Saturday, January 26, 2013

வலியின் சித்திரங்கள்

கன்றின் காயம் உலர்த்த
நா வருடும் பசுவின்
நீர்கோர்த்த கண்களை நினைவூட்டி
கலைந்து கிடந்தாள் மதுவாகினி
தவிப்பில் முகம் ஏந்த
எடுத்து விரித்தாள் நோட்டை
எங்களின் அனகா
தேதிவாரியாக
திட்டிய ஆசிரியர்களை
கேலிச் சித்திரமாக்கத் துவங்கினாள்
காக்கை ஒன்றை அழைத்து
ஆசிரியையின் நாவை இழுத்து
எச்சமிடச் செய்தாள்
வாத்தியாரின் முகத்தில்
நாயை மூத்திரமிட வைத்தாள்
அடுத்து தீட்டினாள்
உடலை குச்சி குச்சியாக
அதட்டி அடிக்கடி குச்சியை ஓங்கும்
குற்றத்திற்காகவாம்
கிள்ளும் டீச்சரின் காதை
திருகி திருகி இழுத்தாள்
தரை தொட்டுத் தொங்கும் வரை
தலைமையாசிரியரின் தலையை மழித்து
கரும்பலகையாக்கி மார்க்கிட்டாள்
அவளின் நீதிமன்றத்தில்
அத்தனை ஆசிரியர்களையும்
குற்றவாளிகளாக கூண்டில் ஏற்றி
வலிவடித்து வெளியேறியவளை
மடியிலிட்டு உறங்கச் செய்தேன்
அவளின் முன்னத்தி நாட்கள்
நினைவில் காட்சிகளாக
அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாய் சோப்பு வாங்க
பூனை மீது பழிபோடுவாள்
வந்திடும் விருந்தினர்களின்
செருப்புகளை ஒளியவைத்து
செல்லும்போது பரபரப்பாக்கி
நாயின்மீது சாட்டிடுவாள்
தேவைகளை வாங்கிக்கொள்ள
உறுதியளித்தபின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட், வண்டி சாவிகளை
பட்டியலிடும் அவளின் குறும்புகள்
கொஞ்சநாளை ஏதுமற்று
அடிக்கடி தனித்திடுகிறாள்
அவ்வப்போது மொட்டைமாடியில்
எதையோ சொல்லி திட்டிடுகிறாள்
யாரிடம் பேசினாய் எனக்கேட்க
எதையோ மறைத்து மழுப்புவதென
மாற்றம் நிறைந்த செய்கைகள்
நீர் முடிச்சாய் மண்ணில் உருள
பள்ளிக்கு நாளை அனுப்பவேண்டுமெனும்
பதட்டத்தில் உடல் நடுங்கினோம்...

நன்றி: வலசை

No comments:

Post a Comment