Wednesday, July 20, 2022

வாதி எனும் வாழ்வியல் வாதை

 

என்றேனும்  ஒருநாள் சமதர்மம் பூக்கும் எனும் நம்பிக்கையோடு ஒரு பிரதேச மக்களின் வாழ்வியல் வாதையை, அந்நிலத்தின் பூர்வ கதையை நமக்கு சொல்லிச் செல்கிறது நாராயணி கண்ணகியின் 'வாதி' நாவல்.


தன்னைவிட புத்திசாலியாக இருப்பவனைக் கண்டால் அதிகாரத்திற்கு பிடிக்காது. மந்தைத் தன்மையோடு என்றும் கேள்வி கேட்காது, தங்களை மட்டுமே நம்பி வாழும் தலைமுறைகளை உருவாக்கியபடியே இருக்கும். உயிர் மற்றும் வாழ்வியல் பயத்தால் நமக்கேன் வம்பு என வாழப் பழகிக் கொள்ளும் மக்களில் இருந்து ரோசத்தோடு அதிகாரத்திற்கு எதிராக ரோசப்பட வைப்பவர்கள் நக்சலைட், கம்யூனிஸ்ட், தீவிரவாதி என முத்திரையிட்டு அவர்களின் வாழ்வை அழிப்பதில் அதிகாரம் எப்பொழுதும் தீவிரத்தன்மையோடு இயங்கும். வாழ்வெனும் நீரோடையில் சருகு வீழ்ந்த அலைவுகளைக்கூட பொருத்துக்கொள்ளாத ஆண்டைகள், ஜமீன்கள், பண்ணையார்கள் எதையும் செய்பவர்கள் என்பதற்கு சாட்சியாக வாதி நிற்கும்.


'ஊறுகாய்க்காக மாங்காயை பத்து போடுவது போல் உதடுகளை பனி கீத்துபோடும். ஜனங்கள் ஆண்டைகளுக்கு நடுங்குவதைப்போல் பனிக்கு நடுங்கியாக வேண்டும்' என்பதிலிருந்து ஏலகிரி, ஜோலார்பேட்டை பகுதியின் சூழலையும், வாழ்ந்த மக்களின் நிலையையும் அறிந்து கொள்ள முடிகிறது.


உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தாளத்துக்கோ இருபக்கமும் இடி எனும் சொல்லாடல் உண்டு. இங்கு காலமற்று திசையற்று பேதமற்று எங்கும் எப்பொழுதும் வாதைக்குட்படுபவர்கள் பெண்களே. நாம் சொல்லிக்கொள்ளும் வளர்ந்த சமூகத்தின் நிலையே தொடர் துயரமாக இருக்கையில், ஜமீன்தாரர் காலத்தில் சொல்லவா வேண்டும். அவரின் கண் பட்டோர் கலங்கப்பட்டே தீர்வர். ஊரில் யார் வீட்டிலாவது பெரிய மனுஷியான தகவல் வந்தால் ஜமீன் வீட்டிலிருந்து சீர் தட்டு வந்திடும். அப்பெண் பங்களாவிற்குள் சென்ற ஆகவேண்டிய கட்டாயம்  குறித்து நாவலில் வாசிக்கும்போது நம்மையும் மீறி கண்களில் நீர் துளிர்க்கும். 


ஊருக்குள் பாடம் நடத்த வரும் டீச்சரின் நிலையோ பெரும் துயர். பால் மறக்கடிக்க வேப்பிலை பூசிய மார்புக்கண்ணைக் கூட விட்டுவிட மனம் இல்லாது கழுவி வரச்செய்து  கட்டாயக் கலவிகொள்ளுதல் தொடர்கதை. ஒருநாளும் மனம் விரும்பி போகாதிருப்பதே எதிர்ப்பு உணர்வாக பார்க்க வேண்டியிருக்கிறது.


ஊராரின் கண்களில் தேவதையாக மிதக்கும் தனத்தை ஜமீன்தார் விட்டுவிடுவாரா என்ன? இயலாமையும், எதிர்கொள்ள இயலாத சூழலுமே தனத்தை அவரோடு இணங்கி இருக்கச் செய்திடுகிறது. ஐந்துமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் பிறந்தால் என் ஜாடையோடு குழந்தை இருக்குமென கலைத்திட கட்டாயப்படுத்த, தனத்தின் இழப்பு நம்மையும் கலங்கச் செய்திடுகிறது. 


"நாக்கு வறண்டு போயி தாகம் எடுத்தாலும், யார்கிட்டயும் தண்ணி கேக்கறதில்ல. புழக்கட தண்ணிய கொண்டாந்து கொட்டாங்கச்சில ஊத்தி தர்றாங்க" ஆதி தொட்டு வளர்ந்தபடியே இருந்துகொண்டுதான் இருக்கிறது சாதி வேர். அது எங்கும் இற்றுப்போய்விடவில்லை. காலமாற்றத்திற்கேற்ப தன்னை புதுப்பித்துக் கொண்டு நீண்டபடியேதான் இருக்கிறது. சாதி எனும் கீழ்மையோடு இருப்பவர்களுக்காகவும் சேர்த்தேதான் இயக்கம் கட்ட வேண்டியிருக்கிறது. அடிக்கடி கட்சி வகுப்புக்காக கூடுதல், பெண் தோழர்களின் பங்கெடுப்பில் உருக்கொள்ளும் சிக்கல்களை பேசுதல், பங்கெடுக்கும் தோழர்களிடையே இருக்கும் கருத்து முரண்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்துதல், ஜமீனை அழித்தொழிக்க பயிற்சி எடுத்தல், அவ்வப்போது நிகழும் போலிஸ், மக்களுக்கான பிரச்சினைகளை முன்னின்று தீர்த்துவைத்தல் என கதை நிகழ்ந்த காலத்தின் கம்யூனிஸ்டுகளின் நிலையை நாவலில் விரிவாகவே பதிவு செய்து உள்ளார். வகுப்பெடுக்கும் தோழரின் ஆளுமைக்கேற்ப அப்பகுதியின் செயல்பாடு இருக்கும் என்பதை உணர முடிகிறது.


"பயத்திலேயே ஒங்கள வெச்சினு இருக்கறான். பயம் போவணும், உங்க எல்லோருக்கும் என்னிக்கு பயம் போவுதோ, அன்னிக்கு ஜமீன் போயிரும்" என்று நாவலில் வரும் வக்கில் கிருஷ்ணனின் குரல் அன்றைக்கானது மட்டுமல்ல, இன்றைக்கானதாகவும் இருக்கத்தானே செய்கிறது. பயம் வெவ்வேறு வகைமையாக நம்மை வந்தடைகிறது. நம் பயமே பிறரின் மூலதனமாக மாறுகிறது. மருத்துவத்துறை, கல்வி, அரசு என எல்லா துறைகளும் மக்களின் பயத்தால்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஜமீன்கள் போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு மக்களை பயத்தில் வைத்திருந்தனர். அதற்காக ஜமீன்களால் போடப்பட்ட எலும்புத்துண்டு உயர்ரக மதுவும், நடிகைகளின் நிர்வாண நடனமும். இதற்காகத்தான் தவறெனத் தெரிந்தும் இயக்கத்தில் இருந்தவர்களை அழித்தொழப்பு செய்துள்ளதை வலியோடு வாதியில் பதிவு செய்துள்ளார்.


ஒருவன் ஒன்பது பேரை அடிப்பதையே நாயகன் என சித்தரித்த சினிமாவை நம்பியவர்கள் நம் தலைமுறையினர். ஆனால் தாங்கள் வாழும் ஊரின் மக்களின் நலம் பொருட்டு வாழ்ந்த, வாழும் நாயகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வாதி நாவலில் வரும் நடராஜண் அசாத்தியங்கள் நிறைந்த நாயகன்.  கரணம் தப்பினால் மரணம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடும் கூட்ஸ் ரயிலில் ஏறி உள்ளிருக்கும் மூட்டைகளை தள்ளிவிட்டு அதிலிருக்கும் தானியங்களை மக்களுக்கு பகிர்ந்தளித்து பசியடங்குய  முகம் கண்டு மகிழக் கூடியவன். போலிஸ்காரர்கள் சிறைபிடித்து செல்லும்போது கூட இனி இந்த மக்கள் பசிக்கு என்ன செய்வார்கள் எனும் யோசனையில் சென்ற நடராஜண்ணனை மரணிக்கச் செய்தாலும் ஆவ்வூராரின் மனதில் பிறந்து மனதில் இறந்தவனை நம்முள் பிறக்கச் செய்திடுகிறது நாவல். 


"ஜமீன்தார் எங்கள சாட்டையில அடிச்சான். கன்னத்துல அடிச்சான்... வெறகுல குத்துனான், தாங்கிட்டோம். மதக தொறந்து ஒரே ராவுல ஏரித் தண்ணிய வடிச்சான்.  பொழுது வெடிஞ்சி ஏரிக்குப் போனா மீனுங்க மொத்தமும் செத்து கெடக்குது. மீனுங்கள தூண்டி முள்ளுல புடிச்சா தொண்ட வலிக்குமென வல போட்டுத்தான் புடிப்போம். வலிக்கு துடிக்கக் கூடாது. மீனுங்க எப்புடி துடிச்சியிருக்கும், அவனும் ஒரு நாளைக்குத் துடிதுடிக்கணும்" என அவ்வூர் மக்களுக்கு கோபம் இருந்துகொண்டுதான் இருந்தது.


இயக்கத்தில் இருந்தவர்களுக்கு வேறு வழியற்று ஜமீனை அழிக்க டீச்சர்வீட்டையே தேர்வு கொள்ள வேண்டியதாகிவிட்டது. ஜமீன்தார் அழிந்தாலும், அவர்களுக்குள் காலரணமாக தங்கிப்போனது டீச்சரும் குழந்தையும் அழிந்தது. கதை உண்மையாக இருந்தபோதும் நாவலில் நாராயணி கண்ணகி டீச்சரையும், குழந்தையையும் காப்பாத்தி இருக்கலாமெவென மனம் ஆசைகொண்டது. நடந்து முடிந்தவைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கு.


நாம் பிறந்த அல்லது வாழும் ஊருக்கென்று எதாகினும் வாய்வழி வரலாறுஇருந்தால் நாம் அதை ஏதாகினும் கலை வடிவத்திற்கு கொண்டு வருவதே அறச் செயலாகும். திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஜோலார்பேட்டை நிகழ்ந்த சம்பவங்களை நாரயணி கண்ணகி வாதி நாவலில் வரலாறாக்கியுள்ளார்.

No comments:

Post a Comment