Saturday, February 21, 2015

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

புங்கை மரத்தின் சிறு கிளையை ஒடித்து வந்தவன் ஏம்பா மரத்தோட ரத்தம் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்கிறது என்றான். பதிலற்று அவன் கேள்வியை ரசித்தபடி இருக்கையில் ஆசிரியர் ஆசிர்வதிக்கப்பட்டவர்களென்று தோன்றியது. உலகம் குழந்தைகளை கடவுளாக பார்க்கப்படுவதால் கடவுளின் உலகோடு நெருக்கமாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்தானே. உடனிருக்கும் ஓரிரு குழந்தைகளின் செய்கைகளும் பேச்சுகளும் வேறுவேறு உலகை தரிசிக்கச் செய்திடுகையில் வெவ்வேறு குடும்பச்சூழல், கலாச்சாரப் பின்னணி என பல்வேறுபட்ட புதிது புதிதான குழந்தைகளோடு பழகிக் கிடக்கும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு உண்டுதானே. புதிய அனுபவங்களும், தரிசனங்களையும் கிடைக்கப் பெறும். வனமிழந்த கதையோடு வந்திருக்கும் ஆசிரியர் கே.ஸ்டாலினை பொறாமையோடே பார்க்கிறேன்.

என் நினைவை மடைமாற்றி விட்டது மகனின் உற்சாகக் குரல். தூரத்தில் கிளி சோதிடர் வந்துகொண்டிருந்தார். இன்னும் சிறிது காலத்திற்க்குள் கன்னிகை ஒருத்தி உன் வாழ்வில் குறுக்கிடுவாள் என கிளி சோதிடர் கூறிய இரண்டாம் நாளின் நள்ளிரவில் புதிரான உரையாடலோடு அறிமுகமாகி சிநேனமானாள் தோழி. அதனால்தான் என்னவோ கிளி சோதிடரைக் காண்கையில் மகிழ்வு பனிக்கும். அவரை அழைத்து சோதிடம் பார்த்தேன். உணவிட்டு உபசரிக்க வீட்டிற்குள் அழைத்துப்போனேன். மகன் கிளியோடு உரையாடத் துவங்கினான்.

'எதுவுமற்ற கதை' என முடிக்காது விட்ட அம்மா சொன்ன கதையை சொல்லத் துவங்கினான். கவனியாதுபோல அவனைக் கவனித்துக் கொண்டிருக்க, நான் பார்த்திராத உலகை பார்க்கச் செய்தான். கதை சொல்லும் பாட்டி தாத்தாக்கள் அரிதாகிவிட அவ்விடங்களை சோட்டா பீம்கள் ஓரளவிற்குகேனும் எடுத்துக்கொண்டதாகப் படுகிறது. அன்றையத் தொடரின் நீட்சியாக பொம்மைகளோடு வேறுவேறு கதைகளை புனைந்தபடி இருக்கிறார்கள்.

மிஸ் விளையாட்டில் களைத்துத் தூங்கி தான் கண்டடைந்த ஏழு சூரியன்கள் ஏழு சந்திரன்களை தன் காலத்தோடு கட்டிவைத்தவனின் கதையைக் கூறினாள். கிளி ஆர்வத்தோடு மேலும் கேட்க, தன் கால்பட்ட நீரை அருந்திய குளத்து மீன்களை தங்கமீன்களாக்கியவள் பெரிய மனுசி ஆகிவிட தன் அப்பாவின் அண்மையைத் தொலைத்து துயருறும் கதையை வருத்தம் மேலோங்கச் சொன்னான்.

மாற்றி மாற்றி கோடாரிகளைத் தந்தபடி இருக்கும் தேவதைகளின் கதையை மீண்டும் நினைவூட்டி, வாங்கித் தர மறுத்த பலூன்களைத் தன் ஏக்க விழிகளால் வானில் பறக்கச் செய்து, தான் வாங்கும் மதிப்பெண்களை பட்டியலிட்டு, பெண் குழந்தைகளற்ற சபிக்கப்பட்ட வீடுகளை காட்சியாக்கி, தன் வெட்கத்திற்கு வண்ணமிட்டுக் காட்டி, பைத்தியங்களுக்குப் பரிசை தர திருவிழாக்களில் வேண்டுமென்றே தவறவிடும் கதையை கூறி, எச்சில் பாசத்தோடு இருக்கும் தன் சிலேட்டில் படம் வரைந்து காட்டி, வனம் உலாவும் குழந்தைகளுக்கும் குரங்குக்குமான கனவுலகைச் சொல்லி, வகுப்பறைவிட்டு வெளியேறிய குதூகலத்தில் தன் பாட்டில் நீரை மழை நீராக்கிய மாலையைக் காட்சிபடுத்தினான்.

பயமுறுத்தியபடி இருக்கும் பொதுத்தேர்வின் தேதி காட்டும் நாட்காட்டியை வெறுக்கும் தன் அண்ணனைப் பற்றிக் கூறினான். விபத்து பார்த்த அன்று வீட்டிற்கு வந்ததும் தன் பொம்மைகளை ஒளியவைத்ததை நினைவுபடுத்தி சொன்னான். குழந்தைகளாகிவிட முடியாத பெரியவர்கள் மீதான தன் கேலியைச் சொல்லி சிரித்தான்.

கடவுளைக் காட்டும் சிறுமியின் கொலுசு ஓசையை இசைத்து கோடை விடுவிப்பைக் கொண்டாடும் மனநிலையை சித்திரமாக்கிக்கொண்டிருந்தான்.

குழந்தைகளின் கைபடாத பலூன்களின் நிராசையைக் கூறி சிறுவர்களுக்கும் சிட்டுக்குருவிக்குமான நட்பைக் காட்டி அம்மாவுக்கும் மகளுக்குமான அவிழா புதிரைப் போட்டான்.

பதிலற்ற கிளி தன் வெட்டப்பட்ட இறக்கையைக் காட்டி வனம் அலைய முடியாத துயரைக் கூறியது. தன்னால் ஒரு குடும்பம் பசியடங்குவதின் பெருமையைச் சொல்லி ஆறுதல்கொண்டது. மனிதர்களின் அறமற்ற செய்கையால் வனமிழந்து தவிப்பதைக் கூறிட வருத்தப்பட்டவன் தன் கைகளை இலையாக்கி அரிசிகளை இட்டு தின்னக்கொடுக்க வனங்கள் மீண்டும் உருவாக்கப்படும் எனும் நம்பிக்கையில கிளி மகிழ்ந்தது.

வெளியீடு
வம்சி புக்ஸ்
19 டி.எம்.சரோன்
திருவண்ணாமலை.
விலை-ரூ-70
nantri:puththagam pesuthu

No comments:

Post a Comment