Friday, February 26, 2016

ஞானப் பூங்கோதைக்காக ஒரு முத்தம்...


திரும்புதல். பயணத்திலிருந்து வீடு திரும்புதல் அல்ல. நினைவுகளில் மீண்டும் மீண்டும் விளைவிப்பின் நிகழ்விற்கு திரும்பிக்கொண்டே இருத்தல். வேலைக்காக, பொழுதுபோக்கிற்காக, செல்வதை மேய்ச்சல் நிலமாக்கி புறமனமாக கொள்ள, திரும்பிய இருப்பை அகமனமாக கொண்டால் திரும்புதலின் அனுபவத்தை முழுமையாக சுவிகரிக்க முடியும். நினைவில் நம்மை திரும்பச் செய்யும் வல்லமை படைப்புகளுக்கு உண்டு. பால்யம், காமம், துயரம், காலம் என திரும்பச் செய்யும் பட்டியல் நீண்டு கிடக்கிறது. திரும்புதல் என்பது மீண்டெழச் செய்யும் சாத்தியத்தை உருவாக்கும். தொடர்ந்து பயணித்தபடி இருக்க மீண்டெழுதல் அவசியமாகிறது. கண்டராதித்தனின் 'திருச்சாழல்' தொகுப்பும் திரும்புதல்களை நிகழ்த்தி மீண்டெழவும் செய்திடுகிறது.
----------------------
உண்மையாகவே தனித் தவிலடித்தபடி
நெடுங்சாலையில் நடக்கிறார்
டாரஸ் லாரியில் வந்த கடவுள்
நிறுத்தி
எறிக்கொள்கிறீர்களா எனக்கேட்டார்
அப்போது ஸ்ரீமான்
ஷண்முகசுந்தரத்திற்கு பெருமை பிடிபடவில்லை.
எனக்காகவும் கடவுள் வந்திருந்த சம்பவங்களை திரும்பச் செய்திட்டார் வித்வான் ஷண்முக சுந்தரம். நேர்ந்திட்ட அவமானங்களுக்கு திரும்புதல் நேரவிருக்கும் அவமானங்களிலிருந்து தப்பிவிக்கவே செய்யும்.
நினைவில் பால் மாற்றம் கொள்ளும் தருணங்கள் எப்பொழுதாவது வாய்ப்பதுண்டு. அவ்வாறாக மாற்றம் கொள்கையில் மாறும் பாலினத்திற்கேற்ற சுபாவங்களும் நம்மை தொற்றிக்கொள்வது ஆச்சரியமானதாக இருக்கிறது. அவ்வாறான தருணங்களில் சிருஷ்டிக்கப்படுபவை உன்னதமானதாகவே இருக்கிறது. கண்டராதித்தன் ஞானப் பூங்கோதையாக மாறுவதும், பின் ஞானப் பூங்கோதையாகவே வாழ்ந்திருப்பதும் கவிதைகளில் கண்டடைய முடிகிறது. அதுவும் திருச்சாழல் கவிதை எண்ணிக்கையற்று வாசித்த கவிதை. சாழேலோ பெண்களுக்கான விளையாட்டு. கேள்வியும் பதிலுமாக சிவபெருமானின் பெருமைகளை உரையாடுவது. சிவபெருமானை சமகாலத்தவனாக்கி அலுவலகத்தில் வேலைபார்க்கச்செய்து அவன் மீதான காதலில் தோழியோடு உரையாடுவதில் கிடைக்கும் ஞாயிறு நமக்கு இதுவரை கிடைக்காத ஞாயிறு. ஞாயிறுகள் சாழேலோ இசையோடும் கடந்துபோகும். இக்கவிதை உங்களை முத்தமிடச்செய்யும் கண்டர்.
தவிர நீ யாரிடமும் சொல்லாதே
பணியிடத்திள் உள்ளவன்தான்
என் வெளிர்நீல முன்றானையால் நெற்றியைத்
துடைப்பதுபோல் அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்
இன்றேயென் முன்றானை நூறுமுறை
நெற்றிக்குப் போவதுதான் என்னேடி
--------------------
திட்டமிட்டு எதுவும் உருவாவதில்லை. ஏதோவொரு மகத்தான தருணத்தில் நண்பனாவதும், எதிர்பாராது முளைவிடும் முரண்பாட்டால் மிகு வெக்கை கொண்டு எதிரியாவதும் நாம் அறியாமலேயே நிகழ்ந்துவிடுகிறது. கணித்துச் சொல்ல முடியாத மற்றொரு தருணத்தில் மீண்டும் நட்பாவதும் உண்டு. பருவமாற்றத்தில் உண்டாகும் சிறு சிறு அவஸ்தைபோல் எதிரி என்பதும் வந்து போவது. இப்படி வந்து போகும் செயலுக்காக பெரும் பிரயத்தனம் தேவையில்லை என்பதை என்றென்றைக்கும் சொல்வதாக படுகிறது 'நீண்டகால எதிரிகள்' கவிதை.
அம்மா ஓடிப்போனதை
அறியும் வயதுள்ள பிள்ளைகள்
திண்ணையிலமர்ந்தபடி
ஆள்நடமாட்டமில்லாத
தெருவை வெறித்து
வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஓடிப்போன அம்மாவை வேடிக்கையில் நகர்த்தி, புரனிபேசும் அப்பாவை சகித்து, தூய தமிழில் சினம் கொள்ளும் சங்கரலிங்கனாரின் குடி ரசித்து, வம்ச கீர்த்தியில் தன் வலிமிகு புகழ்பாடி, சுகந்த மலருக்காக போனவளை மீதமிருக்கும் திசையில் தொலைத்து, வானம் சென்று வளர்மதி ஆனவளின் அம்சம் ரசித்து, கழுக்குன்றின் திருக்கோலம் விவரித்து, ஆத்திரத்தில் அறிவிலியாக சினம்கொள்வதை காறி உமிழாது கண்ணீரின் வெப்பத்தில் உணரச்செய்யும் மகளின் கண்ணீரில் திரும்பினேன்.
நினைவில் வைக்கும் பட்டியல்களை அடுக்கி, காலமாற்றத்தின் காதலால் சலசலக்கும் சில்லிட்ட காற்றை சுகித்து, நினைவின் பிசகோடு ஏகாம்பரமாக எதிரொலித்து, பொரி உருண்டைக்கு மேலெழும் பாதாள பைரவியை தரிசித்து, பேரன்பின் பந்தை பரிசளிக்க உண்டான சிலிர்ப்பில் ஊர் கடந்தேன்.
யோக்கியதை குறித்த நையாண்டி குறிப்பை ரசித்து, மகுடம் சூட்டி கொண்டாடும் பிழையான வாழ்க்கைக்காக வெட்கித்து, எல்லா குடுவையிலும் நிரம்பிக்கொள்ள ஏதுவான பதத்தோடு இருப்பதைக் கூறி, துக்கம் கொள்ளும் சூழலுக்குத் திரும்பி, நாட்களைத் தள்ளி விளையாடும் சிறுமியிடம் ஞானமடைந்தேன்.
விதியைத்தொலைப்பது போல
வாழ்ந்துகொண்டிருக்கிறாள் நித்யா
அவளைச் சாந்தப்படுத்துவதற்காக
நாளையெனப்பிறக்கும் நாட்களையெல்லாம்
உச்சி முகர்ந்து முத்தமிட்டு அவள் வசிக்கும்
வீதி வழியாக அனுப்பி வைக்கிறேன்.
அந்த துக்கத்திலும் முல்லை மணம் கமழும்
அந்திகளோடு கண்துஞ்சும் இரவுகளை
எனக்காக அனுப்பி வைக்கிறாள்
எனக்கோ அந்த இரவுகளின் மீது லேசான கிறக்கம்.
தசையால் மட்டும் உருவாகும் காதலும் காமமும் இன்பம் எய்திட்டது போன்ற பாவனையை மட்டுமே கொடுத்திடும். இப் பாவனை இன்பம் எதையும் முழுமைகொள்ளச் செய்யாது. உள்ளொளி உணர்வில் கலந்து மேலெழும் காதலும் காமமுமே முழுமை கொள்ளச் செய்யும். சீதமண்டலம், கண்டராதித்தன் கவிதைகள் என முந்தைய இரண்டு தொகுப்புகளின் நீட்சியாகவே இத்தொகுப்பிலும் நித்யா கவிதை உணர்வின் தாளாத தகிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது.
மேலேறும் பாதைகளில் எல்லோருக்கும் தெரிந்தபடி இருப்பதை உரக்கப் பேசியபடி இருக்காமல் இடர்பாடுகளோடு சரிந்த பாதைகளில் இருக்கும் மானுடத்தின் மீதான பிரியத்தை என்றென்றைக்கும் வலியோடு வைத்திருக்கும் வரிகளை எங்கு வாசிக்க நேர்ந்தாலும் அது கண்டாதித்தனின் தனித்த மொழியை நினைவூட்டவேச் செய்யும்.
வெளியீடு
புது எழுத்து
2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம்-635112
கிருஷ்ணகிரி மாவட்டம்.
விலை-ரூ.70.
நன்றி - கணையாழி பிப்ரவரி 16

1 comment:

ரூபன் said...

வணக்கம்
விமர்சனம் நன்று படிக்க தூண்டுகிறது. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment