொடுக்கனும்
லைட்டு கல்லு கடலு வேணுமென
தேவைகளை பட்டியலிட்டான்
இரவு தூங்கப் போகும் முன்
பொம்மை நாய் ஒன்றை காவலிட்டான்
அன்றைய நடுநிசியில்
கோவென அழுதபடி எழுந்தான்
கேட்க கேட்க அழுகையை உயர்த்தியபடி இருந்தான்
வயிறு தலை கால் வலிக்கிறதாவெனும்
எங்களின் கேள்விகளை சகிக்காது
நாய் என் மீனை தின்னுடுச்சி என்றான்
உயிரூட்டிய மெழுகுவர்த்தியின் ஒளியில்
சுற்றிக் கொண்டிருந்த மீனைக் காட்ட
நீ காப்பாத்தியதை பாக்கலப்பாவென
இறுக்கி அணைத்தபடி உறங்கிப்போனான்
வேட்டையாடத் துவங்கியது
பொம்மை நாய்
என் கனவை...

nantri: uyir ezluthu