Tuesday, February 24, 2015

உலகமும் நிகர் உலகமும்

நன்றி: பாவண்ணன்

உலகமும் நிகர் உலகமும் - பெரியசாமியின் ‘தோட்டாக்கள் பாயும் வெளி’

நம் பார்வையில் தென்படும் உலகத்துக்கு நிகரான இன்னொரு உலகை சொற்களால் கட்டியெழுப்பும் ஆற்றல் குழந்தைகளிடமும் குழந்தைமை மிகுந்த கவிஞர்களிடமும் மட்டுமே உள்ளது. கவிதைகளில் வெளிப்படும் உலகம், வெளியுலகத்தின் நேரடியான பிரதியல்ல. அதன் சாயலை உருவகமாகவும் படிமமாகவும் கட்டியெழுப்பவே கவிதை முயற்சி செய்கிறது. ஒரு சின்ன மரப்பாச்சியை குழந்தையாகவும் தாயாகவும் தந்தையாகவும் தாத்தாவாகவும் அரசனாகவும் சுட்டிக்காட்டி கதைசொல்வது  குழந்தையின் உலகத்தில் மிகவும் இயல்பாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். தன்னிச்சையான அந்தச் சொற்கோவையை உருவாக்க முடியும்போதுதான் கவிஞனுக்கும் அந்த வெற்றி சாத்தியமாகிறது. அந்தப் புள்ளியை தன் சொல்லால் தொடக்கூடிய ஒரு சில கவிஞர்களில் ஒருவர் பெரியசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த மதுவாகினி தொகுப்பில் அத்தகு அடையாளங்களைக் கொண்ட சில நல்ல கவிதைகள் இருந்தன. அதன் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் ’தோட்டாக்கள் பாயும் வெளி’ தொகுப்பில் காண முடிகிறது.
’தோட்டாக்கள் பாயும் வெளி’ என்னும் தலைப்புக்கவிதையே தொகுப்பின் மிகச்சிறந்த கவிதை. ஒரு வீட்டின் மாடி. அமைதி மிக்க சூழல். கொண்டு சென்ற தாளில் ஒருவன் ஒரு முயலை வரைகிறான். பிறகு, துடிப்பு மிக்க அந்த முயல் சுற்றி வந்து விளையாட ஒன்றிரண்டு மரங்களையும் வரைகிறான். சில கணங்களுக்குப் பிறகு, அந்த முயல் கூடி மகிழ ஓர் இணைமுயலையும் வரைகிறான். மரங்கள் அடர்ந்திருக்கும் தனிமையில் அந்த முயல்கள் விளையாடி மகிழ்கின்றன. ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொள்கின்றன. உறவின் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. ஆனந்தக் காட்சியை உட்கார்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்ச்சியில் திளைக்கும் பொருட்டு ஓரமாக ஒரு பாறையையும் வரைகிறான். ஒருபுறம் முயல்களின் ஆனந்தம். இன்னொருபுறம் கண்டு களிக்கும் மானுடனின் ஆனந்தம். இந்தக் கணங்கள்  நீடித்திருந்தால் இந்த உலகம் ஆனந்தத் தாண்டவம் நிகழும் களமாக மாறியிருக்கும். ஆனால் அக்கணங்கள் நிலைமாறிவிடுகின்றன. ஒரே கணத்தில் எங்கிருந்தோ தோட்டாக்கள் பாய்ந்து தாக்கும் களமாக அது மாறிவிடுகிறது.
அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு உயரமான ஒரு கோட்டையை அல்லது மாளிகையை வியப்போடு பார்த்து மகிழும் ஒரு மனிதன் அக்கணமே அந்தக் கோட்டை அல்லது மாளிகை சரிந்துவிழுந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கிறான் என்கிறது உளவியல். ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப்போல ஆனந்தமும் குரூரமும்  மனத்தின் இரு பக்கங்களாக உள்ளன. வதைபடுவதைக்கூட ஆனந்தத்தின் ஒரு பக்கமாக மாற்றிப் பார்த்துக்கொள்கிறது மனம். மனத்தின் விசித்திரத்தை ஒரு சித்திரமாக்க பெரியசாமியின் கவிதை முயற்சி செய்கிறது. மெல்லிய சத்தத்துடன் இரண்டு தோட்டாக்கள் பாய்கின்றன என்று எழுதும் பெரியசாமி அந்தத் தோட்டாக்களைச் செலுத்தியவன் யார் என்பதைச் சொல்லாமல் புதிராக நிறுத்திவிடுகிறார். இந்தப் புனைவுதான் அச்சித்திரத்துக்கு ஒரு கவிதைத்தன்மையை அளிக்கிறது. கவிதையின் முதல்  வரியிலிருந்து வரைகிறீர்கள், உருவாக்குகிறீர்கள், தருவிக்கிறீர்கள், போடுகிறீர்கள் என ஒவ்வொரு நடவடிக்கையிலும் அதில் ஈடுபடுகிற  மனிதரைப்பற்றிய குறிப்பு தெளிவான உருவத்துடன் இடம்பெற்றிருக்க, கடைசிகட்ட தோட்டாவைப் பாய்ச்சும் நடவடிக்கையில் எவ்விதமான குறிப்பும் இல்லை. தோட்டாவைப் பாய்ச்சியது அவராகவும் இருக்கலாம் அல்லது அவரைப்போலவே வேறொரு இடத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இன்னொருவராகவும் இருக்கலாம். ஆனந்தமும் குரூரமும் ஒரே நெஞ்சில் உறையும் உணர்வுகள் என வரையறுத்துக்கொள்வதற்கான சாத்தியத்தை அளிக்கும் கணத்திலேயே ஆனந்தம் உறையும் நெஞ்சம் ஒன்று, குரூரம் உறையும் நெஞ்சம் இன்னொன்று என வேறொரு சாத்தியத்தையும் அளிக்கிறது கவிதை. உளவியலாளன்போல கவிஞன் திட்டவட்டமாக நம்ப மறுக்கிறான். நம்ப மறுப்பதாலேயே அவன் கவிஞனாக இருக்கிறான்.
’நிலையானது’ இன்னொரு நல்ல கவிதை. இதுவும் ஒரு விளையாட்டுச் சித்திரம். மனத்தின் விசித்திரத்தைக் காட்டும் சித்திரம்.
அந்தி வேளையில்
விளையாடிக் கொண்டிருந்தனர் சிறார்கள்
தன்னிடமிருந்த சாக்பீசால் ஒருவன்
நிறைய கட்டங்களை வரைந்தான்
சிறுமி ஒரு கட்டத்துள்
தாமரை வரைந்தாள்
மற்றவள் வேறொன்றில்
சூரியகாந்திப் பூ
அடுத்தடுத்து  வந்தவர்கள்
மாதுளை கொய்யா மாங்காயென
கட்டங்களை நிரப்பினர்
திடுமென கோடுகள் மறைந்து
வரைந்தவைகளை கட்டங்கள்
உயிர்ப்பிக்கச் செய்தன
தெருவில் மின்சாரம் பூக்கச் சிரித்து
அவரவர்களுக்கானதை எடுத்துக் கலைந்தனர்
எனக்கானதை நிரப்ப கட்டங்களற்று
வெறிச்சோடிப் போனேன்

குழந்தைமனம் ஆசைப்பட்டதெல்லாம் நடக்கிறது. பெரியவர்களுக்கு எதன்மீது ஆசைப்படுவது என்றே தெரியவில்லை. அல்லது எந்த ஆசையை முதலில் முன்வைப்பது என்றும் புரியவில்லை. குழப்பம். தடுமாற்றம். தெளிவு பிறக்கும் சமயம், நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிகள்  என எதுவுமே இல்லை. கவிதையில் ஒரு விஷயம் தெளிவாக இருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது கட்டங்களில் தமக்குப் பிடித்ததை வரையும்போது, குழந்தைகள் மனத்தில் ஆசை மட்டுமே உள்ளதே தவிர, இது நடக்கும் அல்லது நடக்கவேண்டும் என்கிற விழைவு எதுவுமே இல்லை. ஆசை ஒரு தூய உணர்வாக மட்டுமே உள்ளது. ஆனந்தமாக இருப்பதற்காகவே ஆசைப்படுகிறார்கள். தற்செயலாக அந்த ஆசைகள் நிஜமாகின்றன. அது அவர்கள் ஆனந்தத்தை இருமடங்காக்குகிறது. வேடிக்கை பார்க்கும் பெரியவர் குழந்தையோடு குழந்தையாகச் சென்று தனது ஆசையையும் வரைந்து வைத்திருக்கலாம். அதற்கு எந்தக் குழந்தையும் தடை சொல்லப் போவதில்லை. மாறாக, அவர் அக்குழந்தைகளோடு சேர்ந்துகொள்வதைத் தவிர்க்கிறார். ஏதோ கூச்சம் அல்லது இது விளையாட்டுதானே என்கிற எண்ணம் அவரைத் தடுத்துவிட்டது. குழந்தைகளின் ஆசைகள் நிறைவேறிவிட்டதை கண்ணாரப் பார்த்துவிட்ட கணத்தில், அவருக்கு அது உறுத்தலாக இருக்கிறது. ஏமாந்துவிட்டோமோ என எண்ண வைக்கிறது. ஆனால் அப்போது அவர் வரைந்துவைக்க ஒரு கட்டமும் இல்லை. காலமும் இல்லை. ஆசைக்குரியதை கற்பனை செய்துகொண்டாலும், அது தற்செயலாக நிலையான பொருளாகிவிடுகிறது. கற்பனை என்பது குழந்தைமைக்கே உரிய குணமென்பதால், அப்படி விளையாட்டாக ஆசைப்படுவதும் சாத்தியமாகிறது. குழந்தைமையைத் துறந்த மனம் நிலையானதின்மீது ஆசை கொள்கிறது. விளையாட்டு ஆசைகளை அது விழைவதில்லை. விளையாட்டு ஆசை நிலையானதாக மாறிவிடும்போது, ஒரு சின்ன துணுக்குறலுடன் வெறுமையில் உறைந்துபோவதை அதனால் தவிர்க்கமுடிவதில்லை. பொருள் நிலையானதல்ல, குழந்தைமையே நிலையானது. 
’அக்டோபர் முதல் நாளில்’ புனைவம்சம் மிகுந்த நல்ல கவிதை. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் சிறுகதையை நினைவூட்டக்கூடிய கவிதை. பெரியசாமியின் கவிதையில் வருகை புரிவது கடவுள் அல்ல. மகாத்மா காந்தி. சிற்றுண்டி முடித்து வீட்டு வாசலில் உட்கார்ந்திருப்பவனிடம் வந்து ஆட்டுப்பால் கிடைக்குமா என்று கேட்கிறார். பட்டியே இல்லை, ஆட்டுக்கு எங்கே போக என்றபடி காந்தியை அவன் பரிதாபமாகப் பார்க்கிறான். பிறகு, இருவரும் சேர்ந்து ஆட்டைத் தேடிக்கொண்டு செல்கிறார்கள். எதிர்பாராத விதமாக, ஒரு கறிக்கடையின் வாசலில் உரித்துத் தொங்கவிடப்பட்ட ஆட்டைப் பார்த்துவிட்டு, காந்தி மனம் உடைந்துவிடுகிறார். அவரைத் தேற்றி வேறு பக்கமாக அழைத்துச் செல்கிறான் அவன். அந்தப் பக்கத்தில் சிலர் மது அருந்திவிட்டு போதையில் அமிழ்ந்திருக்கிறார்கள். அரசு ஏன் இதைத் தடுக்கவில்லை என்று கேட்கிறார் காந்தி. கடையை நடத்துவதே அரசுதான் என்று பதில் சொல்கிறான் அவன். காந்தி தலையில் அடித்துக்கொண்டபடி மயங்கிச் சரிகிறார். மயக்கத்தைத் தெளியவைத்து, அருந்துவதற்கு பாக்கெட் பால் வாங்கி தண்ணீர் கலந்து கொடுக்கிறான் அவன். ஒரு சில மிடறுகள் விழுங்கும் காந்தி பால் ஏன் சுவையில்லாமல் இருக்கிறது என்று கேட்கிறார். எல்லாவற்றிலும் கலப்படம் என்று சொல்கிறான் அவன். அவர் மனம் நொந்து தலைகுனிகிறார். அவன் அவரை ஆறுதல் படுத்தி, அவருடைய பிறந்த நாளன்றுமட்டும் வந்து செல்லுமாறு சொல்லி வழியனுப்பி வைக்கிறார். ஒருவித கிண்டல் தொனியுடன் எழுதப்பட்ட அரசியல் கவிதை என்றே இதைச் சொல்லவேண்டும். காந்தி நம்முடன் பெயரளவில்மட்டுமே இருக்கிறார். அவருடைய கொள்கைகளும் பெயரளவில் மட்டுமே நம்முடன் இருக்கின்றன. எதைப் பெற்று, நாம் எதை இழந்தோம் என்று நம்மை யோசிக்கத் தூண்டும்படி உள்ளது கவிதை.
’மூதாய்’ குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு கவிதை. ஆதி காலத்திலிருந்து நின்றிருக்கும் குளிர்ந்த மலை உச்சியே மூதாய் என்று குறிப்பிடப்படுகிறது. எப்போதும்போல மலை உச்சியில் குளிர் பரவியிருக்கிறது. இனிமையான காற்று வீசுகிறது. ஒருநாளும் மாற்றமின்றி  வீற்றிருக்கிறது அது. ஆனால் மனிதர்களால் அப்படி இருக்கமுடியவில்லை. தரையில் ஒருவிதமாகவும் மலையுச்சியில் இன்னொரு விதமாகவும் இருக்கிறார்கள். மலையுச்சியில் அவர்கள் நடத்தையே மாறிவிடுகிறது. ஏதுமறியாத குழந்தையாக மலை மினுங்கிக்கொண்டிருக்கும்போது, எல்லாக் கள்ளங்களும் நிறைந்தவர்களாக மனிதர்கள் விளங்குகிறார்கள். குழந்தைமை உதிர்ந்துவிடும்போது, கள்ளம் நுழைந்துவிடுகிறது. மூதாய் இன்னும் குழந்தைமை மாறாத நிலையில் இருக்கும்போது, மூதாயின் வழிவந்தவர்கள் குழந்தைமையை தொலைத்துவிட்டு சிதறி அலைகிறார்கள்.
மாதுளையை முன்வைத்துப் பேசக்கூடிய ‘எஞ்சியவை’ இன்னொரு அழகான கவிதை.
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர்த் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றால் தொலிகளை
மாதுளைக்குத்தான் எவ்வளவு நிறைவான வாழ்க்கை. அதன் முத்துகள் ஒருவருக்கு உணவாகின்றன. தரையில் சிந்தும் சாற்றின் துளிகல் எறும்புகளுக்கு உணவாகின்றன். யாருக்கும் உணவாகமுடியாத தோல், வைத்தியத்துக்குப் பயன்படுகிறது. எதுவுமே எஞ்சவில்லை. தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்னும் திருக்குறளை நினைத்துக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை. தகைமை மிக்கார் வாழ்வில் ஒருசில சமயங்களில் எதுவுமே எஞ்சாமல் கூட போகக்கூடும். அது அவர்களுடைய தகைமையை இன்னும் கூட்டுமே தவிர ஒருபோதும் குறைத்துவிடாது. மாதுளையை முன்வைத்த கவிதையை வாசிக்கும்போது மானுடரைப்பற்றிய நினைவும் தன்னிச்சையாகவே முளைக்கிறது. இந்த மாநிலம் பயனுற வாழாத வாழ்க்கைக்கு என்ன பொருள் சொல்லமுடியும்?
’நித்திரையை உருட்டும் பூனை’ இன்னொரு நல்ல கவிதை. தனக்குள் உறையும் பூனையின் குணத்தையே பெரியசாமி பூனையாக உருவகப்படுத்தி எழுதுகிறார். அந்தப் பூனை மனத்துக்குள்ளேயே கால்மடக்கி உறங்கியபடி இருக்கிறது. எப்போதாவது திடுமென எழுந்து வெளியே செல்கிறது. பிடிக்காதவர்களின் இல்லங்களில் நுழைந்து ஆட்டம் போடுகிறது. அவர்களின் தூக்கத்தைக் கலைக்கிறது. அவ்வப்போது அந்த வீட்டில் வசிக்கும் நண்பர்களையும் நகத்தால் பிறாண்டி விடுகிறது. பூனையின் குணத்தை அறிந்தும்கூட அதற்கு பால் ஊற்றி வளர்க்கிறான் அவன். அதை வருடி உற்சாகப்படுத்தவும் செய்கிறான். அது ஒரு செல்லப்பிராணியாக நெஞ்சிலேயே வளர்கிறது. படித்து அசைபோட நல்ல கவிதை.
உலகின் நிழலாக உள்ள இந்த நிகர் உலகை கவிஞர்கள் ஏன் தீட்டிக் காட்டவேண்டும் என்பது முக்கியமான கேள்வி. புது இடங்களுக்குச் சென்று திரும்புகிறவர்கள், கண்ணில் பட்ட பல காட்சிகளையெல்லாம் படங்களாக எடுத்துத் தொகுத்து வைத்துக்கொள்வதை நாம் பார்த்திருப்போம். அந்த ஊர் என்பது அந்தப் படங்கள் மட்டுமல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். அதே சமயத்தில் அந்த ஊரின் அடையாளங்களாக அந்தப் படங்கள் உள்ளன என்பதையும் மறுக்கமுடியாது. கவிதைகளில் கட்டியெழுப்பப்படும் நிகர் உலகமும் அப்படிப்பட்டவையே. பெரியசாமியின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கவிதையாக்கங்களில் தென்படும் அவருடைய வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


(தோட்டாக்கள் பாயும் வெளி. ந.பெரியசாமி. புது எழுத்து பதிப்பகம். 2/2015, அண்ணா நகர். காவேரிப்பட்டினம். விலை.ரூ.70)

No comments:

Post a Comment