Tuesday, June 30, 2015

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி

மீதமிருக்கும் அன்புகளினாலான வண்ணங்களும் சிற்பங்களுமான சொற்களின் வெளி
- ஜீவன் பென்னி
நம்பிக்கையின் மிருதுவான சொற்களிலாலான கவிதையுடன் தன் தொகுப்பைத் தொடங்கியிருக்கிறார் ந.பெரியசாமி. பிரியங்களி னாலான சொற்களுக்கும் அவற்றினூடான செயல்பாடுகளுக்கும், காட்சிபடுத்துதலிலாலான அழகியல் வெளிக்கும் மிக அருகிலிருப்பது மான கவிதானுபவமே ந.பெரியசாமி கவிதைகளில் வழிந்திடும் சிறு சிறு துளிகளாகயிருக்கின்றன. சொல்லிக்கொண்டே செல்வதன் மூல மான அவதானிப்புகளும் விவரணைகளும் சொற்சித்திரங்களும் அவரின் முந்தைய தொகுப்புகளைவிட கொஞ்சமேனும் மேம்பட் டிருக்கின்றன மேலும் செழுமை அடைந்திருக்கின்றன, ஆனால் கவிதைகளைத் தேர்ந்தெடுத்தலின் மிக இளகியதன்மை இத் தொகுப்பிலும் படர்ந்திருக்கின்றன. சொற்சேர்க்கையின் அளவுகளும் கச்சிதத்தன்மையும் ஒரு இடைவெளி வரை பெருங்கவிதைகளிலும் படர்ந்திருப்பதை மிக உற்சாகமாக கவனிக்க முடிகிறது. குறிப்பாக சிறுகவிதைகளின் பிரதான அடர்த்திகள் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களினாலே வெற்றிகரமாக அமையப்பெற்றிருக்கின்றன. தொடர்ந்து கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் நிழல் களையே வார்த்தைகளாக எல்லாக்கவிதைகளிலும் பரவவிட்டிருக் கிறார் ந.பெரியசாமி.
அகமன மாற்றங்களினூடாக மாறிவருகின்ற மதுவாகினியை மடி யிலிட்டு வலியின் சோர்வு கடக்க ஆசுவாசப்படுத்தி உறங்கவைக்கும் குழந்தைமையின் சந்தோசங்களையும், கேள்விகளையும், பதில் களையும், விளையாட்டுக்களையும் உணரமுடிகின்றன - வலியின் சித்திரங்கள், சாயற்கனி, நிலையானது - இக்கவிதைகளில். சிறு வெளிச்சங்களின் அசைவுகளும் அன்புகளும், சிறு சத்தங்களின் மெலிதான கோட்டோவியங்களும் மனதின் வெறுமைகளை, முன்னெப்போதுமில்லாத சமநிலையின் வேர்களை எப்படியோ மாற்றுகின்றன - அணிலாடுமறை, எனது கடல், சென்னசேகவர், வண்ணக்கிளி, வளர்ப்பு நிழல், நிலையானது - இத்தலைப்பிட்ட கவிதைகள். காட்சிகளின் அழகுநிலைகளின் ஈரப்பதங்களினாலான இச்சொற்கள் பல ஞாபகங்களை உருவாக்குகின்றன. புத்தரின் சாந்தியை ஒத்த அடர் திராட்சை நிறச்சாறு பரவிடும் அறைக்கு வரும் ஏங்கல்ஸையும், மார்க்ஸையும், ஜென்னியையும், இன்னும் அதிக மானவரையும் ஒரு திரையில் நகரும் பிம்பங்களெனக் காண்பிக்கிறார் “ஏங்கல்ஸ் வந்திருந்தார்..” கவிதையில். “யாரும் தீண்டாத மூலையில் / கழிவை மிதக்கவிட்ட குளத்தினுள் / முத்தமிட்டபடி இருந்தன ஆமைகள்” - இம் மூன்று வரியில் மிதந்துகொண்டிருக்கின்றன மொத்தக் கவிதையும். கவிதைகளுக்குள் நுழைந்து பழக்கப்பட்டு விட்ட பூனைகளும் காணக்கிடைக்கின்றன. மழையின் சொற்களிலாலான- உயிர்ப்பு, களியாட்டம், வெளியே மழை பெய்தது... மழை ஆகிய கவிதைகளின் அடர்ந்த குளிர் நிறைந்த சித்திரங்கள் இன்னுமின்னும் அமைதி கொண்டு ரசிக்கவும் அனுபவிக்கவும் வைக்கின்றன. ஜீவிதங்கள் முடிந்திடாத பெருவாழ்வின் நகரத்தையும், லௌகீக தேவைக்கான சோம்பல் படிந்த வாழ்வின் குவி மற்றும் குழி ஆடிகளின் மாறுபட்ட புரிதல்களையும். சரியான ஊதியங்களற்ற உழைப்பின் வலிகளையும், தரப்படுத்துதலின் வழியேயான வேதனைகளையும், புறாக்களின் முத்தங்களையும், வறட்டியாகி விட்ட நிலவையும், எதுவுமற்ற வாழ்வில் கிடைத்துவிடும் வெறுங்கையின் பிசுபிசுப்புகளையும் மனதின் ஓர்மையின் ஊடாக அனுபவிக்கவும் பிரியங்கொள்ளவும் முடிகின்றன.
காந்தி வந்து செல்லும் கவிதையில் வெளிப்பட்டிருக்கும் நிகழ்கால அரசியலுக்கான அங்கத சொற்றொடர்கள் வெகு சீக்கிரம் வசீகரிப்ப தான குறுங்கதையென இருக்கின்றன. நிழலில் வளர்த்து வருவதான பசுவின் சித்திரங்களும், நீலம் புயலுக்குப் பிறகான குட்டிப்பசுவின் வருகையுமான “வளர்ப்பு நிழல்” கவிதை பேசும் மௌன அழகியல் மிக அழகாகயிருக்கிறது. சாக்பீசால் வரைந்திடும் ஓவியங்களின் பூக்களும் கனிகளும் உயிர்பித்து மின்ன அவரவருக்கானவற்றை எல்லோரும் எடுத்துசென்றதும் தழும்பும் வெற்றிடமும், பிளந்த மாதுளையின் மிச்சமெனயிருக்கிற பிசுபிசுப்பின் வெறுமையும் கவனிக்கக் கிடைக்கின்றன - (எஞ்சியவை & நிலையானது தலைப் பிட்ட கவிதை). மெல்லிய சப்தத்தோடான இரண்டு தோட்டக்களால் நிறைவுபெறுகிறது அழகும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த வேடிக்கைகளினாலான இப்பெரும் வாழ்வு.
யாருமற்ற தனிமையின் நிகழ்வுகளை ஒரு உறைவிடம் என சொல் லும் இக்கவிதைகள், நிகழ்கால அரசியலையும் அதன் முன்னேற்றப் பாடல்களையும் எள்ளி நகையாடுகின்றன. ஒரு வரையறையில் நிகழ்த்துவதான இவ்வசைவுகளின் வாக்கியங்கள் எப்போதுமிருக் கும் துன்பங்களின் எண்ணிலடங்கா நுட்பங்களைச் சொல்கின்றன. பக்கத்து சீட்டின் சகமனிதன் சாய்ந்துகொள்ள வசதியாக தோள் தரும் மனிதனின் விருப்பமும் அவ்வாறில்லாத மனதின் செதில்களும் கலந்தும், கலைந்தும் கிடக்கின்ற தொகுப்பு இது. ஒரு நுட்பத்தில் உரை நடையின் கவித்துவ அழகு கொண்ட சொற்களென பாவிக்கப்படவும் வாய்ப்பிருக்கின்ற சில நெடுங்கவிதைகளின் இயல்புகள் கொஞ்சமேனும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. சிறு சிறு கவிதைகளின் தேர்ந்தெடுப்பு காரணிகளும், நுட்பச்செறிவும் ஒரு வழியில் நின்று வெறுமையை ஏற்படுத்தாமல், வாசிப்பிற்குப் பிறகும் எப்பொழுதும் மனதிற்குள்ளியங்குவதாக அமைக்கப்பட்டிருக்கும் அழகியலும் கொஞ்சம் கவனிக்கும் படியாகவும், ஆழ்ந்த புரிதலுக்குமானதாகவும் இருக்கின்றன. தொடர்ச்சியான இதன் வடிவங்கள் மற்றும் சொல் நேர்த்தியின் செயல்கள் சார்ந்து ந.பெரியசாமி கவிதைகளின் முன்னேற்றங்கள் ஆர்வங்கொள்ளும் விதமாகவும் நம்பும்படியாகவு மிருக்கின்றன. மீதமிருக்கும் நம்பிக்கைகளும் அன்புகளும் எவ்வளவு எழுதிய பிறகும் மீதமிருப்பவை தான், அதைத்தான் ந.பெரியசாமி தன் வானமென விரித்திருக்கிறார் சில பறவைகளுடன் நிறைய்ய நீலங்களுடனும்.
தோட்டாக்கள் பாயும் வெளி - ந. பெரியசாமி
- புது எழுத்து,- ஆகஸ்ட் 14 - ரூ70/-

No comments:

Post a Comment