Monday, November 4, 2013

அம்மாக்கள்...

வாழ்ந்தோம் பெரும் வாழ்வென
நினைத்த கணத்தில்
பழுக்கத் துவங்கினாள்
தன்னில் பிரிந்த விழுதொன்று
பற்றற்று அலைவது
பெரும் பாரமாகியது
படையலிட்டு வேண்டியும்
பலனற்றுப் போக
மண்ணைத் தூற்றி காறி உழிழ்ந்தாள்
வேறு வழியற்று அப்பாதை செல்ல
முகம் கொடுக்காது கடந்தாள்
எனது பாடுகளும் வீணாகினவென
கனவில் கண்ணீர் வடித்தார்
மனம் இறங்கியவள்
மன்னித்து பூசையிட
குளிர்ந்தார் கடவுள்
ஆயினும் அவள்
சதா புலம்பியபடியே...
*

துணை வானம்

குழந்தை தவழ்ந்தது
தாயும் தவழ்ந்து தூக்கினாள்
வேடிக்கையில் பேசியபடி இருந்தனர்
நிலாவும் இருந்தது
நட்சத்திரங்களும் மின்னின
நாம் கண்டபடி இருக்கும்
நிலவும் நட்சத்திரமும் இதுவல்ல
பகலில் காணும் சூரியனும் அப்படியே
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
மாலை பொழுதொன்றில்
உரையாடலை துவங்கினாள் சிறுமி
யானைக்கு யார் துணை என்றாள்
இன்னொரு யானைதான் என்றேன்
காக்காவிற்கு
மற்றொரு காக்கா
குருவிக்கு
வேறு குருவி
இந்த மரத்துக்கு
அதோ அந்த மரம்
அப்ப வானத்துக்கு
மௌனித்திருந்தேன்
அன்றுதான் ஒரு தாளில் வரைந்து அனுப்பினாள்
துணை வானம் ஒன்றையும்
ஒரு நிலா ஒரு சூரியன்
நிறைய்ய நட்சத்திரங்களையும்
இப்பொழுது யாவரும் காண்பது
அவள் அனுப்பிய துணைகளைத்தான்...
   
nantri:malaigal.com

No comments:

Post a Comment