Monday, November 2, 2015

nantri: vaa.manikandan

பக்கத்து வீட்டில் ஒரு குழந்தை இருக்கிறது. பால்கனி, வீட்டின் உட்புறம் என்று ஓரிடத்தையும் விட்டு வைப்பதில்லை. பென்சிலை எடுத்து தனது கைத்திறமையைக் காட்டிவிடுகிறது. அது வாடகை வீடு. உரிமையாளர் கடுப்பாகிவிடுகிறாராம். எப்பொழுதோ ஒரு சமயம் அப்பாவிடம் புகார் அளித்துக் கொண்டிருந்தார். ‘ஆடு மாடு இலை தழைன்னு கண்டதையும் கிறுக்கி வெச்சுடுது சார்’. பார்த்து பார்த்து கட்டிய வீடு. ‘கனவுல கூட ஆடு மாடு வரும் போல இருக்கும்’ என்றார். சிரிப்பு வந்துவிட்டது. ஆடு, மாடு என்றால் பிரச்சினையில்லை. வீட்டு உரிமையாளரின் கனவில் வருகிறதென்றால் குழந்தையிடம் சொல்லி பேய்ப் படத்தை வரையச் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டேன். மாநகரங்களில் இந்த வீட்டு உரிமையாளர்கள் தொல்லை பெருந்தொல்லை.
குழந்தையின் ஓவியங்களிலிருப்பவை உயிர் பெறுகின்றன என்பதே fantasy கற்பனை. என்னதான் கடுப்பில் இருந்தாலும் அந்த வீட்டு உரிமையாளரின் கற்பனை அபாரமானது. ஒருவேளை குழந்தைகளின் ஓவியங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும்? விசித்திரமான ஜந்துக்களும் முக்கோண வடிவ முகமுடைய மனிதர்களும் பெரும்பற்களுடன் சாலைகளில் நடந்து கொண்டிருப்பார்கள். மலைகளும் பாதி உதயமான சூரியன்களும் தெருவெங்கும் நிறைந்திருக்கும். அற்புதமான வண்ணக் கலவைகளால் இந்த உலகம் வேறொன்றாக இருந்திருக்கும். இல்லையா?
இந்தச் சுவர் கிறுக்கல் ஞாபகத்திற்கு வரக் காரணம் ந. பெரியசாமியின் கவிதைத் தொகுப்பான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தவுடன் தொகுப்பை வாசித்துவிட வேண்டும் என்று தோன்றியது. ஒரு விருது குறிப்பிட்ட படைப்பை கவனம் பெறச் செய்கிறது. ‘அப்படியென்ன இருக்கிறது?’ என்று வாசகனுக்குள் ஒருவிதமான குறுகுறுப்பை உருவாக்குகிறது. இத்தனைக்கும் பெரியசாமி ஓசூரில்தான் இருக்கிறார். நிறையப் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் வாசிக்காமல் விட்டிருக்கிறேன்.
கவிதைத் தொகுப்பில் வீட்டு உரிமையாளரைப் போலவே fantasy கற்பனையுடனான கவிதைகள் இருக்கின்றன. குழந்தைகள் வரையும் ஓவியங்கள் உயிர்பெறுகின்றன. ஆடு, மாடுகள் அந்தரத்தில் பறக்கின்றன. பொம்மை மான்கள் உயிரோடு அலைகின்றன. பால்ய நினைவுகள் கவிதைகளுக்குள் வந்து வந்து போகின்றன. இப்படி நாம் பெரும்பாலும் பொருட்படுத்தாத நம்முடைய ஆழ்மன விருப்புகளை மெல்லிய சீண்டல்களுடன் கவிதைகளாக்குவதை பெரியசாமி தனது பாணியாக்கியிருக்கிறார்.
உப்பு நீரில் ஊற வைத்து
கழுவிய திராட்சையை
தின்றிடத் துவங்குகையில்
நரி வந்து கேட்டது
நாலைந்து ஆய்ந்து கொடுத்தேன்
புலி வந்தது
சிறு கொத்தை ஈந்தேன்
குட்டிக்கரணம் இட்டவாறு
குரங்கு வந்ததைத் தொடர்ந்து
ஆடு மாடு கோழி பூனையென
மகனின் படையெடுப்புகள்
எனக்கேதும் வேண்டாமென
கொடுத்த திராட்சையின் சாயலை
விழுங்கிக் கொண்டிருந்தேன்
இது பெரியசாமியின் கவிதைகளில் ஒன்று. திராட்சை தின்று கொண்டிருப்பவனிடம் மகனின் படைப்புகள் வந்து திராட்சைகளை வாங்கிச் சென்றுவிடுகின்றன. ‘எனக்கு திராட்சை இல்லைன்னாலும் பரவாயில்லை’ என்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு திராட்சையின் சாயலை விழுங்கிக் கொண்டிருக்கிறான். இதுதான் கவிதை.
இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதெல்லாம் சாத்தியமேயில்லை. இப்படி சாத்தியமில்லாத ஒன்றை ஏன் கவிதையாக்க வேண்டும்? கவிதையுடன் அறிமுகமில்லாத ஒருவன் வாசித்தால் இது புரியுமா? புரியாத ஒன்றை ஏன் எழுத வேண்டும்?
இப்படியெல்லாம் கேள்விகள் எழ வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உண்டு. ஒருவேளை நமக்கு பதில் தெரியாமல் இருக்கலாமே தவிர பதில் இல்லாத கேள்விகள் என்று எதுவுமேயில்லை. இந்தக் கேள்விகளும் அப்படியானவைதான். இன்னொருவர் பதில் சொல்லி சமரசம் ஆவதைவிட கேள்விகளுக்கான பதிலை நாமே கண்டடைந்து சமரசமாவதுதான் சாலச் சிறந்தது.
‘மகனின் படைப்புகளில் இருந்து விலங்குகள் உயிர் பெறுகின்றன’ என்று இந்தக் கவிதையைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவுதான். இந்த ஓர் அடிப்படையைப் புரிந்து கொண்டால் போதும். அதற்கு மேல் நம் கற்பனையைப் பொறுத்து கவிதை நம்மை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடும். எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இந்த ஒரு கவிதையை வைத்துக் கொண்டு கற்பனை செய்யலாம். நம் வீட்டில், நம் குழந்தை வரையும் படங்கள் உயிர்பெறுவதிலிருந்து அப்படியெல்லாம் நடந்தால் என்னவாகும் என்பது வரை என்னனென்னவோ யோசிக்கலாம். இப்படியொரு பொறியைத் தட்டிவிடுவதுதான் கவிதையின் வேலை. அதற்கு மேல் கவிதையிடம் நிறைய எதிர்பார்க்க வேண்டியதில்லை.
இன்னொரு கவிதையையும் பார்த்துவிடலாம்.
பிளந்த மாதுளையிலிருந்து
உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள்
எறும்பு ஒன்று
ஒரு துளியை இழுத்துச் செல்ல
மீந்ததைப் பங்கிட்டனர் மகன்கள்
எதிர் இல்ல யுவதி
பிணி நீக்க
எடுத்துச் சென்றாள் தொலிகளை.
கழுவினேன்
கையிலிருந்த பிசுபிசுப்பை.
இந்தக் கவிதைக்கு விளக்கம் கொடுப்பது சாத்தியமேயில்லை. ஒரேயொரு காட்சிதான் கவிதையாகியிருக்கிறது. ஒரு வீட்டில் மாதுளம் பழத்தை பிளந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டும்தான். கண்ணீர், பிணி, பிசுபிசுப்பு இந்தச் சொற்கள் கவிதையை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன. பிசுபிசுப்பு என்று இந்தக் கவிதை எதைக் குறிப்பிடுகிறது? மாதுளம் பழத்தின் பிசுபிசுப்பை மட்டுமா? எதனால் மாதுளம் பழத்தின் சாறு கண்ணீர் துளியாகத் தெரிகிறது? எதிர் வீட்டு பிணியின் காரணமாகவா? தொலிகளைக் கூட இவர்கள் வீட்டில் வந்து வாங்கிச் செல்லும் யுவதியின் ஏழ்மையின் காரணமாகவா? அப்படியென்றால் இவனது குற்றவுணர்ச்சிதான் பிசுபிசுப்பா? இப்படி கேள்விகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கலாம்.
இதுதான் கவிதையின் சூட்சமம். மிகச் சாதாரணமான வரிகள்தான். ஆனால் அந்தக் காட்சியும் சொற்களும் நம்மைப் புரட்டிக் கொண்டேயிருக்கும் வலிமையை உடையவை.
கவிதை வாசிப்பதால் என்ன பலன் என்பது க்ளிஷேவான கேள்வி. வெவ்வேறு ஆளுமைகள் வெவ்வேறு பதில்களைச் சொல்லியிருந்தாலும் தொகுத்துப் பார்த்தால் அவையும் க்ளிஷேவான பதில்களாகத்தான் இருக்கும். ஆராய்வது விமர்சகர்களின் வேலை. அனுபவிப்பது வாசகர்களின் வேலை. கவிதையின் ரசிகனாக கவிதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தால் போதும். இத்தகைய கவிதைகள் அனுபவிப்பதற்கானவை.
இன்னுமொரு கவிதையுடன் முடித்துக் கொள்ளலாம்-
துளிகளை அனுப்பி
சன்னல் வழியே அழைத்து
தன் ஆட்டத்தை துவங்கியது
மழை
வேடிக்கை பார்க்கக்
காமக் களியாட்டத்தில் மனம்
விருது பெற்றிருக்கும் ந.பெரியசாமிக்கும் தொகுப்பை வெளியிட்ட புது எழுத்து பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
nantri: vaa.manikandan

No comments:

Post a Comment