Tuesday, December 3, 2013

நன்றி: உயிர் எழுத்து

கிளி பச்சை நிற தேவதை

பார்வையிடுவோரின் நினைவில்
இலைகளை உதிர்த்து
ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன
மரக்கட்டைகள் உயிரற்று
வேலிகளாக குரோட்டன்ஸ் சூழ்ந்திருக்க
நிலத்தையும் தங்களோடு சேர்த்து
விளையாடிக் கொண்டிருந்தனர்
பெரும் சப்தத்தால்
எல்லோரையும் சூழச் செய்தவள்
கண்களை இறுக மூடச்சொல்லி
கிளிபச்சை நிற தேவதையானாள்
தன் புன்னகையால் வசீகரித்து
தேவைகளை கேட்டறிந்தவள்
சொற்களை பிறப்பித்து பொம்மைகளாக்கி
கையளித்து மறைந்தாள்
அவரவர்களும் தன் பொம்மைகளோடு
உரையாடியபடியே கலைந்தனர்...

நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்

பாட்டியிள் வீடு சென்று
பூப்போட்ட பம்பரம் எடுத்து வரவும்
சின்ன தாத்தா தோட்டத்தில்
மர உச்சியமர்ந்து கொய்யா தின்றிட
ஐந்து - சீ-யில் படிக்கும்
ஆனந்தை கிள்ளி வைக்க
ஹெட்மிஸ் வீடு அடைந்து
தலை வீங்க கொட்டு இட
குளத்தங்கரை செல்லியம்மன்
தலையிலிருக்கும் சிகப்புக் கல் தோண்ட
விளையாட தர மறுக்கும்
மூன்று - பி- அருணாவின்
கார் பொம்மையை காணாமலடிக்க
நட்சத்திரம் ஒன்றை பிடித்து
அறையுள் ஒளித்து வைக்கவென
பட்டியலிட்டபடியே இருந்தாள்
உடலில் முளைத்த சிறகுகளுக்கு
முத்தமிட்டபடி...

பூ அரவம்

புதர் நிறைந்த காடொன்றை
செப்பணிட்டுக் கொன்றிருந்தவர்கள்
விடுகதைகளுக்கு விடையை தேடி
களைப்பகற்றிக் கொண்டிருந்தனர்
அய்யோ அரவமென அலறியவனின் திசைநோக்க
வெண்ணிறத்தில் நீண்ட உடலை மடக்கி
தலை தூக்கி நின்றது
அடித்திடலாமா விட்டுடலாமாவென்ற
விவாதங்கள் நிகழ்ந்தபடி இருக்க
பாம்பு தன் வாயிலிருந்து
பூக்களை உதிர்த்தது
பணிந்து கலைந்தனர்
கனவை கேட்டவர்கள் களித்து
இனி நல்லகாலம் உனக்கென்றார்கள்...

மாயமுட்டை

கண்கள் திறப்புகொள்ள அதிர்ந்தேன்
எனதறையின் மூலையில்
சற்றே பெருத்த முட்டை
இடும் விலங்கினம் ஏதமற்றிருக்க
கல் விழுந்த குளமானேன்
பூனை ஒருபோதும் முட்டையிடாது
உலகறிந்த உண்மை
ஏற்கனவே வீட்டில் வளர்த்த
கோழியின் உருவம் உயிர்பெற்றது
அடிக்கடி சுத்தம் செய்ய
நீர் வறண்ட வீடானதால்
விற்று தொலைத்துவிட்டோம்
அறையின் கதகதப்பு
முட்டையிட ஏதவாக
இருக்கக் கூடுமென நினைத்த கணம்
ஆசனவாய் இலேசாக வலிக்கத் தொடங்கியது...

யாசகம்

கண்ணாடியிலிருந்து வெளிவந்த உருவம்
என்னைப்போலிருக்க நெருங்கினேன்
நீர்கொட்ட கலைந்த ஓவியமாக
உருவற்ற முகமாக இருக்கத் தயங்கினேன்
கைகளை இறுகப் பிடித்தது
காதலியின் முதல் தொடுதலை நினைவூட்ட
காய்ச்சல் ஏற்பட்டது உடலுக்கு
நடுங்கும் கைகளும் துடித்த உதடும்
எதையோ கேட்க முற்பட
தேவனானேன் நிவர்த்திக்க
திறப்பிற்கு வழியற்று
நிறைந்த மூத்திரப்பையின் வலியோடிருக்கிறேன்
அவசரமாக காட்சியாக்க வேண்டும்
விரைவில் உறங்கச் செல்லென யாசித்தது
கனவு..

நன்றி: உயிர் எழுத்து

1 comment:

Chellappa Yagyaswamy said...

கடைசிக்கவிதை அருமை. (இரவில் உறங்கப்போகும் முன்பு சிறுநீர்ப்பையைக் காலியாக்காமல் படுத்தால் இதுபோன்ற கனவுகள் வரலாம் என்கிறார்கள்.)

Post a Comment