Friday, June 19, 2015

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...

பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
வெய்யிலின் குற்றத்தின் நறுமணம் தொகுப்பு குறித்த என் வாசிப்பனுபவம்...
தங்க நாற்கர சாலைகளுக்காக பொக்லைனுக்குப் பிறந்த ராட்சச கைகள் புதைமேடுகளை அள்ளி வீச எழுந்த ஆதித்தாய் மாறிக்கிடக்கும் ஊரில் அவளின் அடையாளங்கள் அழிந்துபோய் இருக்க எங்களின் வாசனையை நுகர்ந்தபடி வீடு வந்து சேர்ந்தாள். சிதறிக்கிடக்கும் நாளிதழ்களை நோட்டமிட்டாள். மரம் தன்போக்கில் நின்றுகொண்டிருக்க அதன் இரு கிளைகளில் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருந்த படம் பார்த்து அதிர்ந்தாள். இன்னமும் நீடித்தபடி இருக்கும் பாலியல் வன்கொடுமை செய்திகளை எல்லா நாளிதழ்களிலும் பார்த்தவள் எரிச்சலுற்று ஓங்கி ஒப்பாரியிடத் தொடங்கினாள். அடங்கா மிருகங்கள் இன்னும் நிகழ்த்தக்கூடும் தன் வேட்டையை. மான்கள் தப்பி ஓடித்தான் பிழைத்திருக்க வேண்டுமென. எங்களை அணைத்து பாதுகாப்பற்றுப்போன இம் மண்ணின் மீதமிருக்கும் கதைகளைத் கூறத் துவங்கினாள்.
கொலைதேசம் ஒன்றில் ஒரு இனத்தையே கொன்று கொன்று வெவ்வேறு காரணங்களைக் கூறி சடலத்தை பூவாக்கி புத்தருக்கு படைத்துக்கொண்டிருக்க, இக்கொடூரத்தின் சாட்சியாய் நின்றுகொண்டிருக்க இயலாது தவித்தபடி இருக்கும் புத்தரின் கதையைக் கூறி தன் மடியில் படுத்துறங்கும் நேசிக்கும் வளர்ப்புப் பிராணியைக் கொல்வதும் தன் சக உயிரிகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இனத்தைக் கொல்வதும் வேறு வேறானதல்ல என்றாள்.
பிழைக்குப் பிறந்த பிள்ளைகளைப் பார்த்து பதறி செத்துத் தொங்கும் குறியை அறுத்தெறிந்து மனித குமாரனாகிய அப்பாக்களின் துயர்தொடங்கி...
வனம் ஒன்றில் தனித்திருக்கும் பழந்தாயொருத்தியின் துயர்களை கசிய விட்டபடி இருக்கும் புல்லாங்குழல்...
துரோகங்களுக்குப் பின் தன் ரகசியப் பேழைக்குள்லிருந்த சர்ப்பமாக தன்னுடலை மாற்றி வேட்டையில் விரல்களில் ஊறும் ரத்தப் பிசுபிசுப்பை நக்கும் அம்மா...
எரியும் கஞ்சாபுகையில் சுவாசம் தேடி உடைந்த சாராய தம்ளரில் அம்மாவின் வாசனையை அறிபவன்...
வாழ்வு சாவு குறித்த புரிதலிருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடும் போதுமடா இனி செத்துத் தொலைக்கலாம் எனும் பெரும் நிறைவுகொள்ளும் தருணங்கள். மதுப்புட்டி ஒன்றை சில்க் சிமிதாவின் உடலாக்கி அதனுள் தம்புராவின் இசை நரம்புகளை பின்னி, ரெசோ செரஸின் பியனோ கட்டைகளில் தேங்கிய இசையை மீட்டெடுத்து, ஒசோ, புத்தன், மகதலேனா, சில்வியா பிளாத்தென ஆளுமைகளை புட்டியினுள் உலாவவிட்ட துயர் ஞாயிறொன்றில் விருப்பமுள்ளவர்களை சாக அழைப்பவன்..
துரோகத்தின் வலியால் ரௌத்திரம் கொண்டு கொலைக்கு அலைபவன்..
ஜீவன் மிக்க பறையையும், உணர்வுகளைக் கீறும் பாடலையும் பிள்ளையிடம் ஏற்றுக்கொள்ள இறைஞ்சும் நிலமற்ற தகப்பன்...
ஊராரின் நிர்வாண ரகசியம் அறிந்து அரைக்கூலியில் வாழ்வை நகர்த்தும் சுடலை நாசுவன்...
பிள்ளை விற்ற பெரும் வாழ்வில் பிரார்த்தனையிலிருப்பவனை கொல்ல உடலில் கடவுள் புணர்ந்த யோனிகளோடு இருப்பவன்...
எல்லாவிதமான சித்திரவதைகளையும் தாங்கிக் கொண்டு தன் மொழியையும் ஊரின் பெயரையும் ஞாபகப்படுத்த தாங்கவியலா துயரோடு அலைபவன்...
நினைவிலிருக்கும் வாழ்வின் உடல்களைப் புதைத்து பனங்கிழங்கையாவது பற்றிக்கொண்டு வாழ முற்படுபவனென இம் மண் தந்த பெரும் துயர்களோடு வாழ்ந்தவர்களின் கதைகளைக் கூறிய அலுப்பில் உறங்கினாள் ஆதித்தாய்.
மழை நிரம்பிய குளம் பார்க்க வந்த சூரியனை தன் தூண்டிலில் சிக்கவைத்திட காத்திருக்கும் கிழவன்...
கடல்நிரப்பி தாவரங்களின் வேர்களாக கிடக்கும் எலும்புக்கூடுகளை உயிர்ப்பித்து பயணிக்கும் மழைத்துளி...
ராட்டினக்காரனுக்காக காத்திருக்கும் சிறுவர்களாக மழைக்காக காத்திருந்து மழையைச் சேகரிக்கும் குருவிகள்..
தவளை வீட்டில் வசித்து தாமரைத் தண்டோடு உரையாடி தொலைத்தவைகளை குலசாமி தருமென நம்பி கழுதியிரவில் வெண்குதிரையேறி பறந்த ஆலமரத்தான்...
முற்றத்தில் மலர்ந்த கோலம் ரசித்து, முதல் முத்தத்தின் இசை உணர்ந்து, சுடரும் ஒளியின் நடனம் ரசித்து, யாமத்தின் ருசியை முலைக்காம்புகளில் தேடி திருடத் துணியும் கணத்தை உருவாக்கும் திராட்சை பூக்களின் பாடல்...
தன் தொட்டிச் செடிக்கு மழையைக் கொண்டு வர கனவில் தொலைந்து சாப்ளின் நாயோடும், நகுலனின் பூனையோடும் விளையாடிக்கொண்டிருப்பவன்...
நாடோடியின் மனற் திராட்சையை ருசிக்கத் துவங்கிய பாலையின் அனற்காற்று...
குறிஞ்சி யாழின் சாதாரிப்பண் மீட்க காந்தள் மலர்ச்சூடி மலைக்குறவனாக உருமாறி மீ மிருக நடனமாடுபவன்...
மன்புழுக்களின் முத்தங்களில் மயங்கி நிற்கும் வேர்கள்..
உளுந்து துவையலுக்கு உடலையே எச்சிலாக ஊறச்செய்யும் அம்மாக்களின் கதை...
சாராயம் மணக்கும் உதடுகளால் சமணமுனி சொன்ன நிசி மழை கூத்து...
தான் இருக்கும் அறையின் நிர்வாண ரகசியம் அறிந்த மீன்களுக்கு தொட்டியாகி சகோதரனும் காதலியும் முத்தமிட்டுக்கொள்பதை அறிந்துகொண்டவன் கதையென விவரித்த காட்சிகளில் வியப்புற்று, அதனோடு பயணித்து நாமும் நம் கனவுகளோடு ஆகாயம் பறக்கச் செய்தாள் ஆதித்தாய்.
தங்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் ரகசியம் அறிந்தவர்கள் குழந்தைகள். ஒரு பட்டாம் பூச்சியை வாங்கி அது பறந்து திரிய பூங்காட்டையே உருவாக்கச் செய்து, உடலையே இனிக்கச் செய்யும் முத்தத்தை கொண்டிருப்பவள்...
என்றோ பார்க்க நேர்ந்த சிறுமியோடு வய்லட் நிறப்பூ குறித்த உரையாடலில் மணந்திருந்து வய்லட்நிற முத்தங்களைப் பெற்று இன்னமும் வெற்றிருக்கையில் உதிர்ந்து கிடக்கும் நாவல் பூக்களை வேடிக்கை பார்த்திருப்பவன்...
கணக்கிலடங்கா முத்தங்களைப் பெற்றதன் நிமித்தம் பொம்மைகளில் களித்த வேடிக்கையில் தாயை தொலைத்த குழந்தை...
பொருள் தேடி பொருள் தேடி எதனோடும் லயித்திருக்க இயலாது ஓடிக்கொண்டே இருப்பவர்களின் அசைக்காதிருக்கும் சபிக்கப்பட்ட கழுத்தை நினைவூட்டி ஆகாயத்தை விரித்தும் சுருக்கியும் வி¬ளாயடுபவளென குழந்தைகளின் கதையைக் கூறியவள் மீண்டும் தொடர்ந்தாள்.
தன் கறுத்த தேவதையின் முத்தத்தை முட்களாலும் துளைக்க இயலாத காற்றின் குமிழியாக்கி அவளற்ற பொழுதுகளில் குமிழியின் விரல் பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பவன்...
நம்முள் இருக்கும் இசையை நாம் கண்டடையும் தருணம் மலரும் பூக்களைக் காண இயலாததை ஒத்தது. நம் விருப்பியவளின்/விரும்பியவனின் வருகை அதைச் சாத்தியப்படுத்தும். தன்னுள் இருக்கும் வாத்தியத்தை கண்டெடுக்க கோருபவன்...
காமத்தின் யாமருசி அறிந்தவன்...
பிரியத்திற்குரியவளால் மொத்த வாழ்வுக்கும் போதுமான கனவுகளை நிரப்பிக்கொண்டவன்...
பன்றிக்கு ரோஜாக்களை தருபவன்...
காலி செய்ய இயலாத கோப்பைகளோடு இருப்பவனின் கதைகளென பெரும் காதலில் களித்திருக்கச் செய்தாள்.
இச்சமூகம் எல்லோருக்கும் நிறைவான வாழ்வை தந்துவிடவில்லை. மூன்று வேளையும் பசியாறினேன் என்பது பலருக்கு பெரும் கனவு. சில வீடுகளில் வாழும் நாய்களுக்குக் கிடைக்கும் உணவை பலருக்கு பண்டிகை நாட்களில்தான் பார்க்க முடியும். இப்படியான அவலச் சூழலில் எதையாவது செய்து பசியாற வேண்டித்தான் இருக்கிறது. ஒற்றைக் குச்சியின் முனையில் படுத்து வித்தைக் காட்டும் குழந்தையைப் பார்த்து பிச்சையிடாது போவோரின் சட்டையை பிடித்து உலுக்கி பிச்சையிடு இல்லையேல் குழந்தையை தாங்கும் கையைத் தட்டிவிடுவென ஆவேசமானாள்.
நம் ஏமாற்றங்களின் பட்டியல் நீளமானது. நிலம் இழந்த கதைகளில் மனம் பதைக்கும். பிறர் கொழுக்க தூண்டில் முள்ளில் செருகப்படும் மண்புழுவாக வாழ்ந்து மடிந்த நம் பாட்டன்களின் வாரிசுகளானவர்கள் சுரப்பற்றுப்போன முலை பெருத்த நகரத்தில் திருடர்களாக அலைவுறும் அவலக் கதையைக் கூறினாள்.
குற்றங்களின் வழியாக கடவுளை அடையும் வழியைக் கூறிய கன்னியாஸ்த்திரி...
மூதாதைகளிடம் உறிஞ்சிய ரத்தத்தை மீண்டும் மண்ணில் சிந்த வைக்க அம்பு தூக்கி நிற்கும் வழித்தோன்றல்களின் ஆவேசம்...
தேவைகளை மட்டும் உறிஞ்சிக்கொண்டு மீதியை குப்பையாக்கும் போக்கு நம்பிடையே தொன்றுதொட்டு வரும் பழக்கம். பஃப்பூன்களை வெறும் சிரிப்பூட்டும் எந்திரமாக மட்டுமே பார்த்து காட்சி முடிய வெளியேறிவிடுவோம். அவர்கள் வாழ்வு குறித்து கிஞ்சித்தும் அக்கறையற்றுதான் இருக்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு போதைக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்க்கான இடத்தைத்தான் கொடுத்திருக்கிறோம். அவர்களுக்கு அள்ளிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்கள்மீதான அக்கறையைக்கூட வெளிப்படுத்த தவறிவிடுகிறோம் என பஃப்பூன்கள் குறித்த கதையைக் கூறினாள்.
கடலும் கடல் சார்ந்த பகுதியை நெய்தல் என்பர். முல்லையும் குறிஞ்சியும் திரிய பாலை என்பர். ஆனால் பாலைக்கான சூழல் அதிகம் பொருத்தமாக இருப்பது நெய்தல் நிலத்திற்குத்தான்.பிழைத்துத் திரும்புதல் நிச்சயமற்ற வாழ்வு ஒருபுறம் இருந்தாலும், அண்டை நாட்டின் சிறைபிடிப்பும் சித்ரவதைகளும் பெரும் துயர்தான். வான்விரிந்த கடலை கழிவு நீர் குட்டையாக்கி காக்கும் கொற்றவையை கதிர்வீச்சால் நோய்மை அடையச் செய்த பாவனை அரசுகளின் பிரகடனங்களை நம்பி வாழ்வை நகர்த்தும் பரதவர்களோ பூமிக்கும் ஆகாயத்திற்கும் இடையில் கழுகின் அலகில் சிக்கித் தவிக்கும் மீனாக வாழ நேர்ந்த துயரை கடலின் மொத்த கரிப்பையும் தன் கண்ணீர் துளிகளாக்கி அலுப்பில் அயர்ந்தாள் ஆதித்தாய்.
நீண்டு கொண்டிருந்த இரவில் கேட்ட கதைகளால் தூக்கமற்றுப்போய்விட அவளின் துயர்களை பெரும் குளமாக்கி சக மனிதர்களை மீன்களாக்கி பொரியைத் தூவி எல்லோரையும் ஓரிடத்தில் குவியச்செய்து விதை இழந்து நிலம் இழந்து தொழில் இழந்து நிலம் சார்ந்த வாழ்வின் அழகியலை இழந்து மோசடிகளுக்க துணை போகும் கள்ள மௌனத்தோடு நிலங்களை தொலைத்து பெரும் அறுவடைக்காக கனவு கண்டு பொருள்தேடி ஓடியபடி இருக்கும் வாழ்வில் எழுந்த குற்றஉணர்வுகளை பகிர்ந்தபடி இருந்தேன்.
நன்றி - திணை

2 comments:

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு

Yaathoramani.blogspot.com said...

கவித்துவமான நடையில் சொல்லப்பட்ட
மனித மிருகங்களின் அவலம்
மனம் கனக்கச் செய்து போகுது

Post a Comment