Thursday, October 19, 2023

நன்றி: நுட்பம்

 சுய பகடியில் பூத்த மலர்கள்

-ந.பெரியசாமி



"முழுமையற்ற, பரந்துபட்ட வாசிப்பு அற்றவர்களின் மதிப்பீடுகள் தவறான சித்தரிப்புகளையே உருவாக்கும். இத் தவற்றின் சுழலுள் சிக்கிக் கொள்ளாது தொடர்ந்து செயல்படுதலே விடுதலை உணர்வைத் தரும்."


படுக்கையின் அருகில், மேசையின் மீதோ அமர்ந்திருக்கும் சோர்வு எக் கணத்தில் வேண்டுமானாலும் நம்மை கவ்விக் கொள்ள தயாராக இருக்கும். அது சிருஷ்டிக்கும் காரணகாரியங்களுக்கு நம்மை ஒப்புக் கொடுக்காமல், விலகி எதிர்கொள்ளும் தனித்துவமே வாழ்தலின் முழுமை. இம் முழுமையை எப்படி கைகொள்ளுதல் என்பதை அல்லது எதையெல்லாம் விலக்கி வைக்க வேண்டும் என்பதை தபசியின் கவிதைகள் உணர்த்துகின்றன.


நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் சக மனுசர்/மனுசிகளின் பல்வேறுபட்ட மனபோக்குகளை சித்தரிக்கின்றன கவிதைகள். இதுவெல்லாம் நமக்கு தேவையில்லையென சட்டென முடிவுகொண்டு அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல வைக்கவும் இவரின் கவிதைகள் துணைபுரிகின்றன. தொட்டதெற்கெல்லாம் புகார்கள், சலிப்புகள், எரிச்சல்கள், அவநம்பிக்கைகள், இயலாமைகள் என வாழ்ந்துகொண்டிருப்போரின் மனபோக்குகளை கவிதைகளை காட்சிகளாக கொண்ட ஆல்பமாக "எல்லோரும் ஜடேஜாவாக மாறுங்கள்", ஜான் கீட்ஸ் ஆதவனைச் சந்தித்ததில்லை" தொகுப்புகள் உள்ளன.


இவ்விரு தொகுப்புகளிலும் சமகால புழங்கு மொழி பிரதானமாக வெளிப்பட்டிருப்பதால் கவிதைகளை நெருக்கமாக உணரமுடிகிறது. மிக எளிய சொற்களால் மிக எளிய விசயங்களை பெரும் வீச்சோடு சொல்ல வைத்திருக்கிறது கவிதை சுதந்திரம். எத்தகைய புது முயற்சிகளை கவிதைகளில் மேற்கொண்டாலும் உணர்வை கடத்துதல் சிதைவுறாது இருக்க வேண்டும். அவ்விதத்தில் தபசியின் கவிதை முயற்சிகள் வெற்றி கொண்டுள்ளதை தொகுப்புகளில் கான முடிகிறது.


பற்றுக...


எல்லா கற்பனைகளும் உங்களுக்குச் சுகமளிக்கின்றன

பின்னிப் பின்னி பேசுகிறீர்கள்.

ரசம் சொட்டச் சொட்டப் பாடுகிறீர்கள்.

பெண்களை ஆஹா ஓஹோ என்கிறீர்கள்.

காதலை சிலாகிக்கிறீர்கள்.

காமத்துக்குச் சாயம் பூசுகிறீர்கள்.

என்னிடம் ஒரு கற்பனையும் இல்லை.

பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டாக 

யதார்த்தம் என் கையில்.

பல்லைக் கடித்துக் கொண்டு

இறுகப் பற்றிக் கொள்கிறேன்.


இவ்விரு தொகுப்புகளுக்குமான மையம் இக்கவிதை எனச் சொல்லலாம்.  கார்ப்ரேட்டுகள் தங்களுன் உற்பத்தி

 பொருள்களை வியபாரமாக்க 'தினங்கள்' கொண்டாடப்படுவது, அரசின் மூடத்தனமான திட்டங்களால் எதிர்கொள்ள இயலாத மக்களின் அவதி என சாமானியர்களின் அன்றாடச் சிக்கல்களை தன் கவிதைக்கான பாடுபொருளாக மாற்றம் கொள்ளச் செய்வதில் கவிஞரின் திறன் வெளிப்படுகிறது.


பெரும்பாலானவர்களின் அன்றாடங்களின் வாழ்வில் தவிர்க்க இயலாது போன சமூக ஊடகங்களின் கருத்து கூறல், அதற்கான குறியீட்டு பதில்கள், அதனால் உருவெடுக்கும் மனப்போக்குகளை கவிதைகளில் வெளிப்பட்டிருப்பது நன்று. 


உபகாரம்


' உன் நிலம் பற்றி எழுது' என்கிறீர்கள்

என் நிலம் பற்றி எழுத என்ன உள்ளது?

பாளம் பாளமாய்

வெடித்துக் கிடக்கிறது.

யாரேனும் ஒரு குவளை நீர் ஊற்றுங்கள்.

ஏதேனும் முளை விடலாம்.


எதையாவது செய்யச் சொல்லி ஏராளமான கருத்துக் குவியல்கள் நம்மை முழ்கடித்தபடியே உள்ளன. ஆனால் செயலாற்ற யாரும் இல்லை. செயல்பாடே மாற்றங்களை உருவாக்கும். தபசி இப்படியாக நறுக்குத் தெறித்தார்போல் சொல்லிச் செல்கிறார்.



நாம் பார்க்கும், கேள்விபடும், சமூக நிகழ்வுகள் பெரும்பாலானவை கவிதைகளாக மாற்றம் கொள்ளச் செய்திருக்கிறார் தபசி. கவிதைகளில் உரைநடை தன்மை மேலோங்கி இருப்பினும் கவிதை உணர்வை வெளிப்படுத்த தவறாதிருப்பதால் சலிப்பற்று வாசிப்பை தொடர முடிகிறது. 


நாம் பெரும்பாலும் எதிர்கொள்ள நேரிடும் புறக்கணிப்புகளை எளிதாக கடந்து வர இவரின் கவிதைகள் நம்பிக்கையூட்டும். இலக்கிய உலகில் மிக சாதாரணமாக நிகழ்ந்தபடி இருக்கும் கோஷ்டி சேர்ப்பு, சாதி சேர்ப்பு, கருத்துச் சேர்ப்பு, கட்சி சேர்ப்பு என கூட்டமாகி, கூட்டத்துக்குள் இருப்போரை கொண்டாடும் போக்கின் அபத்தத்தையும் கவிதையாக்கி இருக்கிறார்.


'சர்ப்ப நதி' என லா.ச.ரா குறித்த நீண்ட கவிதை குறிப்புகள்  இவரின் வாசிப்பின் ஆழத்தை, சிந்தனை போக்கை உணர்த்துகின்றன. 


 தபசியின் நெடுநாள் பயணிப்பு, தொடர் எழுத்துச் செயல்பாடு, முடங்கிப்போகாத மனப்போக்கு எல்லவற்றையும் சுய பகடியோடு கடந்துபோதல் தனி மனிதர்களுக்கு எவ்வளவு பலமானது என்பதை கவிதைகள் உணர்த்துகின்றன. வாசித்துக் கொண்டிருக்கையில் சட்டென எதேனும் ஒரு கவிதை வண்ணத்துப் பூச்சியாக பறந்து நம்மை தொடரச் செய்யும் தன்மை தொகுப்புகளில் இருப்பதால் தபசி கவிதைகளை நம்பிக்கையோடு வாசிக்கலாம்.


வெளியீடு: வேரல் புக்ஸ்.

No comments:

Post a Comment