Tuesday, December 23, 2014

சாறற்ற சோள தக்கைகள்...

சாறற்ற சோள தக்கைகள்...
ந. பெரியசாமி

எறும்புகள் நொறுங்கிய அரிசிகளை சுமந்தவாறு அங்குமிங்குமாக ஊர்ந்துகொண்டிருந்தன. அதிசயமாக எவ்வித தீங்கும் கொடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் எனை பார்க்க எங்கப்பா போகுது என்றான். அதன் புற்றுக்கு என்றேன். புற்றுனா? வினாவினான். அதன் வீட்டிற்கு என்றேன். நாம கடையில சிநாக்ஸ் வாங்கி வந்து வீட்டில் தின்பதுபோன்றா என்றான். இது அப்படி அல்ல உணவு கிடைக்காத காலங்களில் பசியாற சேமிப்பதற்கு கொண்டு செல்கிறதென்றேன். சேமிப்பு என்றால்.... அவனும் நானும் தொடர்ந்த உரையாடல் நினைவுக்கு வந்தது வெ.வெங்கடாசலத்தின் திமிர் கவிதைத் தொகுப்பை வாசித்து முடிக்க.

எல்லோருக்கும் 'சேமிப்பு' என்பது எதிர்காலத்தின் தேவையை பூர்த்திகொள்வதற்காக இருக்க. தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஒரு இனத்திற்கு சேமிப்பு என்பது அழிக்கப்படவேண்டியதாக இருக்கிறது. 'எனது நாட்குறிப்பு' எனும் கவிதையில் இதை உணர முடிகிறது. காலகாலமாக இடமற்றவர்களாக மாற்றி, கற்பழிப்புகளை நடத்தி, உழைப்பைச் சுரண்டி, சொத்துக்களை பறிமுதல் செய்து, மலத்தின் நாற்றத்தோடு இருக்கச் செய்து, மலத்தை தின்னச் செய்து, கொத்துக் கொத்தாய் உயிரைப் பறித்து, செருப்புப்போட அனுமதி மறுத்து, துண்டுகளை தோல் ஏற்ற மறுத்து, குடிக்க நீர் கொடுக்காதிருந்து, கல்வியற்றவர்களாக மாற்றி, கையேந்தி நிற்கச் செய்து, வன்புணர்ச்சி செய்தல் என எமாற்றத்தின் வலி அவமானத்தின் வலி என வலிகளையும் அவமானங்களையும் சேர்ந்து வைத்திருப்பதைக் காணச் சகிக்காது திமிரி எழுந்து கல்விகற்று கேள்வி கேட்டு மானமும் ரோசமும் எனக்கு உண்டென  அதிர அதிர ஒலிக்கும் பறையாக இத்தொகுப்பைப் பார்க்க முடிகிறது.

உடல்நீர் வற்றி உலர்ந்து
விலா எலும்புகள் துருத்தி நிற்கும்
அந்த கறுத்தமேனி முதியவரை
டேய் என்று அதட்டியது ஒரு சிறுவன் குரல்
அந்த அதட்டலுக்கு வயது ஈராயிரமாண்டுகள்
அந்த அதட்டலை
திரும்பி முறைத்தது ஒரு பார்வை
அந்தப் பார்வைக்கு வயது கால் நூற்றாண்டு
அந்த அதட்டல்
அந்த முறைப்புமுன் முதன்முறையாக பம்மியபோது
அம்முதியவர் கண்களில் விரிந்தது புலரி.
என முடியும் திமிர் கவிதையில் இதற்கான கூறுகளை பார்க்க முடிகிறது.

விசையோடு எழுந்து கல்வி கற்று  பெரும் உழைப்பைச் செலுத்தி முன்னேற்றம் கொண்டிருப்பதை காணச் சகிக்காது கிடைக்கும் காரணங்களை புள்ளியாக்கி அழிவின் வட்டங்களை வரைந்தபடி இருக்கும் ஆதிக்க திமிரின் நீளும் பட்டியலில் என்றென்றும் நினைவிலிருக்கும் இளவரசன் திவ்யாவின் காதலை பகடையாக்கி மூன்று கிராமங்களை காவுகொண்ட கயமையை இவ்வுலகம் மறவாது. அக்கிராமங்களை நேரில் சென்று பார்க்கையில் அழிவின் துயர்களை பேசிய அப்பகுதி மக்களின் வலியை தாங்காது திரண்ட நீர்கள் எற்பட்ட கோபத்தால் உடலுறிய வெப்பத்தால் ஆவியாக்கிட நீரற்ற வெறித்த விழிகளோடு பார்த்து திரும்பிய நாட்களை நினைவூட்டின கவிதைகள். பயம் எனும் சொல்லை விதைக்க இளவரசனை பலியிட்டு வலம் வரும் காட்சியை வேடிக்கைப் பார்த்தபடி இருக்கும் வாழ்வை ஏளனமாக பார்க்கின்றன கவிதைகள்.

தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் எள்ளலோடு எழுதப்பட்டிருக்கிறது. அதிகாரத்திற்கு எதிரான கோபத்தின் மிக வலிமையான வடிவம் எள்ளல்கள்தான் என்பது மேலும் நிரூபனமாகியது.

துயரமும், வலியும் நிறைந்த வாழ்விலிருக்கும் அழகியலையும் அவ்வப்போது காட்சிபடுத்தும் கவிதைகள் வாசிப்பில் ஆசுவாசப்படுத்துகின்றன. 'தாத்தா கோவணம்' கவிதை தெரிந்த தாத்தாக்களையெல்லாம் கண் நிறைத்தது. அவர்களின் உருவமே அழகிய ஓவியம். பார்த்து ரசிக்கவும், வாழ்வை படிக்கவுமாக நடமாடும் சிற்பங்கள் தாத்தாக்கள் என்பதை கவிதையில் காட்சியாக்கியுள்ளார் வெங்கடாசலம்.

வளர்ந்துகொண்டே இருக்கும் நகரில் நம்மின் இழப்பை இவரும் தன் பார்வையில்பட்டியலிட்டுள்ளார். நமக்கான பட்டியலாகவும் அது  இருப்பதோடு துயரின் வடிகாலாகவும் இருக்கிறது.

எனக்காக நீ எதுவும் பேச வழியற்று இருக்க பெய்யும் கருணை மழையால் சாரு வத்திப்போன சோளத்தக்கையை மேலும் பொடிந்துபோகச் செய்யுமே ஒழிய துளிர்ப்புக்கு வழிவகுக்காது எனும் எள்ளல் நிழலாய் தொடர்கிறது.

எதுவுமற்றவன் எதை இழந்து எதைப் பெறுவது எனும் கேள்விக்கு இச் சமூகம் என்ன பதில் வைத்திருக்கிறது? தள்ளி உட்காரும் நீதியில்தான் 'இடம்' கிடைக்கும் என்பது காலத்தின் உண்மை.

கருப்பனும் சடையனும் புரண்டெழுந்து கருப்புச் சூரியனாக வலம் வந்து அவமானங்களை அழித்து பரிணாமம் கொள்ள வேண்டிய வாழ்வின் இலக்கு வெகு தூரத்தில் இல்லையெனும் இவரின் நம்பிக்கை நமக்கும் பற்றிக்கொள்கிறது.

வெளியீடு
மருதம், பெரியகாப்பன்குளம், நெய்வேலி-607802
விலை-ரூ.40

nantri:malaigal.com

No comments:

Post a Comment