Sunday, March 24, 2013

பாறைகளின் துயர்களை ஒழுக்கிடும் நீர்த்தடங்கள்...
-ந.பெரியசாமி


வண்ணச்சிதைவு மெனக்கிடலைக் கோரும் கவிதைகள்...

ஒரு வரிக்கும் மற்றொரு வரிக்குமாக, ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்குமாக சிரத்தையான மொழித்தேர்வு வாசகனிடம் கூடுதல் கவனத்தை கோருகிறது. கவிதைகளுக்கும் தலைப்புக்குமான பிணைப்பு  ரத்த ஓட்டம்  சீராக உள்ள நரம்பாகத்தானிருக்கு.

தொகுப்பில் இருக்கும் கவிதைகளின் வரிசையை காலத்திற்குமான வரிசையாகக் கொண்டால் ஆச்சரியாமாக இருக்கிறது. முன்னதுகளில் கெட்டிப்பட்ட இறுக்கமும் பிற்பகுதியில் இளகிய தன்மையோடும் மொழி இருக்கிறது. பெரும்பாலான தொகுப்புகளில் இத்தன்மை மாறுபட்டிருக்கும்.

எல்லையற்ற விரிந்த கடலின் வயிற்றைக் கண்டிருக்கும் ‘மறுபடியும்’ கவிதையில்
வயிற்றுக்கடலில்
சூரியன்...

அழகு கவிதையில்
அழகு யாவும் தொலையக்
கக்கூஸ் குழியினுள்
வீழ்ந்திருக்குமோ
விரையும் என்
வியப்பு நிலா...

கைவிடப்பட்ட பருவம் கவிதையில்
சூரியன் தூக்கிப்போட்ட
வீட்டின் தொலைதூர ஜன்னலொன்று...

தீராப்பாடல் கவிதையில்
பல வண்ணங்களில் ஒளிர்விக்கிறது
ஒற்றைச் சொல்... என இப்படியாக தொகுப்பில் தாகமெடுக்கும் சூழல் நிறைய்ய...

மரம் கவிதையில் பலமற்ற எளிய பப்பாளி மரம் ஊடாக பலமான மற்ற மரங்களின் பிரம்மாண்டத்தை கட்டியெழுப்பி பொதுப்புத்தியில் மரம் மாதிரி சும்மா நின்னுகிட்டுயிருக்காதே எனும் வசவை கேலி செய்து... கொடிகளின் வண்ணங்களின் மீது கொட்டிவைத்திருக்கும் எளிய மக்களின் நம்பிக்கையை செப்டிக் டேங்கின் காற்றுப்போக்கியின் வழியே  உலவவிடுகிறார் அவர்களுக்கு எட்டாத தொலைவிலிருக்கும் அதிகாரங்கள் என்றாவது திரும்பி பார்க்கச்செய்ய...

பைப்புகளில் சொட்டும் நீர் பார்த்துக் கழியும் சமகாலத்தின் இழப்புகளின் எண்ணிக்கையை கூடுதலாக்கி வாலியில்  நீர் நிறைத்து வீடு நனைத்த அதிகாலையின் நாட்களை ஊற்றெடுக்கச் செய்தது ‘விழிப்படையும் கோணம்’ கவிதை.

அவரவருக்கான உன்னதங்கள் ஏதோவொன்றில் கிடைக்கத்தான் செய்கிறது. எழுதி முடிக்கப்பட்ட கவிதை ஒருவருக்கு மகா உன்னதமெனில் வேறொருவருக்கு அடிவானத்தில் ரகசியமாய் கண்டடையும் வானவில் மகா உன்னதம்தான். கவிதை எழுதும் செயலைவிடவும் மலம் அள்ளும் செயல் எவ்விதத்திலும் குறைச்சலானதல்ல எனும் சி.மணியின் கவிதை வரிகளை நினைவூட்டியது ‘ஒற்றை உறுப்பு’ கவிதை.

மரத்திலிருந்து தவழ்ந்து பூமியை அடையும் காய்ந்த இலையென வெகு எளிதாக ஆரம்பித்து பின் கண்களை பிதுக்கி நாக்கை தொங்கவிட்டு ஒரு தற்கொலையை நிகழ்த்திவிடுகிறது ‘கடுங்குளிர் இரவின் மிக நீண்ட தனிமை’ கவிதை.

ஒன்றைப்பற்றி சொல்லிச்செல்ல அவ்விசயத்தில் நேரடியாக பயணிக்காமல் வேறொன்றின் மூலம் வெளிப்படுத்தும் அழகு சாகிப்கிரானின் பெரும்பாலான கவிதைகளில். ‘மரங்களின் கரும் பச்சை’ கவிதையில் பின்/ஒரு கொக்கு பசியாறி விடுகிறது என நிறைவேறிய காமத்தை சொல்லப்பட்டதைப்போன்று இருந்தாலும் மீண்டும் வாசிக்க  நிறைவேறா காமம் நிழலாய் படிந்துகிடப்பதை காணமுடிகிறது. இதன் நீட்சியாய்
அவ்வளவு நல்லதானாலு
மதன் கோரைப்பற்களுள்
ஒன்று பாதிதான் இருக்கிறது
எதைக் கடித்திருக்கும்? என முடியும் ‘அன்பின் கோரைப்பற்கள்’ கவிதையில்
பூனைகளின் காமத்தை கூற மன்மதனோட ஒப்பிட கவிதைகளின் வார்த்தைகளை உடைத்து குறிப்பால் உணர்த்தி செல்கிறார்.

பெரும் மதக்கலவரச் சூழலானாலும் ஒத்திப்போடுவதற்கு வாய்ப்பற்ற வீடு திரும்ப வேண்டிய  காரணத்தை மறுத்திட இயலாதவாறு இருப்பதை ‘இரண்டாவது கண்ணாடியும் உடைந்துள்ளது’ கவிதை அதற்கான நியாயத்தோடு வெளிப்படையாகவே பேசி நம் சந்தேகங்களையும் கழுவிவிடுகிறது. இக்கவிதையின் தொடர்ச்சியாகவோ அல்லது நினைவூட்டும்படியாகவோ இருக்கிறது ‘சாலையோரங்களில் தென்படும் வயோதிகரும் கூடவே அவர்களது கிழட்டு நாய்களும்’ கவிதை. ஒரு மன்னர் நாட்டிலுள்ள வயோதிகர்களை வெளியேற்ற உத்திரவிட ஒருவன் மட்டும் பாசத்தால் அதிகாரத்தின் கண்களை மறைக்க, பின் மன்னருக்கு ஏற்படும் சிக்கலை மறைக்கப்பட்ட பெரியவரின் ஆலோசனையால் விடுவிக்கப்பட தன் தவற்றை உணரும் மன்னனின் கதையை சிறுவயதிலேயே படித்தும் கேட்டும் வளர்ந்தபோதும் தன் வாலிப மனத்தின் தடித்தனத்தால் கண்டுகொள்ளப்படாது வயோதிகர்களை வீட்டின் மூலையிலோ காப்பகத்திலோ ஒதக்கித் தள்ளும் மனோபாவம் பெருத்த சூழலில் அவர்களோடு என்றைக்குமாக துணையிருப்பது பூனையோ, நாயோதானென எல்லோருக்குமான கவலையாக மாற்றம் கொள்ளச் செய்கிறார்.
பூவை
காயை
கனியை
பிறகொரு
வெறுமையையும்
காய்க்கிற தாவரம்
கல்மரம் எனப்படுகிறது
என்றைக்குமான..

மது உன்னை அருந்தி பின் மது வருந்தச் செய்து வேறு வேரானவர்களின் கூட்டு விளையாட்டிற்கு நாம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை போதனைகளோ அறிவுறுத்தலோ இன்றி நமக்கு நாமே பின்னிக்கொண்டிருக்கும் வலையை காட்சிப்படுத்தியுள்ளார் ‘மறைந்திருக்கும் பூதம்’ கவிதையில்.

பாறைகளில் படிந்து கிடக்கும் நீர்தடங்களின் துயர்களை நம் காலத்திற்கு பின்னும் காயாத ஈரத்தோடு இருக்கச் செய்யும் ஈழத்தில் இழப்புகளின் வலி... ‘குமரிக்கோடும் தாமாபன்னியும்’, ‘கொல்லனின் மகள்’ கவிதைகளில் நம் வாழும் காலத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும்  நிகழப்போகும் பெரும் துயரை சாட்சியமாக்கியுள்ளார்.

புழு, பூனை, கிளி, குயில், கொக்கு, நாயென எளிய பட்சிகளோடு இணைந்து செல்லும் வாழ்வு...

சிலுவையிலிருந்து சொட்டும் குருதி துடைக்க தேவகுமாரனுக்கு துண்டை நீட்டும் கை...

கக்கூஸில் தொங்கும் குறியை படம் எடுக்கும் வரை நீளும் அதிகாரம்...

வெளியெங்கும் யோனிகளை மிதக்கவிட்டு சுயமைதுனக்காரர்களை பெருக்கம் செய்யும் இணையம்...

எதுவொன்றையும் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கும் அலைபேசி...

நண்பனோடு உரையாடலற்றுப்போன வலி மிகுந்த நாட்களுக்கான எஸ் எம் எஸ் மருந்துகள்...

உலகின் அத்தனை அழகையும் வண்ணப் பொடியாக்கி அரிதாரம் பூசி நடுசாமத்தில் பார்வையாளர்களை அதிரச் செய்த கனகு எனும் பேரழகியின்  மீதான காதல்...

மாண்டுபோன அத்தனை எழுத்துக்களையும் தனக்கான இடங்களில் தோன்றச் செய்து அவைகளை கோர்த்துக் கோர்த்து சில வாக்கியங்களை கட்டமைக்கும் வித்தையைத் தவிர வேறொன்றும் அறியேன் என ஒப்புக்கொள்ளும் எளிமையென சொல்லிக்கொள்ள நிறைய்யவே இருக்கும் சாகிப்கிரானின் கவிதை உலகுள்...

நன்றி : கொம்பு


No comments:

Post a Comment