Friday, November 9, 2012

நீ அறியாய்

வென்றெடுக்க இயலாத கணங்களில்
பெருக்கெடுக்கும் வன்மத்தால்
சிதைக்க முற்படுகிறேன்
பெரும் பாறையை
சிறு கற்களாக்கும் பதட்டங்களோடு
வெப்பத்தால் நீர்மமாக்கி உதிர்க்க
பெரும் மழையாகி
மிதக்கச் செய்திடுகிறாய்

நுணுக்கி சிறு விதையாக்க
அடர் காடாகி தொலைத்திடுகிறாய்
பலூன் ஒன்றில் ஊதி அடைக்க
வானில் தூக்கி பறந்திடுகிறாய்
சமாதானம் கொள்கிறேன்
எல்லா கனவுகளும் பலித்திடாதென...

நன்றி: வல்லினம் இணைய இதழ்

Thursday, November 8, 2012

வளர்ப்பு நிழல்

நெடுநாளைய ஆசையால்
பிரியமாக பிடித்து வந்தேன்
ஒரு பசுவின் நிழலை
வீட்டின் முன் மொட்டையடிக்கப்பட்டிருந்த
புங்கை மரத்தில் கட்டி வைத்தேன்
இலைகள் துளிர்க்கத் தொடங்கின
கொழுத்து வளர்ந்தது நிழல்
தன் காமத்தை குரலில் கசிவிக்க

ஓரிரு முறை இணையோடு சேர்ப்பித்தேன்
தெருவாசிகள்
மீந்ததை கொடுக்கத் துவங்கினர்
நீலம் புயல் கடந்த அந்தியில்
குட்டி நிழல் பிரசன்னமாகியது...

நன்றி: மாற்றுப்பிரதி

Wednesday, November 7, 2012

யாருடைய கைகள் அவை...

வீட்டின் மேல் தளத்திற்கும்
வான் கவிழ்த்த நட்சத்திரங்களுக்கும்
இடையேயான தூரம் குறித்த கணக்கீட்டில்
மௌனித்திருந்தேன் குளமாக
ஒரு கல் விழுந்தது
நாளை மறக்காம கேஸ் புக் செய்திடுங்கவென
இருள் மேயத் துவங்க
சலனமுற்றேன்

என் வீடு வரும் அல்பாயுசு சிலிண்டர்கள்
மரணம் குறித்து
சலிப்புற்ற கணத்தில் சிலிண்டர்
நிலமாக விரிந்தது
மையத்தில் கொத்துச் செடியென
குத்த வைத்திருந்தேன்
பிட்ட வறட்டியென ஒளிர்ந்து
கொண்டிருக்கிறது நிலா...

நன்றி: தீராநதி

Tuesday, November 6, 2012

அந்தரங்கம்

சீண்டலை
துவங்கியபடி இருந்தது புறா
பார்வையில் பாலினம் பகுக்கும்
படிப்பறிவு இல்லாதிருக்க
தொடங்கியது ஆணோ பெண்ணோ அறியேன்
தொடர்ந்த அவைகளின் காமத்தை
கண்களில் விழுங்க மனமின்றி
திசை மாறிய கணம்

என்னுள்ளும்
இசை ஊர்ந்தது.

நன்றி: தீராநதி

Monday, November 5, 2012

எஞ்சியவை

பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததை பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை

கழுவத் துவங்கினேன்
கையிருந்த பிசுபிசுப்பை

நன்றி: தீராநதி