Thursday, June 30, 2016

தானியக்காளியின் முத்த விதைகள்...

தனித்திருந்தேன் மதிய பொழுதொன்றில். சூரியன் உடலுக்கருகில். எல்லாவற்றின் மீதும் எரிச்சல் அருவியாக கொட்டியபடி இருந்தது. எதன் மீதும் நாட்டங்களற்றிருந்தேன். பாலைக்கான நிறத்தை கொட்டியபடி இருந்தது காலம். வாசல் திறந்தது. முத்தம் ஒன்று உடல் அணைக்க சூரியன் விலகியது. குளிர்மையின் நிறம் அறையுள் நிரம்பிக்கொண்டிருந்தது. எல்லாவற்றின் மீதும் பற்றுகள் அரும்பத் துவங்கின. முத்தத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சக்திஜோதி முத்தத்தின் வலிமை உணர்ந்தவர்போலும். அவரின் பெரும்பாலான கவிதைகளில் முத்தத்தின் ஈரத்தை உணரலாம். மழைக்குப்பின் இலைகளில் தேக்கி வைக்கும் சொட்டு துளி போல் இவரின் கவிதைகளில் முத்தம் தொக்கி நிற்கும். மழைபோல் முத்தம் பேதமற்றது.

சக்திஜோதியின் கவிமுலை எப்பொழுதும் பாலை முத்தத்தின் ஈரத்தோடு நிறுத்தங்களற்று சுரந்தபடியேதான் இருக்கிறது. இது எல்லோருக்கும் வாய்க்காது. அவருக்கு வாய்த்திருக்கிறது. அவரும் அதை லாவகமாக கையாள்கிறார். நீர்த்துப்போகாது அவ் வார்த்தையை உயிர்ப்போடு வைத்திருப்பது அவரின் ஆளுமையாக இருக்கிறது. அக்கவிமுலை ஆதித்தாயின் முலையாகவும் மாறுகிறது. ஆதிப்பெண்களின் வலியை தன் கவிதைகளில் உணரச் செய்திடுகிறார்.

ஓதற்பிரிவு, பகைவயிற் பிரிவு, தூதிற் பிரிவு, காவற்பிரிவு, பொருள்வயிற் பிரிவு, பரத்தையற் பிரிவு என வெளியேறிப்போயிருக்கும் தலைவனுக்காக காத்திருப்பின் வலியையும், காத்திருப்பின் காலங்களில் அவர்களின் நினைவில் இருக்கும் காதலையும் இன்றைய மொழியில் அதன் வலிமையோடு தந்தபடி இருக்கிறார் கவிதைகளில். அப்படியான கவிதைகளை இவரின் ஆறாவது தொகுப்பாக வந்திருக்கும் சொல் எனும் தானியம் தொகுப்பிலும் காணமுடிகிறது.

தான் பிறர் கையகப்படுத்தும் நிலம் அல்ல என்பதை உணர்ந்து நிலவை தனதாக்கிக் கொண்டு சூரியனை நோக்கி பயணிப்பவள்...

தன் வேலை நிமித்தமான பிரிவின் காலங்களை மகளின் ஓவியங்களில் கண்டடைபவள்..

புறப்புகார்களில் வெறுப்புற்று தன்னை தனிமைப்படுத்தி சொற்களின் ஆழம் கண்டு மௌனத்தில் ஆரவாரிப்பவள்...

தன் கனவின் ரகசியங்களை பறவைகளுக்கு இரையாக்குபவள்...

கால மாற்றத்திற்கேற்ப அப்பா மகள் உறவுகளில் ஏற்படும் மாற்றத்தை தன் காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏக்கத்தோடு கவனித்திருப்பவள்..

தன் இயல்பை கணித்து பஞ்ச பூதமாக பரிணமித்திருப்பவள்...

புதிரும் மாயங்களும் நிறைந்த வாயிற்கதவை என்றுதான் திறக்கப்போகிறீர்களோவெனும் எதிர்பார்ப்போடு இருப்பவள்...

வானுயர வலம் வரும் தேவனுக்காகவும், பால்ய சிநேகிதிக்காகவும் காத்திருப்பவள்...

வனதேவதையாக மின்னலை வெடிப்புறச் செய்து தீக்கோளமாகி நடனமிட்டு காமத்தை விளைவிப்பவள்...

உள்கிடக்கும் அழுக்கு, தோய்ந்த குருதி, துயருற்ற கண்ணீரின் உப்புப் படிமமென எல்லாவற்றையும் முத்தத்தால் கலைத்து காத்திருப்பவள்...

கூந்தலில் வழியும் பச்சை மழையை வேடிக்கை பார்த்திருப்பவள்...

முந்தானையில் நிரப்பி வந்த கூலியால் வீட்டின் பசியாற்றி நிலமெங்கும் காதலை விளைவித்துக்கொண்டிருப்பவள்...

தன்னிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள யாவற்றையும் நேசிப்பவள்...

இங்கு எல்லாம் பெண்ணாகவே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கென்று ஏதுமில்லை எனும் நிலையில் இச்சமூகம் வைத்திருந்தபோதும் அன்பின் நிலமென இருக்கிறேன் எனும் பெருமிதம் கொள்பவள்...

தன்னுள் இருக்கும் காதல் சுரபியின் காரணம் தெரியாது வியந்து கிடப்பவள்...

விடுவித்துக்கொள்ள இயலாத சிலிப்புறும் கணங்களை வரிசையிட்டு விடுவித்துக்கொள்ளப்போவதாக பாவனை செய்பவள்...
சூரிய வாசம் உணர்ந்து தன்னை ஒப்புக்கொடுத்த தினத்தின் நினைவுகளை காட்சிப்படுத்துபவள்...

கடல் சேரா கூழாங்கற்களின் இசையை கேட்டபடி வெயில் நதியில் தகித்திருப்பவள்...

திளைத்திருந்த கணங்களை காட்சியாக்கி கொண்டாடக் கூப்பிடுபவள்...

மௌனப் பரிசில் நிரம்பி விடுபவள்...

பனித்துளிகளை சுவைப்பவள்...

கிடைத்த  கிடைக்கும் முத்தங்களை, உடலை நெகிழச்செய்து கண்களை சிவப்பேற்றிய முதல் முத்தத்தோடு பொருத்திப் பார்ப்பவள்..

புராதன வேட்கை எதுவென அறிந்து கொள்ள இளமையை தொலைத்தேனா அறிந்தேனா எனும் குழப்பங்களோடு இருப்பவள்...

நீர்க்கால்களின் தடம் அறிந்து அருந்த வல்லவரை தன் இமைக்குள் வைத்து நீலவானமாக ஒளிர்விக்கச் செய்பவள்...

மாசற்றது நிர்வாணம் என பெருமை பூப்பவள்...

கசடுகள் நிரம்பிய மனதோடு காலங்காலமாக உடன் வாழும் சக இனத்தை தங்களின் சவுகரியங்களுக்காக பெரும் துரோகங்களை விளைவித்துக்கொண்டிருப்பதால் உண்டான தொடரும் தூக்கமற்ற இரவுகளின் வலியைக் கூறி சவம்போல் யுகாந்திர உறக்கம் எனை தழுவட்டும் என வேண்டுபவள்...

மனதில் தாவரங்களை வளர்த்தபடி இருப்பவள்...

நிலைத்திருத்தலில் தன் இயங்குதல்களை கண்டடைந்தவள்...

ஒளிர்தலின் மர்மங்களை சொற்களாக்கி பூசிக்கொண்டிருப்பவள்...

வீடு மட்டுமே தன் உலகமல்ல என வாழ்பவள்...

காயப்படுத்தியது போதும் ஒரு முத்தம் அல்லது ஒரு சொல் போதுமென இறைஞ்சுபவள்...

கொடுக்கப்படாத முத்தத்தை உடலில் துளிர்க்கச் செய்திருப்பவள்...
என எண்ணற்ற பெண்களை சொல் எனும் தானியம் தொகுப்பில் தரிசிக்க இயலுகிறது.

சொல்லப்படும் சமாதானங்களிலும் சுயமான சமாதானங்களிலும் தங்கள் வாழ்வை இயல்பாக நகர்த்தியபடி இருக்கும் பெண்களின் வலிகளை இத்தொகுப்பெங்கும் சக்திஜோதி விதைத்தபடி செல்கிறார்.

நன்றி- படிகம்

1 comment:

Tamil Selvam said...

பெண்ணின் வலிகளையும்,உணர்வுகளையும் கவிதை நூலுக்கான விமர்சனமாய் கவிதைத் தொகுப்பையும் வாசிக்கத்தூண்டியுள்ளது.

Post a Comment