Thursday, February 28, 2013

உயிர்ப்பு

நேற்றைய மழை முழுதையும்
சுவடற்று குடித்தேன்
உடல் ஊறிய வெப்பத்தை
வாசனையாக்கி வெளியேற்றினேன்
என்னுள் தவிப்பாய் படரும்
வேர்களுக்கு முலை காட்டினேன்
ஆற்றின் மணல் பரப்பை
சிறிது ஈரமாக்கினேன்
குளம் குட்டைகளில்
கொஞ்சமாய் தேக்கி காட்சிப்படுத்தினேன்
உயிர் நீரை உறிஞ்ச
உடலெங்கும் இட்ட துளைகளுக்கும்
நீர் வார்த்தேன்
பாறைகளில் ஈரப்பசை ஒட்டினேன்
பழுப்பான என் குழந்தைகளை
பச்சையாக்கினேன்
இயல்பாகிப் போனது
மழை வரும் நாளில் நான்
மண்ணின் உடலாகிக் கொண்டிருப்பது.

நன்றி: வெயில்நதி

Friday, February 22, 2013

எனது கடல்

முதுகை கிழித்தது நத்தை
பிரதேசம் கடலாக விரிந்தது
கரை ஒதுங்கி அதிசயித்தேன்
என் வாசம் நுகர்ந்த அலை
அடுத்தடுத்து நெருங்க
கடலடைந்த நாட்கள் காட்சியானது
சிறார்கள் அலைகளைத் தாண்டி ஜெயித்தனர்
ஒருவன் மூதாதையரை
பிண்டமாக கரைத்துக்கொண்டிருந்தான்
ஈர யுவதிகள் சங்கு சேமித்தபடி
கடலை உறிஞ்சியபடி தனித்திருந்தவன்
அருகழைத்து கையளித்தான்
பிடி உப்பின் வெப்பத்தில்
கடல் காய்ந்தது.

Friday, February 15, 2013

காகமாதல்

எல்லோர் மீதும் என்ன கோபம்
தினமும் இந்த காக்கா
கா-விட்டுச் செல்கிறது
கேட்டவனின் தலை கோதி
முத்தத்தை பதிலாக்கினேன்
காத தூரம் நகர்ந்து
காக்காவானேன்...