Wednesday, April 15, 2015

பேசி நகரும் பிரியங்கள்...

nantri:yaavarum.com

பேசி நகரும் பிரியங்கள்...


கடவுளல்ல நான் எனும் பிரகடனம் உங்களுக்கான கடவுள் அல்ல என்பதாகவும் கொள்ளலாம். நான் எனக்கான கடவுள். என் மொழியால் சுமையற்றவனாகி காற்றாய், நதியாய் , மழையாய் மாறும் வல்லமை கொண்டவன் என்பதைக் கூறும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் தொகுப்பின் துவக்க கவிதையே நம்பிக்கையோடு தொடரச்செய்கிறது. இக்கவிதையின் நிழல் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் படிந்திருக்கிறது.

அகத்தில் அறம் அழித்து புறத்தே அறம் பேசித் திரிவோரின் வாழ்வில் பறவையாகி எச்சமிட்டு, கூழாங்கற்கள், மீன்குஞ்சுகளோடு குளிர்ந்த நீராக ஓடி சர்க்கரை கடலாகிறார்.

ச்சீ எனும் சொல்லில் மௌனத்தின் கலகம் உடைத்து, பசி ஏப்பத்தை புளிச்ச ஏப்பமென நினைக்கும் கடவுளை ஏசி, எப்பொழுதும் எந்த நிலம் சுதந்திரம் அளிக்கக்கூடியது என்பதை உணர்ந்து, பட்டாம்பூச்சியாகி மூத்திரம் பெய்து, எது கருணை என்பதை கேள்விக்குட்படுத்தி அதிகாரத்தை மண்ணுளியான் பாம்பாக புறந்தள்ளி, ராதையின் மார்பில் உறைந்திருக்கும் இரத்தத் துளிகளில் கண்ணன்களின் வஞ்சகங்களை காட்சிபடுத்தி, சாதும் மிரளக்கூடும் தருணத்தை நினைவூட்டி, அழிக்க நினைப்பவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தும் ஆலோசனைக்கூறி, புத்தனோடு  நீச்சலடித்து, சமணனோடு குகை அடைந்து கற்சிலைப் பெண்ணின் கதை கூறி வாழ்வையும் மரணத்தையும் இரு உதடுகளாக்குகிறார்.

சமகாலத்தின் வன்முறை நெருக்கடிகளினால் துயரத்தோடும் கோபத்தோடும் இருந்த நிலையில் வேறு வேறாக கூடுபாய்ந்து எதிர்வினையாற்றி அவ்வப்போது சமநிலையற்று தத்தளிப்போடு யாருமற்ற வீட்டில் இருந்தவரிடம் அதுவும் வெள்ளிக்கிழமையில் ரிது வந்திட வாசிப்பில் நமக்கும் இசை பற்றிக்கொள்கிறது. ரிதுவின் இடத்தில் நான் மதுவாகினியை வைத்துக்கொள்கிறேன். நீங்கள் உங்களுக்கான ஆன்மாவை வைத்துக்கொள்ளலாம். இனி நாம் பிரியங்களாலும், முத்தங்களாலும் நிறைய்யப்போகிறோம். நம் பின்னணியில் இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

கருநீலப்புடவையில் அரக்கு மணத்தோடு தேவதையாக வலம் வரும் ரிதுவின் காதலை இதழ்களால் வேட்டையாடுகிறார். தப்படிகளின் பின்னோக்கிச் சென்ற காலங்களின் குறியீடாக இருக்கும் பொம்மையை தீயிலிட அதன் ஆன்மாவை மழைத்துளியாக்கி பருகும் காட்சி ரசித்து, கனவில் வந்த கருநிலப்புடவை ரிது குறித்து புகாரிட்டு பொறாமையைத் தூண்டி, ரிதுவின் ஆசிபெற்ற ரிது நீ மட்டும்தான் என தன் நதியின் கடைசி மீன் இதுவென நம்பிக்கையூட்டி, மீதமிருக்கும் வெள்ளிக்கிழமையையும், உள்ளங்கை வெப்பத்தையும் நினைவூட்டி தன்னுள் நிகழும் மாற்றங்களுக்கு ரிதமானவள் நீதானென் எதிர்பார்ப்பைச் சொல்லி, இன்பதுன்பங்களின் வடிகாலாக இருக்க சிறு மணல்வீடு போதுமெனும் எளிய மனசுக்காரனாக மாற்றம்கொண்டு, உன்னில் இருந்து வரும் நாகம் கூட ரோஜாக்களை மட்டுமே தந்து செல்லும் உண்மை கூறி, இரவாக மாற்றம்கொள்ளும் ரிதுவின் ஆடல் பாடலில் தகிக்கும் வெப்பம் உணரும் கனவைச்சொல்லி, தன்னில் படிந்து கிடக்கும் வெக்கை நினைவுகளை கொலை செய்து ரிதுவின் குளிர்ந்த கரம் பற்ற நாளாக நீடிக்கும் ஒத்திகைபார்த்து, யாருக்கும் புலப்படாமல் அகவாழ்வில் நிரம்பியபடியே இருக்கம் பழச்சாற்றின் ருசி காட்டி, பிரியங்கள் பேசி நகர உண்டாகும் சில்லிடலை சிலாகித்து. விடியலுக்குப் பின் நிற்கும் நிர்வாண உண்மையின் பொதுபுத்தியை கிண்டலடித்து, வாழத் தகுதியற்ற சமதளம் நீக்கி ரிதுவை வானில் நீந்தச்செய்கிறார்.

மூத்திரத்தை தங்கக்கிண்ணத்தில் ஏந்தச்சொல்லும் கோபம், காமத்தை கையில் பிடித்தபடி உபதேசித்துத் திரியும் மிஸ்டர் எக்ஸ்-கள் மீதான எரிச்சலை நாமும் உணரச்செய்திடுகிறார்.

தொகுப்பில் கீற்றாக ஒரு குழந்தை புகார்களோடு வந்துபோவதும், எல்லாகாலங்களுக்கும் நாயகனாக கொண்டாடக்கூடியவர் சே எனும் உண்மையையும் கூறும் கவிதைகள் புன்னகைக்க வைக்கிறது. வேறு நாயகன் வராது போன துயரமும் தொடரச்செய்திடுகிறது கவிதை.

சிறுசிறு தெறிப்புகளில் மின்னலாக மனம்வெட்டும் கவிதைகளோடு வந்திருக்கும் வெ.மாதவன் அதிகனின் சர்க்கரைக்கடல் எல்லோருக்குள்ளும் அலைவீசும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

வெளியீடு
புதுஎழுத்து
2/205 அண்ணா நகர்
காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.

No comments:

Post a Comment