1. ழினோவா
பதினெட்டு அகவைக்கேற்ற
கச்சிதத் தோற்றம்
வசீகரிக்கும் உடல்வாகு.
ஆம் இல்லை பார்க்கலாம்
மிகச் சொற்பமான வார்த்தைகளே கிடைக்கும் பதிலாக.
மௌனித்திருப்பவனும் அல்ல.
தன்னுடன் முளைத்த காமிராவால்
காடு மலை நதிகளோடு
கதை பேசிக்கொண்டிருப்பவன்.
அன்றும் அப்படித்தான்
லயிக்கும் அடர் கரும் வண்ணத்தை
பிம்பமாக்கி உரையாடியவனின் உடல் மெல்ல
நீலமாகிக் கொண்டிருந்தது,
புன்னகை மாறா இதழ்களுடன்.
2. திராட்சை தோட்டம் சுமந்தவன்
*
தாங்க இயலாத வலிகளை
கண்ணீரில் வழியச் செய்தான்.
ஈரமேறிய மண்ணை பிசைந்து
சிறு சிறு உருண்டைகளாக்கினான்.
செல்லும் இடம்தோறும் சுமந்தே திரிந்தான்.
பாரம் அழுத்த
சோர்வுற்ற கணங்களில்
தூக்கி எறிய முயற்சித்தான்
இயலாதிருக்க சுமந்தே பழகினவன்
பனிப்பொழிவு நிறைந்த அதிகாலையில்
உடலில் கவிழ்ந்த வலியை சகிக்காது
வீசி எறிந்தான்.
உருண்டைகள்
திராட்சை தோட்டமொன்றில்
கனியாகியதைக் கண்டு
சமாதானம் கொண்டவன் நினைவில்
பருக நினைத்த பானம் அலையாடிக் கொண்டிருக்கிறது.
2 comments:
அருமை. ழினோவா. பயணியை வானம் போல் மனம் உடையவனாக மாற்றிக் காட்டுகிறது.
நன்றி ராஜேஷ்
Post a Comment