Tuesday, July 24, 2012

அன்பெனும் வசியக் கூடு


மழைக்காக நீண்டநாள் காத்துக்கிடக்கிறான் ஒருவன். ஒரு நாள் இரவில் அவனுக்குத் தெரியாமல் வந்துபோய்விடுகிறது மழை. காலையில் எழுந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி. நம்மை எழுப்பாமல் ஏமாற்றிவிட்டதே என்ற கோபத்தில் வீட்டின் முன் இருக்கும் எலுமிச்சை மரத்தை வன்மத்தோடு உலுக்குகிறான். ஓசூரில் தமுஎச நிகழ்வொன்றில் மனுஷ்யபுத்திரன் கவிதையை வாசித்து பவா.செல்லதுரை சொல்லிக்காட்டிய சித்திரம் இன்னும் என் மனதில்.... கூடவே நானும் ஒரு எலுமிச்சை மரத்தை உலுக்கி விழும் துளிகளில் நனைந்து கிடந்தேன். எனக்கு பவா என்றால் எலுமிச்சை மரத்தை உலுக்கும் சித்திரம்தான் மனதில் எழும். இப்படி அவர் பழகிய ஆளுமைகளின் சித்திரங்களை நிழலாய் ஒட்டவைத்துள்ளார் ‘எல்லா நாளும் கார்த்திகையில்’

ஒசூர் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டியில் சிறந்த ஆவணப்பட குறும்பட விருது வழங்கும் விழா ஒன்றில் எனக்கு மிகவும் நம்பிக்கை வந்துவிட்டது. இவ்வளவு காலம் ஏதோ ஒன்றை உருப்படியாக செய்துகொண்டுதான் இருந்திருக்கிறேன். இனியும் செய்வேன். தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் இச்சிறு ஊரில் இறுநூறு முன்னூருபேர் நாள் முழுக்க அமர்ந்து இப்படங்களை பார்த்து உரையாடல் நடத்துவதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது என்றார் பாலுமகேந்திரா. என்றாவது பார்ப்போம என நினைத்திருந்த என்முன் அவர் பேசியது இன்னும் நினைவில்... அந்த ஆளுமையின் மகளாக சைலஷாவும் மருமகனாக பவாவும் மாறியிருப்பதை வாசிக்க பெரும் மகிழ்வடைந்தேன்.

தன் தோழியோடு ஓட்டலுக்குச் சென்றவன் தன் விருப்பத்திற்கு ஆர்டர் செய்ய, தோழி எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பதை நீ எப்படி தீர்மானிக்கலாம். என் விருப்பம் என்னவென கேட்கக்கூட தோனாது உன் விருப்பத்திற்கு ஆர்டர் செய்கிறாயே என்பதை வாசிக்க பொட்டில் அறைந்ததுபோல் இருந்தது. இத்தவறை தொடர்ந்து செய்துகொண்டிருப்பவன்தான். சக மனிதர்களின் விருப்பங்களை உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொடுத்தது பிரபஞ்சனின் எழுத்து. பிரபஞ்சனுக்கும் பவாவுக்குமான நெருக்கம் நமக்கு கிடைக்காத என்ற ஏக்கத்தை உண்டுபண்ணிவிடுகிறார் சிறு பத்தியில் பவா...

நான் ஒரு வட்டமிட்டேன். நிலாவாக்கினான், மீண்டும் வட்டமிட சூரியனாக்கினான். அருகில் அவன் பெற்றோர்கள் கலையில சாப்பிட்டியே, நேற்று சாப்பிட்டியே என இட்லி தோசைகளை நினைவூட்டியபடி இருக்க, அவனோ அதை தவிர்த்து வேறு வேறாக நான் இடும் வட்டங்களை மாற்றிக்கொண்டிருந்தான். அற்புதமான குழந்தை அவன் என ச.தமிழ்ச்செல்வன் வியந்து வியந்து காலை நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த சிபியைத்தான்  அன்று நிகழ்வு முடிவதற்குள் சாலை விபத்திற்கு பலிகொடுத்தோம். அய்யோ பாவ... என்ற அலறல்கள் எக் குழந்தை இறப்பிலும் நினைவில் வந்துவிடுகிறது... தமிழ்செல்வன் குறித்த பவாவின் பதிவை வாசிக்க அன்றைய நாள் நினைவில் வர நீர்கோர்த்த கண்களோடு வாசிப்பை தொடர முடியாது போனது.

செல்லும் ஊரின் மண்வாசனையை உடலேற்றி அவ்வூர் பூக்களின் மணம் குடித்து பறவைகளின் பாசைபேசி லயித்துக்கிடக்கும் நாடோடியான கோணங்கி ஒரு முறை ஓசூரில் சின்னண்ணன் என்ற நண்பரின் மொட்டை மாடியில் நண்பர்கள் சூழ்ந்திருக்க தன் இழந்த காதல் குறித்து பேசியபடி இருக்க தொடர்ந்து கேட்க முடியாது கோ... வென அழுத நண்பர்களும்... எல்லோருக்குள்ளும் இருந்த இழந்த காதலிகள் இருளில் மறைந்து அழுத விசும்பல்களும் இன்னும் நினைக்க உடல் நடுங்குகிறது..  தன் குறைச்சலான பக்கங்களில் அவரின் நெடிய பயணங்களின் நிழலாய் நமை பின்தொடரச் செய்திடுகிறார் பவா.

காலம் மிகப் பலம் வாய்ந்த மந்திரவாதிதான். சினிமாக்காரன் அரங்கத்துள் நுழைந்துவிட எரிச்சலான எழுத்தாளனின் ஆளுமையை வேறு ஒரு சினிமாக்காரனைப் பற்றி எழுதச்செய்து நொறுங்கச்செய்துவிட்டதோடு அத்துறையிலேயும் உலாவச்செய்துவிட்டதே காலம்...
அன்று நானும் இருந்தேன். மம்முட்டியின் வரவை சகித்துக்கொள்ளாத எஸ்.ரா. என் மனதில் பெரும் நாயகனாக உயர்ந்துகொண்டிருந்தார் ரஜினிகாந்த் குறித்த அவரின் கட்டுரையை வாசிக்கும் வரை. ஆயினும் அவரின் எழுத்து அவ்வப்போது எனை உயிர்ப்பித்துக்கொண்டிருக்க பவா கொண்டாடும் நாடோடி எஸ்.ரா. என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவர்தான்.

வாசிப்பின் முடிவில் ராஜவேலு நீர்த்துளியாகி கண்ணிலிருந்து கசிந்து முடிவதற்குள் எங்களுடன் ஓசூர் தமுஎசவில் இருந்த தோழர் விநாயகம்  மீண்டும் நீர்த்துளிகளாய் கோர்த்துக்கொண்டார். எட்டுமணிநேரம் கம்பெனியில் இருந்த சோர்வை அகற்றிவிடும் அவரின் ஆர்வம். நன்கொடை வசூலிக்க, போஸ்டர் ஒட்ட, தட்டிக் கட்டவென வேலைகளில் உற்சாகமாக பங்கேற்போம். அவர் கீழே அமர அவரின் தோளில் நான் ஏறி நிற்க அவர் எழுந்துநிற்பார் தட்டியின் மேல்பாகத்தை கட்டி முடிப்பேன். ஒரு முறை அப்படி கட்டி முடித்திறங்க ஆதவன் தனியாக அழைத்து அவர் இரண்டுமுறை இதய அறுவை சிகிச்சை செய்தவர் என சொல்ல உடல் நடுங்க நீர்கோர்த்த நாட்கள் உண்டு.  தான் நம்பும் அமைப்புக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் இப்படியானவர்கள்தான் அமைப்புகள் மீதான நம்பிக்கையை வற்றிவிடாது பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு முறை புதிய பார்வையில் ஆதவன் கதை பிரசுரமாகியிருக்க அக்கதை குறித்து எல்லோரும் பேசிக்கொண்டிருக்க விநாயகம் கேட்டார் ஏம்பா, நீங்க எழுதறத்துக்கு இப்படி அமைப்பில் யூனியனில் இருப்பது இங்கு கிடைக்கும் அனுபவங்களும் ஒரு காரணம்தானேப்பா? ஆதவன் ஆமாப்பாவென சொல்லி முடிப்பதற்குள் அவரின் உடலில் அப்படியொரு மலர்ச்சி ஏற்படும். கை நிறைய்ய சாக்லேட் கிடைத்த குழந்தையாய் பூரித்திருப்பார். அப்போது நினைத்ததுண்டு இவரின் சந்தோசத்திற்காகவாவது நிறைய்ய எழுதவேண்டுமென. நான் இப்போ நிறைய்ய எழுதுகிறேன் வாசித்துக் கொண்டாட அவர் இல்லை. மீண்டும் இதய வால்வு சிக்கல் ஏற்பட இல்லாதுபோனார். ஒவ்வொரு நிகழ்ச்சி திட்டமிடலின்போது மறவாது குறிப்பிடுவார்  பவா, கருணா மாதிரி சிறப்பா செய்யனும்பாவென... பவாவின் ராஜவேலு குறித்த பத்தியில் விநாயகமும் நிழலாய் உடன் வந்தார்.

காணக்கிடைத்தவர்கள் பாக்கியவான்கயே... ஒழுங்கில்லா வட்டத்தில் ஜெயகாந்தனிலிருந்து கை மாறும் போதைபுகையை பார்த்து வியக்க வாய்த்தது இரண்டு முறை. அவ்வட்டத்தின் ஆளுமையை சிதையாது காட்சியாக்கியுள்ளார் பவா. அன்றைய முற்றம் நிகழ்வில் நான் எழுதினேன் கை ரிக்ஷா ஆட்டோவானது அதுபோதும் இன்னும் ஏண்டா எனை எழுதச்சொல்கிறீர்கள் என்ற ஜெயகாந்தனின் குரல் இன்னமும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கு.  எப்படியானவர்களுடனும் இணக்கமாகிவிடும் பவாவின் வசியம் குறித்து வியப்பாகத்தான் இருக்கு.

மிதமான போதையில் சிறு தூறலில் நடந்து சென்றேன் என வாசிக்க ஆச்சரியமாகிப்போனேன். ஊரே கொண்டாடிய இயக்குநர் பாலா ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் ஒன்றின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது. குடியை அறமாகப்பார்க்கும் சமூகத்தில் தன் இமேஜ் குறித்து எக் கவலையும் இல்லாது எப்படி எழுதுகிறார் என... பின் தன் படங்களால் நிறைய்ய ஆச்சரியங்களை ஏற்படுத்திக்கொண்டே இருந்தார். பவா பால உடையாடல்களிலும் அவ் ஆச்சரியங்கள் குறையாது நீடித்துக்கொண்டேதான் இருந்தது...

மடித்துக்கட்டிய வேஷ்டியும் கசியும் பீடி புகையுமாய் மனம் படிந்த மம்முட்டி...
தன் வாழ்வனுபவங்களை எவ்வித கூச்சமும் ரகசியமும் இல்லாது உண்மையாக வெளிக்காட்டிய பாலச்சந்திரன் சுள்ளிக்காடு...
தன் மாநில நலன் தன் நலன் என்று எதைபற்றியும் சிறிதும் கவலைகொள்ளாது அரசியல் நிகழ்வுகளில் சரியெனப்படுவதை வெளிப்படையாக பேசும் சக்காரியா...
அமைப்பு சார்ந்தவர்கள் சாராதவர்களென பேதமற்று எல்லோருக்குள்ளும் பேரொளியாக இருக்கும் கந்தர்வன்...
பொய்யர்களோடும் வஞ்சகர்களோடும் இருந்ததுபோதுமென போகுமிடமெங்கும் குழந்தைகள் சூழ அவர்களோடு பாட்டுப்பாடி கதை சொல்லி குழந்தையாகி உரையாடிக்கொண்டிருக்கும் லெனின்...
பாலியல் சிதைவுக்கு உள்ளான ஒரு பெண்ணிற்கான நியாயத்திற்கான போராட்டங்களோடு அப்பெண்ணிற்கு சுடிதாரை வாங்கிச் சுமந்து திரிந்த திலவதி...
தன் நடிப்பாலும் செயற்பாட்டாலும் உயர்ந்துகொண்டே இருக்கும் நாசர்...
தேடல்களோடு திரியும் எதோவொரு இளைஞனுக்கு இது பயன்படட்டுமென தன் அலைவுகளையும் தாகங்களையும் எல்.சி.டி புரஜெக்டராக்கி அனுப்பி வைத்த மிஷ்கின்...
குழந்தைகளுக்கு புகைப்படம் எடுக்க கற்றுத்தர பவா கூப்பிட அதைத்தவிர எனக்கு என்ன புடுங்குற வேலையென வந்திறங்கிய பி.சி.ஸ்ரீராம்...
ஒரு எழுத்தாளரின் வேண்டுகோளை மதித்து தன் ஒளிசுருட்டும் கண்களை பிடுங்கி அறையில் பூட்டிவைத்து வெறும் ஆளாய் நின்ற வைட் ஆங்கிள் ரவிஷங்கர்  என இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது...

தான் பழகிய ஆளுமைகளின் ஏதோவொரு தருணத்தில் வெளிப்படும் குழந்தைமையை எளிதில் கண்டடைந்து அக் குழந்தைக்கு பாலும் சோறும் ஊட்டி, கிச்சுக்கிச்சு மூட்டி நன்றாக வளர்த்தெடுத்து தாய்மையின் பூரிப்போடு தான் பார்த்த அழகை வாசிப்பவனுக்கும் தன் மொழியால் கனியக் கனிய கொடுத்திருக்கிறார் ‘எல்லா நாளும் கார்த்திகையில்’

பவாவிற்கு ஆளுமைகளின் நீண்ட பட்டியல்போல் ராஜவேலுபோன்று பொக்கிசங்கள் புதைந்து கிடக்கும் சாமானியர்களின் நீண்ட பட்டியலும் இருக்கும் அதையும் எழுதுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது வாசித்து முடிக்க...

நன்றி : புத்தகம் பேசுது

No comments:

Post a Comment