Tuesday, October 10, 2023

நன்றி: அம்ருதா


நிர்வாணம் ஆயுதமாதல்.

-ந.பெரியசாமி

 

இச்சன்னல் வழியே தெரிவது

வானத்தின் ஒரு பகுதிதான்

என்றான்.

முழுவானமும் தெரியும் வசமாய்

ஒரு ஜன்னல் செய்ய முடியுமா?

- பிரான்சிஸ் கிருபா.

 

எந்த ஒரு போர் குறித்தும் முழுமையான பதிவு, உண்மையான இழப்புகள் குறித்த விபரம்  வந்துவிடுவதில்லை.  அதிகாரபூர்வமாக தெரிந்தவர்களும் சொல்வதில்லை. இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பொழிப்பு குறித்தும் அப்படியான நிலையே. இலக்கிய பிரதிகள் மூலம் ஒரு சித்திரத்தை உருவாக்கி பார்த்துகொள்ளலாம்.  இலங்கையில் நடந்த மாபெரும் மனிதப் படுகொலை, இன அழிப்பு குறித்து சிறு சிறு பகுதிகள் மூலம் ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கும் முயற்சியே ஷோபாசக்தியின் எழுத்துகள்.  இது அவரது ஐந்தாவது நாவல். மடியில் படுக்கவைத்து தலைகோதியவாறு கதை கூறும் பாங்கு அவரது மொழிக்கு உண்டு. 'இந்த உலகத்தில் ஒரே ஒரு கதைதான் உண்டு' எனும் சொல்லாடல் நாவலில் அவ்வப்போது வருவதற்கான காரணத்தை நாவல் தன்னுள் கொண்டுள்ளது. 

 

தன் தேசத்திலிருந்து வெளியேறி, பிற நாடுகளில் அகதியாக அலைவுறுபவனின் வாழ்வில் அமைதி உருவானதா என்பதை தேட வைப்பதே 'ஸலாக் அலைக்' நாவலின் கதை.

 

1950 டிசம்பர் 14 இல் அமைக்கப்பட்டு ஜெனிவாவில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுதலை கருப்பொருளாக கொண்டதாகும். 

 

இவ்வமைப்பு தரும் நம்பிக்கையே  தன் தேசத்திலிருந்து தப்பிப் போய் தஞ்சமடைந்து எப்படியாகினும் இவ்வுலகில் வாழ்ந்திடலாம் என புலம்பெயர காரணமாக இருந்துவிடுகிறது. பிற நாடுகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வாழ வைத்திடுகிறதா, அகதிக்கான அடையாள அட்டை பெறுதல் அவ்வளவு எளிதாக உள்ளதா என்பதை நாவல் விவரிக்கிறது ஜெபானந்தன் என்பவரின் கதை மூலம். 

 

கந்தஞானி, சாவித்திரி இணையரின் ஆதரவில் ஜெபானந்தனுக்கு கிடைக்கும் வேலையை கொண்டு உமையாளின் துணையோடு எப்படியும் இத்தேசத்தில் வாழ்ந்திடலாம் என நம்பி அகதிக்கான அடையாள அட்டை பெற அனுப்பும் கோரிக்கைகள் நீங்கள் சொல்லும் காரணங்கள் அரசுக்கு ஏற்புடையதல்ல, நீங்கள் இத்தேசத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனும் பதிலால் ஏற்படும் வேதனைகளை மீண்டும் மீண்டும் முயற்சிப்பதன் மூலம் நம்பிக்கை எனும் துளிர்ப்பை கொண்டு ஒளிந்தோடி வாழ வேண்டி இருப்பதன் துயரை  சொல்லிவிட முடியாது. நாவலை வாசித்துதான் உணர முடியும். 

 

" வயிறு முட்டத் தண்ணீர் குடித்தேன் மனம் சற்று ஆறிப்போனது. இந்த மனம் உண்மையிலேயே விசித்திரமானதுதான். சில சமயங்களில் ஒரு கோப்பை நீரிலேயே தணிந்து விடுகிறது. சாவு எதிரே நிற்கும் போதும் இந்த மனம் ஏதோவொரு நம்பிக்கையை பற்றிக் கொண்டு விடுகிறது. கடைசி நொடியிலும் ஒரு அற்புதத்தை எதிர்பார்க்கிறது" நாவலில் வரும் இப்பகுதியை வாசித்ததும் கோடான கோடி அகதிகளின் அகத்தில் உருக்கொள்ளும் இத்துளிர்ப்புதான் அவர்களை வாழச் செய்கிறது. ஓடியும் ஒளிந்தும் வாழ்ந்துகொண்டிருப்பதை உணர முடிகிறது. கொரான காலத்தில் நோய் முற்றி மருத்துவமனையில் தனித்து தினசரி செத்துக் கொண்டிருப்பவர்களை பார்க்கிறபொழுதெல்லாம் எனக்கு இந்நிலை வராது, எப்படியும் குணமாகி வெளியேறிவிடுவேன் எனும் நம்பிக்கை என்னுள் திரண்டிருந்த காலமும் நினைவில் இருக்கச் செய்தது.

 

உழைப்புச் சுரண்டல் என்பது உலகின் அரிச்சுவடி போலும். ஜெபானந்தன் தன் பார்க்கும் வேலை குறித்து விபரித்து செல்வதிலும், முடியப்பனின் கதை மூலமும் அறிந்துகொள்ள முடிகிறது. கடின வேலை பளுவால் நேர்ந்த தவற்றிற்காக சித்ரவதைக்கு உள்ளான போது அதிலிருந்து தப்பிக்க முதலாளியின் முன் தன்னை நிர்வாணமாக்கி நின்ற முடியப்பனின் செயல் நம்மை திகைக்கச் செய்கிறது. எளியவர்களுக்கு நிர்வாணம் கூட ஆயுதமாக மாறத்தான் செய்கிறது. 

 

"தந்தைக்கு முன்பாக மகனை அடிப்பது, தந்தையை கொன்றதற்கு சமானம்" என நினைத்து வாழ்ந்த ஜெபானந்தனின் பிராயத்தில் தன் தந்தையின் முன்னே, தாயும், சகோதரியும் அமைதிப் படையினரால் சிதைந்து போய், அவர்களிடம் இருந்து தப்பி வந்த கதைப்பகுதியை வாசிக்கையில் அரசியல் பிரச்சினைகளை  தன் படைப்புகளில் வெறும் பிரச்சாரம் என எவரும் ஒதுக்கிட முடியாது, மொழியின் நுட்பத்தோடும், அழகியலோடும் சொல்லிச் செல்வதில் தேர்ந்த ஷோபா சக்தி தன் படைப்புகளை அரசியல் துண்டு பிரசுரம் எனச் சொல்வது ஏற்புடையது அல்ல என்பதை நம்மால் உணர முடிகிறது. "அய்யா... வாங்க, வாங்க நாங்கள் இந்திரா காந்தி அம்மாவுக்குதானே ஆதரவு" எனும்  சொற்களை வாங்க மறுத்த காதுடையவர்களாக அமைதிப்படையினர் இருந்ததனால் நமக்கும் உண்டான எரிச்சல் "ராசீவ் காந்தி மகிமையை காட்டிவிட்டார்" என்பதை வாசிக்கையில் கடந்திட முடிகிறது.

 

விதைப்பதையே அறுவடை செய்ய இயலும். ஆயுதங்களை விளைவிக்க அகிம்சையை அறுவடை செய்ய இயலுமா? 

 

அகிம்சையால் தன் குறிக்கோளை அடைய முடியும் என உலகுக்கு உணர்த்திய காந்தியடிகளை  பிறப்பித்த நம் தேசத்தில் ஆயுதங்களால்  சிதைந்த வரலாற்றை வடுவாக கொண்ட கதைகள் கொண்ட ஈழம் நமக்கு விட்டுச் சென்றுள்ள படிப்பினைகள் ஏராளம். ஈழத்தில் கந்தியடிகளின் அகிம்சையை ஆயூதமாக்கி போராடியிருந்தால் இத்தகைய இழப்புகள் இல்லாது இருந்திருக்குமோ, அகிம்சையை மதித்த பிரட்டீசாரின் இயல்பு சிங்களத்தவர்களிடம் இருந்திருக்குமா?, போராட்டக்காரர்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிப்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள்தானா? எதையும் அரிதியிட்டு கூறமுடியாது மனதுள் தத்தளிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது நாவல்.

 

போராட்டக்காரர்கள் ஆயுதங்களை நம்பியதில்கூட இருக்கும் நியாயத்தை உணரலாம், ஆனால் அமைதியை உருவாக்கச் சென்ற இந்திய அமைதிப்படையினர்கள் கூட ஆயுதங்களைக் கொண்டுதானே அமைதியை ஏற்படுத்துவதாக சென்றார்கள். அவர்கள் மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகங்களை வெப்பமடைந்த உடலோடுதானே வாசிக்க முடிந்தது, ராசீவ்காந்தியை நம்பியவர்கள், இந்திராவை நம்பியவர்கள் நாங்கள் என தஞ்சமடைந்தவர்களைக்கூட விட்டுவிடாது கொன்று குவித்த செயல்களை பார்க்க எந்த அறத்தை ஒப்பிடுவது?. 

 

ஷோபா சக்தியின் எழுத்துகள் சார்பற்றவை. பாதிக்கப்பட்ட மக்களின் குரல். சிங்கள ராணுவம், புலிகளின் இயக்கம், அமைதிப் படையினரின் தொந்தரவு என மும்முனைத் தாக்குதலுக்கு பயந்தும் பதுங்கியும் வாழ்ந்த மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்துக் கொண்டிருப்பவர். தான் சார்ந்த இயக்கம், அமைப்பு, தனக்கு பிடித்த தலைவர்கள் குறித்து நாயகத்தன்மை அல்லது குலசாமியாக்கி கொண்டாடும் பொதுபுத்தியோடு இருப்பவர்களுக்கு அமைப்போடும் தலைமையோடும் கருத்து முரண்பாடு கொண்டு தொடர்ந்து அதன் விளைவுகளை எழுத்தில் கொண்டுவந்தபடி இருக்கும் ஷோபாசக்தியின் செயல் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவது தவிர்க்க இயலாததாகிறது. இந்நாவலிலும் "வேலுப்பிள்ளையின்ர வளர்ப்புப் பிழைதான் காரணம்" எனும் கூற்று ஈழப்போராட்டம் குறித்து நம்முள் பல யோசிப்புகளை உருவாக்கிச் செல்கிறது.

 

நமக்கு விபரம் அறிய நடந்த போர்களால் மனிதகுலம் சருகளவேனும் கூடுதல் பலனை பெற்றிருக்குமா? அப்படியிருக்க போர்கள் முன்னெடுக்கப்படுவதன் அவசியம் எங்கிருந்து வந்தது? உற்பத்தி செய்த போர்க் கருவிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தால் போர்ச் சூழல் உருவாக்கப்படுகிறதா? இழப்பின் துயர்களையும், வலியையும், நிலங்களையும், பொருளையும் இழந்துகிடப்பது சாமானியர்கள்தானே, அகதிகளாக பிறப்பெடுப்பதும் அவர்கள்தானே. எளியோரின் வாழ்வை சிதைக்கும் போரில் எத்தனாயிரம் குழந்தைகளை இழந்திருப்போம். போர்க் கருவிகள் ஏவுபவனைப் போன்று நேயமற்றவைகள்தானே. குழந்தைகளை கொல்லாமல் இருக்குமா? எதற்காக, யாரால் கொல்லப்படுகிறோம் என்பதைக் கூட அறியாது இறந்துபோவோர்களின் கண்களை எப்பதிலைக்கொண்டு மூடப்போகிறோம். தலைமுறைகள் கடந்தும் நோய்மை பீடிக்கச் செய்யும் போர்கள் எதற்காக? நாவல் நம்முள் நிறைய கேள்விகளை உருவாக்கியபடியே செல்கிறது நாவல்.

 

ஆன்மா, உடல், பாஸ்போர்ட் என மூன்று மூலகங்களைக் கொண்டது அகதிகளின் உயிர் என்கிறார். உங்களது ஆன்மா இருண்டு போய் இருக்கலாம், உடல் சிதைந்து போய் இருக்கலாம், உங்களிடம் செல்லும்படியான பாஸ்போர்ட் ஒன்றிருந்தால் எதையும் கடந்து செல்ல முடியும் என்கிறார். அடிக்கடி அடையாளத்தை பதியவேண்டி இருப்பதற்காக தன் பத்து விரல்களையும் அயர்ன் பாக்சில் தீய்த்துக் கொண்டவரின் கதையை வாசிக்கையில் தன்னிச்சையாக விரல்களை தடவிப்பார்க்கச் செய்தது. 

 

தொடர்ந்து துயரோடு வாழும் ஜெபானந்தனுக்கு கிடைத்த பாஸ்போர்ட் ஒன்றில் தலையை மாற்றி பிரான்சு செல்ல அங்கும் உண்மையறிய மீண்டும் தன் துயர்வாழ்வை தொடரும் ஜெபானந்தனைப் போன்று எண்ணற்றவர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுக்கு பழகிபோய் இருக்கக் கூடும். இப்படியானவர்களும் உலகில் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள் என்பதை அறியத்தருகிறார் ஷோபாசக்தி. என்றாவது அவர்களின் வாழ்வில் அமைதி உண்டாக நாமும் ஒருமுறை சொல்வோம் ஸலாம் அலைக். 

 

நாவலை வாசித்து முடித்ததும் ஒசூர் அருகிலிருக்கும் கெலவரப்பள்ளி அணையிலிருக்கும் அகதிகள் முகாமில் இருப்போருக்காக நாம் என்ன செய்துள்ளோம், நம்மை நம்பி வந்தவர்களை என்னவாக வைத்துள்ளோம். திறந்தவெளி சிறைக்கூடமாகத்தானே இருக்கிறது. இனப்பற்று, மொழிப்பற்று என பேசிக்கொண்டிருப்பதிலிருக்கும் உண்மைதன்மை குறித்து குற்ற உணர்வையும் நாவல் ஏற்படுத்திச் செல்கிறது. 

 

(ஒசூரில் நிகழ்ந்த புரவி இலக்கிய கூடுகை - 3 

 25-12-22 ல் வாசிக்கப்பட்ட கட்டுரை)

 

No comments:

Post a Comment