Thursday, August 13, 2015

கட்டியக்காரனின் 'நகை'மொழி

கட்டியக்காரனின் 'நகை'மொழி
-ந.பெரியசாமி


நாரதர் கலகத்திற்காக கொண்டு வந்த கனியை அம்மை அப்பனே உலகமென சுற்றிவந்து விநாயகர் கனியை பெற்றுக்கொள்ளும் கதை எல்லோரும் அறிந்த கதைதான். இப்படி எல்லோரும் அறிந்திருந்து புறக்கணிக்கப்பட்டவர்களின் மீதான கரிசனத்தில் அவர்களின் வாழ்வியல் வலியை அதிலிருக்கும் அரசியல் ஏமாற்றத்தை  தன் எள்ளல் மொழியால் கவிதையாக்கி நாமும் அவ்வலியை உணரச் செய்திடகிறார் இசை.  சாக்கடை, கொசு, குடிகாரன், ஈக்கள், பைத்தியம், காலை மாலை நடைக்காரர்கள், டிரைவர், கிளினர், ஊறுகாய் மட்டை, ஸ்கூட்டி, நடைபாதை வியாபாரி, டீக்கடை... இப்படி நாம் அன்றாடங்களில் சந்திக்கக் கூடியன, கூடியவர்களே அவரின் பாடுபொருளாக இருக்கிறது. அந்தக் காலம்  மலையேறிப்போனது தொகுப்பின் கவிதைகள் எள்ளலும், அது நம் உணர்வில் பாய்ச்சும் வலியையும் நாம் நினைவில் கொள்ள அவர்களின் மீதான கரிசனம் நம்மையும் தொற்றும்.

இத்தொகுப்பை சேலம் அம்மாப்பேட்டை சிவா லாட்ஜிற்கும் சமர்ப்பணம் செய்திருப்பார். அந்த லாட்ஜ் வே.பாபு கண்டடைந்த பொக்கிசம். எல்லா லாட்ஜையும் போல வெறும் அறைகளை மட்டும் கொண்டதல்ல. அடுத்தவர்களின் உணர்வை  மதிக்கத்தெரிந்த மகத்தான பணியாளர்கள் இருக்கிறார்கள். நம் இயல்பில் எவ்வித பங்கமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வார்கள். சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் வந்து போனவர்களே. கேரள, கன்னட எழுத்தாள நண்பர்களும் வந்துபோயிருக்கிறார்கள். வெறுமனே எல்லோரும் வந்துபோவதில்லை. மனதை நிர்வாணப்படுத்திவிட்டு தக்கையாக வெளியேறுவார்கள்.  அறைகளின் சுவர்களில் எங்களின் சந்தோச, துயரக் கண்ணீரும் கவிதைகளும் படிந்து கிடக்கும். எத்தனை முறை சுரண்டி, எத்தனை முறை பட்டிப்பார்த்து, எத்தனை முறை பெயிண்ட் அடித்தாலும் போகாது. உள்ளிருக்கும் செங்கலோடு உறைந்து கிடக்கும். இசையின் இச்சமர்ப்பணம் நெகிழ்வானது.

நளினக்கிளி கவிதை தொகுப்பின் மணிமகுடம். இசையை நான் காலாகாலத்திற்கும் கொண்டாட இக்கவிதை போதுமானது. நாம் எவர் ஒருவர் மீது கரிசனம் காட்டத் துவங்குகிறோமோ அப்பொழுதே சுரக்கத் துவங்கும் அவர்களின் உள்ளிருக்கும் அழகுணர்ச்சி. தன் கை அசைவு சாம்பல் நிறப் பறவையாக அசைகிறதென்பதை அக் கிளினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மைப்போலவே. இசை கண்டடைந்திருக்கிறார். இனி எந்த கிளினர் கை அசைத்தாலும் அச் சாம்பல் நிறப் பறவையோடு இக்கவிதையும் மிதக்கும் காட்சியை காண்போம்.

தின்று பெருத்ததால் நடக்கிறார்களோ, ஆரோக்கியத்திற்காக நடக்கிறார்களோ, பெரிய மனிதர்களின் தயவு தேவை என்பதற்காக அவர்களோடு சேர்ந்து நடக்கிறார்களோ, ஜால்ராவை நடையிலும் போட முடியும் என்பதற்காக இருக்குமோ அரசியல்வாதிகளுடன் நடக்கும் அல்லக்கைகளின் நடை, இசையின் 'இன்னொருவன் சொல்கிறான்' கவிதையில் வரும் காரணமாக இருக்குமோ என அவ்வப்போது கேள்விகள் மனதில் தோன்றும். உணவில், உழைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு காரணமான கார்ப்ரேட் அரசியலால் உலகத்தை காலை, மாலை நடைக்காரர்களாக மாற்றிக்கொண்டிருப்பதை இசை கூத்தில் வரும் கட்டியக்காரனாக மாறி தன் 'நகை'மொழியால் தொகுப்பில் சில கவிதைகளில் காட்சிபடுத்துகிறார்.

வெள்ளத்தால் ஆற்றின் கரை ஒதுங்கிக் கிடக்கும் மரங்களைப் போல திடுமென காணக்கூடும் சில பைத்தியங்களை. பூட்டை சுமந்தபடி, பாட்டில்களை சுமந்தபடி, ஹெல்மெட்டை மாட்டி. இவர்களில் பெண்ணாக இருப்பின் நம் சமூகம் அவர்களையும்  பிள்ளை சுமக்கச் செய்திடுகிறது. இவர்களின் கடவுளாக அவதரித்தவர்கள்தான் டீக்கடை, நடைபாதை வியாபாரிகள். திட்டிக்கொண்டே எதையாவது தின்னக் கொடுத்துவிடுவார்கள். சில நேரம் சுடுதண்ணிரை மேலே ஊற்றி துன்புறுத்தினாலும் அவ்வப்போது டீயை கொடுக்கும் புண்ணியவான்களும் இவர்களே. அப்படி வாங்கப்பட்ட ஒரு டீயை பார்க்கும் இசை தெய்வமே/இந்த டீ/சூடாதிருக்கட்டும்/சுவை குன்றாதிருக்கட்டும்/பருகப் பருக பல்கிப் பெருகட்டும் என வேண்டுதல் வைக்கிறார். நமையும் வைக்கச் செய்திடுகிறார்.

மின்கம்பம் சாய்க்கும் டாஸ்மாக், வித்யாபதியிடம் சரணடைதல், கண்டடைய வேண்டிய அரூப விரல், நடந்தபடியே இருக்கும் பயக்கிறுக்கு, எச் செயலுக்காக போகிறோமோ அச்செயலுக்காக நமை தகவமைத்துக்கொள்ளும் போக்கைக்கூறும் 'தம்பி' கவிதை, திருட்டுக் களையை போக்கும் ஈக்கள், நினைவில் தழுவும் காதலி, முட்டை புரோட்டவுக்குள் குதிக்கும் ஆனந்தன், நமக்கான ஊறுகாய் மட்டையை தேடச்செய்தல், ஃபேனை ஏற்றிவைக்கச் செய்திடுகிற பாலை, நமை வாங்கும் காற்று, ஒப்புக் கொடுக்க வைக்கும் 'நைஸ்', தனிமையின் விளையாட்டுகள், மடை மாற்றும் கனவு, உழைப்புக் கனி ஈந்தவோர் மீதான அக்கறை, வாணிஸ்ரீ வருகைக்காக உலகை திறந்து வைத்தல், விநாயகர் சுமந்திருக்கும் கனியின் ரகசியம், வீட்டை உலகமாக்கியவர்களின் தொடரும் துயரம், குற்ற உணர்வின் அறவுணர்ச்சி, குழந்தைகளின் பசிக்கு மண்ணைத் தின்னக் கொடுக்கும் சமூக அவலம், காமத்தின் தேவை வடிய உதிர்க்கும் தத்துவக் கணக்கு, லூஸ்கேர் இயக்கும் ஸ்கூட்டிகளின் தடத்தில் அங்கப்பிரார்த்தனை இருத்தல், இணங்கி இருக்கவிடாது தொரத்தியபடி இருக்கும் அதிகாரம், கறைபடாதிருக்க பாதுகாப்பு பட்டையை சுமந்தபடி இருக்கும் துயரம், மலையேறிப்போன காலம் குறித்த சலிப்பு, உளுந்து வடைகளின் உறுதித்தன்மை என வலியூட்டும் நகைப்பின் மொழியில் லயித்துக்கிடக்கச் செய்திடுகிறார்.

தன்னில் விழும் சறுகின் பாரத்தைக்கூட நூல் பிரித்து வட்ட வட்டமாக அலைவு கொள்ளச் செய்யும் நீரின் தன்னையில் தான் கொண்ட, பார்க்க நேர்ந்த துயர்களை தனக்கான மொழியின் வல்லமையால் நறுக்குத் தெறித்தாற் போன்ற மின்னடிப்புகளால் மனதில் அலைவுகளை ஏற்படுத்தக்கூடியன இசையின் கவிதைகள்.

வெளியீடு- காலச்சுவடு.

நன்றி- கல்குதிரை

No comments:

Post a Comment