Monday, December 1, 2014

nantri: Lakshmi Manivannan

தோட்டாக்கள் பாயும் வெளி
-------------------------------------------
ந .பெரியசாமி கவிதைகள்

வெளியீடு :
புது எழுத்து
2/205 ,அண்ணாநகர் ,காவேரிப் பட்டினம் -635112
கிருஷ்ணகிரி மாவட்டம்

பக்கம் ; 68 விலை ;ரூ 70

"ஆசை கொண்டு வாங்கிய மூன்று சக்கர சைக்கிளை வீட்டினுள் விருப்பம்போல ஓட்டித் திரிந்தேன் . வளர்ச்சி கொள்ள சற்றே பெரிய சைக்கிள் .தள்ளிப் பழகி சிறுசிறு காயங்களுடன் பெடல் அடித்துக் கொண்டிருந்தேன் .விடாபிடியாக அதனோடு பிரியம் கொள்ள நண்பர்களின் ஆலோசனையோடு தொடர்ந்தேன் .அதன் நுணுக்கங்கள் பிடிபட வீதியில் நானும் எல்லோரோடும் ஓட்டினேன் "
முன்னுரையில் பெரியசாமி கூறும் வார்த்தைகள் இவை .இத்தொகுப்புக்குப் பொருத்தமான வார்த்தைகளும் கூட .

மிதமிஞ்சிய சரளம்தான் தற்போதைய தமிழ்க் கவிதை எதிர்கொள்ளும் அவலம் .மற்றபடி பொதுச் சரடை நேர்மையுடன் எதிர்கொள்ளும் கவிதைகளால் நிரம்பி இருக்கின்றன பெரியசாமியின் தோட்டாக்கள் பாயும் வெளி .போலியான .பாசாங்குகள் அற்ற,தனது உலகம் பற்றி மிகையான பற்றுதல்கள் அற்ற கவிதைகளை இத்தொகுப்பில் பெரியசாமி எழுதிச் செல்கிறார் .இது இப்போது காண்பதற்கரிய பண்பு .எனினும் கவிதை சொல்லல் முறையில் தென்படும் அலுப்பு குறைபாடுதான் . ஒரேவகையான வாக்கிய அமைப்புகள் இதற்குக் காரணம் .லௌகீகத்திலிருந்து வெளிப்படும் இவரது கவிதைகள் முடக்கு வாதம் வந்தவற்றைப்போல உள்ளன .சில கவிதைகளைப் படித்து முடித்ததும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது எனும் எண்ணத்தை மனதில் ஏற்றுகிறது அக்டோபர் முதல் நாளில் , நிறம் மாறும் தேவதை, எழுத மறந்த பக்கங்களில் ஆகிய கவிதைகள் இதற்கு உதாரணங்கள் .

தோட்டாக்கள் பாயும் வெளி , நட்சத்திரத்தை அறையுள் அடைத்தவள்,சங்கடை அமுது ,பாம்புகள் பாம்புகளாயின,வண்ணக்கிளி ,வேர்கள் வான்நோக்கி வளர்ந்தன ,மழை,உயிர்ப்பு ,நித்திரையை உருட்டும் பூனை ,எனது கடல் ,ஓணான் உருவாக்கிய பகை ,அணிலோடு மழை என பல கவிதைகள் சிறப்பானவை .

இத்தொகுப்பில் "நிலையானது " என்கிற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது .

கவிதை ஆகச் சிறந்த ,எளிய கலை வெளிப்பாட்டு வடிவம் என்பதில் சந்தேகமே இல்லை .அது எழுதுகிறவனின் மன ஓட்டத்தையும் காட்டித் தந்து விடுகிறது .பெரியசாமி எனக்கு நல்ல நண்பர் . அவர் கவிதையை கண்டுபிடித்தலின் விஞ்ஞானமாக மாற்றித் தரவேண்டும் என்பது ஆசை .

நிலையானது

அந்தி வேளையில்
விளையாடிக் கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள்
தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில்
சூரிய காந்திப் பூ
அடுத்து வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காவென
கட்டங்களை நிரப்பினர் .
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவற்றை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன .
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர் .
எனக்கானதை நிரப்ப கட்டங்களற்று
வெறிச்சோடிப் போனேன்

No comments:

Post a Comment