Tuesday, March 26, 2013

வானவில்லான மோகப்பரிபூரனி
ந.பெரியசாமி

தாயின் மடியில் கிடத்தி தந்தை கால்களை அமுக்கிப்பிடித்து தங்கள் குழந்தையை தாங்களே வெட்டிச் சந்தோசமாக சமைத்துத் தந்தால்தான் உண்ண வருவேன் உன் இல்லமென்ற அடியாரின் கோரிக்கையை கூற தாயானவள் என்ன இது ஈசனின் சோதனையென கதறி அழும் பாடல். என் தாத்தா வெகு ராகமாக பாடிக்கொண்டிருக்க கட்டில் அடியில் படுத்தவாறு கேட்டு அழுதுகொண்டிருப்பேன். எப்படித்தான் ஒரு மனிதனை அழவைக்கும் அளவிற்கு தாத்தாவால் பாடல் எழுத முடிந்தது என வியந்து நாமும் என்றாவது இப்படி எழுதவேண்டுமென நினைத்துக்கொள்வதுண்டு. காலப்போக்கில்தான் தெரிந்தது அது சிறுதொண்டர் புராணத்தில் வரும் நாடகக் காட்சிப்பாடலென்று. ஏனோ அன்று எழுந்த ஆசையின் விளைவால் யார் எதை எழுதியிருந்தாலும் ஆவலோடு படிப்பதும் அவர்களை கொண்டாடுவதும் இயல்பாகிப்போனது. அதன் நீட்சிதான் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்தவன் கவிதை எழுதுவான் எனத் தெரிந்ததும் வலியப்போய் அவனோடு நட்பாகி அவனின் நெருங்கிய நண்பனாய் எனைக் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம். அன்றைய விதைதான் இன்றளவும் எழுத்தை கொண்டாட்டமாக பார்க்கச் செய்திடுகிறது. சமீபத்தில் கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பை வாசித்தேன். என்னோடு நெருங்கிக் கிடந்த சில கவிதைகளில் நிகழ்ந்த என் பயணத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன்.

மீன் குழம்பின் ருசிக்கு தன் முதல் புத்தகத்தை சமர்ப்பணம் செய்யும் கதிர்பாரதியின் எளிமையான மனம் எளிமையான கவிமொழியையே பிறப்பித்திருக்கிறது.

அரிதாக நடைபெறும் சில நிகழ்வுகள் தனக்கேயான பொக்கிசங்களைக் கொண்டிருப்பது இயல்பு. அப்படியான பொக்கிசத்தை தரிசிக்கலாம் ‘குடும்பப் புகைப்படம்’ கவிதையில். பெரும்பாலான வீடுகளில் சட்டமிட்டு வரிசையாக புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். எல்லா நாளும் அதை நின்று வேடிக்கை பார்ப்பதில்லை எவரும். என்றாவது பார்க்க புகைப்படத்திலிருக்கும் மாந்தர்கள் அப்புகைப்படம் எடுப்பதற்கான சூழல் அக்கணத்தின் பெருங்கதையென ஏதோவொன்றை சொல்லத் தவிப்பதுபோல் இருக்கும். புகைப்படம் எடுப்பவர், சட்டம் போடுபவர், கண்ணாடி தயாரிப்பவர்கள், வீட்டில் மாட்டிவைப்பதற்கான ஏற்பாடு செய்பவர்கள் என தொழில் சார்ந்த பிழைப்பும் அதில் இருக்கும். அதையெல்லாம் நாம் கொன்றுவிட்டு இப்போ கடவுளாகிவிட்டோம். கனிணியிலும் அலைபேசியிலும் தடவித் தடவி புகைப்படங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறோம்.

துடைத்து துடைத்து பெரும் சுத்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு ஒட்டடைகளைப் பார்க்க பெரும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் கதிர்பாரதி ‘காலாதிகாலத்தின் தூசி’க் கவிதையில் ஒட்டடையை ஒரு மந்திரக்கோலாக்கி நூற்றாண்டகளின் நிழலை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு முக்கிய கவிதை ‘உயிர் பந்தல்’ மீச்சிறு காலமே வாழ எனக்கு நேர்ந்திருந்தாலும் வயலும் வயல் சார்ந்த வாழ்வுக்குமான நாட்களை மழைத்துளிகளாக சேகரிக்கச் செய்தது. பொறுக்குத் தட்டிய விளைநிலம், வெள்ளாமை தின்னும் கால்நடை, விதைப்புக்கால வரப்பு, சுமைதாங்கி மீது வளரும் துயரமென ஒரே கவிதையில் அனுபவ நீர் பாய்ச்ச நிறைய்ய வாய்க்கால்களை வைத்துள்ளார். எவ்வளவுதான் சேந்தினாலும் ஒரு வாய்க்காலில் கூட நீரை ஓட விட முடியாத பெரும் துயர் கணக்க நகர்ந்தேன்.

எனை பாதிக்கும் ஈர்க்கும் பெண்கள் உடன் பிறப்பெடுப்பார்கள் மதுவாகினியாக. அவர்களின் நிழலாய் மனம் தொடர்ந்தபடி இருக்கும். கதிர்பாரதியும் பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் ஆனந்தியோடு...

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் கவிதையின் காட்சியாக்கம் எனை திரும்பத் திரும்ப வாசிக்கச்செய்து தட்டானாக உருமாற்றிக்கொண்டே இருந்தது.

காலத்தை பந்தென அங்கிட்டும் இங்கிட்டுமாக உருட்டி விட்டு தவ்வித் தவ்வி அவைகளை உயிர்ப்பித்து ரசிக்கும் விளையாட்டை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகு. அவர்களோடு நாம் இருக்கையில் நம் வயதை தொலையச் செய்யும் அதிசயமும் உண்டு. துயர்களை ஆறுதல்படுத்த தண்ணீர் ஏந்தி நின்று, உறக்கத்தில் பால்யம் நனைத்து, பக்கம் பக்கமாய் புகார் நிரப்பி, ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் வனவிலங்குகளின் குணாதிசயங்களை போக்கி ஒன்றெயொன்று தழுவி விளையாடச் செய்யும் மந்திரக் குகைக்குள் நுழைத்து பேரதிசயங்களைக் தரிசிக்கச் செய்திடுகிறார் ‘குழந்தைகளும் குழந்தைகள் நிமித்தமும்’ கவிதையில்.

ஒரு குளம் ஏழு குளமாக விரிந்து ஏழுவிதமான வண்ணங்களை காட்டி, ஏழுவிதமான ருசியை உணரச்செய்து மனதில் சில்லிப்பை ஏற்படுத்தின ‘குளத்தில் அலைகின்றன கவிதைகள்’.

வாசிப்பவனின் மனதில் இருக்கும் கடவுளையும் ஏக்கத்தில் விழச்செய்திடுகிறது ‘ஏக்கத்தில் விழுதல்’ கவிதை.

வறுமையும் நிராகரிப்பும் தன்னைச் சுட்டெரிக்க குளிர்ச்சிக்கொள்ள வீழ்ந்து மாண்ட நல்லதங்காள் கிணற்றை நினைவூட்டியது ‘வீட்டை எட்டிப் பார்த்தல்’ கவிதை.

மலைக்குன்றையும் நடுங்கச் செய்யும் வல்லமைகொண்ட கவண்கல்லைத் தூக்கி ‘மலை நடுக்கம்’ கவிதையை பேசும் கதிர்பாரதி மூன்று மச்சலங்காரத்தில் மிகு கிளர்ச்சி அடைந்து நான்காவது மச்சத்திற்காக நாற்றங்கால் விதைத்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என பொய்யுரைக்கிறார்.

முதல் காமத்தின் இரவு விடிந்ததும் போர்த்திய ஆடையில் தீட்டிய சந்தோசக் கரை பார்த்து சுருட்டிய இரவை கக்கத்தில் வைத்துக்கொண்டு கண்களில் காமவிளையாட்டுகளை சமிக்ஞை செய்து கடந்த வண்ணாத்தியின் மகிழ்வோடு மோகப்பரிபூரனி நீயென ரதியின் மடிசாய்ந்து அமைதிகொள்ளச் செய்தது தொகுப்பின் வானவில்லென வீற்றிருக்கும் ‘மோகப்பரிபூரனி நீ’

‘அப்படித்தான் விழுகிறது’ கவிதையில் விழுகின்றன... விழுகிறது... எனும் வார்த்தைகளை தடதடத்து விழச்செய்து பயணம் முடிய அருகிலிருப்பவனின் முகம் மறந்து போகும் நிலை அக்கவிதைக்குமான நிலையாகிப்போனது...

விட்டேத்தியான மனநிலையில் இருப்பவனிடம் காட்டப்படும் பிரியம் அவனால் அம்மனநிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தேநீர் தயாரித்துத் தரும் பிரியத்தால் அரசாங்கத்தை கலைத்துவிடலாம்தான் என நக்கலடித்து கடக்க நினைக்கையில் பிரியம் அம்மனநிலையின் உயிரை பிளேடால் அரிந்து போக்கச்செய்து ஊர்சுற்றி, எதிர்பாரா கணத்தில் முத்தம் பெற்று, உப்பு மூட்டைத் தூக்கி விளையாடி, ஊடலால் கூடல் அரங்கேறி, அழுது, பதற்றப்பட்டு, பரிசளித்து, கொஞ்சுவதிலிருந்து மீள ஈசல் வார்த்தைகள் என வெறுக்கத் துவங்கினாலும் நிழலாய் உள்ளார்ந்த அன்பை ‘என்ன செய்யலாம்’ கவிதை வெளிப்படுத்தத்தான் செய்திருக்கிறது.

செயல்கள்... அச் செயல்கள் சார்ந்த ஒப்புமை, அந்த ஒப்புமை உண்டாக்கும் அற்புதமென கவிதையை ரசித்து ரசித்து வாசிக்க முடிவில் திரண்டு புடைத்திருந்த ரசனையை சிரிப்பாக்கி துப்பாக்கியுள் நிரப்பும் லாவகம் மகா உன்னதம்.. ‘துப்பாக்கிக்குள் நிரப்புகிறது சிரிப்பு’ கவிதையில்.

காமத்தை சிறுநீரில் கழித்து குப்புறப் படுத்துக்கொள்ளும் மகாகவி குறித்த கவிதையாக்கம் தெருக்கூத்திற்காக ராஜா வேஷத்திற்கு அரிதாரம் பூசி ஆடை அணிகலன்களால அலங்கரித்த பின் தன் அழகை தானே ரசித்து ராஜாவாகி கணம் மிளிரும் ஒளி பொருந்திய சூழல் ‘மகாகவி கவிதை’ தலைப்பிலிருக்கும் ஏழு கவிதைகளிலும் பொருந்தியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொகுப்பில் 1,2,3...யென எண்ணிட்டு எழுதியிருக்கும் எல்லா கவிதைகளுமே ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது.

மது, மதுக்கூடம் குறித்து எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளுமே மதுவோடு கலவிகொண்ட மயக்க நிலையிலிருந்து வெளிப்பட்டவையாக இருப்பதால் சிறப்பானவையாகவே இருந்திருக்கின்றன. கதிர்பாரதியின் ‘மதுக்கூடங்களோடு புழங்குதல்’ கவிதையும் அச் சிறப்பை மெருகேற்றியிருக்கிறது தனித்திருப்பவனின் விசும்பலில்... மது, மதுக்கூடங்களைப் பார்க்க, வாசிக்க நேர்கையில் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை மது அருந்த வந்தவர்களும் அவனோடு சேர்ந்து பொறுக்கினார்கள் அவரவர்களின் பால்யத்தையும் என முடித்திருக்கும் யூமா.வாசுகியின் கவிதை இன்னமும் தொடர்ந்து நினைவில் வந்துகொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

‘கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்’ கவிதையைப் போன்று ரசித்து ரசித்து வாசிக்க தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் இருப்பதால் படித்து முடித்தோமென தூக்கிப்போட்டு விடாது என்றாவது மீண்டும் வாசிக்க வேண்டும் எனும் மனநிலையை கொடுக்கும் தொகுப்பாக இருக்கிறது கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்...’ கதிர்பாரதிக்கும் தொகுப்பாக்கிய புதுஎழுத்து மனோன்மணிக்கும் என்றென்றும் எனதன்புகள்...

nantri: malaigal.com

Sunday, March 24, 2013

பாறைகளின் துயர்களை ஒழுக்கிடும் நீர்த்தடங்கள்...
-ந.பெரியசாமி


வண்ணச்சிதைவு மெனக்கிடலைக் கோரும் கவிதைகள்...

ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்குமாக, ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமாக சிரத்தையான மொழித்தேர்வு வாசகனிடம் கூடுதல் கவனத்தை கோருகிறது. கவிதைகளுக்கும் தலைப்புக்குமான பிணைப்பு  ரத்த ஓட்டம்  சீராக உள்ள நரம்பாகத்தானிருக்கு.

தொகுப்பில் இருக்கும் கவிதைகளின் வரிசையை காலத்திற்குமான வரிசையாகக் கொண்டால் ஆச்சரியாமாக இருக்கிறது. முன்னதுகளில் கெட்டிப்பட்ட இறுக்கமும் பிற்பகுதியில் இளகிய தன்மையோடும் மொழி இருக்கிறது. பெரும்பாலான தொகுப்புகளில் இத்தன்மை மாறுபட்டிருக்கும்.

எல்லையற்ற விரிந்த கடலின் வயிற்றைக் கண்டிருக்கும் ‘மறுபடியும்’ கவிதையில்
வயிற்றுக்கடலில்
சூரியன்...

அழகு கவிதையில்
அழகு யாவும் தொலையக்
கக்கூஸ் குழியினுள்
வீழ்ந்திருக்குமோ
விரையும் என்
வியப்பு நிலா...

கைவிடப்பட்ட பருவம் கவிதையில்
சூரியன் தூக்கிப்போட்ட
வீட்டின் தொலைதூர ஜன்னலொன்று...

தீராப்பாடல் கவிதையில்
பல வண்ணங்களில் ஒளிர்விக்கிறது
ஒற்றைச் சொல்... என இப்படியாக தொகுப்பில் தாகமெடுக்கும் சூழல் நிறைய்ய...

மரம் கவிதையில் பலமற்ற எளிய பப்பாளி மரம் ஊடாக பலமான மற்ற மரங்களின் பிரம்மாண்டத்தை கட்டியெழுப்பி பொதுப்புத்தியில் மரம் மாதிரி சும்மா நின்னுகிட்டுயிருக்காதே எனும் வசவை கேலி செய்து... கொடிகளின் வண்ணங்களின் மீது கொட்டிவைத்திருக்கும் எளிய மக்களின் நம்பிக்கையை செப்டிக் டேங்கின் காற்றுப்போக்கியின் வழியே  உலவவிடுகிறார் அவர்களுக்கு எட்டாத தொலைவிலிருக்கும் அதிகாரங்கள் என்றாவது திரும்பி பார்க்கச்செய்ய...

பைப்புகளில் சொட்டும் நீர் பார்த்துக் கழியும் சமகாலத்தின் இழப்புகளின் எண்ணிக்கையை கூடுதலாக்கி வாலியில்  நீர் நிறைத்து வீடு நனைத்த அதிகாலையின் நாட்களை ஊற்றெடுக்கச் செய்தது ‘விழிப்படையும் கோணம்’ கவிதை.

அவரவருக்கான உன்னதங்கள் ஏதோவொன்றில் கிடைக்கத்தான் செய்கிறது. எழுதி முடிக்கப்பட்ட கவிதை ஒருவருக்கு மகா உன்னதமெனில் வேறொருவருக்கு அடிவானத்தில் ரகசியமாய் கண்டடையும் வானவில் மகா உன்னதம்தான். கவிதை எழுதும் செயலைவிடவும் மலம் அள்ளும் செயல் எவ்விதத்திலும் குறைச்சலானதல்ல எனும் சி.மணியின் கவிதை வரிகளை நினைவூட்டியது ‘ஒற்றை உறுப்பு’ கவிதை.

மரத்திலிருந்து தவழ்ந்து பூமியை அடையும் காய்ந்த இலையென வெகு எளிதாக ஆரம்பித்து பின் கண்களை பிதுக்கி நாக்கை தொங்கவிட்டு ஒரு தற்கொலையை நிகழ்த்திவிடுகிறது ‘கடுங்குளிர் இரவின் மிக நீண்ட தனிமை’ கவிதை.

ஒன்றைப்பற்றி சொல்லிச்செல்ல அவ்விசயத்தில் நேரடியாக பயணிக்காமல் வேறொன்றின் மூலம் வெளிப்படுத்தும் அழகு சாகிப்கிரானின் பெரும்பாலான கவிதைகளில். ‘மரங்களின் கரும் பச்சை’ கவிதையில் பின்/ஒரு கொக்கு பசியாறி விடுகிறது என நிறைவேறிய காமத்தை சொல்லப்பட்டதைப்போன்று இருந்தாலும் மீண்டும் வாசிக்க  நிறைவேறா காமம் நிழலாய் படிந்துகிடப்பதை காணமுடிகிறது. இதன் நீட்சியாய்
அவ்வளவு நல்லதானாலு
மதன் கோரைப்பற்களுள்
ஒன்று பாதிதான் இருக்கிறது
எதைக் கடித்திருக்கும்? என முடியும் ‘அன்பின் கோரைப்பற்கள்’ கவிதையில்
பூனைகளின் காமத்தை கூற மன்மதனோட ஒப்பிட கவிதைகளின் வார்த்தைகளை உடைத்து குறிப்பால் உணர்த்தி செல்கிறார்.

பெரும் மதக்கலவரச் சூழலானாலும் ஒத்திப்போடுவதற்கு வாய்ப்பற்ற வீடு திரும்ப வேண்டிய  காரணத்தை மறுத்திட இயலாதவாறு இருப்பதை ‘இரண்டாவது கண்ணாடியும் உடைந்துள்ளது’ கவிதை அதற்கான நியாயத்தோடு வெளிப்படையாகவே பேசி நம் சந்தேகங்களையும் கழுவிவிடுகிறது. இக்கவிதையின் தொடர்ச்சியாகவோ அல்லது நினைவூட்டும்படியாகவோ இருக்கிறது ‘சாலையோரங்களில் தென்படும் வயோதிகரும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்’ கவிதை. ஒரு மன்னர் நாட்டிலுள்ள வயோதிகர்களை வெளியேற்ற உத்திரவிட ஒருவன் மட்டும் பாசத்தால் அதிகாரத்தின் கண்களை மறைக்க, பின் மன்னருக்கு ஏற்படும் சிக்கலை மறைக்கப்பட்ட பெரியவரின் ஆலோசனையால் விடுவிக்கப்பட தன் தவற்றை உணரும் மன்னனின் கதையை சிறுவயதிலேயே படித்தும் கேட்டும் வளர்ந்தபோதும் தன் வாலிப மனத்தின் தடித்தனத்தால் கண்டுகொள்ளப்படாது வயோதிகர்களை வீட்டின் மூலையிலோ காப்பகத்திலோ ஒதக்கித் தள்ளும் மனோபாவம் பெருத்த சூழலில் அவர்களோடு என்றைக்குமாக துணையிருப்பது பூனையோ, நாயோதானென எல்லோருக்குமான கவலையாக மாற்றம் கொள்ளச் செய்கிறார்.
பூவை
காயை
கனியை
பிறகொரு
வெறுமையையும்
காய்க்கிற தாவரம்
கல்மரம் எனப்படுகிறது
என்றைக்குமான..

மது உன்னை அருந்தி பின் மது வருந்தச் செய்து வேறு வேரானவர்களின் கூட்டு விளையாட்டிற்கு நாம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை போதனைகளோ அறிவுறுத்தலோ இன்றி நமக்கு நாமே பின்னிக்கொண்டிருக்கும் வலையை காட்சிப்படுத்தியுள்ளார் ‘மறைந்திருக்கும் பூதம்’ கவிதையில்.

பாறைகளில் படிந்து கிடக்கும் நீர்தடங்களின் துயர்களை நம் காலத்திற்கு பின்னும் காயாத ஈரத்தோடு இருக்கச் செய்யும் ஈழத்தில் இழப்புகளின் வலி... ‘குமரிக்கோடும் தாமாபன்னியும்’, ‘கொல்லனின் மகள்’ கவிதைகளில் நம் வாழும் காலத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும்  நிகழப்போகும் பெரும் துயரை சாட்சியமாக்கியுள்ளார்.

புழு, பூனை, கிளி, குயில், கொக்கு, நாயென எளிய பட்சிகளோடு இணைந்து செல்லும் வாழ்வு...

சிலுவையிலிருந்து சொட்டும் குருதி துடைக்க தேவகுமாரனுக்கு துண்டை நீட்டும் கை...

கக்கூஸில் தொங்கும் குறியை படம் எடுக்கும் வரை நீளும் அதிகாரம்...

வெளியெங்கும் யோனிகளை மிதக்கவிட்டு சுயமைதுனக்காரர்களை பெருக்கம் செய்யும் இணையம்...

எதுவொன்றையும் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கும் அலைபேசி...

நண்பனோடு உரையாடலற்றுப்போன வலி மிகுந்த நாட்களுக்கான எஸ் எம் எஸ் மருந்துகள்...

உலகின் அத்தனை அழகையும் வண்ணப் பொடியாக்கி அரிதாரம் பூசி நடுசாமத்தில் பார்வையாளர்களை அதிரச் செய்த கனகு எனும் பேரழகியின்  மீதான காதல்...

மாண்டுபோன அத்தனை எழுத்துக்களையும் தனக்கான இடங்களில் தோன்றச் செய்து அவைகளை கோர்த்துக் கோர்த்து சில வாக்கியங்களை கட்டமைக்கும் வித்தையைத் தவிர வேறொன்றும் அறியேன் என ஒப்புக்கொள்ளும் எளிமையென சொல்லிக்கொள்ள நிறைய்யவே இருக்கும் சாகிப்கிரானின் கவிதை உலகுள்...

நன்றி : கொம்பு


மருதம் திரிந்த பாலை
1
இரு கண்களும்
பிடிவாதமாக உறக்கம்கொள்ள
என் சிருஷ்டியின் உலகில்
பச்சையங்களை விதைத்துக்
கொண்டிருப்பவளோடு
மகரந்தங்களை ஒட்டவைக்க
சட்டென முளைக்கத் துவங்கின
மேலும் இரு கண்கள்...
2.
நந்தவனமானது வானம்
நட்சத்திரங்கள் பூக்களாக
பறித்துக் கொண்டிருந்தவளின­்
நிறைந்த கூடையிலிருந்து வழிந்தன
அவளின் தீண்டுதலை சுகித்த இன்பத்தில்
விண்மீன்களாகிக் கொண்டிருந்தார்கள்...
3.
மருதம் திரிந்த பாலையில் பயணித்தேன்
கணம் சில்லிட பிறப்பெடுத்தது ஆறு
துளி அருந்த வழியற்றிருக்க
துளிர்த்த வேர்வையை நாவிலிட்டேன்
அடங்கா தாகம்
உடலில் பூத்தது உப்பாய்
நினைவில் ஆறு பெருக்கெடுத்தபடி

Thursday, March 14, 2013

ந.பெரியசாமி கவிதைகள்

நிழல் சுவை

உப்பு நீரில் ஊறவைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்தை ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடுமாடு கோழி பூனையென
படையெடுப்புகள்
எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் நிழலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்...
*

அடையாளக் கோடுகள்

டிசம்பர் ஆறின் அதிகாலையில்
பனி புகைத்த வெண்மையின் ஈரம்
ரோமத் துளைகளின் உள் கசிந்து
மூதாதையரின் கரு அணு தொடங்கி
படிந்த கழிவுகளை ஊறச் செய்து
வான் வழிந்த வெப்பத்தால் வெளியேற்றிய
உப்பின் படிமங்களாக
உடலில் நிறைந்திருக்கும் கோடுகளை
மறைத்துக் காக்கும் ஆடைகளற்றி
குடம் நீரில் கழுவி
கழுவி வெளியேறுகிறேன்.

நன்றி: வல்லினம்.காம்

Wednesday, March 13, 2013


nantri: s.prabhakharan

ந.பெரியசாமியின் ' மதுவாகினி' கவிதைத் தொகுப்பினை முன்வைத்து...


வாழ்வியங்குதலின் பொருட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமிய மனிதனின்
அவலங்களையும்,ஆதங்கத்தையும்...
 தீரவே தீராத காதலையும், முடிவுறா காமத்தையும்
முன் வைக்கிறாள்...மதுவாகினி....

மெய் வருத்தம்
  
வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு....
என்ன செய்ய
கண்ணசந்து விடுகிறேன்
 பக்.14

யாரோ யாருக்காகவோ எழுதியதென
கடந்து போகாது
சிறு சலனப்படின் போதுமெனக்கு.
 பக்.37*


கிராமிய மணங்கமழும் நினைவுகளை  கருப்பு சிலேட்டில்
 குச்சியால்  எழுதிப் பார்க்கும்
மனோபாவத்தில் கவிதை வரிகள் பதிகின்றன..

 அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக... எதிராக...
[இசை யின் கவிதை ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது...)

 குடும்ப நாய்கள்
அநீதிக்கு எதிராக
தினமும் இரண்டுமுறை
குரைத்து விடுகின்றன...
  
அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக...
  
ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு...
 பக்.19*
எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் எதிர்க்குரல் கொடுக்கிறார் கவிஞர்.


வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும் மாய உலகத்தில் மனம் நிறைந்த 
குதூகலத்துடன்
 பவனி வருகிறார்.எனக்கு இத்தொகுப்பில் சிறப்பான படைப்பாக..
நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்
பக்.44

கொழுத்துக் கிடக்கும் மேய்ச்சல் நிலத்தில் 
பதற பதற தின்று விட்டு...
மரத்தடியில்
அமர்ந்து நிதானமாக அசைபோடும்
 மாட்டைப்போல்
மது வாகினியை
நிதானித்து உள்வாங்கினால்... ரசிக்கலாம்

சராசரி வாசக மனதுக்கு வேலை வைக்கும் வார்த்தை ப்ரயோகங்கள், மதுவாகினியின் 
பலமாகவும் அதேசமயம் பலவீனமாகவும் உள்ளன.

[மதுவாகினி.....ரூ.70/- அகநாழிகை பதிப்பகம்.]