Friday, September 29, 2023

நன்றி: உதிரிகள்

 பொழுது

*

காலங்கள் குறித்து 
கவலை கொள்ளான்
பழக 
பாலும் புளிப்பதான
நம்பிக்கை கொண்டவன்
நல்ல நாள் தனித்தில்லை
எல்லா நாளும் நமக்கானதென
கடுகளவு 
மிளகளவு
நீண்டிருக்க
சற்றே கூடுதலாக்கி
ஒரு பிடி பகலவனை
உண்ணத் தொடங்கினான்.


மழை

*
வல்லமையை வளர்த்துக் கொண்டவன்
பரிசோதிக்கக் காலம் வந்தது
நள்ளிரவு என்பதால்
சாட்சிகள் இல்லை
தன்னை நனைத்திடாது
பெய்யச் செய்தான் 
ஒதுங்கி.


பனி
*

கதவு சன்னல்களை 
அறைந்து சாத்தி
சிறு சந்தில் 
துணி வைத்து அடைத்து
போர்வைக்குள் ஒடுங்கிக் கிடக்கும்
எல்லோரையும் ஏளனமாகப் பார்த்து
ஏதுமாற்று உறங்கப் போனவன்
ஆதி சினேகனாக
அடர்வனத்து கனவில்
நித்திரை கொண்டான்.

ஆறு
*

முயற்சிகள் பலன்
அற்றுப் போவதை ரசித்து
இப்படித்தான் என
சொல்லில் காட்சிபடுத்தி
தன் உடலை தக்கையாக்கி
மிதந்தவளை 
ஆறு தாய்மையோடு
தாலாட்டிக்கொண்டிருக்க
வானத்தின் ஒற்றைக் கண்
உக்கிரம் அடைகிறது.

Monday, September 11, 2023

அகப்பிளவு

 அகப்பிளவு- ந. பெரியசாமி. 

ஓர் அறிமுகம். 


சமீபத்தில் மிகவும் பரவலாக பள்ளி மாணவர்களிடையே சென்று சேர்ந்து கொண்டாடப்பட்ட கவிதை தொகுப்பு “கடைசி பெஞ்ச்”. இளையோருக்கான இத்தொகுப்பிலிருந்து ந. பெரியசாமி நகர்ந்து தற்போது வந்து சேர்ந்திருக்கும் தளம் முற்றிலும் வேறானது. அந்தரங்கமானது. 


காதல் - காமம் இவற்றிற்கிடையேயான மெல்லிய கோட்டை பற்றியபடி தலைவன் தலைவி இடையேயான ஊடலைச் சொல்லும் கவிதைகள் சற்றே ஓர் வார்த்தை பிசகினாலும் வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டு சரிந்திடும் அபாயமுள்ளது.  ந. பெரியசாமி லாவகமாக அதனை தாண்டி தான் சொல்ல வந்ததை அழகாக வாசகனுக்கு கடத்தியுள்ளார். 

சங்க பாடல்களில் தலைவன் தலைவிக்கிடையேயான ஊடலை சொல்லும் பல பாடல்களை நாம் அறிவோம். பெரும்பாலும் அவர்களுக்குடையே தோழி மிக முக்கிய பங்கு வகிப்பார் . அவரின் கூற்றாகவே பாடல்கள் அமையும். நவீன யுகத்தில் தோழியின் இடம் தேவையற்றதாகிவிட்டது. நேரடி கூற்றாகவே கவிதைகள் படைக்கப்படுகின்றன. 


இத்தொகுப்பில் “அந்தரங்க நிலா”, “ தாப ப்பித்து” என இருபகுதிகளாக உள்ள பெரும்பாலான கவிதைகள் தலைவன் கூற்று, தலைவிகூற்றாகவும் சில இருபாலர்கூற்றாகவும் உள்ளது. 

தலைவன் தலைவி உறவு என்றாலே பசலைக்கு தவிர்க்க இயலாத இடமுண்டு இல்லையா?? இங்கு அது எப்படி படர்ந்துள்ளது என பார்க்கலாம்.


“பின்னலிட்ட சடையெனப்

பிணைந்து கிடக்கையில்

துவாரம் புகும் நூலென

காற்றின் குளிர்மையை

உயிர் உணரத் துவங்க

பசலை பூக்கும் எனதுடல்

வெப்பத்தினால் வதங்கும்

அந்திப் பூவிதழ்களாக

அடைந்திடும் மாற்றம்

அதற்குள் கொடியோனென

சுடுசொல் விழுங்கும் முன்

ஊரார்க்கு உணர்த்திடு நெஞ்சே

மரம் விலக்கும் இலையல்ல

மறைந்து தாங்கும் வேர்களவன்” 


மரம்…..வேர்களவன் என்ன பிரமாதமான வரிகள். 

 

மற்றொன்று

“அல்லவை விழுமென

அறிந்து கொண்ட நொடியில்

சட்டென்று இமை மூடி

கண்களைக் காக்கும் அனிச்சை

பிரிவு கொள்ளும் நினைப்பே

பசலை பூக்கும் எனதுடல்

அறிந்தும் அவன் பிரிவை

ஒப்புக் கொண்டதேனோ

அவனுள் ஏன் புகுந்தனவோ

கள்ளமிக்க சொற்கள்?


..

கூடி இருக்கையில் கூடலின் இன்பம் அ்லாதியானது. “புங்கை அளித்த நிழல் சுவை

நித்திரையைத் தருவித்தது

மீன்கள் கால்களை மொய்க்க

விழித்தவன் விக்கித்தான்

தவளையால்

விழுங்கப்பட்டிருப்பதை அறிந்து

நீர் சூழ்ந்த பாறையில் அமர்ந்திருந்தவள்

அறிவேன் வருவாயனெ

நீர் தெளித்து விளையாடினாள்

ஆடை கலப்பற்ற உடலாகி

மீன்களோடு மீன்களானோம்

வெட்கத்தில் சூரியன்

தன்னை ஒளித்துக் கொண்டது. 

… 

வெல்லக்கட்டிகளைச் சுமந்தலையும் எறும்புகள்” என்ற நீள் கவிதை தொட்டதை  மீள மீளவும் தொடுவாய் என்பதை அழகாக உணர்த்திடும் கவிதை. இந்த வகையில் காம பிரிவாற்றாமை, பொல்லா வறுமுலை இரண்டும் அடங்கும்.  நீண்ட இடைவெளிக்குப்பின் தளர்ந்து வரும் தலைவனுக்கு எதை அளித்தால் அவன் வீறு கொள்வான் என அறிந்திருக்கும் தலைவி தன்னை ஒப்படைப்பதை சொல்லும்  “பிரிவு “ கவிதை தொகுப்பின் முக்கிய கவிதைகளில் ஒன்று. “ஆடி” இன்னுமொரு சிறப்பான கவிதை 

புது வரவு

அறையுள் ஆளுயரக் கண்ணாடி

அடிக்கரும்பைத் தின்றவளானாள்

…..என தொடங்கி சொல்லிச்  செல்லும் கவிதை இப்படி முடிகிறது

ஊர்க்கோடி கோவிலின் முன்

நின்று கிடக்கும் தேரில்

பொதிந்து கிடக்கும் சிற்பங்கள்

ஒன்றன்பின் ஒன்றாக  “”””


தேரை ரசித்தவர்கள் இக் கவிதையை அதிகம் உணர்வார்கள். 

பல கவிதைகளின் தலைப்புகள் சங்க பாடல் வரிகளிலிருந்து எடுத்தாண்டுள்ளதும் அக்கவிதைகள் அதற்கு நியாயம் செய்துள்ளதும் முக்கியம்

உவந்துறைவர் உள்ளத்துள்

வாலெயிறு ஊறிய நீர்

மடலேறுதல்

இருநோக்கு இவளுன்கண்

…..

திரெளபதி எனும் கவிதை முற்றிலும் வேறு கோணத்தில் அமைந்த கவிதை. 

இக்கவிதைகளை முழுவதும் ரசிக்க கூட்டத்தில் வாய்விட்டு வாசிப்பதைவிட தனியாக ஏகாந்தமான நிலையில் வாசிப்பது அக்கணத்தை மேலும் அழகாக்கும். அத்தகைய personal poetry இத்தொகுப்பு. 

கவிஞர் ந. பெரியசாமிக்கு  வாழ்த்துகள். அழகான கோட்டோவியங்களுடன் இந்த தொகுப்புனை பதிப்பித்த சொற்கள் கே.சி. செந்தில்குமாருக்கு பாரட்டுகளும் வாழ்த்துகளும்.


மகிழ்ச்சியும் நன்றியும் : Munavar Khan

Friday, September 8, 2023

நன்றி: நுட்பம்

 

வலிகளை வாங்கிப்போகும் கடலலைகள்

ந.பெரியசாமி.

*

 

நம்முள் துளிர்த்த செடி தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்க வேண்டும். வளராதுபோக பிடிங்கி எறிந்து மாற்றுச் செடியை துளிர்க்கச் செய்திடுவோம்.  வளர்வது தானே எல்லாவற்றின் பண்பு. வேல் கண்ணனும் தான் இயங்கும் கவிதை தளத்தில் தொடர்ந்து இயங்கியபடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மௌனத்தை குறியீடாக கொண்டு தளர்வான மொழிநடையில் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்ட "இசைக்காத இசை குறிப்புகள்" நூலில் தொடங்கி, நாம் அன்றாடங்களில் எதிர்கொள்ளும் வாழ்வியல் கூறுகளை அதனதன் பண்போடு தன் மொழியால் விசாலப்படுத்திய தன்மைகளைக் கொண்ட கவிதைகளோடு வந்த " கனவுகள் மேயும் பாம்பு நிலம்" பலரின் கவனிப்பை பெற்றுத்தர, மூன்றாவது கவிதை தொகுப்பாக "லிங்க விரல்" வந்துள்ளது. பிசிறுகள் இல்லாது நேர்த்தியான சொல்லல் முறையில் நம் காலத்தின் நிகழ்வுகளில் நம்மை இருக்கச் செய்கின்றன கவிதைகள்.

 

நம்மிடம் அற்புத விளக்கு ஒன்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோருக்கும் அவர்கள் விரும்புவதை கொடுத்திடலாமே. அவ்வாறு கொடுக்க முடியாத ஏக்கம் தேங்கிக் கிடக்கும் நீராக இருந்துகொண்டே இருக்கும். ஆனால் அற்புத விளக்கும் உண்மையற்றதுதானே. உண்மையற்ற ஒன்றைக் கொண்டு உண்மையை திருப்திபடுத்துதில் இருக்கும் சுவாரஸ்யம் எவ்வளவு அலாதியானது.  நம்மை எப்படியெல்லாம் மகிழ்விக்கக் கூடியது. நாமும் நம் கவிதைகளை அற்புத விளக்காக்குவோம்.  கவிதைகளை அற்புத விளக்கென நம்பினால்  வேல் கண்ணனின் லிங்க விரல்  தொகுப்பிலிருக்கும் முதலிரண்டு கவிதைகளில் வெளிப்படும் பெருமூச்சு  காணாமல்போகியிருக்கும்.

 

காலம் தன் நகர்வை தொடர்ந்துகொண்டு இருந்தபோதும் அவரவருக்கும் உயிர்ப்பான சில நினைவுகளை விட்டுச்செல்ல மறந்ததில்லை.  அது நமக்கு ஊன்று கோலாக மாறி நம்மின் இயக்கத்தை உறுதிபடுத்திவிடுகிறது. அதுவும் பால்யத்தின் நினைவுகள் தரும் ஈரம் பட்டுப்போன செடிகளைக்கூட உயிர்ப்பிக்கக் கூடியதாக இருக்கிறது.

…......

.............

தவறவிட்ட

கோலிக் குண்டுகள்

தோட்டத்து அரும்புகள்

அம்மாவின் கடுங் காப்பி

ஆச்சியின் சீலை

சரோஜ் நாராயணஸ்வாமி

ஆண் பெண் மரப்பாச்சி

ஆலமரத் தூளி

பீங்கான் ஜாடி உப்பு ஊறுகாய்

பழுப்பு ஓலைச்சுவடி

மதியத்தில் எப்பவாவது கேட்கும் மிதிவண்டி சத்தம்....

,.............

.................

இப்படியாக அவரவருக்கான வாழ்வு இருக்கத்தான் செய்கிறது.

 

இதுதான் இதன் இயல்பு, இப்படித்தான் எல்லாம் நிகழும் என்பதை மாற்றி எதையும் சாத்தியப்படுத்தும் தன்மையை அலைபேசி உருவாக்கித் தந்துகொண்டே இருக்கிறது. பழுத்த இலைகளை மட்டுமே மரங்கள் உதிர்க்கும், ஆனால் அலைபேசி திரையில் எல்லா இலைகளும் உதிர்க்கும் மேஜிக் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்த மேஜிக் நம் மனப்போக்கை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை காட்சிபடுத்துவதாக இருக்கிறது.

 

லிங்க விரல்

 

உதிரிலைகளின் நடுவே

பழுக்கத் தொடங்குகிறது

ஒன்று

 

திறக்கப்படாத

அந்தக் குறுஞ் செய்தி

ஒரு வேளை

'பிரத்யாக அழைப்பொலி உள்ளவரிடமிருந்து....'

என்று

மனப்பட்சி நமைக்கிறது

' தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம்'

சமாதான நிழலாடுகிறது

அவ்வப்போது

பதிவுக் குரலைக் கேட்கிறேன்

என் பேச்சினைக் குறைத்திருக்கலாம்

காணொளி அழைப்பில்

நீ தவிர்த்த பார்வை

குறுந்தகவல்கள்

தரவிறக்க சுயமிகள்

தடயமின்றி அழிக்கவும்

தேய்ந்தலைகிறது

லிங்க விரல்

இன்னும்...

 

ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் லிங்கம் சார்ந்த தத்துவார்த்தங்களோடு அலைபேசியையும் இணைத்துப் பார்க்கச் செய்கிறது கவிதை. கவிதையின் முதல் பத்தி தவறான புரிதலையும் கொடுக்கக் கூடிய தன்மையிலும் இருப்பதால், இன்னும் கொஞ்சம் கூடுதல் உழைப்பை செலுத்தியிருக்கலாம்.

 

நண்பர்களோடு உரையாடியபடி இருக்கும்போது விக்கல் ஏற்பட்டால் எதிர்பாராத கணத்தில் அதிர்ச்சி உண்டாக்க எதையாவது சொல்லும்போது அதன் விளைவால் விக்கல் நின்றுபோவதுண்டு. வாசிப்பின்போது உண்டாகும் விக்கலை நிறுத்தும் சொல்லாடல்களாக ' பாறை உடைத்த தேரை', ' விண்வெளி விழுங்கிய நிலா'  ' முது நிழல்' போன்று தொகுப்பில் நிறைய ரசிக்கத்தக்க தடுப்பான்கள் உண்டு.

 

"எப்போதோ ஓடிய நதியின் குளுமை

என் கண்ணத்தில் நான் அழுத்திக் கொண்டிருக்கும்

கூழாங்கல்லில் தங்கியிருக்கிறது

இருத்தல்

அதனின் பொருட்டே நீள்கிறது

தேவை"

 

 

சொற்கள் பிணைவு கொள்ளும் தன்மைக்கேற்ப கவிதை நம்முள் ரசவாதத்தை உருவாக்கும். கூழாங்கல், குளுமை  எனும் இச்சொற்கள் கவிதையாற்றில் ஒடி பிணைவுகொள்ள நம்முள் ஒரு நதியை பிறந்தோடச் செய்திடுகிறது. ' கூழாங்கல்லில் தங்கியிருக்கிறது இருத்தல்' எனுமிடத்திலே கவிதை முற்று கொள்கிறது. பின்னிருக்கும் வரிகளை எடுத்திருக்கலாம் அல்லது கவிதையின் தொடக்கத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் எனப்படுகிறதெனக்கு.

 

 

சுள்ளிகளைச் சேகரிக்க

வெறுங்காலுடன்

மலையேறிக் கொண்டிருக்கிறது

முது நிழல்

என முடிவுறும் " மலை தரிசனம்" கவிதையில் ஐந்து அனுபவங்கள் காட்சிபடுத்தப்படுத்தப்பட்டிருப்பதில் வேல்கண்ணனின் மொழியில் தொடர் பயணிப்பின் முதிர்ச்சியை கண்டடைய முடிகிறது.

 

பொருள்காட்சி வளாகத்துள் ஏதேனும் ஒரு மூலையில் மனித தலை மீன் உடல் என  வசீகரிப்பு மிக்க விளம்பரங்களோடு இருக்கும் மேஜிக் கூடாரம்போல் தொகுப்பில் எல்லை வீரன் தலைப்பிட்ட கவிதையுள்  தங்கி வியந்தபடி பயணிப்பை தொடரச் செய்கிறார். இயல்புக்கும், இயல்பற்றதுக்குமான மனச்சித்திரங்களை அடுக்கிக் கொள்ளச் செய்கின்றன கவிதைகள்.

 

திண்ம நிலை நீர்ம நிலையை அடையாது திண்மத்திலிருந்து ஆவியாகுதல் பண்பைக் குறிக்கும் பதங்கமாதல் எனும் அறிவியல் விதியை கவிதைக்குள் முயற்சித்து பார்த்துள்ளார். பேருந்து ஒன்றில் விற்கப்படும் வெள்ளரி பேருந்தில் பயணிப்போரை குளிர்விக்கும் கணத்தை  ' பதங்கமாதல்' கவிதையில் காட்சிபடுத்தியுள்ளார்.

 

தொடரும்

*

என் கிளை மீது

வந்தமர்ந்த பறவை

இளைப்பாறிய பின் பறக்கிறது

மீண்டும் இளைப்பாற அமரும் வரை

பின் தொடர்ந்து செல்லும்

என் கிளை.

 

இக்கவிதையில் கிளை என்பதை மனம் எனக் கொள்ளலாம். நுண்ணுனர்வின் மெல்லிய பின்னலே மனம். அது எளிதில் நிறைவு கொள்ளாது. அரிதினும் அரிதினைக்கூட மீண்டும் கைக்கொள்ள ஆசைகொண்டபடியே இருக்கும். மனம் குறித்த தத்துவார்த்தங்களை மீண்டும் அசைபோடவும், அதன் சுழலுள் இருந்துகொண்டிருக்கவும் செய்கிற இக்கவிதையைப் போன்று தொகுப்பில் நிறைய்ய கவிதைகளை காணமுடிகிறது. தனித்திருப்பவனின் மனப்போக்கின் வெளிப்பாடுகளே 'லிங்க விரல்' தொகுப்பின் மதிப்பீடாக சொல்லவும் ஏதுவாக இருக்கின்றன கவிதைகள்.

 

நம்மை நாம் உணரும் தருணங்கள் விசித்திரமானவை. எக் கணத்திலும் அது நிகழக் கூடும். சில செயல்கள் உடன் போதிமரமாகி நமக்கு ஞானத்தைக் கடத்தக்கூடும். சிலருடனான உரையாடலில், குழந்தைகளுடனான பொழுதில், கேட்கும் பாடலில், வாசிப்பில், பயணத்தில் என அதன் பட்டியல் நீண்டிருந்த போதிலும் கவிதைகள் சட்டென நம்மை வேறொன்றாக உருமாற்றும் தன்னை கொண்டவை. என்றாவது நமக்கு நிகழ்ந்ததாக இருக்கும் கவிதையின் வழி நினைவில் பிறக்கும்போது அது நம்முள் கிளர்த்தும் அனுபவங்கள் வேறானவை. லிங்க விரல் நம்முள் வேறு வேறான அனுபவங்களை நினைவுகொள்ளச் செய்கிறது.

 

இழப்பொன்றுமில்லை/ என்னை என் பக்கம் சாய்த்திருக்கிறாய் என முடிவுறும் புறக்கணிப்பு குறித்த கவிதையில் இழப்பொன்றுமில்லை என்பது நம்மை நாமே சமாதானம் கொள்ளச்செய்யும் மருந்து. புறக்கணிப்பின் நோய் முற்றி காணாமல் போய்விடாது நம்மை காக்கும் சூரணமாகவும் அச்சொல் இருக்கிறது. எல்லோருடைய வாழ்விலும் இப்படியான சில சொற்கள் மாத்திரைகளாக மாற்றம் கொண்டு நம்மின் இருப்பை சாத்தியமாக்குகின்றன.

 

கொரானா எனும் சொல்லை சமகாலத்தவர் எவரும் எளிதில் கடந்துவிட முடியாது எல்லோருக்குள்ளும் ஆனி வேராக ஊடுறுவி உள்ளது. அதன் பாதிப்பு எல்லோருடைய படைப்புகளிலும் இருப்பதென்பது இயல்பாகிப்போனது. ' மிக நீண்ட தூரம்' என வேல்கண்ணனும்.

 

தொடக்கத்தை நிர்ணயிக்கும் பூவா, தலையா போட்டுப்பார்த்தல் அழகின் வெளிப்பாடு. உடனடியாக மலர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தரவல்லது. ரகசியத்தை அவிழ்க்கும் முன் மனம் அறியும் சமிக்ஞையை உணர்த்துகிறது இக்கவிதை.

 

நாணயத்தைச் சுண்டி

உள்ளங்கைகளில் மறைக்கிறேன்

மலர் தொடுக்கவே விருப்பம்

உள்ளங்கை விரியாமல்

கணமொன்று மலர்கிறது.

 

"கவிதையில் ஒரு மரம் வரைகிறேன்

கவிதையில் ஒரு தோப்பு வரைகிறேன்

கவிதையில் கானகம் வரைகிறேன்".

 

மரம், தோப்பு, கானகம் திரும்பி வரவழைக்கும் ஆற்றல் கொண்டவை. அதையும் மீறி ' முதல் வரி எழுதுவதற்கு முன்பிருந்த பறவை/ திரும்பி வந்தபாடில்லை' என முடிவுறும் இக்கவிதையில் ஏமாற்றத்தின் தீவிரம் எத்தகையது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

 

பேரமைதியை சிம்னியின் ஒளியாக்கி தன்னுள் வைத்திருப்பவர் புத்தர். அவர் குறித்த புரிதல் இல்லாத பிரளயத்தில் இருப்பவர்களையும் வசீகரிக்கும் ஈர்ப்பு புத்தரிடம் உண்டு. சிறார்கள் பெரும்பாலானோர் புத்தர் சிலையை வாங்கி வருவது அதனால் கூட இருக்கலாம். ஓவியம், சிலை, போஸ்டர் என எதில் பார்க்க நேர்ந்தாலும் நம்முள் ஒரு அமைதி பரவுவதை உணர முடியும். வேல்கண்ணன் ' வளரும் புத்தர்' கவிதையில் நமக்கான புத்தரை நினைவு படுத்துகிறார்.

 

எல்லோருடன் இருந்தபோதும் தனித்திருந்து எல்லாவற்றையும் உற்றுநோக்கியபடி இருப்பவனின் துயர்கள், கனவுகளின் சித்திரங்களும், எல்லோருக்குமான எல்லா வலிகளையும் வாங்கிப்போய் நடுக்கடலில் விட்டு வரும் கடலலைகள் நம்மை மீட்சிகொள்ளச் செய்யும் எனும் நம்பிக்கையும் மிளிர்கிறது வேல்கண்ணனின் ' லிங்க விரல்' தொகுப்பில்.

 

வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்

 

விலை: 110