Tuesday, July 12, 2016

பயணத்தில் கண்ட கதை முடிச்சுகள்...


கதைகள் சொல்லவும் எழுதவுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வாசிக்கும் கதைகளை விடவும் கேட்கும் கதைகள் மர்மமான குகையுள் நுழைந்து கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. இந்த அனுபவம் எல்லோருக்கும் பொதுவானதாகவும் இருப்பதில்லை. அப்படி இருக்க வேண்டிய கட்டாயமுமில்லை. கணேஷ் வெங்கட்ராமனின் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் தொகுப்பிலுள்ள கதைகள் எழுதப்பட்ட கதைகளாக இருந்தபோதும் அதன் தன்மை சொல்லும் கதைகளாகவும் இருக்கின்றன.
சிறுவனாக இருக்கும்போது எங்கள் ஊரில் வருடாவருடம் டூர் சீட்டு நடத்தி முடிவில் டூர் போய் வருவார்கள். அப்படி வந்தவர்கள் ஊரில் பார்த்தவற்றை பொங்கப் பொங்க ஆர்வத்தோடு சொல்லியபடியே இருப்பார்கள். ஒரு ஊரை பார்த்து வருவதில் இவ்வளவு கதை இருக்கா எனும் ஆச்சரியம் எனைப் பிடித்தாட்டும். எங்கள் குடும்பத்தில் அப்படி யாரும் போய் வராமலிருப்பது எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்கும். நீயும் டூர் சீட்டில் சேரும்மா என அம்மாவிடம் ஆசையாய் சொல்ல பொழப்புல முளைச்ச புள்ளப் புடுங்கவே நேரம் போதல. இதுல பொங்க வச்சி பூச வேற போடனுமா போடா போக்கத்தவனேயென திட்டிட அதுகுறித்து அம்மாவிடம் எப்பொழுதுமே கேட்பதில்லை. ஆனால் டூர் போய் வந்தவர்களிடம் போய் கதைகேட்டு ரசிப்பேன். ஒரே ஊரைப்போய் பார்த்து வந்தபோதும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருவிதமான கதை இருப்பதும் எனக்கு பெரும் வியப்பூட்டும்.
கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்' தொகுப்பில் பெரும்பாலான கதைகள் அவர் பயணித்தின் பொருட்டு சென்று வந்த வெளிநாடுகள், அங்கு அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள், அவரை ஈர்த்த சூழல்களை கதைகளாக்கி சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆபத்தான இம் முயற்சியில் வெற்றியும் தோல்வியுமான கலவையோடு கதைகள் உள்ளன.
தைவானில் உள்ள டைசுங் நகரில் இருக்கும் புத்தர் சிலை பார்த்த அனுபவத்தை காட்சிபடுத்தப்பட்டிருப்பது நம்மையும் உடன் அழைத்துச் செல்லப்பட்டதுபோல் இருந்தது. சிரிக்கும் புத்தர் சிலை நம்மையும் ஆச்சரியப்படுத்தியது. இவருக்கு இரண்டாவது தரிசனமாக அமைந்தது அங்கு வேலை பார்க்கும் முதியவரின் முதுகில் பச்சை குத்தப்பட்ட புத்தர். வியர்வையோடு மினுங்கிய பச்சை புத்தரே நம் நினைவிலும் இருப்பார்.
ஒருவர் முதன்முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் அவர் இத்தொகுப்பை வாசித்திருப்பாரேயானால் உறுதியாகச் சொல்லலாம் எவ்வித இன்னலும் இன்றி நிறைவான பயணத்தை அனுபவித்து விடலாம். அதற்கான வழிகாட்டுதலும் இத்தொகுப்பில் உள்ளன.
சம்பவம்-1
நண்பரின் அறை ஒன்று பகலில் பிளாஷ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சா¬லாயாகவும், இரவில் அவர் வாசிக்கும் நூலகமாகவும் மாற்றம் கொள்ளும். அங்கு வந்துபோகும் நண்பர்கள் தேவையான புத்தகத்தை எடுத்துபோய் வாசித்து பின் கொண்டு வந்து வைத்துவிடுவார்கள். அந்த அறைக்கு ஒருநாள் சென்றேன். பெரும் மாறுதலோடு இருந்தது. புத்தகம் இருக்கும் பிரோவின் முன் பெரிய பிளாஷ்டிக் மூட்டை வைக்கப்பட்டிருந்தது. என் பார்வையால் என்னுள் இருக்கும் கேள்விக்கு பதிலைத் தந்தார். நண்பர்களை திருடர்களாக்கிப் பார்க்க விரும்பவில்லை அதனால்தான் இம்மாற்றம் என்றார்.
சம்பவம்- 2
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னங் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிகவுழன்று- பிறர்... என நீளும் பாரதியாரின் கவிதை வரிகளோடு அவரின் உருவம் பதித்த தாள் ஒன்றை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த நண்பர் ஒருவர் அதை ரசித்து பார்த்தபடி இருந்தார். சிறிது நாள் கழித்து அவரின் வீட்டில் ஒரு விழாவிற்காக சென்றிருந்தேன். நான் பத்திரப்படுத்திய தாள் அங்கு அழகான சட்டமிட்டு மிகக் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது.
மேற்கண்ட சம்பவங்களும் தொகுப்பிலிருக்கும் சரவணரவி எனும் கதையை வாசிக்க நினைவில் வந்தன. சரவணரவி கதையிலும் வெகுநாட்களாக பாதுகாத்த போட்டோவை வீட்டிற்கு வந்திருந்த நண்பரிடம் காட்டி பெருமை கொண்டு பழைய நினைவில் லயித்திருந்தனர். அவருக்கு விருதிட்டு வழியனுப்பி வைத்தனர். ஆனால் அவர் விடைபெற்றுச் செல்லும்போது அவரோடு அப்புகைப்படமும் போய்விடுகிறது.
கெட்ட கெட்ட கனவாக வருது. எப்ப பாரு ஒரே கனவு, இடத்த மாற்றிப் படுக்கனும், கெட்டதை கனவில் கண்டால் நல்லது நடக்கும். நல்லதை கனவில் கண்டால் கெட்டது நடக்கும். கனவு கண்டமாதிரியே ஆகிடுச்சிப்பா, என இப்படியான சொல்லாடலை அடிக்கடி கேட்டபடியே இருப்போம். படைப்பாளிகளிடமிருந்தும் கனவு எப்படி தப்பி விட முடியும். கணேஷ் வெங்கட்ராமனும் 'கனவு நோயாளி' எனும் கதையில் இருளுக்கும் உடலுக்குமான உரையாடலில் நமை கவனிக்கச் செய்திடுகிறார்.
கலையும் பிம்பங்கள், வாசனை, சமிக்ஞை கதைகளில் வரும் கதை மாந்தர்களின் உலகு எனக்கு பரிச்சயம் இல்லாத உலகாக இருந்ததால் என்னால் அக்கதைகளோடு லயித்திருக்க முடியவில்லை. வெறுமனே சினிமா பார்த்து, சினிமா பார்த்து வருவது போன்ற மனநிலையே இருந்தது.
உறவுக்காரன், ஊர்க்காரன், ஆண்டான், அடிமை, படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே நேர்கோட்டுப் பார்வைதான் பெண் மீது என்பதை தொகுப்பில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் சுட்டுகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.
வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணின் கதை கூறும் 'இரு குரல்கள்' மற்றும் தன்னிடம் வேலை பார்க்கும் பெண்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களை தன் எச்சில் பண்டமாக மாற்றுபவள் கதை கூறும் 'முதல் நாள்' கதைகளில் சக மனுசிகளின் துயர்களை கூறுவதன் மூலம் காலமாற்றம் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிந்தனை மாற்றம் இல்லாது இருப்பதை உணர்த்திடுகிறார். இரு கதைகளுமே வாசிப்பவர்களை தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவை.
பயணம் சார்ந்த கதைகளை தனிதொகுப்பாக்கி இருக்கலாம். இருவித மனநிலைகளோடு வாசிக்க வேண்டிய தொகுப்பாக உள்ளது கணேஷ் வெங்கட்ராமனின் 'டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்'
வெளியீடு- காலச்சுவடு.
nantri:malaigal.com

No comments:

Post a Comment