Saturday, February 21, 2015

கெடாகறியில் மிதக்கும் பூங்கொடியின் ஏக்கம்


நள்ளிரவில் பதற்றத்தோடு எழச் செய்த அலைபேசியில் ஊரிலிருக்கும் உறவின் பெயர் மினுங்க, யார் மண்டையைப் போட்டார்களோவென யோசிப்போடு உரையாட நாளை அம்மாவுக்கு கோர்ட்டில் தீர்ப்பு ஒசூரில் ஒரு லாட்ஜிலும் ரூம் தரமாட்டேன்கிறார்கள் என புலம்பினார், பக்கத்து வீட்டினர் ஊருக்குச் சென்றிருக்க தெம்பாய் கிளம்பினேன் அழைத்து வர. தங்கியிருக்கையில் அவர்களின் உரையாடலில் தெளிவாக விளங்கிய உண்மை இனி எக்காலத்திலும் லஞ்சம் இருந்தபடியேதான் இருக்கும். கடுகளவிற்குக்கூட அது குறித்த எவ்வித உறுத்தலும் இல்லாது இருக்கும் பொதுபுத்தியை தீர்ப்பும், தீர்ப்பை ஒட்டி நடந்த நிகழ்வுகளும் காட்சிகளாக நினைவில் வந்தது. மயூரா ரத்தினசாமியின் மூன்றாவது துளுக்கு சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையாக இருக்கும் 'சுழற்சி' கதையை வாசித்து முடிக்கையில். எக்காலத்திற்கும் பொருத்தமான கதையிது.
நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லத் தெரிந்திருப்பதால் வாசிப்பில் சோர்வடையச் செய்யாமல் பதப்படுத்தி விடுவதால் தொடர்ந்தாற்போல் நூலில் பயணிக்க முடிகிறது.
சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் தனித்து விளையாடியபோது சிக்கியது ஒரு தட்டான். அதை பிடித்து கற்களை தூக்கச் செய்து தீப்பெட்டி லாரியில் லோடு ஏற்றினேன். திடீர் யோசனையில் அருகில் கிடந்த சோளத்தக்கையை சிறிதாக ஒடித்து நூலில் கோர்த்து தட்டான் வாலில் கட்டிவிட்டேன். அது எங்கும் போகதிருக்க கிணற்றடிபோய் தண்ணிக் குடித்து திரும்பி வருகையில் சோளத்தக்கையை தூக்கியவாறு தட்டான் பறக்கத் துவங்கிவிட்டது. துரத்தியபடி ஓடினேன். மொச்சையின் மணம் ஒரு கணம் நினைவை தடுமாறச்செய்ய கண்களிலிருந்து தப்பியது தட்டான். பெருத்த சோகத்தில் விளையாடப் பிடிக்காமல் வெறுமனே திண்ணையில் படுத்துக் கிடந்தேன். சிறிது நேரம் பழகியதற்கே இப்படியென்றால் வருடக் கணக்கில் பழகிய ஆட்டுக்குட்டியை பிரிவதும் பெரும் துயரம்தான். மூன்றாவது துளுக்கு கதையில் வரும் பூங்கொடியின் துயரம் வாசிப்பவரின் துயரமாகவும் மாற்றம்கொள்ளும். காதுகுத்து கெடா வெட்டிற்கு போய் வந்த நிறைவைத் தந்தது கதை.
இலக்கிய வாசிப்பு துவங்கிய காலகட்டம். அப்பொழுது நண்பர் காஃப்காவின் உருமாற்றம் நாவலைத் வாசிக்கத் தந்தார். ஒரு மனிதன் தன் நிலையிலிருந்து உயரிய நிலைக்குப் போக யோசிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால் அக்கதையோ கரப்பான் பூச்சியாக மாறுவதுபோன்றிருக்க இந்த எண்ணமே எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க, கதையை வியப்பும் ஆச்சரியமும் ஆர்வமுமாக படிக்கச்செய்தது. அந் நாவலை படித்த நாட்களின் நினைவுகளை ஏற்படுத்தியது மயூராவின் 'பல்லி வேட்டை' கதை. மீண்டும் வாசிக்கச் செய்தது. வாசித்து முடிக்க நெடுநேரம் சிரித்தபடி இருந்தேன். என் சகி பல்லியாகவும் நான் ஓணானாகவும் மாறுவதுபோன்ற சித்திரம் தோன்றியதால்.
80களில் வந்த பெரும்பாலான திரைப்படங்கள் நிறைவான மனநிலையை ஏற்படுத்தும். நாம் பார்த்த கேள்விப்பட்ட நம் வீதிகளில் நிகழும் கதையாகவும் கதைமாந்தர்களாகவும் இருந்ததால். படம் பார்க்கிறோம் என்ற நினைவற்று நாமும் அப்படத்தில் கேரக்டராக மாறி இருப்போம். 'ஒற்றைச் செருப்புகள்',. ஜோசப் என்பது வினைச்சொல்' கதைகளைப் போன்று தொகுப்பில் இன்னும் சில கதைகளை குறிப்பிடலாம். கதையை வாசித்து முடிக்க நல்ல சினிமா பார்த்து வெளியேறிய மனநிலையை ஏற்படுத்துகின்றன. வாசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு பிடித்தமான தொகுப்பாக மாறிவிட இருவும் ஒரு காரணமாக அமையலாம்.
'பூஜ்ஜியத்தின் கீழ் பத்தாயிரம் வாசனை அல்லது வடிவக் கொலை வழக்கு' கதை மயூராவை நினைவில் வைத்திருக்கச் செய்திடும் கதையாக இருக்கிறது.
'இது நம்ம ஜாதி' கதை நிகழ்கால சம்பவங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. நம் தேசம் சார்ந்தவன், நம்ம மாவட்டக்காரன், நம்ம ஊர்க்காரன், நம்ம சாதிக்காரன் எனும் எளிய வார்த்தைகளை நம்பிக்கிடக்கும் அப்பாவி மனிதர்களின் நம்பிக்கையை சுயத்திற்காக காவு வாங்கும் வஞ்சகர்களின் ஏமாற்றுகளையும் துரோகங்களையும் நாம் தினசரி வாழ்வில் கேள்விப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். 'படித்தவன் சூதும் வாதும் செய்ய ஐய்யோவென போவான் எனும் பாரதியின் சாபம் நினைவில் வந்தது இது நம்ம ஜாதி கதையை வாசிக்கையில். தன் பேரனை இழந்து தவிக்கும் அப்பாட்டியின் வலியை லாப அரசியலாளர்கள் என்றாவது உணரத் துவங்கினால் தீக்குளிப்பும், கலவரக் கொலைகளும் இல்லாது போகும்.
தொகுப்பில் சில கதைகளை தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது. தொகுப்பாக்கும் போது பெரும் மனப்போராட்டமே நிகழும். நம் படைப்பை கைவிட்டு வெளியேறும் கெட்டித்த மனநிலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. களைகள் இருந்தாலும் செழிப்பான பயிரின் வளர்ச்சியே வயலின் ஆரோக்கியத்தைக் காட்டும். மயூரா ஆரோக்கியமான மனவயலோடு இருக்கிறார். தொடர்ந்து நல்ல கதைகள் தருவார் என நம்புவோம்.
எதிர் வெளியீடு
96, நீயூ ஸ்கீம் ரோடு
பொள்ளாச்சி-642002
விலை-ரூ.130
nantri:malaigal.com

No comments:

Post a Comment