Monday, March 26, 2012

கொன்றை பூக்கள் உதிரத் துவங்கின...


தன்னில் பயணித்த நீரோடைகளின்
தடயங்களோடிருந்த மணல்பரப்பில்
திரண்டிருந்த ஆடுகளோடு உரையாடினார்
சிலுவையில் அறையப்பட வேண்டியவன்தான்
பாவிகளை ரட்சித்து
பாவமூட்டையின் சுமைதாங்கி நின்றேன்
என் வழித்தடங்கள் புனிதமாக்கப்பட
தேர்ந்த மேய்ப்பாளனானேன்
அப்பங்களை சகலருக்கும் பகிர்ந்து
தொடுதலில் சுகப்படுத்தும்
சிகிச்சை நிபுணன்தான்
மனக்கசப்பும் வருத்தமுமின்றியே சுமக்கிறேன்
எனது ஜனன நாளில் அவதரித்து
என்பொருட்டு பலியான சிசுக்களுக்காகவென்றார்
மேலிருந்து உதிரத் துவங்கின கொன்றை பூக்கள்...
நன்றி: திண்ணை

Sunday, March 18, 2012

கூந்தல்

உடல் நொறுங்கி சரிய
சபை அதிர்ந்தது
சூதாடி தலைதொங்கியவன்களின்
முகம் உமிழ்ந்த எச்சிலால்

சபதம் நிறைவு கொள்ள

பற்றி இழுத்தவனின் தொடை ரத்தம்
பூசி முடிந்த கூந்தலுள்
ஆதிக்க அழுகளின் வீச்சம் பெருக
நீராடி கேசம் நீவிய
துரோபதையை பிறப்பித்தது

குளித்து வந்த மதுவாகினியின்

கூந்தலில் வடிந்த நீர்த்துளிகள்... 

nantri:Thinnai

Friday, March 16, 2012

எனதன்பு மதுவாகினிக்கு...


இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி
உலக அன்பை கணவனிடம்
செலுத்திக்கொண்டிருக்கக் கூடும்
அப்படித்தான் வாழமுடியும் உன்னால்
நமக்கான நாட்களில் கூட
பேரன்பின் உருவாகத்தான் நடமாடினாய்
வகுப்பறையில் நிகழ்த்திய
துண்டுசீட்டு உரையாடல்
அல்லி பறித்த அந்தி
வெல்லமிட்டுத் தின்ற அரிசி
சந்திப்புக்கான சங்கேத மொழி
உனை அலங்கரித்த
என் திருட்டு ரோஜாக்கள்
ஒற்றை கோணியின் கீழ்நடந்த மழைநாள்
தாவனியில் சிக்குண்ட மீன்கள்
ஈச்சம் சோறுதிங்க
காடலைந்த காலங்கள்
போட்டியிட்டு ஆற்றில்
ஊற்றுபறிக்க தெளிந்த நீர்
பெயர்களின் முன் எழுத்தை
இணைத்தெழுதிய பொழுதுகள்
பொய்க் கோபங்களால்
பிணங்கிக் கிடந்த நாட்கள்
உயிர்ப்போடுதான் இன்றும்...

சிறு சலனப்படின் போதுமெனக்கு

யாருக்காகவோ எழுதியதென கடந்து போகாது.
nantri:punnagai





Sunday, March 4, 2012

கை நிறைய்ய முத்தங்களோடு...


மூதாதைகளின் திரேகம் வழிந்த வியர்வையும்
பரிவும் படர்ந்த மண் அள்ளி
கோவிலின் கலசங்களுள்
தப்பிக்கிடந்த விதை பொறுக்கி
கனவை விதைத்தேன்
அன்பின் நீர் வார்த்து
காதலின் கதையை சொல்லிச்சொல்லி
எவரும் தீண்டிடாது நெடிதாய் வளர்ந்த மரம்
பிரசவித்த முதல் பூவை
கையேந்தி நாடலைந்தேன்
கண்டடையாது போக காடடைந்தேன்
கள்ளி நிறைந்த வனத்துள்
கவனிப்பற்றுக் கிடந்த
கிராம தேவதையின் கோயிலுள்
சிலையாக மதுவாகினியைக் கண்டேன்
காத்திருப்பின் நாட்களை
கணம் சிலிர்த்து
வேப்பம் பூக்களால் நனைத்து
பறவையாகி இசைத்தாள்
மிச்சமிருக்கும் இதழ்களிலும்
வசீகரித்த பூவை தலைச்சூடி
மௌனித்துக் கிடந்து
மீண்டும் திரியத் துவங்கினேன்
கனவை வடிவமாக்கிய கரம் பற்றிட
கை நிறைய்ய முத்தங்களோடு...

nantri : THEERANATHI